அரசின் அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தில் மலையக மக்கள் சார்ந்த சரத்து முன்வைப்பு

அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு திருத்தத்தில் மலையக மக்கள் சார்ந்த சரத்தொன்றையும் முன்வைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துக்கள், ஆலோசனைகள் திரட்டப்பட்டு ஒரு பொதுவான கோவையாக கருத்துக்கள் இதில் முன்வைக்கப்படவுள்ளன. தேர்தல் மாற்றம், உள்ளூராட்சித் துறை சீர்த்திருத்தம் உள்ளிட்ட மலையக மக்கள் சார்ந்த முக்கிய பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்படுமென இதற்கென நியமிக்கப்பட்டுள்ள விதந்துரைக் குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.பிடி. தேவராஜ் தெரிவித்தார்.

மேற்படி சகல அமைப்புகளுடனும் தனித்தனியாகக் கலந்துரையாடிய பின் அனைத்து அமைப்புக்களையும் ஒன்றாக கூட்டி அதனூடான பொதுக் கருத்தே அரசியலமைப்புக்கான சரத்தாக முன்வைக்கப்படுமென குறிப்பிட்ட அவர், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கென கடந்த வாரங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மனோகணேசன் தலைமையிலான கட்சி, திகாம்பரம் எம்.பி. தலைமையிலான கட்சி மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களுடனும் பேச்சு நடத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், ஏனைய அமைப்புக்களுடனும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமுதாய ஆலோசனைக் குழு என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மேற்படி குழுவில் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ் தலைவராகவும் தொழிலதிபர் தெ.ஈஸ்வரன், குமார் நடேசன் ஆகியோரும் அங்கத்தவர்களாக உள்ளனர்.

அரசியலமைப்பு திருத்தத்தில் தேர்தல் மாற்றம், உள்ளூராட்சித் துறை மாற்றம் உள்ளிட்ட மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சார்ந்த விடயங்களும் ஆலோசனைகளாக முன்வைக்கப் படவுள்ளன.

இது தொடர்பில் பல அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்களின் ஆலோசனைகள் அறிக்கைகளாகக் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *