சாக்குருவி!!! : நோர்வே நக்கீரா


சாக்குருவி!!!

நிசப்தம்…!
இருள் சூழ்ந்திருக்கிறது….!
ஈழத்தமிழர் எதிர்காலம் போல்
இதைதானே அமைதி என்கிறது அரசு
காலத்தின் கட்டாயம் அல்ல
அரக்கர்கள் வாழ்ந்த ஆதாரம்.

நிசப்தம் நிறைந்து இருண்ட ஆழ்கடலில்தான்
சுனாமி என்கிறது அறிவு.

குறட்டைச்சத்தத்தில் கூடப் புலியின் கிலி
தூக்கம் என்பது குற்றமானதால்
விழிப்பு எமக்கு நிரந்தரமானது.

குடிசைகளைப் பற்றவைத்து
ஊரை எரியவைத்து
புலிப்பிடியில் குளிர்காய
வெளிநாடுகளுக்கு
வெளிச்சம் போடுகிறார்கள்.

ஈழத்தமிழர் வாழ்வுக்கு
ஒளியேற்றுகிறார்களாம்

இந்த நிசப்த இரவுகளைக் கிழித்துக் கிழம்பும் குரல்கள்
மானிடத்தின் குரல்வளைகளை நெரித்துவிடுகின்றன.

“ஐயோ அம்மா!…”
‘கொட்டியா அம்மே?’

“முருகா! பெருமானே சிவனே!”
கருவறைக்குள் கல்லாய் போனவர்கள் வருவார்களா?

“யேசுவே என் கர்த்தரே”
சிலுவையில் தூக்கியபின்னுமா…?

அல்லா அங்கே அழைப்படவே இல்லை
அல்லாப் பிள்ளைகள் அங்கே இல்லை

“புத்தா! புத்தனே கேள்! புத்பகவானே பார்”
சிந்தை கலங்கி புத்தன் அனாதையாய்
அரசமரங்களின் கீழ் கண்ணைமூடி
நிஸ்டை என்று நடித்துக் கொண்டான்.
பல்லுப்போனபின் அவன் சொல்லுதான் செல்லுமா?
ஒளியிழந்தது வெசாக்பண்டிகை….?

கசாப்புக்கடை இறைச்சி
இந்த கம்பி அறைகளுள்தான் தயாராகிறது.

மிருகங்களைக் கொன்றபின்னரே
அடித்து உதைத்து மிதித்து இறைச்சி மெதுமையாக்கப்படும்
சிங்களச்சிறைகளில் மெதுமையாக்கிய பின்னரே மீதி….!!!

மான் இறைச்சி என தொங்குமான் இறைச்சி (குரங்கு இறைச்சி)
தொங்குமானை விட மலிவாக மனிதறைச்சிகள்…!
உடலுறுப்புகள் ஏற்றுமதிக்காய் வெளிநாட்டுச்சந்தையில்…

இதுசிறையல்ல மானிடச்சிறை
மனிதத்தின் குறை

நீதியில்லா நீதியமைச்சன்
தன்வீட்டு நிதிநிரப்பும் நிதியமைச்சனானதால்
கரிய (கருணா) நிதியால் நீதி நீறானது.

நிமலரூபா!
மலமற்று நிர்மலனாய் நின்றதால்
நிர்வாணிகள் நிர்மூலமாக்கினார்கள்
நிர்மூலமாக்க முடிந்ததா?
உன்நிலத்திற்காகப் போராடிய உனக்கு
சிங்களப்புலத்திலா அடக்கம்?
புலத்தில் அவர்களுக்கு மூலமா? நிர்மூலமா?
வயித்தாலடி (கொலறா) இனித்தான்
நீ அஞ்சாதே போய் வா
உனக்கு என்வாசகரின் இதயம்கனக்கும் அஞ்சலிகள்

சித்திரவதைச் சிறையின் கூக்குரல்கள்
இருளோடு இருளாக
நிசப்தத்தில் ஜீரணிக்கும்.
சப்தமும் அடங்கி நிசப்தமாய்
நீறுபூத்துக்கிடக்கும்.

இச்சாக்களுக்காகச் சத்தம்போட
உலகில் ஒரு மனிதஜீவன்….?

அந்தச் சுடலைக்குருவி (சாக்குருவி) மட்டும்
ஒப்பாரிவைத்து ஊரெங்கும் ஓலமிடும்
புத்தனுக்கும் அவன் தர்மத்துக்கும் கேட்காத
மனிதத்தின் அடிநாதம்
சாக்குருவி வாயால் …..! உலகமெங்கும்….!!

எமக்காக அழவேனும் ஒரு சாக்குருவி….
வாயடைத்துப்போன என்சமூகத்துக்காய்
சாக்குருவி சேதி சொல்லும்
நாளை அந்தச்சாக்குருவியும்
தங்கையுடன் முறைகெட்டுப் பிறந்தவர்களால் சுடப்படலாம்

நிலத்திலும் புலத்திலும்
தூக்கம் தொலைத்தவர்களே! விழித்திருங்கள்
தூக்கம் உங்களைத் தொலைத்துவிடும்.

விழிப்புடன் நோர்வே நக்கீரா
21 07 2012

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து
  1. இராஜகுமாரன் on July 25, 2012 9:37 am

    நோர்வே நக்கீரா!
    மற்றவர்களுக்காக கொஞ்சமேனும் அழும் உங்கள் எழுதுகோலுக்கு எனது வணக்கங்கள். நிமல ரூபன் பிறருக்காக தான் வீழ்ந்தான். தன் விடுதலைக்காக நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் பொழுது அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் அவன் அப்படி செய்யாமல் பிற தோழர்களுக்காக இறுதி வரை போராடியிருக்கிறான். சாக்குருவி என்ற தலைப்பை மாற்றினால் கவிதை மிகவும் நன்றாக இருக்கும்.


  2. இராஜகுமாரன் on July 25, 2012 7:18 pm

    நிமல ரூபனின் பெற்றோர் உயர் நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பில், அவரின் சரீரம் அவரின் சொந்த இருப்பிடம் வவுனியாவில் அடக்கம் செய்யலாம் என்றதற்கு இணங்க அவரின் வீர உடலம் நேற்று முன்தினம் வவுனியா கொண்டு வரப்பட்டு நேற்று சகல கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை உத்தியோகத்தர்கள், மற்றும் பல பிரமுகர்களின் அஞ்சலி, மரியாதை செலுத்துதலோடு பலர் தேம்பி தேம்பி அழ நிமலருபனின் தியாக உடலம் அடக்கம் செய்யப்பட்டது. நிமலருபனின் பெற்றோர்கள் நடத்திய வழக்கில் இந்த மாதம் இருபதாம் திகதி பிணையில் வெளியில் விடுவதென்று கூறப்பட்டிருந்தது. இது குறித்து பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் பெருமகிழ்ச்சியில் இருக்கும் போது, நிமலரூபனை வெளியில் விடக் கூடாதென்பதற்காகவே முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு நடைபெற்ற சம்பவத்திட்குள் நிமலரூபன் இழுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது. அந்த வீரத் திருமகனுக்கு எனது சல்யூட்! எனது இதய பூர்வமான வீர வணக்கங்கள்!! பிறருக்காக தன உயிரைக்கொடுத்த இந்த வீர மகனுக்கு அனுதாபமாக கட்டுரை எழுதிய தோழர் ரீ.சோதிலிங்கம் மற்றும் சகலருக்கும் எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கிறேன்


  3. Nackeera on July 26, 2012 12:52 am

    நன்றி இராஜகுமாரன்.


  4. information on July 26, 2012 2:54 pm

    Bruatally murdered Nimalruban was buried, finally… [Nimalaruban's Funeral -24 July 2012]
    -http://www.youtube.com/my_videos_timedtext?video_id=1902IgKYTl4&feature=mhsn


  5. இளங்குமரன் on August 22, 2012 12:02 pm

    தோழனாய் நடந்து
    நிமிர்ந்து
    உயிர்கொடுக்க வல்லோய்
    நீ வாழ்க!
    நீ வாழ்க!
    நீ
    வாழப் பொறுக்காத உலகமடா தம்பீ!
    கதவு திறக்கப் பட்சி வரும் என்றல்லவா பார்த்திருந்தேன்.
    பட்சி வரக் கதவு திறக்குமென்றல்லவா பார்த்திருந்தேன்?
    ஏமாற்றம் ஏமாற்றம்!!
    சுயநலம் உனக்கிருந்திருப்பின்
    இப்போது நீ வெளியில் வந்திருப்பாய் இல்லையா?
    ஆயுதமுகவர் எல்லாம் அரசோடு
    தேனிலவு கொண்டாடுகிறான்!
    அழிக்கக் கற்றுக்கொடுத்தவநெல்லாம்
    அரசோடு
    தேனிலவு கொண்டாடுகிறான்!
    அப்பு, நீ மாத்திரம் என்னவாம் செய்துவிட்டாய் அவர்களுக்கு?
    எம்மான் வாழி நீ!!
    எம்மான் வாழி நீ!!!

    பாதி இருள் கவியும்
    பகல் போழ்தில்
    பாதி
    இருள் கவியும் புகழ்ப் போழ்தில்
    நீதி கொல்லப்பட்டுவிட்டது.
    நெஞ்சுநிமிர்ந்து
    மாண்டு போனோய்!
    நெஞ்சுநிமிர்ந்து
    மாண்டு போனோய்!!நிமலா!!!
    எம்மான் வாழி நீ!!


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு