தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு காலங்களில் (02.08.1913 – 01.09.1980): என்.செல்வராஜா


தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதில்லை என்பது ஒரு முதுமொழி. தமிழின் சர்வதேச நல்லெண்ணத் தூதுவராக உலகெல்லாம் வலம்வந்து தன் முதுமைக்காலத்தில் நோயுற்று ஓய்ந்து மறைந்த தவத்திரு. தனிநாயகம் அடிகளாரை இன்று- நூற்றாண்டுகளில் ஆங்காங்கே நினைவு கூருகின்றோம் என்றால், அவரது தன்னலம் கருதாத தமிழ்த்தொண்டு அவருக்குச் சாகாவரத்தை அளித்துள்ளதென்றே கொள்ளவேண்டும்.

தமிழ்மொழி உலகெங்கும் ஒருகாலத்தில் பரவியிருந்ததென்பதைத் தான் சென்றுவந்த நாடுகளின் ஆய்வகங்கள், தொல்பொருட் காட்சியகங்கள், அரும்பெரும் நூலகங்களிலெல்லாம் இடையறாத தேடுதல்களை மேற்கொண்டு துருவித்துருவிக் கண்டறிந்து உண்மைகளை ஆதாரபூர்வமாக வெளிக்கொண்டு வந்ததோடல்லாமல், தனது தமிழ்ப் பணியைத் தனக்குப் பின்னரும் ஆய்வாளர்கள் தொடரவேண்டும் என்ற வேணவாவுடன் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை உருவாக்கி வளர்த்துச் சென்றவர். பின்னாளில் அவரது நம்பிக்கை குலைக்கப்பட்டு, 1974இன் பின்னர் தொடர்ந்த தமிழாராய்ச்சி மாநாடுகளில் படிப்படியாக அரசியல் நுழைந்து இன்று அந்த மாநாட்டு அமைப்பே கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டமை தமிழர் வரலாற்றின் சோகக்கதைகளில் ஒன்று.

தனிநாயகம் அடிகளாரின் கண்டுபிடிப்புகளாக விதந்து குறிப்பிடத்தக்க சிலவற்றை மாத்திரம் இக்கட்டுரையில் குறிப்பிடலாம். 1554ம் ஆண்டில் லிஸ்பன் நகரில் அச்சிடப்பட்ட லூசோ-தமிழ் மறைக்கல்வி நூல் 1950களில் தனிநாயகம் அடிகளாரால் போர்த்துக்கல்லின் தலைநகரான லிஸ்பன் சுவடிக்கூட இருட்டறைகளில் எவரும் அறியாதிருந்த நிலையில் இருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டது. ஜப்பான், சிலி, பெரு, மெக்சிக்கோ, நியூசிலாந்து, எக்வடோர், ஐக்கிய அமெரிக்கா என்று பல நாடுகளுக்கும் சென்று தமிழின் பெருமைதனை வேற்று மொழியினரிடையே பதியம்வைத்து அவர்களின் விழிப்புணர்வின் பெறுபேறாக, அவர்களது நாட்டு நூலகங்களில் தேடுவாரற்றிருந்த தமிழ் மொழியில் எழுதப்பெற்ற பல ஏடுகளையும், ஐரோப்பியரால் பதிப்பிக்கப்பெற்ற ஆரம்பகால அச்சு நூல்களையும் அவரால் தமிழ் உலகிற்கு மீண்டும் எடுத்துவர முடிந்தது. அவ்வகையில் 1556ம் ஆண்டில் உருவான கார்த்தீயா, 1578இல் எழுதப்பெற்ற தம்பிரான் வணக்கம், 1579இல் எழுதப்பட்ட கிறித்தியானி வணக்கம், ஒண்டம் டி புரொசென்கா என்ற போர்த்துக்கேயன் எமது மண்ணில் ஆதிக்கம் செய்தவேளையில் தனது தேவைகளுக்காக தொகுத்து வைத்திருந்த போர்த்துக்கீச-தமிழ் மொழி அகராதி என்பவை குறிப்பிடத்தக்கது.

தனிநாயகம் அடிகள் நியுசிலாந்தில் பயணித்த வேளையில் தான் அரும்பொருள் காட்சியகத்தில் கண்ட தமிழ் எழுத்துப் பொறித்த மணியொன்றினைப் பற்றி தனது தமிழ் கல்ச்சர் (Tamil Culture) என்ற ஆய்வுரைத் தொகுதியொன்றில் ஒரு கட்டுரையில் எழுதிச்சென்றிருந்தார். (அடிகளார் Tamil Culture ஆய்வேட்டின் ஆசிரியர் பொறுப்பில் 1951 முதல் 1959வரை பணியாற்றியுள்ளார்). பின்னாளில் அங்கு புலம்பெயர்ந்து சென்ற ஆ.தா.ஆறுமுகம் என்பார் அதை ஒரு ஆய்வுப்பொருளாக ஏற்று நமக்கு நல்லதொரு நூலை வழங்கியிருக்கிறார். (பார்க்க: நியூசிலந்தில் தமிழன் பதித்த சுவடுகள். ஆ.தா.ஆறுமுகம். நியுசிலந்து: வெலிங்ரன் தமிழ்ச் சங்கம், த.பெ.471, வெலிங்டன், 1வது பதிப்பு, ஜனவரி 2007. (6), 52 பக்கம், வண்ணப்படங்கள்)

ஆ.தா. ஆறுமுகம் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் பிறந்தவர். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் 1985இல் மு/ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் அதிபராகவிருந்து ஓய்வுபெற்றவர். தற்போது நியுசிலந்தில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். நியுசிலந்தின் வெலிங்டன் தொல்பொருளகத்தில் (Museum) காட்சிப்படுத்தப்பட்டுள்ளதும் தனிநாயகம் அடிகள் குறிப்பிட்டிருந்ததுமான தமிழ் எழுத்துக்கள் பொறித்த மணியைப் பற்றியதே விரிவான இவ்வாய்வு. Tamil Bell என்ற பெயரில் இவ்வரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த மணி “முகையயதினவககுசுஉடையகபலஉடையமணி” என்று புடைப்பு (emboss) எழுத்துடன் வார்க்கப்பட்டுள்ளது. இது தமிழரின் கடற்பிரயாணம் 15ம் நூற்றாண்டில் இப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதையும், இம்மணிக்கும், இங்கு புதையுண்டுள்ள ஒரு மரக்கலத்திற்கும், Christchurch என்ற பகுதியிலுள்ள குகை ஓவியங்களுக்கும் தொடர்புள்ளதாகவும் இவர் தன் ஆய்வின்மூலம் வெளிப்படுத்த முனைந்துள்ளார்.

தனிநாயகம் அடிகளாரின் ஒவ்வொரு தேடலும் பின்னாளில் ஆழமான விரிவான அய்வுகளுக்கு வழிகோலியிருக்கின்றது என்பதற்கு ஒரு உதாரணமே இக்குறிப்பாகும்.

தனிநாயகம் அடிகளாரின் சீரிய தமிழ்ப்பணிக்கு அவர் சார்ந்த கத்தோலிக்க அமைப்பின் பின்புலமும் கரணமாக இருந்துள்ளது என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஆரம்பத்தில் தமிழ் எழுத்து அச்சுவாகனமேறியதற்கு ஐரோப்பியரும் அவர்களின் கிறிஸ்தவ மதப்பரப்பலும் உந்துசக்தியை வழங்கின என்பது வரலாறு.

யாழ்ப்பாணத்தின் கரம்பொன் என்ற ஊரில் இந்துக் குடும்பமொன்றில் பிறந்து நாகநாதன் என்ற பெயருடன் வாழ்ந்தவரே பின்னாளில் கத்தோலிக்க மதத்தைத் தழுவி சேவியர் ஸ்டனிஸ்லவுஸ் தனிநாயகம் என்ற பெயரைப் பெற்றுக்கொண்டார். ஊர்காவற்றுறை செயின்ட் அன்டனிஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் செயின்ட் பட்ரிக்ஸ் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்ப இடைநிலைக் கல்வியைப்பெற்ற இவர், கத்தோலிக்க மறைக்கல்வியை கொழும்பு புனித பேர்ணார்ட் மறைப்பள்ளியில் பெற்றக்கொண்டார். பின்னர் தனது 21ஆவது வயதில் ரோமுக்குச் சென்று வத்திக்கான் மறைக் கல்விச்சாலையில் கற்று 1934இல் மெய்யியலில் பட்டத்தை பெற்றார். பின்னர் தமிழகம் வந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும், பின்னாளில் லண்டனில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.

தமிழில் ஒப்பியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் திறனை இவருக்கு வழங்கியது இவர் பெற்ற பன்மொழிக் கல்வியாகும். ஆங்கிலம், லத்தீன், டொச், இத்தாலிய, பிரெஞ்சு, மற்றும் போர்த்துக்கீச மொழிகளில் இவர் பாண்டித்தியம் பெற்றிருக்கிறார். பாரதியின்- யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்ற முடிவுக்கு வர இவருக்கு நீண்டகாலம் சென்றிருக்கவில்லை.

கத்தோலிக்க மதகுருவாக மாத்திரம் இராமல், கல்வியைப் போதிக்கும் ஆசிரியராகவே இவரது பணி அதிகளவில் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் புனித தெரெசா உயர்நிலைப் பள்ளியில் துணைத்தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் 1961இல் மலாயாவுக்குச் சென்று அங்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1969வரை இந்திய ஆய்வியல்துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். நான் கடந்த 2006இல் மலேசிய-சிங்கப்பூர் நூல்தேட்டம் தொகுப்புப் பணிக்காகவும், எனது நூல்தேட்டம் தொகுப்புப் பணிக்காகவும் கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறை நூலகத்தில் தேடலில் ஈடுபட்டிருந்த வேளையில் அங்கு பணிபுரிந்த பேராசிரியர்கள்-விரிவுரையாளர்கள் ஆகியோர், தனிநாயகம் அடிகளாரின் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை வாழ்வு பற்றிப் பெரிதும் அறியப்பட்டிராத பல தகவல்களை எனக்கு வழங்கினார்கள்.

அடிகளார் அங்கு பணியாற்றிய வேளையில் மலாயாப் பல்கலைக்கழகத்தின் பயில் மொழியாக தமிழை வைத்திருக்காமல், சம்கிருதத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற தீவிர முன்மொழிவை நீலகண்ட சாஸ்திரி அவர்கள் மலேசிய அரசின் உயர்கல்வித்துறையினருக்கு வழங்கியிருந்தார். அதற்கெதிராகத் திரண்டெழுந்த தனிநாயகம் அடிகள்- தமிழே அங்கு பயில்மொழியாக இருக்கவேண்டும் என்று போராடி வெற்றிகண்டிருக்கிறார். அவர் அன்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் இல்லாதிருந்தால், அங்கே இன்று இந்திய ஆய்வியல்துறையில் பயில்மொழியாக தமிழ்மொழி இல்லாது போயிருக்கும்.

அவர் மலேசியாவில் பணியாற்றிய காலத்தில்தான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய சிந்தனை அவரிடம் ஊற்றெடுத்தது எனலாம். அதன் வெளிப்பாடாகவே முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு மலேசிய மண்ணில் 1966ம் ஆண்டு ஏப்ரல் 16 முதல் 23 வரை சிறப்பாக நடந்தேறியது. 1968இல் இரண்டாவது மாநாடு சென்னையில் நடந்தபோது தனிநாயகம் அடிகள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். மூன்றாவது மாநாடு 1970இல் பாரிசிலும், 1974இல் யாழ்ப்பாணத்திலும் அடிகளாரின் ஆளுமைமிக்க பங்களிப்புடன் நடைபெற்றன. 5ஆவது மாநாடு மதுரையில் 1981இல் இடம்பெற்றவேளையில் அதில் கலந்துகொள்ள தனிநாயகம் அடிகளார் உயிருடன் இருக்கவில்லை.

அடிகளாரின் மறைவுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவுத் தொடரில் 1980ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட நினைவுதின உரையே அவரது இறுதிப் பேருரையாகும். தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்பகளும் என்ற பெயரில் இது ஆங்கில மொழிபெயர்ப்புடன், தந்தை செல்வா அறங்காவற் குழுவினரால் அச்சிட்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் பின்னர் அடிகளார் நீரிழிவு நோயால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு யாழ்ப்பாணத்திலேயே (கரம்பொனில்) தனிமையில் வாழத்தலைப்பட்டார். பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்களின் தமிழ் மறை விருந்து என்ற நூல் வெளியீடு வேலணையில் 1980 மே மாதத்தில் நிகழ்ந்த வேளையில் அந்நிகழ்வில் அடிகளாரும் கலந்துகொண்டிருந்தார். அதுவே அவர் கலந்துகொண்ட இறுதிப் பொது நிகழ்வாயிற்று. அதன்பின்னர் அவரது மறைவுவரை சிறிதுகாலம் அவரை தமிழ்ச் சமூகம் ஏறத்தாழ மறந்து விட்டதென்றே சொல்லலாம். இறுதிக்காலத்தில் மரணம்வரை தனிமையில் அவர் வாடியதாகவும் செவிவழிக் கதையொன்றுண்டு.

தனிநாயகம் அடிகளார் மறைந்துவிட்டபோதும் அவ்வப்போது அவர் பற்றிய நினைவுகள் எம்மிடையே நிழலாடியவண்ணமே இருந்துவருகின்றன. அதன் வெளிப்பாடாகவே இவ்வாண்டு (2012) பாரிசில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள “உலகத் தமிழ்த்தந்தை சேவியர் எஸ்.தனிநாயகம் அடிகளாரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா”வும் அமைகின்றது எனலாம்.

தனிநாயகம் அடிகளார் மறைந்தவுடன் தினகரன் நாளிதழில் அவரது வாழ்ககை வரலாற்றை விளக்கும் கட்டுரைத் தொடர் ஒன்று முதன்முதலாக ஆ.தேவராசனால் எழுதப்பெற்று வெளியாகியிருந்தது. அதன் முழுமையான நூல் வடிவம் தமிழ்த்திரு தனிநாயகம் அடிகளார் என்ற தலைப்பில் பின்னர் ஆ.தேவராசனால் திருத்தப் பெற்று, கொழும்பு 5: கிறிஸ்தவ தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை வெளியீடாக, ஒக்டோபர் 1980இல் வெளியிடப்பட்டது.

தனிநாயகம் அடிகளார் மறைந்ததன் பின்னர் முதலாவதாக வெளிவந்த சிறப்பு மலர், அருட்திரு தனிநாயகம் அடிகளார் நினைவுமலர் என்றதாகும். மு.கனகராசன், எஸ்.புனிதலிங்கம் ஆகியோரை தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு மக்கள் குரல் வெளியீடாக யாழ்ப்பாணத்திலிருந்து ஜனவரி 1981இல் இம்மலர் வெளியிடப்பட்டது. 126 பக்கங்களுடன் புகைப்படங்கள் சகிதம் வெளிவந்த இது வண.பிதா தனிநாயகம் அடிகளின் பணிகள் பற்றிய பல்வேறு அறிஞர்களின் கட்டுரைகளின் தொகுப்பாகும். க.அன்பழகன், அ.அமிர்தலிங்கம், கரந்தை கணேஷன், எச்.டபிள்யு. தம்பையா, சு.வித்தியானந்தன், அ.சண்முகதாஸ், அந்தனி ஜான், அருட்திரு பி.சின்னராசா, ஆகியோரின் குறிப்புரைகளும் பிதா தனிநாயகம் அவர்களின் வாழ்வின் முக்கிய கட்டங்களைக் காட்டும் புகைப்படத் தொகுதியும், எம்.ஏ.நுஃமான், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.சுப்பிரமணியன் ஆகியோரின் தமிழியல் கட்டுரைகளும் இந்த ஞாபகார்த்த சிறப்பு மலரில் தொகுக்கப்பெற்றுள்ளன (நூல்தேட்டம் பதிவு 884).

இதனைத் தொடர்ந்து ஜுலை 1981இல் தவத்திரு தனிநாயக அடிகளார் மாட்சி நயப்பு மலர், சாமுவேல் பெனடிக்ற் அவர்களை மலராசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணம் மறை மாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கம் இம்மலரை வெளியிட்டது. தவத்திரு தனிநாயக அடிகளார் அமரத்துவம் அடைந்ததின் நினைவாக வெளியிடப்பட்ட இம்மலர்- மலர் வெளியீட்டு முயற்சிக்கான பெரியோரின் வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன், அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்கள், தமிழியல் தொடர்பான கட்டுரைகள் ஆகியனவற்றைக் கொண்டிருந்தது. தமிழ் இலக்கியத்தில் மதங்களின் பங்கு (கா.சிவத்தம்பி), தனிநாயக அடிகளாரும் தமிழாய்வும் (பொன். கோதண்டராமன்), அடிகளாரும் குருத்துவமும் (நிர்மலா இராசரத்தினம்), ஆகியவை குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளாகும். (நூல்தேட்டம் பதிவு 1882).

வே.அந்தனி ஜான் அழகரசன் தத்துவத்துறை, இந்தியவியல்துறைப் பேராசிரியராக யாழ்ப்பாணம், கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரியில் பணியாற்றியவர். ஜனவரி 1984இல் தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும் என்ற 244 பக்கம் கொண்ட நூலை அவர் தமிழகத்தில் அச்சிட்டு, மட்டக்களப்பு- தங்கம் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். இந்த நூலின் முதற்பாகத்தில் தவத்திரு தனிநாயக அடிகளின் தமிழ்ப் பணிகளையும் வாழ்வாங்கு வாழ்ந்த வகையினையும் தொகுத்துத் தந்துள்ளார். 26 இயல்களில் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் வாழ்வும் அவரது பணிகளும் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் பாகத்தில் தனிநாயகம் அடிகளாரின் உரைச் சுருக்கங்களும், அவர் எழுதிய 9 கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. (நூல்தேட்டம் பதிவு 3903).

கத்தோலிக்க சமயகுருவான அமுதன் அடிகளார் தமிழகத்தின் புன்னைக் காயல் பிரதேசத்தில் 1943இல் பிறந்தவர். வேளாங்கண்ணிக் குரலொலி என்ற பெயரில் சஞ்சிகையொன்றின் ஆசிரியராக 1977-1987 காலகட்டத்தில் பணியாற்றியவர். உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தியும், Tamil Culture என்ற ஆங்கில இதழை வெளியிட்டும், பாரெங்கும் சுற்றித் தமிழ் பரப்பியும் தமிழ்த் தொண்டாற்றிய தகைசால் பெருந்தலைவர் தவத்திரு தனிநாயகம் அடிகளாரது வாழ்க்கையையும், அவர் ஆற்றிய தொண்டினையும் தமிழகம் நன்கறியும் பொருட்டு தனிநாயகம் அடிகளார் என்ற தலைப்பிலான நூலொன்றினை அமுதன் அடிகள், சென்னை-தரமணியிலிருந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடாக 258 பக்கங்களில் வெளியிட்டிருந்தார். தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப் பணியினை முழுமையாகத் தொகுத்து, நேர்நின்று, ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகி மிகத் தெளிவாகத் தேவையான விளக்கங்களுடன் நூலை அமுதன் அடிகளார் படைத்திருந்தார். அடிகளாரின் தமிழ்ப்பணி வரலாற்றோடு உலகத் தமிழ் மாநாடுகளின் வரலாறும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வரலாறும் பின்னிப் பிணைந்திருப்பதையும் சிறப்பாக இந்நூல் எடுத்துக் காட்டியது. (நூல்தேட்டம் பதிவு 3998).

தனிநாயக அடிகளின் தமிழ்ப்பணி என்ற தலைப்பில் சிறிய கட்டுரைத்தொகுப்பு நூலொன்று லண்டனிலிருந்து, சூ.யோ.பற்றிமாகரன் அவர்களினால் தொகுக்கப்பெற்று, பிரித்தானிய தமிழ்க்கலா மன்ற வெளியீடாக மார்ச் 1994இல் வெளியிடப்பட்டது. “உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தனிநாயக அடிகளும்” என்னும் தலைப்பில் லண்டனில் 19.3.1994 இல் நடைபெற்ற ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளான தனிநாயக அடிகளாரும் தமிழாய்வும் (பொற்கோ), அடிகளாரும் நானும் (மறவன்புலவு சச்சிதானந்தன்), தனிநாயக அடிகள் தமிழ்த்துறையை நவீனப்படுத்திய பாங்கு (ம.மதியழகன்), இறைவனைத் தமிழ் செய்த தனிநாயக அடிகள் (சூ.யோ.பற்றிமாகரன்) ஆகியவை இத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. (நூல்தேட்டம் பதிவு 889).

தனிநாயகம் அடிகளாரின் ஆய்வுகள் என்ற தலைப்பில் மற்றொரு நூல் ம.செ.இரபிசிங் அவர்களால் எழுதப்பெற்று சென்னை – உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடாக 100 பக்கங்களில் 1999இல் வெளியிடப்பட்டிருந்தது. தவத்திரு தனிநாயகம் அடிகளின் ஆய்வுப் பணிகள் பற்றி முனைவர் ம.செ.இரபிசிங் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவே இவ்வாறு நூலுருவில் வெளியிடப்பட்டிருந்தது. (நூல்தேட்டம் பதிவு 3999).

லண்டனிலிருந்து சிலகாலம் ஐ.தி.சம்பந்தன் அவர்களை ஆசிரியராகக்கொண்டு தொடர்ந்து வெளிவந்த சுடரொளி சஞ்சிகை, அதே 1999ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் தனிநாயகம் அடிகளார் சிறப்பு மலர் ஒன்றினை சுடரொளி வெளியீட்டுக்கழக வெளியீடாக வெளியிட்டிருந்தது. தவத்திரு சேவியர் எஸ்.தனிநாயகம் அடிகளார் நினைவாக அவரது தமிழ்ப்பணிகளையும் தமிழ்த் தேசியப் பணிகளையும் நினைவுகூரும் வகையிலும், ஆறுமுகநாவலர், தந்தை செல்வா, மறைமலை அடிகள் போன்றோரை நினைவுகூரும் வகையிலும் தொகுக்கப்பெற்ற சுடரொளி சஞ்சிகையின் சிறப்பு மலர் இதுவாகும். (நூல்தேட்டம் பதிவு 885).

தனிநாயகம் அடிகளார் என்ற தலைப்பில் கொழும்பு, குமரன் புத்தக இல்லம் 2008இல் ஒரு நூலைத் தொகுத்திருந்தது. அது இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் தொடரில் 09ஆவது நூலாக வெளிவந்திருந்தது. பேராசிரியர் அ.சண்முகதாஸ் எழுதிய இலங்கைப் பேராசிரியர்களின் தமிழியற் பணிகள், முனைவர் அமுதன் அடிகளார் எழுதிய தனிநாயகம் அடிகளார், திரு ஆ.தேவராசன் எழுதிய தமிழ்த்திரு தனிநாயகம் அடிகளார் ஆகிய நூல்களிலிருந்து தேர்ந்த பகுதிகளை உள்ளடக்கி இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. வாழ்வும் வளமும், தமிழ்மொழிப் போராட்டம், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள், அடிகளாரின் தமிழியலாய்வு, அடிகளாரின் படைப்புக்கள், அடிகளாரின் தமிழியல் ஆய்விதழியல் முயற்சிகள், தமிழியல் ஆய்வுகளில் ஒரு தனி சகாப்தம், ஆகிய பிரதான இயல்களாக இத்தரவுகள் வகைபிரித்துத் தரப்பட்டுள்ளதுடன், தனிநாயகம் அடிகளாரின் வாழ்வின் முக்கிய திகதிகள், அடிகளாரின் நூல்கள் ஆகிய இரு பின்னிணைப்புத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. (நூல்தேட்டம் பதிவு 5864).

தனிநாயகம் அடிகளார் பற்றிய விரிவான ஆய்வுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதும் மனங்கொள்ளத்தக்கது. அவரது ஆய்வுப் பணிகள் பின்னர் ஈழத்தவரால் முன்னெடுத்துச் செல்லும் அளவுக்கு 1980களிலும் அதன்பின்னர் இன்றுவரையிலும் ஈழத்து அரசியல் மற்றும் போராட்டச் சூழல் தாயக மண்ணில் காணப்படாமையும் இதற்குக் காரணமாகலாம். அவர் மறைவின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவருக்கு கலாநிதிப் பட்டம் வழங்கித் தனது கடமையை நிறைவு செய்துகொண்டது. அதற்கப்பால் சென்று அந்த மண்ணின் மைந்தனான அடிகளாரின் ஆய்வுகளைத் தொடரும் வகையில் தனிநாயகவியல் என்றதொரு ஆய்வுப்புலத்தை உருவாக்கி அவரது வேலைத்திட்டங்களைத் தொடரும் முயற்சிகளை மேற்கொள்ளவோ, குறைந்த பட்சம் அவர் எழுதிக்குவித்து பல்வேறு ஆய்விதழ்களுக்குள்ளும் முடங்கிக்கிடக்கும் அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து ஒரு பெருந்தொகுப்பினை உருவாக்கி நிரந்தரப் பதிவாக்கும் முயற்சியினை முன்னெடுக்கவோ தமிழியல் ஆய்வு நிறுவனங்கள் ஈழத்தில் முனையவில்லை. அவ்வப்போது மாநாடுகளில் மண்டபங்களையும், அரங்குகளையும் தனிநாயகம் அடிகளார் பெயரில் அமைத்துத் தம் நன்றியைச் செலுத்திக்கொள்வதுடன் நின்றுவிடுகின்றன. இது எவ்வகையிலும் ஆழமான ஆய்வுக்கு வழிகோலப்போவதில்லை. இன்றைய பாரிஸ்- நூற்றாண்டு நினைவு மாநாடு அத்தகையதொரு நிலைமையை மாற்றியமைக்கும் என்று நம்புவோமாக.

(02.09.2012)
என்.செல்வராஜா,
நூலகவியலாளர்,
லண்டன்
www.noolthettam.com

உலகத் தமிழ்த்தந்தை சேவியர் எஸ்.தனிநாயகம் அடிகளாரின் பிறந்தநாள் விழாமலருக்கெனத் தயாரிக்கப்பட்டது.

உங்கள் கருத்து
 1. kovai on September 6, 2012 4:51 pm

  “…….யாழ்ப்பாணத்தின் கரம்பொன் என்ற ஊரில் இந்துக் குடும்பமொன்றில் பிறந்து நாகநாதன் என்ற பெயருடன் வாழ்ந்தவரே பின்னாளில் கத்தோலிக்க மதத்தைத் தழுவி சேவியர் ஸ்டனிஸ்லவுஸ் தனிநாயகம் என்ற பெயரைப் பெற்றுக்கொண்டார்…….”

  இந்தத் தகவல் சரியானதா? மதம் மாறி பெயர் மாற்றம் செய்யும் போது, குடும்பப் பெயரும் மாற்றம் பெற்றதா?

  விழாமலருக்கு அச்சாகும் முன் பெயரும் பிறந்த ஊரும் தெளிவாக்கப்படுமா? இதில் என் “கேள்விஞானம்” பற்றிய தகவல் வேறோன்றாகி நிற்கிறது.

  கத்தோலிக்கப் பெரியார்கள் கரம்பன் அல்லது இளவாலையில் பிறப்பதாக ஒரு ஐதீகம் உண்டு.

  ஏற்கனவே “அமுதுப் புலவர் இளவாலையில் பிறந்த ஐதீகம்”, நூலகவியலாளர் என்.செல்வராஜாவினால் தேசம்நெட்டில் எழுதப்பட்டதும், பின் தவறு என உணரப்பட்டதும் யாவரும் அறிந்ததே.


 2. என்.செல்வராஜா on September 6, 2012 9:07 pm

  ஒரு ஈழத்துத் தமிழறிஞரின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு கட்டுரை எழுதப்படும்போது பல்வேறு ஆவணங்களிலிருந்தும் கட்டுரைகளிலிருந்தும் தகவல் பெற்றே என்னால் எழுதப்படுவது வழமை. எனது எந்தவொரு கட்டுரையும் பொழுதுபோக்குக்காகவோ வரலாற்றைத் திரிக்கவேண்டுமென்றோ எழுதுவதில்லை. தவறுகள் நேர்ந்தால்- அது தவறு தான் என்று தெளிவாக அறிந்துகொண்டால் அதை ஏற்றுத் திருத்துவது எனக்கொன்றும் வெட்கத்துக்குரிய விடயமல்ல. கட்டுரை தெளிவானதாகவும் வழுக்களற்றும் இருப்பதையே நான் எப்போதும் விரும்புவேன்.

  தனிநாயகம் அடிகளார் பற்றி நான் பெற்றுக்கொண்ட தகவல் மீண்டும் சரிபார்க்கப்பட்டது. மேலும் தமிழ் விக்கிபீடியாவிலும் இதுபற்றிய குறிப்பைக் காணமுடிகின்றது. இவைதவிர வேறு ஏதேனும் தகவல்களை அவரது பெயர் பற்றி ஆதாரபூர்வமாக அறியத்தந்தால் அக்குறிப்பையும் கட்டுரையில் சேர்த்துக்கொள்ளலாம். அதில் எவ்வித தவறும் இல்லை. ஒரு கட்டுரையை எழுதும்போது அதன் ஆதார நூலின் தகவல் சரியானதா என்ற ஆழமான ஆய்வை வரிக்கு வரி செய்யப் புகுந்தால் எவருமே கட்டுரைகளை எழுதமுடியாது. தனிநாயகம் அடிகளார் தன் வாழ்க்கை வரலாற்றைத் தானே எழுதிச்சென்றிருந்தால் இத்தகைய வழுக்கள் நேர வாய்ப்பிருந்திராது. எமது இனத்தில் அவ்வாறு வரலாற்றைப் பதிவுசெய்யும் வழக்கு – அதாவது மூலாதாரங்களாகப் பதிவுசெய்யும் வழக்கு- அரிதாயிற்றே.

  பின்னூட்டத்தை எழுதிய கோவை அவர்கள் தான் அறிந்த வகையில் தனிநாயகம் அடிகளின் பெயர் பற்றிய சரியானது என அவர் கருதும் குறிப்பைத் தருவார் என்று எதிர்பார்க்கிறேன். பின்னர் அத்தகவல் சரியானதா என்பதை அறிந்துகொண்ட பின்னர் கரம்பொனில் பிறந்தார் என்ற எனது தகவல் சரியானதா பிழையானதா என்பதையோ கத்தோலிக்க மதத்தை தழுவும் முன்னர் அவர் வேறு பெயரில் இருந்தாரா இல்லையா என்பதையோ மாற்றுவது பற்றிச் சிந்திக்கலாம். அதுவரை கட்டுரையில் எம்மாற்றத்தையும் செய்வதை நான் விரும்பவில்லை.

  நானறிந்த வரையில் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்படுபவர்கள் தங்கள் குடும்பப் பெயர்களையும் வைத்திருப்பார்கள். உதாரணம் பேராயர் (Bishop) ஜெபநேசன் (சுப்பிரமணியம் ஜெபநேசன்) Bishop D.J.அம்பலவாணர் என்பவற்றைக் குறிப்பிடலாம். தனிநாயகம் அடிகளார் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றியவர் என்பதால் அம்மதத்துக்கு மதமாற்றம் செய்யப்படுபவர்களின் பெயர் வழங்கும் முறை பற்றி ஒரு கத்தோலிக்க அறிஞர் தகவல் தந்தால் நல்லது.

  நன்றி
  என்.செல்வராஜா


 3. Rohan on September 6, 2012 10:20 pm

  //இந்தத் தகவல் சரியானதா? மதம் மாறி பெயர் மாற்றம் செய்யும் போது, குடும்பப் பெயரும் மாற்றம் பெற்றதா?//

  முழுப் பெயருமே மாற்றப்படுவது பொதுவான வழக்கம். தனிநாயகம் அடிகளாரும் அப்படியே என்பது ஞாபகம்.

  //ஏற்கனவே “அமுதுப் புலவர் இளவாலையில் பிறந்த ஐதீகம்”, நூலகவியலாளர் என்.செல்வராஜாவினால் தேசம்நெட்டில் எழுதப்பட்டதும், பின் தவறு என உணரப்பட்டதும் யாவரும் அறிந்ததே//

  தவறுகள் நடப்பது புதிதல்ல. ஆனால், காய்த்த மா கல்லடி படுவது கொஞ்சம் மனத்தை இடறுகிறது. என்.செல்வராஜா தனது விலாசத்துக்காக இவற்றைப் பதிவிடவில்லை என்பது எனது அவதானம்.


 4. kovai on September 7, 2012 2:18 am

  இங்கே என் எழுத்தை வைத்து,ஒருவரும் “பதகளிக்க” வேண்டாம். இங்கே “பிழை பிடித்து பரிசில் வாங்கும் புலவர்” வரிசையிலும் நானில்லை.
  இலங்கையில் “பிறப்பு சாட்சிப் பத்திரம்” என்று ஒன்று உண்டு. அதுதான் ஒரு அங்கிகரிக்கப்பட்ட ஆதாரம். அடிக் குறிப்பு ஆய்வாளர்கள், அதைப் பயன்படுத்தல் நல்லது என்பதே என் தாழ்மையான அபிப்பிராயம்.

  அமுதுப் புலவரும், தனிநாயகம் அடிகளாரும் பரம்பரையாக ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் முன்னேறிச் செல்ல இளவாலை, கரம்பொன் பகுதிகளை, முறையே தத்தெடுத்துக் கொண்டார்கள், என்பதே என் கேள்வி ஞானம்.

  மற்றும் தனிநாயகம் அடிகளாரின் சகோதரர் பெயர் நாகநாதன் (அவரும் கத்தோலிக்கர்.) என்பதும், அந்த நாகநாதனின் மகள் சி.ஐ.டி.பஸ்தியாம்பிள்ளையை
  மணம் முடித்ததும் எனக்குத் தெரிந்தது. ஆதலால் தனிநாயகம் அடிகளாரின் பெயரும் நாகநாதன் என்பது, எனக்குள் கேள்விக்குறியாகிறது.

  “முழுப் பெயருமே மாற்றப்படுவது பொதுவான வழக்கம்.” என்றால் தனிநாயகம் என்பதும் கத்தோலிக்கப் பெயரா? அல்லது ஏகநாயக்க என்பதன் தமிழ்ப்பதமா? அல்லது இவற்றை ஒற்றைத்தலை-வலி என நானே விட்டு விடவா?

  பிற்குறிப்பு:சிற்பி செதுக்க முயல்வது அழகியலுக்கே.


 5. பல்லி on September 7, 2012 11:20 am

  //பிற்குறிப்பு:சிற்பி செதுக்க முயல்வது அழகியலுக்கே.//
  பலரது பின்னோட்டங்களுக்கு பின்னரே ஒரு கட்டுரை முழுமை பெறுகிறது என்பதில் நானும் உடன்படுகிறேன்;


 6. Rohan on September 7, 2012 11:37 am

  //இலங்கையில் “பிறப்பு சாட்சிப் பத்திரம்” என்று ஒன்று உண்டு. அதுதான் ஒரு அங்கிகரிக்கப்பட்ட ஆதாரம். அடிக் குறிப்பு ஆய்வாளர்கள், அதைப் பயன்படுத்தல் நல்லது என்பதே என் தாழ்மையான அபிப்பிராயம்.//

  இலங்கையின் பிறப்புச் சான்றுப் பத்திரம் இலகுவாகத் திரிக்கப்படலாம். ஆனால், ஆனானப்பட்ட அமெரிக்காவில் வெறும் ஐம்பது வயதான பராக் ஒபாமா ‘அமெரிக்காவில்’ தான் உண்மையில் பிறந்தாரா என்ற விவாதம் இன்னும் ஓயவில்லை. தமது பிறப்புப் பதிவை ஒபாமா வெளியிட்டும் இன்னமும் திருப்தி வரவில்லை அங்கே!


 7. Manoharan on March 14, 2013 12:57 pm

  Xavier Nicholas Stanislaus – later known as Xavier Stanislaus Thaninayagam was born in Kayts. Jaffna, on 2 August1913, the first child of his parents, Naganathan Stanislaus and Cecilia Bastiampillai. He chose the name ‘Thani Nayagam’ – the parental ancestral name after being ordained a priest.

  This is the correct information about Fr. Thani Nayagam. His father, born in Delft, was born a Hindu and then converted to Catholicism. His mother, a catholic, was born in Kayts (Karampon).


 8. A.Thevarajan on June 15, 2013 1:06 am

  அடிகளாரின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு வருவதால் அண்மைக் காலங்களில் அவர்பற்றிய கட்டுரைகள் செய்திகள் ஊடகங்களில் வரத்தொடங்கியுள்ளன. ஆனால் சில ஊடகவியலாளர்களும் சில பிழையான தரவுகளைத் தந்துகொண்டிருக்கிறார்கள். அவற்றில் என் கண்ணில் பட்ட சிலவற்றைத் திருத்துவதே இக்குறிப்பின் நோக்கம்.

  1. அடிகளார் மலேசியாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையைத் தொடக்கி அதன் பேராசிரியராகப் பணி புரிந்தார் என்ற ஒரு தரவு தரப்பட்டது. இது தவறு . அவர் தொடக்கியது இந்தியவியல் கற்கைக்கான திணைக்களம் (Department of Indian Studies) அதனூடே தமிழியல் கற்கைகளையும் புகுத்தியதோடு 1964 ஏப்ரல் மாசம் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மா நாட்டையும் இந்தியவியல் திணைக்களத்தின் ஆதரவிலும் அன்றைய மலேசியப்பிரதரும் பெருமகனாகவிளங்கியவருமான டாதோ துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களின் பேராதரவிலும் அன்று மலேசிய அமைச்சர்களாக இருந்த கொக்குவிலைச்சேர்ந்த திருவாளர்கள் சம்பந்தன், மாணிக்கவாசகம் ஆகியோர் ஆதரவிலும் வெற்றிகரமாக நடத்திமுடித்தார்

  2. அருங்காட்சியகத்தில் இங்குள்ள தமிழ் மணியைப் பார்த்து Tamil Culture காலாண்டிகையில் எழுதினார் என்று சொல்லப்பட்டிருந்தது. அடிகளார் நியூசிலாந்துக்கு வரவில்லை. அக்காலகட்டத்தில் ஒஸ்திரேலியாவில் இலங்கைத் தூதரகத்தில் கடமையாற்றியவர் அமரர் யோகேந்திரா துரைசாமி அவர்கள். அவர் இலங்கையின் வெளியுறவு சேவையில் கடமையாற்றியவர். அவர் வெலிங்டன் வந்தவேளை அருங்காட்சியகத்தில் இந்த மணியைப் பார்த்தபின் அந்தப் படத்தோடு ஒரு குறிப்பை அடிகளாருக்கு அனுப்பினார். அந்தச்செய்தியை அடிகளார் அவர் அனுப்பியதாகவே ஒரு செய்திக்குறிப்பாகவே ஒரு அடைப்பினுள் பதிவு செய்துள்ளார்.

  3. அண்மையில் யாழ் நூலக எரிப்பு நாள் அனுட்டிக்கப்பட்டபோது தாவீது அடிகளின் இன்னுயிர் பிரிந்த தரவுகளில் அடிகளார் நூலகம் எரிந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் பக்கவாதம் பாதித்து பின்பு உயிர் நீங்கியதாக சொல்லப்பட்டது. உண்மையில் அடிகளார் நூலகம் எரியூட்டப்பட்ட நாளுக்கு சில நாட்களுக்கு முன்பே தனது சொந்த நூலக நூல்களை யாழ் நூலகத்துக்கு அன்பளிப்புச் செய்திருந்தார். நூலகம் எரியூட்டப்பட்ட செய்தி கிடைத்த உடனேயே அதிர்ச்சியில் அவர் உயிர் பிரிந்ததாக அன்று செய்திகள் வந்தன

  ஆதேவராஜன்


 9. M Varatharajan on June 15, 2013 7:59 pm

  திரு ஆ தேவராஜன் அவர்களை நான் சுமார் மூன்று தசாப்தகாலமாக அறிவேன்.நான் ஊடகத்துறையில் நுழைந்த காலம் தொட்டு புலோலி சனசமூக நியைத்திலிருந்து வெள்ளவத்தை காலிவீதி என்று கடந்து இன்று நியுசிலாந்து வரை அவருடைய பணிகளுடன் இடையிடை கலந்தவனாகவும் பார்வையாளனாகவும் அவரை நான் அறிவேன். தனிநாயகம் அடிகளாருடன் அன்னார் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.அடிகளாருடன் நீண்ட காலத் தொடர்பு உடையவர்.தமிழ்மக்களின் சனநாயகப் போராட்டத்தை சிங்கள அரசு யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலாகப் படையை அனுப்பிய 60 களின் காலகட்டத்தை -தனிநாயகம் அடிகளார் கைது செய்யப்படலாம் என்ற தகவலை -அவருக்குத் தெரிவிக்கப்பட்ட தகவலை- என்றெல்லாம்- பல விடயங்களை வைத்திருக்கும் ஓர் ஆவணக்காப்பகமாக திரு தேவராஜன் நம்மிடையே வாழ்கின்றார்.தேவராஜன் போன்றவர்களின் தகவல்களை தொகுத்து வழங்கக்கூடிய(ஆவணப்படுத்தக் கூடிய) ஒரு மன்றம் அமைப்பு என்பன நம்மடையே இல்லாததது கவலைக்குரியதாகும்.நான் தந்தை செல்வாவின் ஆவணத்திரைப்படம் ஒன்றை சக்தி தொலைக்காட்சியில் பணியாற்றிய காலத்தில் தயாரிக்க முனைந்த போது- கிழக்குமாகாணத்தில் பல மூத்த பெரியோர்களைப் பேட்டி காணக்கூடிய சந்தர்ப்பம் நிடைத்தது. ( உதாரணமாக தமிழரசுத் தொண்டர் மகேந்திரன் என்பார்). நேரம் மற்றும் நான் சார்ந்த நிறுவனத்தின் “கொள்கை விதி முறைகள் ” பட்ஜட் போன்றவற்றின் காரணமாக எல்லா வளங்களையும் பணன்படுத்த முடியவில்லை. எனினும் ஊடகவியலாளர் சி ஆயோதிலிங்கத்திடம் தந்தை பற்றிய அருமையான படங்களைப் படம் பிடிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இனித் தேவராஜனுக்கு வருவோம்.தேவராஜன் தனிநாயக .அடிகளார் மறைவுக்குப் பின் நினைவுச் பொழிவை நடத்த எடுத்த முயற்சிகள் தோற்றுப் போக அந்த முயற்சியில் அவர் அந்த முயற்சியில் அவர் நேரடியாக இறங்கி 1989 முதல் 1994 வரை தான் நோயுற்று நடமாட முடியாத நிலையையடையும் வரை பிரதம நீதியரசர் அமரர் சர்வானந்தா அவர்கள் தலைமையில் தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதன்வழியாகப் பல சொற்பொழிவுத் தொடர்களை நடத்தினார்.அதன் தொடர் ஒன்றில் பிரபல தொல்லியல்(இந்திய) கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் உரையாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.மேலே கட்டுரையாளர் செல்வராஜா அவர்கள் குறிப்பிட்டது போல -தேவராஜன் அவர்கள் தனிநாயகம் அடி கள் பற்றி தினகரனில் எழுதிய கட்டுரைத் தொடரை -கிறிஸ்தவ மன்றம் புத்தகமாக வெளியிட்ட போது- அதற்கு அணிந்துரை வழஙகிய பேராசிரியர் கைலாசபதி அவர்கள்-”கால அடவிக்குள் அடிகளாரின வாழ்வையும் பணியையும் பக்குவமாக எடுத்துக் கூறியுள்ளார் என்று பாராட்டியுள்ளதுடன் வருங்கால ஆய்வாளர்களுக்கு இது பயனுள்ள திசைகாட்டியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.தேவராஜன்-உலகவலத்தில் தமிழியல் ஆய்வுகளைச் சேகரித்து-சக ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொளபவர் என்றும் அதிற் குறிப்பிட்டுள்ளார் தேவராஜன் இன்றும் தது தள்ளாத வயதில் இதே பணியைத்தான் செய்து வருகிறார். தேசம் நெற்றில் அவர் தமது குறிப்புக்களை இட்டது- நமக்கும் பல தகவல்களை அறிய வாய்ப்பாக அமைந்துள்ளது. வரதராஜன் நியுசிலாந்து.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு