நல்லூரில் கட்டப்படவிருக்கும் விடுதி ஆடம்பரவிடுதியாக இல்லாமல் யாத்திரிகர் மடம் போல் அமையுமாம்.

நல்லூரில் உல்லாச ஹோட்டல் ஒன்றை கட்டுவிருப்பது தொடர்பாக பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை ஹோட்டல் கட்டவிருக்கும் நிர்வாகத்தினருக்கும் இந்து அமைப்புக்களின் ஒன்றியத்திற்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இக்கலந்துரையாடலின் போது குறித்த ஹோட்டல் கட்டடம் உல்லாச விடுதியாக இல்லாது ஒரு யாத்திரிகர் மடம் போன்ற வடிவத்தில் கட்டுவதற்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் இணங்கியுள்ளதாக இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் செயலாளர் சு.பரமநாதன் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டுவது தொடர்பாக அதன் நிர்வாகத்தினருக்கும் இந்து அமைப்புக்களின் ஒன்றியத்திற்குமிடையில் நேற்று சனிக்கிழமை நல்லை ஆதீனத்தில் வைத்து கலந்துரையாடல் நடைபெற்றது. புனித பிரதேசமான நல்லூரில் உல்லாச விடுதி கட்டுவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டது. அதே வேளை, இவ்விடுதி அமைக்கப்படுமானால் நல்லூரின் சூழல் மாசடைவது குறித்தும். இவ்விடுதியை வேறு விசாலமான பகுதியில் கட்ட முடியும் என்பது குறித்தும் இந்து அமைப்புக்களின் ஒன்றியப்பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், அந்த விடுதியை நல்லூரில் அமைப்பதால் யாழப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்திகள், தொழில் வாய்ப்புக்கள் ஏற்படும் என ஹோட்டல் அமைக்கவிருக்கும் நிர்வாகத்தினரால் கூறப்பட்டது.

கலந்துரையாடல்களின் முடிவில் நல்லூரில் கட்டப்படவுள்ள இந்த விடுதியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. அசைவ உணவுகள் சமைப்பதில்லை எனவும், அவ்விடுதி யாத்திரிகர் விடுதி போல் அமைக்கப்படும் எனவும், கழிவு நீரை அகற்றுவதற்காக நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டதாக மேற்படி ஒன்றியத்தின் செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *