”சமூகங்களின் விழுமியங்களும் வரலாறும் மனிதத்துவமும் கற்களையும் கட்டிடங்களையும் காட்டிலும் மதிப்பானவை” ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் முபாரக் லிற்றில் எய்ட் நூலகத் திறப்பு நிகழ்வில்


இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் மக்களின் வாழ்நிலையை மேம்படுத்தும் சின்னச் சின்ன உதவித்திட்டங்களை மேற்கொண்டு வரும் லிற்றில் எய்ட், யாழ் பள்ளிக்கூடங்களில் இரு நூலகங்களைத் திறந்து வைத்துள்ளது. யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி, குருநகர் சென் றொச்சே கல்லூரி ஆகியவற்றில் புக் அப்றோட் – Book Abroad அமைப்பின் உதவியுடன் இரு நூலகங்களைத் திறந்து வைத்துள்ளது. நவம்பர் 08இல் இந்நூலகங்களை லிற்றில் எய்ட் அமைப்பின் திட்ட இணைப்பாளர் ரி கொன்ஸ்ரன்ரைன் திறந்து வைத்தார்.

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் நூலக திறப்பு நிகழ்வு அக்கல்லூரியின் அதிபர் மெளலவி முபாரக் தலைமையில் இடம்பெற்றது. யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் தற்சமயம் 390 மாணவர்கள் கல்வி பயில்வதாகக் குறிப்பிட்ட அதிபர் முபாரக்; அடுத்த ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 1000 மாக உயரும் எனவும் அவர்களுக்கு இந்நூலகம் மிகவும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

72,000 முஸ்லீம்கள் 1990 ஒக்ரோபரில் இல் தங்கள் வாழ்விடங்களைப் விட்டு யாழில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதையடுத்து அவர்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பிக்கொண்டுள்ளனர்.

இது பற்றிக் குறிப்பிட்ட அதிபர் முபாரக், இந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையால் முஸ்லீம் சமூகத்தினரின் ஒரு பரம்பரையின் முழுமையான கல்வியே அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் முஸ்லீம் சமூகத்தினதும், தமிழ் சமூகத்தினதும் இருபது ஆண்டுகள் இழக்கப்பட்டு உள்ளதாகவும் இரு சமூகங்களும் அடைய வேண்டியவைகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மாணவர்களின் எதிர்காலம் பற்றி, வடக்கில் படிப்பினை முடித்து வெளியேறுகின்றவர்களுக்கான வேலைவாய்புப் பற்றி தனது கருத்துக்களை வெளியிட்ட அதிபர் முபாரக்; இலங்கையின் வடபகுதியில் வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டார். பெரும்பான்மையான முஸ்லீம்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான வேலைவாய்ப்புகளுக்கு போட்டியிடுவதாகவும், ஒரே மாதிரியான வர்த்தகத்தில் போட்டியிடுவதாகவும் குறைப்பட்டுக் கொண்டார். இது சமூகத்தை அறிவியல் ரீதியாக வளர்க்கப் போவதில்லை என்றும், நீண்டகாலத்தில் நாட்டுக்கு நல்லதல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கான மாற்றுச் சிந்தனையை வெளியிட்ட அவர், முஸ்லீம் சிறார்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி வேறுபட்ட வேலைவாய்ப்புக்கான வர்த்தகத்துக்கான  சந்தையை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

யாழ் நூலகத்தை, முஸ்லீம் கல்லூரியை எரித்ததன் மூலம் அந்தச் சமூகங்களையோ அதன் பாரம்பரியத்தையோ துடைத்து அழிக்க முடியவில்லை என்பதை வரலாறு எமக்குக் கற்றுத் தந்துள்ளதாகத் தெரிவித்த அதிபர் முபாரக்; அந்த சமூகங்களின் விழுமியங்களும் வரலாறும் மனிதத்துவமும் கற்களையும் கட்டிடங்களையும் காட்டிலும் மதிப்பானவை எனச் சுட்டிக்காட்டினார்.

அதிபர் முபாரக் மேலும் குறிப்பிடுகையில், யாழில் தற்போது 5 பள்ளிவாசல்கள் இயங்குவதாகவும், இவை முஸ்லீம் சமூகத்தின் அத்திவாரமாக உள்ளதாகவும்; இப்பள்ளிவாசல்கள் சமூகத்தில் இடம்பெறுகின்ற உட்பிரச்சினைகளை, குடும்பப் பிரச்சினைகளுக்கு அரசகட்டமைப்புகளில், பொலிசாரில் தங்கி இராமல் தமக்கு உள்ளேயே தீர்வுகாண உதவுகின்றன என்றார்.

யாழில் உள்ள இப்பள்ளிவாசல்கள் அங்குள்ள தமிழ் சமூகத்துடன் அமைதியையும் நேசத்தையும் பேணுவதையும் அதிபர் முபாரக் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, லிற்றில் எய்ட் அமைப்பு ஏனைய பொதுத் தொண்டு அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக, எல்லைகளைக் கடந்து, மனிதத்துவத்துடன் செயற்படுவதற்கு தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

குருநகர் சென் றொச்சே பள்ளியின் நூலகத் திறப்பு நிகழ்வு, அப்பள்ளியின் அதிபர் கெனத் மரியன் தலைமையில் இடம்பெற்றது. இதற்கு முன்னர் சென் றொச்சே பள்ளியில் கணணிப் பிரிவை ஆரம்பித்து வைத்ததற்கும், தற்போது நூலகத்தை ஆரம்பித்து வைத்தமைக்கும் அதிபர் கெனத் மரியன் லிற்றில் எய்ட் க்கு தனது நன்றிகளைத் தெரிவித்து இருந்தார். இப்பள்ளியின் மாணவர்கள் யாழ் மாநகரசபையில் சுத்திகரிப்புத் தொழிலில் உள்ள பெற்றோர்களினது பிள்ளைகள் என்பதைச் சுட்டிக்காட்டிய அதிபர்; குருநகர்ப் பகுதியின் சமூக பொருளாதார நிலைமைகளை விளக்கினார். குருநகர் யாழில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பகுதி என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நூலகத் திட்டங்களுக்கான நூல்களை ஸ்கொட்லன்ட்யை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் புக் அப்றோட் அமைப்பு, லிற்றில் எய்ட் க்கு வழங்கி இருந்தது. நூலகத்துக்கான தளபாடங்களை லிற்றில் எய்ட் வழங்கி இருந்தது. இந்நூலகத் திட்டத்தின் இணைப்பாளராக இலங்கையில் உள்ள லிற்றில் எய்ட் அமைப்பின் கள அலுவலர் ஆனந்தன் உதயகுமார் இத்திட்டம் இனிதே பூர்த்தியடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தார்.

புக் அப்ரோட் இனால் வழங்கப்பட்ட நூல்கள் சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலை, யா-எல பமுனுகம கொன்சால் மகாவித்தியாலய, ஊர்காவற்துறை சென் அந்தனீஸ் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்பட்டது. 2010 இலும் புக் அப்ரோட் லிற்றில் எய்ட் க்கு நூல்களை அன்பளிப்புச் செய்திருந்ததும் அவை உரியமுறையில் விநியோகிக்கப்பட்டதும் தெரிந்ததே.

லிற்றில் எய்ட் தனது சின்னச் சின்ன வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதியை உலகம் முழுவதும் உள்ள லிற்றில் எய்ட் நண்பர்கள் வட்டத்தில் இருந்தும் நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் மூலமாகவும் சேகரிக்கின்றது. இவ்வாறான நிகழ்வு ஒன்று டிசம்பர் 26இல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலதிக விபரங்கள்:

In Aid of LITTLE AID

Christmas Fiesta – Dinner & Music – with Life Performance

26 December 2011 – 6:30 pm until 00:30

Hilton Plaza, Hilton Plaza Hotel, Empire Way, Wembley, London, HA9 8DS.

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு