தமிழ் மொழியின் எதிர்காலம்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்


ஒரு சமுதாயத்தின் பல தரப்பட்ட வளர்ச்சிகளும் நாகரீகமும் அந்தச் சமுதாயத்தின் முக்கிய அங்கமான மொழியின் ஆளுமையிலும் பாவனையிலும் தங்கியிருக்கின்றன. மொழி என்பது மனித உணர்வின் பன்முகத் தேவைகளைச் செயற்படுத்தும் தரகனாக வேலை செய்கிறது. தரகன் என்பவன் ஒரு விடயத்தின் அடித்தளத்திலும் தொடர்புகளிலும் மாற்றங்களிலும் முக்கிய புள்ளியாகக் கருதப்படுபவன். அப்படியே மொழியும் மக்களின் சாதாரண அடிப்படைத் தேவைகள் தொடங்கி அம்மக்கள் வாழும் சமுதாயத்தின் கலை கலாச்சார, அரசியல், பொருளாதார வளர்சியிலும் பெரும் பங்கெடுக்கிறது.

இதற்கு இன்று உலகின் முக்கிய மொழியாகக் கருதப்படும் ஆங்கில மொழி உதாரணமாகும். பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை ஆங்கிலம் உலகிலுள்ள கணிசமான மக்களின் தொடர்பு மொழியாக இருப்பது மட்டுமன்றி தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத தரகனாகவும் செயற்படுகிறது. இந்த அணுகு முறையில் மட்டுமன்றி, தமிழ் மொழியின் கலாச்சார ஈடுபாடு, அரசியலில் தமிழுக்கு உள்ள இன்றைய ஆளுமையும் அதன் எதிர்கால இருப்பும் பற்றிப் பேசுவது தமிழ் ஆர்வலர்களால் தவிர்க்க முடியாத விடயமாகும். தமிழின் உயர்வுக்கும் வளர்ச்சிக்குமாக ஒன்றுபட்டு இணையும் சில அமைப்புகளின் முயற்சிகளாலும் தனிப்பட்டவர்களின் ஊக்கங்களாலும், தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிய ஒரு ஆழமான சர்ச்சைகள் நடக்கின்றன. அந்த முயற்சிகளுக்கு, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தடைகள் வரும்போதும், மொழியில் ஆர்வம் கொண்டுள்ள புத்திஜீவிகளின் சிந்தனைக்கு இருட்டடிப்பு நடப்பதாலும் பல ஆக்க பூர்வமான படைப்புக்கள் வெளிவருவது, கருத்தரங்கங்கள் நடைபெறுவது, புதிய சிந்தனைகள் துளிர்ப்பது, சிறந்த படைப்புக்கள் வெளிவருவது என்பன தடைபடுகின்றன என்பதையும் மனதிற் கொள்ளவேண்டும்.

ஒரு மொழி என்பது, ஒரு சமுதாயத்தின் உயிர்நாடியாக இருக்கும்போது, சில குறுகிய கால நலன்களுக்காக அந்த மொழியைக் குறிப்பிட்ட காரணத்திறகாக மட்டும் பாவனையில் கொண்டுவருவதால் அம்மொழி மக்களின் தேவையிலிருந்து தானாகவே மறைந்து விடும் என்பதற்கு, ஒருகாலத்தில் கொடி கட்டிப் பறந்த பல மொழிகள் இன்று மக்களுக்குத் தெரியாத சரித்திரமாகப் போனவை ஒருசில சான்றுகளாகும். காலம் காலமாகப் பல அரசியற் சிந்தனையாளர்கள், சமுதாய மாற்றங்களுக்கான திட்டங்களைத் தங்கள் படைப்புக்கள் மூலம் மக்கள் மனதில் படைத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் பல் விதமான அடக்கு முறைகளுக்கும் எதிரான ஆயதமாகச் செயற்பட்டவை, சிந்தனையாளர்களின் பேனாக்களாகும். அவற்றின் தூய படைப்புக்கள் தமிழின் எதிர்காலம்பற்றி எழுதுவது இக்காலத்தின் மிகப்பெரிய தேவையாகும்.

இன்று வலிமைபெருகிய சக்திகளான, தொழில் விஞ்ஞான வளர்ச்சிகளாலும், தமிழ்பற்றிய பெருமை தெரியாத அறியாமையினாலும் தமிழ் ஒரு தேக்கநிலையை அடைவது தவிர்க்க முடியாது. அதேமாதிரி, இலங்கைபோன்ற நாடுகளில் தமிழ் ஒரு அரசகருமமொழியாக இருந்தாலும் அதன் பாவனையும் பராமரிப்பும் திருப்திதரும் வகையில் இல்லை என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும்.

வலிமையுள்ள ஆதிக்க சக்தி, தான் வெற்றி கொண்ட மக்களுக்குத் தங்கள் மொழி, கலாச்சாரத்தை திணிப்பதுபோல் (பழைய காலத்தில் இலத்தின், சமஸ்கிரதம் என்பன இருந்ததுபோல், பதினைந்தாம் நூற்றாண்டுக்கால கட்டத்தில் ஸ்பானிஸ், போர்துக்கிஸ் மொழிகளும், நவின காலத்தில் ஆங்கிலமும் இருக்கிறது). இன்றைய கால கட்டத்தில் தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் பல சோதனைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளைப், பல்லாயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழ் மொழி, பல மாற்றங்களுக்கு முகம் கொடுத்தது போல, இன்னும் பல உத்வேகத்துடன் முகம் கொடுக்குமா என்பதை இக்கட்டுரை ஆராயவிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து பாவனையிலிருக்கும் மொழிகளில் தமிழ் மொழி முன்னிடத்தை வகிக்கிறது. பழைய மொழிகளான இலத்தின், சமஸ்கிருதம், பாலி போன்ற மொழிகள் காலக்கிரமத்தில் பழக்கத்திலில்லாத மொழிகளாக மாறிப் போய்கொண்டிருக்கும்போது தமிழ் மொழி ஒரு தனித்துவமான ஆளுமையான மொழியாக வளர்ந்து கொண்டிருக்கிறதா, அல்லது தமிழ் மொழி என்பது ஒரு அரசியல் வலிமையான ஆயுதமாகக் கணிக்கப்படுகிறதா அல்லது, இன்றைய கால கட்டத்தில், இணையத்தளத்தின் மூலமும், அத்துடனான பல்வேறு சமூகத் தொடர்பு சாதனங்களாலும் தமிழின் பாவனையும் பதிய வடிவெடுத்துத் தன் வடிவைக் காலத்திற்கேற்றபடி மாற்றிக் கொள்கிறதா போன்ற பல கேள்விகளுக்குப் பதில் தேடுவது இலகுவான காரியமல்ல.

