புத்தாண்டில் புதுயாகம்: நோர்வே நக்கீரா

2010.jpgபுத்தாண்டில் புதுயாகம்

கந்தகக்காற்று ஊர்கோலம் போனது
யார் யாரோ அரக்கர்களால் – எம்தேசம்
கேவலம்…போர் கோலமானது.

பட்டாசு வெடிக்க
சட்டமில்லை என்று
பாதுகாப்புச் சட்டம் போட்டது
சமாதான நாடு.
சங்காரம் செய்யும் அழிவாயுதப்படையலின்
பிரமாக்கள் என்று
அகிலச்சான்றிதழ் பெற்றது- எம்
நோர்வேயிய நாடு.

யாகம்…விஸ்வாமித்திர யாகம்
விஸ்வமான மித்துருக்களால்;
சத்துருக்க போர் யாகம்.

யாகம் போகம் மாறியும்
தாகம் தாகமென
தியாகம் தியாகமாக -காகம்
கல்லுச் சேர்த்ததே தியாகமானது
வேள்வி…கேலியாகி…கேள்வியானது போ.

அன்று…யாகம் காக்க இராம இலக்குவர்
இன்று எம்மைக்காக்க….யார் சிக்குவர்?
இலங்கையில் இராமாயணம்
இறப்பதே இல்லையோ?

துப்பாக்கிகளுடன் தூங்கி எழுந்து
குண்டுகளிடையே குறுக்கே விழுந்து
ஊரைக்காத்த உத்தம உயிர்கள்
வன்னிமக்களாய்
வனத்தினுள் வதங்கிப் போவதோ?

வெட்டிய தலைகள் மண்ணில் வீழவுமில்லை
வேட்டுவிழுந்து உடலிலுயிர் பிரியுமில்லை
உதிரம் சொட்டும் வாளுடன் வந்து
வோட்டுக்கேட்டு வருடம் பிறக்குதே!
மனிதம் மறந்து வாழ்வு சிறக்குமோ?

தமிழன்…தமிழன் என வேதம் ஓதி
ஈழம்…ஈழம் என்று எண்ணை ஊற்றி
வேளம் வந்து வேவுபார்க்க
சிம்மம் சினந்து சிம்மாசனம் போட்டது.
மிருகம் தூக்கிய மிருகத்தியாகம்
போகமின்றி மிருகமாய் போனது போ…!

தாகம்…தாகம் எனத்தண்ணீர்தேடி
காகம் கல்லைச் சேர்த்ததே மிச்சம்.
இனியும் வேண்டாம் பகைமையின் எச்சம்.
மனிதம் வாழ்ந்தால் அமைதி நிச்சயம்.

பிறக்கும் வருடம் சிறப்பாய் பிறக்க
வீழ்ந்தவை எல்லாம் மிருகமாய் போக
எழுவது எல்லாம் மனிதராய் எழுக
மிருகம் கொண்டு மிருகமானது போதும்.
வாய்மை கொண்ட மனிதவாழுமை வேண்டும்

சாதி சாதியென்று சாய்த்து
சாதித்தது என்ன?
மனிதசாதி ஒன்றே போதும்
மதமும் வேண்டாம்
மார்க்கமும் வேண்டாம் -எமக்கு
மனித மார்க்கமே போதும் போதும்.

வாழும் காலம் மனிதராய் வாழ
புத்தாண்டுப் பெண்ணே
புதுச்சேலை கட்டிவா!!!

நோர்வே நக்கீரா
01 01 2010

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • பல்லி
    பல்லி

    புது வருடம் பிறந்திருக்கு
    வாழ்த்துக்கள் பலர் சொன்னோம்
    நக்கீரன் எழுதியுள்ளார்
    கவிதை ஒன்றை பக்குவமாய்;

    வருடமோ புதியது
    வழமைபோல் கொண்டாட்டம்
    வன்னிமக்கள் திண்டாட்டம்
    வாழவோ வழி தேடி;

    வன்னி மக்கள் நிலையதனை
    வரி நாலில் சொல்லிவிட்டார்
    தியாகம்தான் செய்தார்கள்
    எதுக்காக மறுக்காமல்;

    தாட்டதுகள் வெடிக்கவில்லை
    தற்காப்பு தலைக்குமில்லை
    தகுதியற்ற பேச்சினால்
    தமிழர் இன்று சிறையினிலே;

    சாதியும் வேண்டாமே
    சமத்துவம் வேண்டுவோம்
    மதத்தை தொலைத்துவிட்டு
    மானிடத்தை தேடுவோம்;

    தவறான போராலே
    தவறியவர்கள் தோற்றார்கள்
    தெழிவான முடிவுகளை
    தேர்தல் முன் எடுப்பார்கள்;

    தாகம் தாகம் என
    தண்ணீரில் எழுதிவிட்டு
    தறுதலை தலைவரும்
    தன்நிறைவு பெற்றுவிட்டார்;

    நட்புடன் பல்லி;
    2010!!!!

    Reply
  • Arasaratnam
    Arasaratnam

    புத்தாண்டில் புதுக்கவிதை தந்த புலவருக்கு புதுவருட வாழ்த்துக்கள்.

    Reply
  • ranjan
    ranjan

    கல்லுப்பொறுக்கிப் போட்டென்றாலும் காகம் தண்ணி குடித்ததே ஆனால் தமிழினம்….??

    ஊரிலை இருந்த கஷ்டப்பட்ட சனங்களை பலிகொடுத்துப் போட்டு>. இரண்டாவது பெரும்பான்மை இனத்தை நான்காவது இடத்துக்குத் தள்ளிப்போட்டு >> வெளிநாட்டிலை பக்குவமாய் வளர்த்த பிள்ளைகளுக்கு பிஸ்னஸ் காட்டுறாங்கள் ஊருக்குக் கூட்டிப்போய். மிச்சத்துக்கு போட்டிபோடுற சிங்கங்களில் எந்தச் சிங்கத்துக்கு கொடி பிடிக்கறதெண்டு முடிவெடுக்க பணத்தைக் கொட்டிக் கொட்டி நாடு நாடாய் மாநாடு போடுறாங்களாம். இந்தக் காசை வன்னிச் சனத்துக்கு கொடுக்க மட்டும் ஏலாது. காரணம் அந்தக் காசு குட்டிபோடாது. இவர்களுக்கெல்லாம் யாகமும் தியாகமும். மனிதத்தையே தொலைத்தவங்களிடம் மனிதத்தை எதிர்பார்க்கிறீங்கள் நக்கீரா. வருடங்களை எண்ணுவதே வாழ்க்கையாகிறது தமிழருக்கு.

    Reply
  • Palani
    Palani

    தவறான போராலே
    தவறியவர்கள் தோற்றார்கள்
    தெழிவான முடிவுகளை
    தேர்தல் முன் எடுப்பார்கள்;

    ஆறெழு மாத காலம்
    அமைதி வழி கண்டாச்சு
    இது போதும் எங்களுக்கு
    மகிந்தாவே நீ போதும்.

    சரத் வந்தால் சண்டைவரும்
    சத்தியமாய் நம்புகிறோம்
    புலிக்குப் புதுவாழ்வு
    புலத்துக்குப் பணவரவு

    ஆர் செத்து மடிந்தாலென்ன
    தவறான போர்வேண்டும்
    சரத் ராசா நீ வேண்டும்
    என் வாக்கு உந்தனுக்கே!

    Reply
  • Norway Nackeera
    Norway Nackeera

    பல்லி கவிதை நன்றாக இருக்கிறது. பழனி உங்களுடைய கவியடுக்கும் வரியடுக்கும் பல்லியை நினைவுபடுத்துகிறது. பக்கத்து வீட்டுக்காரர்களோ?

    இக்கவிதையில் இராமாயணத்தை உட்புகுத்தியதால் அதைப்பற்றி சொல்வது அவசியம் ஆகிறது. விஸ்வாமித்திரன் யாகம் செய்யும் வேளை அசுரர்கள் பிணங்களையும்: இறைச்சியும்: இரத்தத்தையும் வானத்தில் இருந்து கொண்டினார்கள். இந்த யாகத்தை காக்க இராம இலக்குவர் எனும் இளைஞர்களை விஸ்வாமித்திரன் கூட்டிவந்து காவல் வைத்து யாகம் முடிந்ததும் மிதிலை (நேபாளத்தில்)வழியாக அழைத்துப்போகும் போது அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கி போட்டியில் சுயம்வரம் ஆகி சீதையை (வில்முறித்து)திருமணம் முடித்தான் இராமன். விஸ்வம் என்பது மிக மிகப் பெரியது என்று பொருள். மித்திரு என்பது நண்பன் சத்துரு என்பது எதிரி. இவற்றை இணைத்து ஈழப்போரையும் சேர்த்துப்பாருங்கள். ஈழயாகம் செய்ய அரசியல்வாதிகள் இளைஞர்களைப் பயன்படுத்தியதும். மதிவதனி சுயம்வரம் பெற்றதும். தெழிவாகும். மித்துருக்கள் எல்லாம் உள்ளிருந்து சத்துருக்களான விடயமும் தெழிவு பெறும். அன்றும் பிணங்கள் வானத்தில் இருந்துதான் கொட்டப்பட்டது. ஈழப்போரிலும் அதுவே. அரக்கர்கள் இலங்கையில் என்றுதானே வர்ணிக்கப்பட்டது.

    /வேளம் வந்து வேவுபார்க்க சிம்மம் சினந்து சிம்மாசனம் போட்டது./
    வேளம் என்பது யானை இக்கொடியைக் கொண்டவர்கள் யுஎன்பி. சிம்மம் என்பது சிங்கம் இலங்கைக் கொடி. மகிந்தவின் முகத்தை உற்று நோக்குங்கள் சிம்மம் தெரியும். //கல்லுப்பொறுக்கிப் போட்டென்றாலும் காகம் தண்ணி குடித்ததே ஆனால் தமிழினம்….?? //-இரஞ்சன் கவிதையின் உட்பொருளைப் பிடித்திருக்கிறீர்கள். //மனிதத்தையே தொலைத்தவங்களிடம் மனிதத்தை எதிர்பார்க்கிறீங்கள் நக்கீரா. // இதுவும் ஒரு நப்பாசைதான். இரண்டாவது உலகயுத்தத்தில் பெரும் மனிதப்பேரழிவை ஏற்படுத்திய பின்புதானே மனிதத்தைத் தூக்கினார்கள் யேமனி ஐரோப்பியர். இரக்கத்தில் இருந்தும் இரத்தத்தில் இருந்தும் மனிதம் எழும்பலாம். மனிதன் ஒவ்வொருவனும் சிந்திக்கப் கூடியவன் மாறக்கூடியவன் என்ற கடசி நம்பிக்கை இன்றும் என்னில் இழையோடிக்கிடக்கிறது. நாம் எமது தேவைகளை எப்படிச் சொல்கிறோம் என்பதைப் பொறுத்தும் கேட்பவனின் அனுபவம் என்பதைப் பொறுத்துமோ செயற்பாடும் தெழிவும் விளக்கமும் இருக்கிறது. நம்புவோம் மனிதம் மனிதருள் இன்றும் இருக்கிறது என்று.

    Reply
  • Norway Nackeera
    Norway Nackeera

    அரசரட்ணம் அவர்களுக்கும் என் புத்தாண்ட வாழ்த்துக்கள். பல்லி: பழனியின் கவிதைகள் நன்றாக இருக்கிறன.

    Reply
  • பல்லி
    பல்லி

    //பழனி உங்களுடைய கவியடுக்கும் வரியடுக்கும் பல்லியை நினைவுபடுத்துகிறது. பக்கத்து வீட்டுக்காரர்களோ? //
    உன்மைதான் நக்கீரா நான் கூட இது நான் எழுதியதா என ஒருநிமிடம் தடுமாறினேன், ஆனால் மனிஸன் கடசி நாலு வரியில் பல்லியை குப்பற தள்ளி முதுகில் குத்து குத்து என குத்திவிட்டார், பல்லியும் பழனி திருப்பதியில் வந்து மொட்டை போடுவதால் அதை பண்புடன் ஏற்றுகொள்ள வேண்டுமல்லவா??

    நக்கீரா இந்த ராமாயணத்தில் சீதையை ரானணன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தினாரன படித்தேன், அதே போல் தம்பி பிரபாவும் தன்னவளை இலங்கை இருந்து இந்தியாவுக்கு கடத்தியதாக படித்தேன், இதில் என்ன வேறுபாடாயின் அன்று ராமாயணத்தில் மனிதருக்கு மிருகங்கள் உதவியதாம், ஆனால் இன்று தேசியத்தில் மிருகங்களுக்கு மனிதர்கள் உதவ வேண்டிய கொடுமை; எது எப்படியோ பல்லி புது பெண்ணின் வருகையையோ அல்லது புது புடவையின் வரவையோ எதிர்பார்க்கவில்லை (உவமைதான்) ஆனால் ,,,,,,,,,,,,எதிர் பார்க்கிறேன்;

    Reply
  • Norway Nackeera
    Norway Nackeera

    //இதில் என்ன வேறுபாடாயின் அன்று ராமாயணத்தில் மனிதருக்கு மிருகங்கள் உதவியதாம், ஆனால் இன்று தேசியத்தில் மிருகங்களுக்கு மனிதர்கள் உதவ வேண்டிய கொடுமை// இதுதான் சிந்தனை என்பது பல்லி.. அழகு…அருமை கவிதை என்பது எதை எதையோ எல்லாம் தேடி எடுத்து வருகிறது பாருங்கள். //அதே போல் தம்பி பிரபாவும் தன்னவளை இலங்கை இருந்து இந்தியாவுக்கு கடத்தியதாக படித்தேன்// தன்னவளல்ல தனமாக்கப்பட்டவள். சீதையை தூக்கிவந்து சிறைவைத்த நாடு அரக்கர்கள் வாழ்ந்த நாடு. இப்போ இந்தியா?? வடக்கிலிருந்துதான் ஜமன் வருவான் என்பார்கள். ஈழத்தமிழர் வாழ்வுக்கும் வடக்குத்தானா? ஒப்பீடுகள் அருமையாக இருக்கிறது.

    Reply
  • மாயா
    மாயா

    கவிதைகளில் கருத்துகள் களை கட்டுகிறது. வாழ்த்துகள். ஒப்பீடுகளும் அருமை.

    Reply