இங்கும் ஒரு சிறுபான்மையினம் சிறுமைப்படுத்தப்பட்டது: நோர்வே நக்கீரா
ஆதியினங்களின் அடிப்படைப் பிரச்சினைகள் ஒன்றாகவே இருந்ததனால் சாமர் தமிழர்களிடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. சமகாலத்தேவைகள் உணவுதேடும் முறைகள் நம்பிக்கைகள் இயற்கையுடன் ஒன்றியும் எதிர்த்தும் வாழ்ந்த வழிமுறைகள் இயற்கைக் கோட்பாடுகள் மதச்சாயல்கள் என பல ஒற்றுமைப்படுகின்றன.
வடக்கின் வீணை என வீற்றிருப்பதும் இன்று இலங்கை மண்ணின் இறைமைக்காகவும் அமைதிக்காகவும் வீணை மீட்டுவதும் அமைதிப்பிரியர்களான நோர்வே என்றால் இதை மறுக்கவோ மறைக்கவோ இயலாது. சமாதானத்திற்காகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் இந்நாட்டில் ஒரு சிறுபான்மையினம் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு காலம் காலமாக கண்ணீர் வடித்த சோககதைகள் இந்த மண்ணில் நிறையவே உண்டு.
ஆதி இனங்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அழிக்கப்படும் கால மாற்றம் வரலாறுகளில் கண்ணீரினால் காலம் கடந்தே எழுதப்பட்டிருக்கின்றன. ஆதி இனங்களின் அடிப்படைப் பிரச்சினைகள் ஒன்றாகவே இருந்ததினால் சாமர், தமிழரிடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. சமகாலத்தேவைகள், உணவு தேடும் முறைகள், நம்பிக்கைகள், இயற்கையுடன் ஒன்றியும் எதிர்த்தும் வாழ்ந்த வழிமுறைகள் இயற்கைக் கோட்பாடுகள் மதச்சாயல்கள் என பல ஒற்றுமைப்படுகின்றன.
மொழி
சாமிய மொழியானது பின்லாந்து – உர்யிஸ் மொழி வட்டத்துக்குள் அடங்கினாலும் பின்லாந்து மொழியுடனேயே நெருங்கிய தொடர்புடையது. பின்லாந்து மொழியானது ஜரோப்பிய மொழி வடிவத்தை சாராது வேறுபட்டே நிற்கிறது என ரஸ்சிய மொழி ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சாமி மொழியின் எழுத்துவடிவம் 1557ல் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இன்று ஆறு எழுத்து வழக்கையும் பத்து பேச்சு வழக்கையும் கொண்டுள்ளது. 50 விகிதத்துக்கு மேற்பட்ட சாமர் தம்மொழியை கதைக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். மீதி 50 விகிதத்தையும் சிந்தித்து பாருங்கள். அடக்கு முறைக்கு அடிமையாகிப்போகிறதா?
தொன்மை
காலப்பகுதி 1
கற்காலத்தில் பின்மார்க்கில் (நோர்வேயின் துருவப்பகுதி) இவர்கள் கிமு900 தொடக்கம் கிமு 4000 வாழ்ந்ததிற்கான ஆதாரங்கள் ‘கும்சா’ என்னும் மலைச்சாரலின் கண்டுபிடிப்புக்கள் தெரிவிக்கின்றன. அதனால் அக்கலாச்சாரத்தை‘கும்சா’ கலாச்சாரம் என்று அழைக்கிறார்கள் இம் மலைப்பகுதியில் கல் ஆயுதங்கள்(கல்தூண்டில்கள், கத்திகள், ஈட்டிகள், கோடரிகள்) மிருகங்கள் பிடிக்கும் மிதிப்பொறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இக்காலத்தில்தான் கடல் வளங்கள் முதலில் பாவிக்கப்பட்டு முக்கிய கடல் உணவான மீன் செல் கோதுள்ள கடல் உணவுகள் கடல் பறவைகள் உட்கொள்ளப்பட்டன. ஜரோப்பா வடமேற்கு ரஸ்யா வட ஸ்கன்ரிநேவியாவிலேயே உறை பனியானது கிமு20000- கிமு10000 முதலில் உருகி ஓடத்தொடங்கியது. சாமரின் வடபகுதியிலான வருகைக்கும் அமர்வுக்கும் சாதகமாகவும் காரணமாகவும் அமைந்தது.
காலப்பகுதி 2
கிமு7000-கிமு5500 இக்காலங்களில் கடற்கரை நீர்த்தேக்கங்கள் கொண்ட பகுதிகளிலேயே இவர்கள் செறிந்து வாழத் தொடங்கினார்கள். தென்வரங்கர் பகுதியில் இவர்கள் மிருகங்களின் தோலிலான கூடாரங்களை அமைத்து வாழ்ந்தார்கள். இக்காலத்திலேயே வேட்டை முக்கியத்துவம் பெற்றிருந்தது. இடம் பெயர் கலாச்சாரத்தை கொண்டதினால் தோல் கூடாரங்கள் இடம்பெயர்வுக்கு மிகவும் இலகுவாகவும் வசதியாகவும் இருந்தன. அக்காலத்தின் பிற்பகுதியில் வளங்கள் உள்ள இடங்களில் நிரந்தரமாகவும் ஒருபகுதியினர் வாழத் தொடங்கினார்கள். அக்காலங்களில் நிரந்தரமாக வீடுகளை நிலத்தில் கீழ் குடைந்து வாழ்க்கையை தொடங்கினார்கள். இக்காலப்பகுதியில் மீன்பிடிப்புக்காகவும் வேட்டைக்காகவும் பாவிக்கப்பட்ட கல்ஆயுதங்கள் காலப்பகுதி ஒன்றைவிட சிறியதாகவும் கூர்மையானதாகவும் இருப்பது இவர்களது பரிணாம வளர்ச்சியை காட்டுகின்றது. காலப்பகுதி இரண்டில் கடல் வளங்களை குறைத்து நிலவளங்களை அதிகமாக பாவித்தார்கள். இதற்கு பனி உருகி ஓடியதும் மிருகங்கள் நீர்த்தேக்கங்களை தேடி வருவதும் விலங்குகள் கடல் உணவுகளைவிட பெரிதாக இருப்பதும் காரணமாகின்றது.
அன்றிலிருந்து இன்றுவரை வேட்டை. பொறிவைத்தல். இயற்கை வளங்களை பயன்படுத்துவதில் திறமைசாலிகளாகவே இருக்கிறார்கள் ‘சீ’ என்னும் சறுக்கு தகடுகளுக்கு (பனிசறுக்கி) மூலகாரணமாக இருந்தவர்கள் சாமர்கள். அன்று சாமர்க்கு வாழ்கையாக இருந்த ‘சீ’ இன்று உலகுக்கு விளையாட்டாக இருக்கிறது. இவர்கள் கண்டு பிடித்த சீற்கு ‘துறூகர’ என்று நோர்வே மொழியில் கூறப்படும் இதன் நோர்வேயின் வடபகுதியில் ஒன்றான துரொம்சோ நூதன சாலையில் காட்சிக்காக வைத்திருக்கிறார்கள்.
வட்டத்தட்டு பலகையில் குறுக்கும் நெடுக்கமாக கோடுகள் கிழிக்கப்பட்டு இருக்கும். இவை உராய்வு மூலம் காலை வழுக்காமல் இறுகப் பிடித்திருக்கும். மறுபக்க தட்டில் வழுக்குவதற்கு ஏதுவாக அழுத்தமாக இருக்கும். வட்ட மரப்பலகையின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்துக்கு செருப்பு வார் போல தடித்த மிருகத்தோல் வரியப்பட்டிருக்கும். செருப்பு போல் காலை அதனுள் மாட்டிக்கொண்டு பனிமேல் நடந்தார்கள். மேற்பரப்பு கால்களைவிட மிகப்பெரியதாகவும் வட்டவடிவமாகவும் இருந்தததினால் பனியினுள் புதையாமல் நடக்கக்கூடியதாக இருந்தது. இதில் நடத்தல் கடினம் என கண்டவர்கள் சறுக்கத் தொடங்கினார்கள். பனிச்சறுக்கலின் ஆரம்பமே இப்படித்தான் ஆரம்பமானது. இத் துறூகரை கம்புகளாலும் மரத்தோல் மிருகத்தோலினாலும் கூட வரிந்திருந்தார்கள்
காலவரையறை:
பனிக்காலம் கற்காலம் என்பன நாட்டுக்கு நாடு கண்டத்துக்குக் கண்டம் வேறுபடுகின்றன. உலகின் வடக்கின் பனிக்காலமானது கி.மு 20000-10000 ஆண்டென்றும் கற்காலம் இதற்குப் பிந்திய காலமாகவுமே கருதப்படுகிறது. இக்கற்காலமானது மிக மிக நீளமானதாகவே இருந்தது. மத்திய கிழக்கில் கற்காலம் கிமு 3000 ஆண்டென்று கருதப்படுகிறது. இக்காலப் பகுதியில் கற்களாலும் எலும்புகளாலும் பொருட்களும் ஆயுதங்களும் செய்யப்பட்டன. கற்காலத்துக்குப் பிந்திய காலம் இரும்புக் காலம்.
இரும்புக் காலமானது கி.மு 1000 கி.பி 1000 வருடங்களாகவே கருதப்படுகிறது. வீக்கிங் (கடற்கொள்ளையர்) காலம் இன்றிலிருந்து 1050 வருடங்களிலே முடிவடைகிறது. மர கல் ஆயுதங்களுடன் வாழ்ந்த ‘சாமன்’ இரும்பாயுதங்களுடன் தெற்கில் இருந்து வந்த வெளிநாட்டவரை எதிர்க்க முடியாததால் சரிந்ததன் விளைவே அடிமையாக்கம் ஆரம்பமானது.
சாமிய மதமும் சிறு விளக்கமும்
பண்டைய சாமன் வேட்டை மீன்பிடி விலங்குகளைச் சிறைப்பிடித்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாலும் இதனால் இடப்பெயர்வு அவசியமானதாலும் இவர்களது கலாச்சாரத்திலும் மதத்திலும் சூழலின் ஆதிக்கம் மையப்பகுதியை உட்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக சாமர் தமக்கென்றொரு தனியிடத்தை அமைத்துக் கொள்வது என்பது இலகுவாக அமையவில்லை.
இயற்கை ஆத்மா கொண்டது. கடல் காற்று காடு போன்ற எல்லா ஆத்மா கொண்ட கடவுளின் வடிவங்கள் என்றே கருதினார்கள். பழைய பசிய(ஈரான்) மதமான சார்தொஸ் இந்துமதம் போன்று இவர்களது மதத்திலும் சூரிய வணக்கம் முக்கியமாக இருந்திருக்கிறது. ஆதி மதங்களின் இயற்கை வழிபாடே முக்கியபொருளாக அமைகிறது. முக்கியமான சிறப்பு வடிவங்களைக் கொண்ட கற்களை கடவுளாக வணங்கியதுடன் அவற்றுக்குப் பலியும் கொடுத்து வந்தார்கள்.
சாமியகடவுள்களும் பொறுப்புகளும்:
- கூறாகல்லிஸ்- மனிதர்களின் நலம் உடல்நிலை சக்தி
- பியகுல்மாய்வாயு- சூறாவளி
- லெஜ்புல்மாய்காடும்- காட்டு விலங்குகள் (வேட்டையாடிய இறைச்சியின் ஒரு பகுதி இக்கடவுளுக்குப் படைக்கப்படும்)
- சாராக்கா- படைத்தல். பெண்களின் கடவுள் (பிள்ளைப்பேற்றின் போது இக்கடவுள் முக்கிய வணக்கத்துக்கு உரியவளாவாள். ஒவ்வொரு உணவு நேரமும் இக்கடவுளுக்கு உணவு படைக்கப்படும்.
-யுக்சக்- இவளை ஆண்களின் கடவுள் என்றும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை நிர்ணயிப்பவள் இவளே. பிள்ளை பிறந்ததும் தாய் பிள்ளை இருவரினதும் நலத்துக்கும் இவளே பொறுப்பாவாள். இப்படிப் பல….
சைய்வு என்பதே சாமர்களின் சொர்க்கத்தின் பெயராகும். இது உலகளவானாலும் மிகமிக அழகான இயற்கையையும் நிறைய மிருகங்களையும் கொண்டது என நம்பினார்கள். இவர்களது நகரத்தின் பெயர் ‘யப்மிடாய்மு’.
புத்தருக்கு போதிமரம், இந்துக்களுக்கு வேம்பு போல சாமருக்கு ஒடர். இப்புனித ஒடர் மரத்தில் இருந்தே எழுதுகோலுக்கான மையும் மிருகத்தோல் பதப்படுத்தலுக்கான திராவகமும் மனிதர்களுக்கான மருந்துகளும் எடுக்கப்பட்டன.
சாமன் என்பவன் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் ஐயர் அல்லது பாதிரி போன்று தொடர்புகளை ஏற்படுத்துவர். இவர் தோலிலான மத்தளம் கொட்டி கூவியே (இதை யொய்க் என்றழைப்பர்) கடவுளை அழைப்பார்
இக்கூவுதல் ஒரு தாளக்கட்டுக்குள்ளும் தாள லயத்துக்குள்ளும் உட்பட்டிருக்கும். இந்த யொய்க் இவர்களது கலாச்சாரத்தின் முக்கிய மையப் பகுதியாகும். இவர்களது மதம் உயிர், மூச்சு (சுவாசம் – ஸ்பிரட்) என்பதை விட ஆத்மா என்பதையே மையப் பொருளாகக் கொண்டுள்ளது.
இது ஒரு இயற்கை சார்ந்த மதமாக இருந்ததனால் எந்த ஒழுங்குகளும், கட்டுப்பாடுகளும் எழுத்து வடிவமாக இருக்கவில்லை. இவர்கள் இறப்பின் பின்பும் வாழ்வுண்டு என்பதை ஆணித்தரமாக நம்புகிறார்கள்.
சாமரின் தனித்துவம்
கலை, கலாச்சாரம், மொழி, இசை, மதம், தொழில் என நோர்வேயியர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சிறுபான்மை இனமான நோர்வேயின் ஆதிக்குடிதான் சாமர். இவர்கள் தோற்றத்தில் மங்கோலிய, செவ்விந்திய இனத்தவர்களது முகவமைப்பையும், சாயலையும் கொண்ட இவர்கள் பனிமர வேட்டை, சிறைப்பிடித்தல், வளர்ப்பு, மீன்பிடித்தல், உடை பின்னல், பொறிவைத்தல் என்பவற்றையுமே அடிப்படைத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள்.
நோர்வே, சுவீடன் (வட ஸ்கன்டிநேவியா), வடபின்லன்ட், வடமேற்கு ரஸ்சிய நாடுகளின் நுனிப்பகுதியில் செறிந்து வாழ்ந்து வந்தனர். பெரும்பான்மையான சாமர்கள் நோர்வேயிலேயே வாழ்கிறார்கள். சுமார் 50 000 சாமர்கள் நோர்வேயிலும், 20 000 – 30 000 சாமர்கள் சுவீடனிலும் உள்ளார்கள். இவர்களது மிக முக்கியமான தொழிலும், மூலதனமும் வேட்டை, பனிமரை பிடித்தல், வளர்த்தல், பாதுகாத்தல், பதப்படுத்தல், மீன்பிடித்தல் போன்றனவாகும்.
இவர்கள் எம்நாட்டு வேடுவர் போன்று ஒரு காலத்தில் இவர்கள் மிருகங்களுடனும், இயற்கையுடனுமே நெருங்கி பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தனர். பனிமரைகள் எங்கெங்கு செல்கின்றனவோ அங்கெல்லாம் இவர்கள் குடும்பம் குடும்பமாகப் பின்தொடர்ந்து சென்றார்கள். பனிமரைக் கூட்டம் உணவுள்ள இடங்களில் தங்கினால் இவர்களும் கூடாரங்கள் அமைத்தும், கொட்டில்களை மரப் பலகையால் அமைத்தும் அங்கேயே தங்கி விடுவார்கள். பின்பு பனிமரைகள் இடம்பெயரும்போது இவர்களும் பனிமரைகளுடன் இடம்பெயர்வார்கள். இவர்களை காட்டின் நாடோடிகள் என்றால் மிகையாகாது. இவர்களின் சிறப்பியல்பு என்னவெனில் இயற்கையில் கிடைப்பனவற்றைப் பயன்படுத்தி இயற்கையுடன் இணைந்து வாழப் பழகிக் கொண்டவர்கள்.
இவர்கள் நோர்வேயின் பல பகுதிகளில் முக்கியமாக தெற்குப் பகுதிகளில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக விட்டுச்சென்ற கொட்டில்கள் இன்றும் நின்று சான்று பகிர்கின்றன. வட சாமர் தென்சாமர் என அழைக்கப்படும் ஒர மிகமிக சிறிய தொகை சாமர் நோவேயியப் பிராந்தியத்தில் அந்தக் காலத்தில் இருந்தே மரைகளைத் தொடர்ந்து வந்து வடக்கு, தெற்கிலே நோவேயியப் பகுதிகளில் தங்கியிருக்கிறார்கள். நோர்வேயிய ஆதிக்கத்தாலும் தேசிய மயப்படுத்தலாலும், காலவரிப்பாலும், திருமணங்களாலும் இயற்கையுடன் வாழ்ந்து பழக்கப்பட்ட தென்சாமன் தனது இயற்கையை இழக்கத் தொடங்கி அடையாளம் அற்று இறந்துபோனான்.
காலங்காலமாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சாமான் உரிமைக்காகவும், அடக்குமறைகளுக்கு எதிராகவும், அடையாள அழிவுக்கெதிராகவும் பல போராட்டங்களை நடத்தியதன் விளைவு சாமருக்கென கொடி, கொற்றம் (தனிப் பாராளுமன்றம்), இலச்சனை, தேசியகீதம் என்பன கிடைக்கப்பெற்றன.
2004ம் ஆண்டு மாசிமாதம் ஆறாம் திகதியே சாமரது அரச கொடியேற்றுதினம் நோர்வேயிய மந்திரிசபையால் பிரகடனப் படுத்திக் கொண்டாடப்பட்டது என்றால் பாருங்களேன். சாமியக் கொடியானது அவர்களது தேசிய உடையிலுள்ள நிறங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது. வெற்றியென்ற ஒன்று இருக்குமானால் போராட்டம் என்ற ஒன்று நடந்தே ஆக வேண்டும் என்பது காலநியதி. 5000 நோர்வே சாமருக்கும், 3000 சுவீடன் சாமருக்கும் பாராளுமன்றங்கள் உண்டு. ஆனால் ஆண்ட குடியான 45 000 000 தமிழனுக்கு சொந்தமாய் ஒரு கொட்டில் உண்டா?
அடக்குமுறை
நோர்வேயிய பாடசாலைகள் இவர்களது பிராந்தியத்துக்குள் அமைக்கப்பட்டு நோர்வேயிய மொழி திணிக்கப்பட்டது. பாடசாலைகளில் தம் சொந்த சாமி மொழியைக் கதைப்பதற்கே உரிமை மறுக்கப்பட்டது. நோர்வேயிய மொழி முதன்மையாக்கப்பட்டது. தேசியம் வலுப்படுத்தப்பட்டது. புத்தகங்கள் பத்திரிகைகள் எல்லாம் நோர்வேயிய மொழியிலேயே கொண்டு வரப்பட்டது. ஏனைய நோர்வேயிய நிலப்பரப்பில் வாடகைக்கு வீடுகள் மறுக்கப்பட்டன. இரண்டாம்தரப் பிரஜைகளாகவே நடத்தப்பட்டார்கள். மிருகங்களைப்போல் அடிமைகளாக்கி பரிசுப்பொருளாக திருமணங்களில் கூலிவேலைக்காகக் கொடுக்கப்பட்டார்கள். சாமன் காட்சிப் பொருளாக்கப்பட்டான்.
நிலத்தைவிட, மொழி இழந்தவனே உண்மையிலேயே தன் அடையாளத்தை முற்றிலும் இழந்தவனாகின்றான். ஓரினமானது மொழியை வைத்தே அடையாளப்படுத்தப் படுகிறது என்பதை யாருமே மறுக்க முடியாது.
சாமிய குடும்பங்கள், உறவினர்கள் நோர்வே சுவீடன் எல்லைகளில் ஓரிரு மீற்றர் தூரத்தில் வாழ்ந்தாலும் தொடர்பு துண்டிக்கப்பட்டன. சிறுவர்கள் களவாக எல்லையைத் தாண்டி சென்று உறவாடி, உணவுண்டு மகிழ்ந்த கதைகளை நான் செவிப்புற்றேன். இப்படிப் பல விடயங்கள் மறைக்கப்பட்டும் உள்ளது.
இடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் இரண்டாவது இனம் போராட்டத்தில் குதிக்கும் என்ற உண்மையை உணர்ந்த இன்றைய நோர்வேயியர்கள் சாமருக்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கினார்கள். நோர்வேயியப் பகுதிகளில் பாடசாலை, வளாக நுழைவுகளிலும், கல்விக்கடன், கலாச்சார உதவிகள், வேலைவாய்ப்பு என்பவற்றில் சிறப்பு முன்னுரிமைகள் இன்று கொடுக்கிறார்கள். இதன் விளைவே ஒரு நாட்டினுள் இரு வேறுபட்ட இனங்கள் அமைதியாக வாழும் நிலை உருவானது.
கடைசி 250 வருடங்களாக நோவேயிய மொழித் திணிப்பின் கீழ் சாமர்கள் தமது கலை, கலாச்சாரம், மொழி என்பவற்றில் ஒரு பகுதியை இழக்கும் நிலை ஏற்பட்டது. சாமர்களான இயற்கையின் குழந்தைகள் அடிமைகளாக சிறைப்படிக்கப்பட்டு 1478களில் திருமணப்பரிசாகக் கூட கொடுக்கப் பட்டார்கள்.
கிறிஸ்தவ மிசன்களின் பரவலாக்கம் இவர்களது மதத்தை அளிக்கும் நோக்குடன் இருந்தாலும் ஒரு பகுதியை மட்டுமே வெற்றிகொள்ள முடிந்தது. நாடோடி வாழ்க்கையை மிசன்களால் முழுமையாகத் தடுத்து நிறுத்தி பிரசாதத்துக்கு உட்படுத்த முடியவில்லை.
நோவேயிய ஆதிக்கத்திலும், அதிகாரப் பரவலாக்கங்களாலும் இவர்கள் தமது சொந்த அடையாளங்களைத் தரங் குறைந்ததாக கருதத் தொடங்கியதன் விளைவு இவர்கள் தம் அடையாளம், கலை, கலாச்சாரத்தையே வெறுக்கத் தொடங்கினார்கள். இது உண்மையில் தற்கொலைக்குச் சமனானது.
முக்கியமாக இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின் நோவேயியம் எனும் தேசியம் கருத்திழையோடல்களில் வளர்க்கப்பட்டது. இக்காலப் பகுதிகளில் சாமன் தனது அடையாள அழிவை பலமாக எதிர்கொண்டான். மூன்றாம் எதிரியை வீழ்த்த இரண்டாவது எதிரியுடன் கூட்டுச் சேரும் உளவியல் பாணியே இதுவாகும். அதாவது இந்திய இராணுவத்தை விரட்ட தமிழர், சிங்களவர் கைகோர்த்து நின்றதை கூறலாம்.
சாமியப் பாராளுமன்றங்கள்.

முதன் முதலில் சாமருக்கெனப் பாராளுமன்றம் அயல்நாடான பின்லாந்தில் 1973ல் , “ஆனார்” எனும் இடத்திலும் , சுவீடனில் 1993ல் “கிரோன்” என்னும் இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது. நோர்வேயில் 1989 கார்த்திகை 2 ல் “கௌதோகைனு”வில் (சாமர் செறிந்து வாழும் நோவேயின் வடபகுதி) பாராளுமன்றம் ஒழுங்கு செய்யப்பட்டு 2000ல் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.
போராட்டத்தின் ஒரு பகுதி
சிந்திக்கத் தொடங்கிய சாமர்கள் போராடத் தொடங்கினார்கள். 1950 சாமர் செறிந்து வாழும் “அல்தா- கௌதோகைனு”வில் உள்ள “மாசி” என்னும் இடத்தினூடாக ஓடும் அல்த்தா நதியணை திட்டத்தை முன்வைத்தபோதே சாமர் தம் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினார்கள். இத்திட்டப் பிரகாரம் பல சாமியக் குடும்பங்கள் தம் சொந்தப் பகுதியில் இருந்து பலாற்காரமாக வெளியேறியப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பூர்வீகவாதிகளாக வாழ்ந்த இவர்கள் வீடுவாசலை இழக்கத் தயாராக இல்லை. இது ஓர் ஒத்துழையாமை இயக்கமாகவும், எதிர்ப்புப் பேரணியாகவும் வளர்ச்சியுற்றதன் விளைவே 1973, 1982ல் நடந்த பெரிய ஆர்ப்பாட்டங்களாகும்.
இப்போராட்டமானது ஒத்துழையாமை, ஆர்ப்பாட்டம், சத்தியாக்கிரகம், (1981 தை 24, மாசி 25) நோர்வேயிய எதிர்ப்பு எனப் பல வடிவங்களை உட்கொண்டிருந்தது. 1500-க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களைக் கொண்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இந்நோர்வேயிய கலாச்சார ஒன்றுகூடல் சட்டத்துக்கு எதிரான போதிலும் நோவேயிய உயர் நீதிமன்றம் அணைகட்டல் சட்டரீதியானது அணைகட்டலாம் என அனுமதியளித்தது. 1981ல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட அணை கட்டல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. சாமர்கள் விட்டார்களா? நோவேயிய சட்டத்தையே எதிர்க்கத் தொடங்கினார்கள். பெருந்தொகையான நகர பாதுகாவலர்கள் (பொலிஸ்) குவிக்கப்பட்டார்கள். பலாற்காரம் தலை விரித்தாடியது. சாமர் போராட்டத்தில் ஒரு பகுதியைத் தோற்றாலும் கூட இன்று தனித்துவமாக சுயநிர்ணயத்துடன் வாழும் நிலையை அந்த அல்தா-தைரெனு மாசிப்போராட்டம் எடுத்து வந்தது.
இவர்களது எதிர்ப்பு ஒத்துழையாமையைப் போராட்டங்களால் சாமருக்கென 1987ல் தனிச்சட்டம் நோவேயிய அடிப்படைச்சட்டம் 110 aன்படி இயற்றப்பட்டு 1988ல் நோவேயிய பாராளுமன்றத்தால் அனுமதியளிக்கப்பட்டது. 09 10 1990ல் சாமருக்கான பாராளுமன்றம் திறந்து வைக்கப்பட்டது. 126 மில்லியன் குரோன்களில் 5300 சதுர மீற்றரில் கட்டப்பட்ட சாமியப் பாராளுமன்றம் 02 11 2000ல் சட்டரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.இப்பாராளுமன்ற அரசியலானது நோர்வேயிய சாமர்களின் உரிமைகளையும், மொழி, கலாச்சாரங்களையும், பாரம்பரியங்கள் விழுமியங்களையும், தேவைகளையும், நிலப்பரப்பு, சுற்றாடல் என்பனவற்றைப் பாதுகாப்பதாக அமைகிறது. இப்பகுதிகளுக்காக மேலதிக பணத்தேவையை நோவேயிய அரசே இன்னும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதை இலங்கைச் சிங்கள அரசுகள் உற்றுநோக்குமா?
நோர்வேயிய பாராளுமன்றம் முக்கியமான சாமர் பற்றிய அனைத்தையும் சாமியப் பாராளுமன்றம் ஊடாகவே செய்யும். நிறைவேற்று அதிகாரம் முழுமையாக சாமியப் பாராளுமன்றத்துக்கே உண்டு.
உதாரணமாக
. நினைவகங்கள் பாதுகாப்பு, மொழிப்பாதுகாப்பும் பயிற்சியும், வளங்கள், கலாச்சாரப் பாதுகாப்பு
. நிதி ஒதுக்கீடும் பகிர்வும்
. நாடாளுமன்றக் கேள்விகள், தீர்மானங்கள்
சாமியப் பாராளுமன்றத்தின் ஊடாகவே மக்களுக்கு அறிவித்தல்
. சாமியப் பிரச்சினைகள் முக்கியமானவற்றை சாமியப் பாராளுமன்றமே முடிவெடுக்கும்.
. சாமியப் பாராளுமன்றம் அதியுயர் அமைப்பானதும் நோர்வேயிய சாமியச் சட்டவரம்புக்குள் முடிவெடுக்கும் நிறைவேற்றும் அதிகாரத்தைக் கொண்டது
நோவேயிய சாமியப் பாராளுமன்றம்
சாமியப் பாராளுமன்ற அரசியல் அமைப்பானது 39 பிரதிநிதிகளைக் கொண்டது. பாராளுமன்றத்தின் திறந்த கூட்டம் (பொதுக்கூட்டம்)வருடத்தில் நான்கு முறை கூட்டப்படும். இங்கே கேள்விகள், பதில்கள், சட்டஅமைப்பு திருத்தம், நிதி, நிதிஒதுக்கீடு, எதிர்காலச் செயற்திட்டங்கள் எனப்பல எடுத்துக் கொள்ளப்படும்.

எழுதியவர்: திலீபன் திருச்செல்வம் (நக்கீரா)
உதவி: அஸ்திரி திருச்செல்வம்
தரவுகள்: 1)சாம சிறுபான்மையின் அமைச்சரவைத் தொகுப்புகள்
2) Samene (historic. kultur, samfunn)
3) ஒஸ்லோ பல்கலைக்கழக ஆய்வுகள்
4) மின்வலைப்பின்னல்
நக்கீராவின் ‘இங்கும் ஒரு சிறுபான்மையினம் சிறுமைப்படுத்தப்பட்டது’ என்ற கட்டுரையானது 28 08 2004 இல் நோர்வே தமிழ்ச் சங்கத்தினரின் 25ம் ஆண்டு மலரில் வெளியிடப்பட்டது.
பிரதி மீள் தயாரிப்பு : குமாரி,தேசம்நெற்.
———————————————–

Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed
இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கு அதிகாரங்கள் பகிரக் கூடாது என்று மாநாடு நடாத்துகிறார்கள்
சிறுபான்மையினத்தவர்களின் வரலாறுகளுக்கு உதாரணமாக சாமர்கள் திகழ்கிறார்கள்.
நக்கீராவால் தெரியவே வந்திருக்க முடியாத சாமர்கள் பற்றி விபரமாக நாம் அறிய முடிந்தது.
//45 000 000 தமிழனுக்கு//
45 மில்லியன் என்ன கணக்கு?
நன்றி பிசி. தமிழரின் கணக்கெடுப்புத்தானே உங்களுக்கு நன்றாகத் தெரியுமே. இலங்கையில் 4மில்லியன் என்றார்கள். பின் தமிழர் 2மில்லியன் என்றார்கள். இந்தியாவில் அரசியல்வாதிக்கு அரசியல்வாதி தமிழரின் சனத்தொகை 60மில்லியனில் இருந்து 80மில்லியன் கணக்கில் கணக்கு விடுகிறார்கள். நான் மிகக்குறைந்த தொகையான 45மில்லியனை எடுத்துக் கொண்டேன். இங்கே தொகை அல்ல முக்கியம் அதாவது சாமர்களைவிட எண்ணிக்கையில் மட்டுமல்ல ஆதித்தன்மைக்களைக் கொண்ட இனமான தமிழ் இனத்துக்கு ஒரு கொட்டில் உண்டா என்பதுதான் கேள்வி. சாமர்களைப்பற்றி இன்னும் எவ்வளவோ உள்ளது. இவர்களது வெகுஜனப்போராட்டம் நோவேயிர்களின் அடக்குமுறை என்று இன்னும் இன்னும். நேரவின்மையும் வேலைப்பழுக்களும் எழுத்துக்குத் தடையாக உள்ளன: இக்கட்டுரையைக் கூட தேசம் எடுத்து தாமாகவே தட்டச்சுச் செய்து தளமேற்றினார்கள். நான் இந்த நாட்டில் முதலாவது சந்ததி இங்கே எமது 3வது சந்ததியும் வந்துவிட்டது. ஆனால் சாமரின் வரலாற்றை நாம் எத்தனைபேர் அறிந்திருக்கிறோம் என்பது கேள்விக்குறியே. இக்கட்டுரையைப் தேசம் தளமேற்ற விருப்பியதற்குப் பலகாரணங்கள் இருப்பினும் முக்கியமாக அவர்கள் விரும்பியது என்னவெனில் மற்றவர்களும் இப்படியாக தாம்வாழும் நாடுகளில் உள்ள வரலாற்று விடயங்களை தமிழ் எழுத்துருவில் கொண்டுவர வேண்டும் என்ற நல்நோக்கமே.
நல்ல தகவல்களுக்கு நன்றி நக்கீரா!
நன்றி அஜீவன்