அத்துடன் காலம் காலமாக மக்கள் இடம் பெயர்வதும் தங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் தொடர்ந்து வளர்ப்பதும் ஒரு மொழி, அதனுடைய பன்முகத்தன்மை வளர்ச்சியைக்காணும் ஒரு பரிமாண மாற்றமாகக் கருதப்படுகிறது. இன்று உலகம் ஒரு சிறிய கிராமமாக மாறிக்கொண்டிருக்கிறது. தொழில் நிமித்தம், அரசியற் காரணங்கள், தொடரும் உள்நாட்டுப் பிரச்சினைகள் போன்ற பல காரணிகளால் மக்கள் இடம் பெயர்கிறார்கள். ஆங்கிலம் மட்டும் என்ற ஓரே ஒரு மொழி மட்டும் பாவனையிலிருந்த லண்டன் போன்ற நகரத்தில் இன்று 330 மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். தமிழ் மக்களும் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தேவைகளும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் இன்றியமையாத மொழியை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

முக்கியமாக, இலங்கைத் தமிழர்கள் மிகப் பெரிய அளவில் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். பலர் தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் மிகவும் அக்கறையாக இருக்கிறார்கள். அவ்வப்போது, ஆங்காங்கே சில மகாநாடுகள் தமிழ் மொழி பற்றி நடக்கின்றன. ஒரு மொழியின் வளர்ச்சிக்குப் பின்புலமாக இருப்பது அந்த மொழியின் ஆளுமையை உணர்ந்த, அந்த மொழியுடன் தங்கள் ஆக்கங்களை இணைத்துக்கொண்ட, எதிர்காலத்திற்கு எப்படி எங்கள் மொழியை முன்னெடுத்துக் கொண்டுபோகலாம் என்ற ஆத்மீக தாகமுள்ள சில புத்திஜீவிகளின் தொடர் முயற்சிகள் மட்டுமல்ல, மொழியைத் தங்கள் வாழும் சமுதாயத்தின் வாழ்வின் நலத்துடனும், முன்னேற்றத்துடனும் பிணைப்பதற்கு உதவும் பலகலைகளும், ஆய்வுகளும், அரசியலோ அல்லது குழு மனப்பாங்கற்ற மகாநாடுகளும் தொடர்ந்து நடைபெறுவது, தமிழ் மொழியின் வளர்ச்சிகளை முன்னெடுக்கும் பணிகளாகவிருக்கும். தமிழர்கள் பலநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தாலும் தமிழை வளர்க்கும் உரிய நோக்குடனான உலகமளாவிய ஒரு ஸ்தாபனம் இன்னும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் உருவாக்கப்படவில்லை.

இன்று இந்தியாவில் அரச கரும மொழியாகவிருக்கும் இருபத்திரண்டு மொழிகளில் தமிழும் ஒரு மொழியாகும். 2004ம் ஆண்டு, அன்று இந்திய ஜனாதிபதியாக இருந்த அப்துல் காலம் என்ற அறிஞராலும், இன்றைய முதல்வராக இருந்த திராவிட முன்னேற்றக் கட்சித்தலைவர் மு. கருணாநிதியாலும் தமிழ் ஒரு செம்மொழி என்று பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியாவில் அறுபது கோடி மக்களாலும், ஒட்டுமொத்த உலகிலும் எழுபது கோடி மக்களாலும் தமிழ் பேசப்படுகிறது. தமிழ் மொழியிலிருந்து தழுவி வந்த (மலையாளம் போன்ற திராவிட மொழிகள்) மொழியைப் பேசுபவர்களையும் ஒன்று சேர்த்தால் நூற்றுப் பத்துக்கோடிக்கு மேலாகலாம் என்று கணிக்கப்படுகிறது.

இந்தியாவிலும் இலங்கையிலும் பத்தொன்பது பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பீடங்கள் உள்ளன. அத்துடன் உலகின் பல முக்கிய நாடுகளான அமெரிக்கா,இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளின் பல்கலைக்கழகங்களும் தமிழின் முதுமைக் கலாச்சாரத்தை ஆராய்கின்றன. தமிழ் பேசும் மக்கள் இன்று உலகின் பல பகுதிகளிலும் (கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேலான நாடுகளில்) வாழ்கிறார்கள். அத்துடன் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அந்தமான் தீவுகளில் தமிழ் உத்தியோக மொழியாகப் பாவிக்கப் படுகிறது.

தமிழ் மொழி இந்தியாவின் ஆதிக்குடிகளான திராவிட மக்கள் பேசிய முக்கிய மொழியாகும். தமிழ் நாடென்று ஒன்றிருந்தாலும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லாதிருப்பதால், தமிழின் எதிர்காலம் பற்றிய பயம் பல தமிழர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டு வருகின்றது என்று அண்மையில் ஒரு பேராசிரியர் குறிப்பிட்டார். ஆனால், இன்று தமிழகத்தில ஆட்சி செய்யும் அரசியற் கட்சிகள் தமிழின் பெருமையை வைத்துச் செய்த பிரச்சாரத்தால் ஆட்சிக்கு வந்தவை. தொடர்ந்தும் ஆட்சியிலிருப்பவை. ஒரு காலத்தில், ஆங்கில நாடான இங்கிலாந்தின் அரசகரும மொழி ஆங்கிலமாக இருக்கவில்லை. இந்தியா அன்னியரின் ஆதிக்கத்திலிருந்தபோது தமிழ் மொழி மட்டுமல்லாது இந்திய மொழிகள் அரசமொழிகளாக இருக்கவில்லை. ஆனாலும் பல இந்திய மொழிகள் உலகம் தெரிந்த மொழிகளாக மாறின. இரவிந்திரநாத தாகூரின் எழுத்தும் அவரின் கீதாஞ்சலியும் நோபல் பரிசைப் பெற்றது. இன்று தமிழகத்தில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது. மிக முக்கியமான எழுத்தாளர்கள், விஞ்ஞானி அப்துல்கலாம் சினிமாத் துறையில் அப்துல் ரகுமான் போன்ற கலைஞர்கள் உலகம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.

தமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சிகள் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் மிகவும் முக்கியமாக ஆராயப்படுகிறது. இவை, தமிழின் புதிய பரிமாணத்தையுண்டாக்கும் காரணிகளாக அமைகின்றன. இந்தியாவின் ஆதிக்குடிகளான திராவிட மக்கள், ஆரியரின் வருகையை (கிட்டத் தட்ட கி.மு 2000 வருடங்கள்) ஒட்டித் தென்பகுதிக்கு மட்டுமல்லாது இந்தியவின் பல பகுதிகளிலும் சிதறிவாழவேண்டிய நிலை ஏற்பட்டது. அன்னியர் வருகையால் மக்கள் இடம் பெயர்வது, அவர்களது கலாச்சாரம், மொழி என்பன வேறுபடுதல் அல்லது மாறுபடுதல், சேர்ந்துபோதல், சோர்ந்து போதல் என்பன இன்றியமையாதன என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். உரோமரின் வருகையால், பிரித்தானியத் தீவின் பழைய கலாச்சாரம் ஒழிக்கப்பட்டது. ஸ்பானியரின் ஆதிக்கத்தால் தென் அமெரிக்க ஆதிக் குடிகளான மாயன் இன மக்களின் மொழி கலாச்சாரம் நிர்மூலமாக்கப்பட்டது.

போர்துக்கேயரால் வெனிசுவேலா போன்ற நாடுகளின் கலாச்சாரம் அழிக்கப்பட்டது. ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பால், அவுஸ்திரேலிய, அமெரிக்க, தாஸ்மேனிய, நியுஸீலண்ட் நாடுகளின் ஆதிக்குடிமக்கள் வாழ்க்கைமுறையும் கலாச்சாரமும் உருக்குலைந்தன. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக, இந்தியாவுக்கு வருகை தரும் அன்னியரால் சிதறிய இந்தியாவின் ஆதிமக்களான திராவிடரின் மொழி கலாச்சாரத்தில் பல்வேறு விதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன.

காலக்கிரமத்தில், பற்பல காரணங்களால் எந்த மொழியிலும் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அதேபோல், தமிழ் மொழியிலும் பல மாற்றங்கள்- பிரிவுகள் ஏற்பட்டன. அறிஞர் கமில் ஷிவலபில் (17.9.1927-17.01.2009, திராவிடம், சமஸ்கிரதம் போன்றவற்றின் ஆதிமூலங்களை ஆராய்ந்தவர்) அவர்களின் கருத்துப்படி, தமிழர்கள், கற்கால காலகட்டத்தில (பத்தாயிரம் வருடங்களுக்கு முந்திய கால கட்டம்), அதாவது மனித இனம் கற்களால் ஆயுதம்செய்து தொழில் வளர்ச்சிபெற்ற (நியொலித்திக்) கட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார். அதாவது, மனித நாகரீகம் வளர்ந்த காலம் மத்திய தரைக்கடலை அண்டிய நாடுகளின் வளர்ச்சியும் கிட்டத்தட்ட இதேகால கட்டமாகும். எனவே, தமிழின் மொழியின் ஆரம்ப வயது கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்கள் என்பது பெரும்பாலும் பொருத்தமாக இருக்கிறது.

இன்றைக்கு கிட்டத்தட்ட 4 அல்லது 5 ஆயிரம் வருடங்களுக்கு முன் படிப்படியாக நடந்த அன்னியர்களின் வருகையால் பிளவுபட்டத் திராவிட மக்கள், மூன்று பெரும் பிரிவானார்கள் அத்துடன் அவர்களின் ஆதித் திராவிட மொழியும் பல மாறுதல்களை எதிர்நோக்கின. ஆதித் திராவிட மொழி, இன்றைய கால கட்டத்தில், கிட்டத்தட்ட முப்பத்தைந்து சிறு பிரிவுளாகக் கிடக்கின்றன என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தென்பகுதித் திராவிட மொழிப்பிரிவுகள்: தமிழ் மலையாளம், கொடகு, கோடா, ரோடா, கன்னடா, துலு என்று பேசப்படுகிறது. மத்தியபகுதிக்குச் சென்ற திராவிடமொழி; தெலுங்கு, கோண்டி, கோண்டா, பெங்கோ, மன்டா,குயி, குவி, கோலம், நாய்க்கி, பார்ஜ், காட்பா, என்று சொல்லப்படுகிறது. வடக்குக்குப் பிரிந்த திராவிடமொழி: குருக், மால்ரே, பராஹ்யி என்று பிரிந்தனவாம்.

இப்பிரிவுகள் ஒரேயடியாக நடக்காமல் பற்பல கால கட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதலடைந்தன. உதாரணமாக, மலையாளம் ஒரு ஆளுமையான மொழியாக 13ம் நூற்றாண்டில் பாவனைககு வந்தது. திராவிட மக்களும் பற்பல பிரிவாகி பல தரப்பட்ட வாழ்க்கைமுறைகளயும் உள்வாங்கிக் கொண்டார்கள். நாடுநகர்நோக்கி வந்தவர்கள், கிராமத்திலேயே வாழ்பவர்கள், காடுகளை அண்டி வாழ்பவர்கள் என்று மூன்று பெரிய கலாச்சாரப் பிரிவு உருவெடுத்தது. நாகரீகமும் அதை ஒட்டி வளர்ந்தது. தமிழ் நாகரீகம் எஜிப்த்திய நாகரிக காலத்தில் வளர்ந்திருந்தது என்பதற்கு தற்காலத்தில் கண்டெடுக்கப்படும் தொல்பொருட்கள் சாட்சியங்கள் சொல்கின்றன.

பண்டைத்தமிழரின் வாழ்வும் வரலாறும், தமிழ்கள் மூன்று சங்கங்களை வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அறிஞர் ஷெலபிலவின் கூற்றுப்படி, தமிழர்கள் அப்படி வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. பூம்புகார் நகர் 11 000 வருடங்களுக்கு முன்னிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதேகால கட்டத்தில் உலகின் வேறு ஒரு பகுதியில் வாழ்ந்த அட்லாண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த அட்லாண்டிக் மக்களைக் கடற்கோள் அழித்துவிட்டதாக கிரேக்க அறிஞர் பிளாட்டோ எழுதியிருக்கிறார். அதுபற்றிய ஆராய்ச்சிகள் இன்று மேற்கத்திய தொல்பொருள் வல்லுனர்களால் ஆராயப்படுகிறது.

தமிழ் நாட்டின் பல இடங்களில் உள்ள குகைகளில் பல கால கட்டங்களை அடையாளப் படுத்தும் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. சிலவற்றின் வயது, கி.மு 9,10 நூற்றாண்டுகளாக மதிக்கப்படுகிறது.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடற்கோளால் அழிந்துபோன தமிழகத்தின் சரித்திரம் பற்றிய உண்மையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அக்காலத்தில் இந்தியா, இலங்கையுடன் மட்டுமன்றி, ஆபிரிக்கக் கண்டத்தையும் தொட்டிருக்கலாம், சிங்கப்பூர், பாளி போன்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம் என்பது ஐதிகம். அக்கால கட்டத்தில், உலகில் பல பூகோள மாற்றங்கள் நடந்ததை யாரும் மறுக்க முடியாது. இன்றைய, பிரித்தானியா, அன்றைய காலகட்டத்தில், ஐரோப்பாவின் ஒருபகுதியாக இருந்தது. ஐரோப்பா, ஆபிரிக்காவுடன் இணைந்திருந்ததது.

அந்த மாற்றத்துக்கு முன் உலகில் பல நாகரீகங்கள் வளர்ந்திருக்க முடியாது என்றோ, மாபெரும் கடற்கோளால் அழிந்து விட்டது என்றோ சொல்வதை மறுக்க முடியாது. ஆனாலும், தமிழ் மொழி பற்றிய ஆய்வுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளாக உறுதியாகவிருக்கிறது (கடந்த 5000 வருடங்களாக). தமிழின் பழம் தொன்மை பற்றிய உண்மைகளைப் பல தடவை மறைப்பதற்கான முயற்சிகள் வேண்டுமென்றே எடுக்கப்பட்டிருப்தும் அறியவருகிறது. தற்போது பல இடங்களில் நடைபெறும் தொல்பொருள் ஆராய்ச்சிகள் மூலம் தமிழர் கலாச்சாரம் பற்றி அவ்வப்போது சில செய்திகள் வருகின்றன. பல்லாயிரம் வருடங்களாக வளர்ந்த தமிழரின் நாகரீக வளர்ச்சியின் ஒரு சின்னமாக, 1836ம் ஆண்டில் நியசீலாந்தில் தொல்பொருள் வல்லுனர்களாற் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழம்சின்னம் பழம் தமிழரின் கடலாண்மையைக் காட்டுகிறது. திராவிடரின் பழம்கலைகள் ஹரப்பா போன்ற சிந்துவெளிப் பிரதேசங்களிற் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

இப்படியான தொன்மையான தமிழ் மொழி எதிர்காலத்தில் பாவனையற்ற மொழியாகி விடுமா அல்லது ஒட்டுமொத்தமாக அழிந்து விடுமா என்ற கேள்வி அங்குமிங்குமாக எழுப்பப்படுகிறது.

இன்று உலகில் கிட்டத்தட்ட ஆறாயிரத்தும் மேலான மொழிகள் பேசப்படுகின்றன. பெரும்பாலான மொழிகள் ஆபிரிக்காவின் பல்லின மக்களாற் பேசப்படுகிறது. ஒரு மொழியின் அல்லது ஒட்டுமொத்தமாக இன்று பாவனையில் இருக்கும் பல மொழிகளின் மூலங்கள் பலவாக இருக்கலாம். மனித இனம் நாகரீகமடைந்து மொழி வளர்ச்சிபெற்ற காலத்தில் புழக்கத்திலிருந்த நாற்பதுக்கும் மேலான உலகின் ஆதி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றென்று கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிடுகிறது. அவற்றிற் சிலமொழிகள்: சுமெரியன், எஜிப்தியன், ஹிபுறு, பினோசியன், அரமிக் (இயேசு பேசிய மொழி), இந்தோ யூரோப்பியன், கிரேக்க மொழி, பழைய பாரசீக மொழி, லத்தின், பழைய வடக்கு அரபு மொழி,பழைய தென்பகுதி அரபு மொழி, ஜேர்மானிக், முதிய சீன மொழி, பழைய தமிழ் மொழி என்பன சிலவாகும்.

ஆனால் திராவிட அறிஞர்கள் தமிழ் மொழி பழக்கத்திலிருந்த காலத்தை மிக மிகத் தொன்மையானதாகக் கருதுகிறார்கள் (50 000 வருடங்கள்). தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தடையாயிருந்த சமஸ்கிரதம், கி.மு 2000 ஆண்டு (இந்தியாவுக்கு ஆரியர் வருகை) காலகட்டத்தில் இந்து- ஐரோப்பிய மொழிகள் என்ற தொடர்பில் பாரசீக (ஈரான்) நாடுவழியாக (இந்தியாவுக்கு)ப் பரவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

தமிழ் மொழியின் வளர்ச்சியின் பல பரிமாணங்களை ஆராய்பவர்கள், கி.மு 300 தொடக்கம்,- கி;பி 700 வரைக்குமுள்ள காலத்தை இலக்கியத் தமிழ்க்காலம் என்றும், கி;பி 700 தொடக்கம் 1600 வரையுள்ள காலகட்டத்தைப் பக்தித் தமிழ் கால கட்டமென்றும் 1600 தொடக்கம் இன்றுவரை வளரும் தமிழைத் தூயதமிழ்காலம் என்றும் வரையறுக்கிறார்கள்.

இக்கால கட்டத்தில், தமிழ், இலக்கிய, பக்தி படைப்புக்களிலிருந்த சமஸ்கிரதத்தைக் களையப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன என்று தெரிகிறது.

தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிப் பேசும்போது, ஒவ்வொரு வினாடியும் அளவிடமுடியாத விதத்தில் வளர்ந்து வரும் தொழில் விஞ்ஞானத்தில் ஆங்கிலம் சீனம், ஜப்பான் போன்ற மொழிகள் முன்னிடம் வகிக்கினறன, அந்த நோக்கிற் பார்க்கும்போது தமிழ்மொழியின் வளர்ச்சியும் முன்னேற்றமும் எப்படி இருக்கும் என்பது தமிழார்வம் கொண்டவர்களின் கேள்வியாக இருக்கிறது. இன்று பாவனையிலிருக்கும் மொழிகள் பல தடுக்க முடியாதளவு அழிந்து கொண்டிருக்கின்றன. 28 விகிதமான மொழிகள் கிட்டத்தட்ட நூறு மக்களால் மட்டும் பேசப்படுகிறது. சில நாடுகளிலுள்ள சிறுபான்மை மக்களின் மொழிகளை, அந்நாட்டின் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பெரும்பான்மை அரசுகள் அழித்துக்கொண்டு வருகின்றன.

அத்துடன் இன்று, தமிழ் மொழிக்குமட்டுமல்லாது பல மொழிகளுக்கும், அதிகளவில் முன்னேறிக் கொண்டுவரும் தொழில், விஞ்ஞான, ஊடகப் பெருக்கக்களுக்குடன் நின்றுபிடிக்கமுடியுமா என்பதாகும். இன்றைய கால கட்டத்தில் தொழிற்துறையில், உலகம் பரந்த விதத்தில் முன்னிற்பது ஆங்கில மொழியாகும். ஆனால் மக்களின் பாவனை மொழியுடன் ஒப்பிடும்போது, மான்டரின் (சீனா) மொழியை, 1025 கோடி மக்களும், ஸ்பானிய மொழியை 390 கோடி மக்களும், ஆங்கிலத்தை 328 கோடி மக்களும், ஹின்தி மொழியை 405 கோடிமக்களும், அராபிய மொழியை 452 மக்களும்,வங்காள மொழியை 250 கோடி மக்களும் பாவனைப்படுத்துகிறார்கள். அதில் தமிழ் மொழியைப் பேசுபவர்கள் ஒட்டுமொத்த உலகிலும் 74 கோடி இருக்கிறார்கள்.

தமிழின் எதிர்காலம்: முச்சங்கம் வைத்து வளர்த்த தமிழ், இயல் இசை நாடகம் என்ற பெயரில் பன்முக வளர்ச்சியைக் கொண்ட தமிழின் எதிர்காலம் என்ன என்பதுதான் இக்கட்டுரையின் நோக்கமாகும். ஒருமொழி வளர, அந்த மொழிக்கு உரிமை கொண்டாடும் மக்கள் அதைப் பேசவேண்டும், படிக்கவேண்டும், பல கலைகள் மூலமும் பரப்பவேண்டும்.

தமிழ் ஆதிகாலத்தில் அரசர்களின் உதவியுடன் வளர்க்கப்பட்டது. புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்து பாடுவதன்மூலம் தமிழை வளர்த்தார்கள். அன்றைய ஆண் பெண் புலவர்களால எழுதப்பட்ட அகநானுறு, புறநானுறு போன்றவற்றால் அன்றைய சமுதாயத்தின் நிலையை இன்றைய மக்கள் அறியும் வழியைத் தந்திருக்கிறார்கள். திருவள்ளுவரின் திருக்குறள் அறப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பகுதிக் குறள்களால் தமிழர் கடைப்பிடித்த வாழ்வு நியதியை உலகுக்குக் காட்டியிருக்கிறார். தமிழ்நாட்டில் மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட மதங்களான சைவம். வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம் என்ற பல மதத்தைச் சேர்ந்தவர்கள், பாகுபாடற்ற விதத்தில், தமிழை பல விதத்திலும் வளர்த்திருக்கிறார்கள். சித்த வைத்தியமும், யோகாசனமும், பரதமும் தமிழர் கலைகள். இவற்றை எங்கள் மூதாதையர் அழகிய தமிழில் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். எழுத்து, இலக்கணம், இலக்கியம், பக்தி, பரதம், வைத்தியம், தத்துவம் என்ற பற்பல பிரிவுகளை கண்டது தமிழ் மொழி.

எழுத்துவடிவில் வரமுதல் மொழிகள் வாய் மொழியாக வளர்க்கப் பட்டது. இலத்தின், சமஸ்கிரதம் போன்றவையும் இப்படியே வளர்ந்தன. அத்துடன் மொழிகள் இசைமூலமும், நாடகங்கள், கிராமியப்பாடல்கள், நாட்டுக் கூத்துக்கள், கதாப்பிசங்கங்கள் போன்ற பல வழிகளாலும் வளர்க்கப்பட்டன. தமிழின் பெருமை, சித்திரம், சிற்பங்களில் பதிக்கப்பட்டது. இந்தியா மட்டுமல்ல, தமிழக்கலையின் பிரதிபலிப்புக்கள் அண்டை நாடுகள் பலவற்றிலும் தடம் பதித்திருக்கின்றன.

ஆனால் இன்று தமிழ் பிறந்த தமிழ்நாட்டில், தமிழுக்கு ஒரு ஆளுமையான இடம் கிடையாது. ஆளும் மொழியாகத் தமிழ் நாட்டில் இருந்தாலும் பெரும்பாலான தமிழ் மக்களின் கல்வி, தொழில் மொழியாக இருப்பது ஆங்கில மொழியாகும். தமிழ் மொழியைத் தமிழ் மக்களிடம் பரப்பும் முக்கிய பாத்திரம் வகிக்கம் தமிழ் சினிமா, தமிழ் மொழியையோ அல்லது உண்மையான தமிழ்க்கலாச்சார தத்துவங்களை முன்னெடுக்கின்றனவா அல்லது தமிழ்ச்சினிமா என்ற பெயரில் கிடைக்கும் ஆதாயத்தை முன்னெடுக்கிறதா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

அண்மைக் காலங்களில் இலங்கையிலிருந்து பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலோர் தமிழைப் பாவனை மொழியாகப் பாவித்தாலும் காலக்கிரமத்தில் தமிழின் பாவனை அருகிவிடுவது தவிர்க்க முடியாது. இவர்களுக்கும் இந்தியாவிலிருக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு பாலத்தை அமைத்துக் கொடுத்துக் கொண்டிருப்பது தமிழ்ச் சினிமாவாகும். அதனால் காலக் கிரமத்தில் புலம் பெயர்ந்த தமிழரின் தமிழ் இந்திய சினிமாத் தமிழை மருவிப்போவது தவிர்க்க முடியாததாகும். உதாரணமாக, 1840ம் ஆண்டுகளிலிருந்து, அன்றைய ஆட்சியிலிருந்த ஆங்கிலேயாரால் பல நாடுகளுக்கும் (தென்ஆபிரிக்கா, மலேசியா, வடக்கிந்தியத்தீவுகள், சுரினாம், பிரிட்டிஷ் கயானா, இலங்கை, மொரிசியஸ்) கொண்டு செல்லப்பட்ட தமிழர்களிற் பலர் இன்று தமிழ் மொழியைப் பாவனையில் வைத்திருக்கவில்லை. தமிழ்க்கலாச்சாரத்துக்குள் அமைந்த பல சடங்குகளையும், வழிபாடுகளையும் இறுக்கமாக வைத்திருப்பதுபோல் மொழியின் ஆளுமையை வைத்திருக்கவில்லை. வாழ்க்கையின் கட்டாய நியதிகளால், மக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பல மாற்றங்கள் நடப்பதை யாராலும் மாற்ற முடியாது.

உலக, விஞ்ஞான, தொழில் வளர்ச்சியின் உயிரோடியாயிருக்கும் ஆங்கிலமே, பல விதங்களிலும் வள்ர்ந்து சீன மொழி, அல்லது ஸ்பானிய மொழிக்குத் தாக்குப்பிடிக்க முடியாத காலமும் வரலாம். ஒருகாலத்தில்- கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் மேலாகப் பாவனையிலிருந்த எஜிப்திய மொழி இன்று உருமாறியிருக்கிறது. அப்படியே மேற்குலக ஆளும் மொழிகளாகவிருந்த, இலத்தின், கிரேக்கம், என்பனவும் இன்று ஆளுமையான மொழியாக இல்லை.

15ம் நூற்றாண்டில் அச்சுக் கூடங்கள் வரும் வரைக்கும் இன்று பாவனையிலிருக்கும் ஆங்கில மொழி, பல தரப்பட்ட பிராந்திய மொழிகளாகப் பிரிவுபட்டிருந்தது. லண்டனை மையப்படுத்திய ஆங்கில மொழியின் ஆதிக்கம் அச்சு மொழியேறிப் பிரபலமடைந்தது. அதுபோலவே, தமிழும் பல தரப்பட்ட பிராந்திய பேச்சு வழக்குகளைக் கொண்டிருந்தாலும், இயந்திரகால முன்னேற்றத்தால் தமிழும் பல தரப்பட்ட விதத்தில் வளர்ச்சியடைந்தது.

ஆதிகாலத்திலிருந்து, இதிகாசங்களும் புராணங்களும் தமிழ் படித்தவர்களால் பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டன. தமிழ் படித்தவர்களால் கோயில்களில் இதிகாசங்களும் புராணங்களும் கதாப்பிரசங்கங்களாகச் சொல்லப்பட்டன. கடந்த நூற்றாண்டில் நடந்த சினிமா வளர்ச்சியால் தமிழ்ப்படங்கள் இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களைத் தயாரித்துத் தமிழைச் சினிமாவுடன் இணைத்து விட்டார்கள். இன்று எழுத்து, இயல், இசை, நாடகத் தமிழைவிடச் சினிமாத் தமிழ்தான் மக்களிடம் பரவியிருக்கிறது. இந்த வளர்ச்சியால், செந்தமிழ் அருகிப்போய் ஆங்கிலம் கலந்த தமிழழை இளம் சிறார்கள் ‘பழகு’தமிழாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த நூற்றாண்டில், அரசியற் காரணங்களால் பாரதியாரால் எழுச்சி பெற்ற புரட்சித்தமிழ் இன்று, பற்பல காரணிகளால் பல தரப்பட்ட விதமான பாவனைக்கு ஆளாகியிருக்கிறது. இக்கட்டுரை, இலங்கையில் வாசிக்கப்படுவதால், இலங்கையிலுள்ள தமிழ் ஆர்வலர்கள், எதிர்காலத்திற்கான தங்கள் பங்களிப்பை எப்படிச்செய்யலாம் என்பதை ஒரு தூய உண்ர்வுடன் அணுகுவது நன்மை தரும் என்று நினைக்கிறேன்.

இன்றைய சமுதாயம் கிட்டத்தட்ட ஒரு வியாபார சிந்தனையுள்ள சமுதாயமாக மாறிக் கொண்டிருக்கிறது. கிழக்கு நாடுகளில் ஆளமாகப் பதிந்திருந்த பழைய பண்பாட்டுச் சிந்தனைகளை, இன்றைய ஆதாயமுள்ள பொருளாதாரத்தின் அடிப்படையாக்குவது இன்றியமையாததாக மாற்றப்படுகிறது. யோகாசனத்ததை மேற்கு நாட்டார் உரிமை கொண்டாடுகிறார்கள். அதனால் மொழியும் அந்தப் பொருளாதார சிந்தனையை மீற முடியாததது என்பதற்கு இன்று பெரும்பாலான மக்களால் அணுகப்படும் ஆங்கிலக்கல்வியை உதாரணம் காட்டலாம். ஆங்கிலக்கல்வி என்பது விலை மதிப்பற்ற மூலதனமாக இருப்பதால் சிறு நாடுகளில் உள்ள படித்த இளைஞர் கூட்டம் அக்கல்வியை முன்னெடுக்கிறது. இதற்கு இலங்கைத் தமிழர்கள் விதி விலக்கல்ல.

இலங்கையில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தமிழிலேயே கல்வி தொடர்ந்தும் புகட்டப்பட்டாலும், தேவையான கல்வித் தராதரத்துக்கப்பால் தமிழின் தரம் உயர சமுதாயமும் ஒன்றிணைய வேண்டும். பிரமாண்டமான விதத்தில் பரவி வரும் தமிழச்சினிமாவின் ஆதிக்கத்தால் வாய்மொழித் தமிழின் பாவிப்பும் வளர்ச்சியும், அதன் அடிப்படையில் ஆண்டாண்டு காலமாக மக்களால் உருவாக்கப்பட்ட கிராமியக் கவி(தை)களும் அருகிக் கொண்டு வருகின்றன. கிராமங்களின் அடிமட்டத்தில் பழையபடி இப்படியான இயற்கையான படைப்புக்கள் வளர தமிழ் ஆர்வலர்கள் ஊக்கம் கொடுக்கவேண்டும். அடுத்ததாகக் கிராமங்களில் மேடையேற்றப்படும் நாட்டுக்கூத்துக்கள் பழையபடி கிராமத்து மக்களின் கலையாக வளரவேண்டும். இந்தத் தலைமுறைக்கு, இலங்கைத் தமிழரின் முக்கியமாக, மட்டக்களப்பு மக்களின் ஆதிக்கலையான நாட்டுக்கூத்துக்கள் தேசிய அளவில் பரப்பப்பட வேண்டும்.

இந்தியாவில், திராவிடக் கட்சிகள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. இந்தியாவின் தெற்கு முனையில் முப்பெரும் கடல்களும் மோதிக்களிக்கும் கன்னியா குமரியில் தமிழ்த் தெய்வப்புலவர் திருள்ளுவர் தலைநிமிர்ந்து நிற்கிறார். தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய விடயமிது. இன்று கவியரசு வைரமுத்து போன்றோர் தமிழுக்குத் தங்கள் கவிதைகள் மூலம் உலகப் பெருமை சேர்க்கிறார்கள்.

தமிழகத்தில் பல பகுதிகளிலும் பல தரப்பட்ட தமிழ் ஆய்வு மகாநாடுகள் தொடர்கின்றன். உலகத் தமிழர் மகாநாட்டைத் தொடங்கியவர் ஈழத்தைச்சேர்ந்த தனிநாயகம் அடியார் அவர்கள். உலகம் பெருமைப்படும் யாழ்நூலைத் தந்தவர் விபுலானந்த அடிகளார் அவர்கள். தமிழின் வளர்ச்சிக்கு, இலங்கைத் தமிழர்கள் இப்படி எத்தனையோ பங்கைச் செய்திருக்கிறார்கள். இன்று, இலங்கையிலுள்ள தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த நிலையிலுள்ளது. பெரும்பாலான படித்த தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதால், ஒரு நிரந்தரமான பெரிய தமிழ் அமைப்புக்கள் உண்டாவதும், அதை வைத்துக்கொண்டு ஆளுமையான ஆய்வுகளை முன்னெடுப்பதும் சாத்தியமா என்பது என்போன்றோரின் கவலையாகும். அதை நிவர்த்தி செய்யவும் இலங்கையில் வாழும் இளம் தமிழ் மக்களுக்கு ஆர்வத்தைக் கூட்டவும் கடந்த வருடமும், இப்போதும் நடக்கும் இப்படியான மகாநாடுகள் மிகமிக முக்கியமானவை ஆகும்.

கடந்த நூற்றாண்டில் பல பத்திரிகைகள் பல தரப்பட்ட விதமான மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்தன. பல தரப்பட்ட அரசியற் கருத்துக்கள், சமுதாயக் கருத்துக்கள், சமயக்கருத்துக்கள் ஐனநாயக முறையில் பகிரங்கமாக எழுதப்பட்டன. விவாதிக்கப்பட்டன. இன்று பெரிய தொகையளவில் பத்திரிகைகள் வெளிவந்தாலம் அவற்றை வாங்கிப் படிப்பவர்கள் குறைவாகும். இன்று தமிழ் மட்டுமல்லாது, எல்லா மொழிகளுமே புதிய அவதாரங்களை எடுக்க வேண்டியிருக்கிறது. இயல் இசை, நாடகத் தமிழ் என்று வளர்ந்த தமிழ் இன்று, இன்டர்நெட் தமிழ், பேஸ்புக் தமிழ், மோபைல் தமிழ், வீடியோத் தமிழ், சினிமாத் தமிழ், சீடித் தமிழ், விளம்பரப் பலகைத் தமிழ், என்ற பல்லவதாரங்களை எடுத்திருக்கின்றன. தமிழின் பாவனையும், உருவாக்கமும் அதிவேகமான முறையில் மாறிக்கொண்டு வருகின்றன. இவை தவிர்க்க முடியாத மாற்றங்களாகும். ஆனால் ஒரே ஒரு விடயம் மட்டும் மாறாமல் இருக்கும் அதாவது, ஆய்வுத்தமிழின் ஆளுமை மாறாது. அதை உணர்ந்தவர்கள் இன்று தமிழைப் பன்முக நோக்கில் ஆய்வு செய்கிறார்கள். 19980 ஆண்டு சென்னையில் நடந்த தமிழ்க் கடவுள் முருகன் பற்றிய முதலாவது ஆய்வு மகாநாட்டுக்கு அழைக்கப் பட்டிருந்தேன். அதற்கான கட்டுரை சமர்ப்பிப்பதற்கான ஆய்வைச் செய்தபோதுதான, முருக வழிபாடும் அதைத் தொடர்ந்து புதிய வடிவெடுத்த ‘முருக பக்தி’ மூலம் பரவிய தமிழும் தெளிவாக விளங்கியது.

இது ஒரு உதாரணம். அதேபோல் கடந்த வருடம் (தைமாதம் 2011) மட்டக்களப்பில் வெள்ளம் பெருகியபோது அங்கு சென்றிருந்தேன். மிகத் தொன்மையான சரித்திரம் கொண்ட மூலிகைத்தோட்டம் ஒன்று வெள்ளத்தால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டிருந்தது. அந்த மூலிகைகள் பற்றிய விபரங்கள் விலை மதிப்பற்றவை. ஆனால் அப்படியான பெறுமதியான விபரங்களைப் பாதுகாத்து வைக்க ஒரு ஒழுங்கான அமைப்புக் கிடையாது.

மட்டக்களப்பில் படுவான்கரைப் பகுதியிலுள்ள கொக்கட்டிச்சோலைக் கிராமத்திலுள்ள தான்தோன்றிஸ்வரர் கோயில் 2500 வருட சரித்தித்தைக் கொண்டது என்று சொல்லப்பட்டது. இவை பற்றிய ஆய்வுகள் செய்யப்பட்டு இளம் தலைமுறையினருக்குக் கொடுக்க வேண்டும். மட்டக்களப்பு மந்திர தந்திரங்களுக்குப் பேர்போன பிரதேசமாகும். இவைபற்றிய ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் தமிழ் மொழி மட்டுமல்ல தமிழ் மக்களாற் பாதுகாத்து வைக்கப்பட்ட பழைய சரித்திர விபரங்களும் எதிர்காலத்துக்குப் பிரயோசனப்படும் விதத்தில் இருத்தல் இன்றயமையாதது.

எதிர்காலத்தில் தமிழின் நிலை என்னவாகவிருக்கும் என்ற கேள்விக்குப் பலர் பயப்படுவதுபோல் தமிழ் அழிந்துவிடப் போவதில்லை என்பது எனது மிகவும் ஆழமான கருத்தாகும். கடந்த பத்தாயிரம் வருடங்களாகக் கடற்கோள் தொடக்கம் எத்தனையோ அன்னியரின் தாக்கங்களுக்கு நின்றுபிடித்த தமிழ் இன்று வளரும் புதிய தொழில் விருத்திகளாலோ விஞ்ஞான மாற்றங்களாலோ அழிந்து விடப்போவதில்லை. ஆனால், மற்ற மொழிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு வளரப் பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இன்று, தமிழ் பற்றிய ஒரு புதிய உணர்வு உலகம் பரந்த தமிழர்களிடையே பரந்து காணப்படுகிறது. அந்த உணர்வை, ஒரு குறுகிய தேவைகளுக்காக மட்டும் பாவித்து. தேன்மொழியாம் தமிழ் மொழியைக் தேயப்பண்ணாமல், நல்நோக்கங்கள் உள்ள பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய பெரிய ஆய்வுகளையும் ஆக்கங்களையும் செய்வதற்கு முயற்சி செயயவேண்டும் என்ற இலட்சியத்துக்கு உதவுவது எங்கள் ஒவ்வொருத்தரின் கடைமையுமாகும்.

நன்றி தேனீ

உங்கள் கருத்து
 1. kovai on June 12, 2012 4:09 pm

  வழக்கழிந்து போன இலத்தீன், சமஸ்கிருதம் போன்ற மொழிகள், ஆளுமை கொண்ட மதவாதிகளால் போற்றிக் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
  தமிழ் மொழி, எதிர்காலத்தில் வாழ்வது நிலப்பரப்பிலோ, மக்கள் தொகையிலோ அல்ல; மாறாக அதன் ஆளும் வல்லமையில் மட்டுமே தங்கியுள்ளது.
  அந்நிய நாடுகளில் அரசமானியங்களில் வாழ்ந்து, படிப்பு, பட்டம் பெற்றுக்கொண்டு வாழ்வோர், “தமிழ் வாழும் என்கிற ஆழமான கருத்துக் கொள்ளல்”, தமிழ் ஆய்வு, ஆக்கம் என்கிற பேரில் மேலும் அந்த நாடுகளில் உதவித்தொகை எடுத்து, வாழ்ந்து போதலையே எடுத்தியம்புகிறது.
  “test-tube baby” வழிமுறையில் குழந்தை பெறல் போல, தமிழ் மொழி வளர்ச்சியை ஒப்பீட்டுப் பார்ப்பது, “நீரளவே ஆகும் நீராம்பல்” நிலையே.
  இந்த எழுத்தர் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றே:
  ஆளும் மொழியே வாழும்; மற்றவை மாளும்.


 2. பல்லி on June 12, 2012 10:04 pm

  //தமிழ் மொழி, எதிர்காலத்தில் வாழ்வது நிலப்பரப்பிலோ, மக்கள் தொகையிலோ அல்ல; மாறாக அதன் ஆளும் வல்லமையில் மட்டுமே தங்கியுள்ளது.//
  அப்படியானால் தமிழ் மொழிக்கு கோவிந்தாவா?? (காரனம் தமிழ்நாட்டை கூட ஒரு தமிழரால் ஆள முடியவில்லையே)

  :://ஆளும் மொழியே வாழும்; மற்றவை மாளும்.//
  உலகத்தில் எங்கும் தமிழ் மொழி ஆள்வதாய் நான் அறியவில்லை (உலகத்தையே தமிழர்தான் ஆளுகிறோம் என சிலர் சொல்வார்கள்) அப்படியானால் கோவை என்ன சொல்ல வாறியள்,,,?? அம்மையார் கூட தமிழ் மொழி மீது அக்கறை கொள்வது ஆச்சரியம்தான்??


 3. kovai on June 13, 2012 1:41 pm

  ஒரு முது மொழியும், அதன் இனமும் அருகிப் போவதில் இருந்து காப்பாற்றப்பட, ஒரு நாடு (இந்திய மாநிலமான தமிழ்நாடு அல்ல.) அவசியம்.
  “அடி மாட்டு விலை கேட்கிற” மொழி வளர்ப்புத்தான், வெளிநாட்டில் தமிழரின் கூத்து.
  அதுதான் இந்த ராஜேஷின் கட்டுரை.


 4. சாந்தன் on June 14, 2012 4:15 am

  //….அம்மையார் கூட தமிழ் மொழி மீது அக்கறை கொள்வது ஆச்சரியம்தான்??…//

  இதிலென்ன ஆச்சர்யம் பல்லி? பெண்கள் சந்திப்பு அவுட், இலக்கியச்சந்திப்பு அவுட் (தமிழிச்சி கருத்தை திரித்து கதை விட்ட சிக்கல்!!) ஸ்ரீலங்கன் எம்பசி மட்டன் றோல் சந்திப்பு அவுட், மஹிந்தா சந்திப்பு அவுட்….
  பக்கவிளைவாக மனிதாபிமான பம்மாத்து அவுட், மாற்றுக்கருத்துச் சந்திப்பு அவுட்டோ அவுட்!!


 5. விமலநாதன் on June 14, 2012 8:24 am

  //அம்மையார் கூட தமிழ் மொழி மீது அக்கறை கொள்வது ஆச்சரியம்தான்??// பல்லி

  அம்மையாரின் தமிழ் இலக்கியத்திற்கான சேவையை நீங்கள் ஆறியாமை ஆச்சரியமாக உள்ளது…


 6. MANI on April 3, 2015 5:37 pm

  கல் தோன்ற மண் தோன்ற காலத்தில் தோன்றியது தமிழ். தமிழ் அழிவதற்குல் இந்த உலகம் அழிந்துவிடும்


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு