மட்டக்களப்பு: தொல்லியல், தமிழ் பௌத்தம், தமிழ் மொழியின் தொன்மை – பேராசிரியர் சி.பத்மநாதன்


[பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப்பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையிலான குழுவினர் கடந்த 11.10.2012 - 13.10.2012 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பேராசிரியரின் ஒப்புதலுடன் ‘புதினப்பலகை’ வெளியிடுகின்றது.]

01. பிராமியும், பிராகிருதமும்

கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதலாக கி.பி நான்காம் நூற்றாண்டு வரை தென்னாசியத் துணைக்கண்டத்தில் எழுதப்பட்ட ஆவணங்கள் எல்லாம் பிராமி எனும் வகைக்குரிய வரிவடிவங்களில் எழுதப்பட்டன. தமிழகத்தில் வழங்கிய எழுத்துமுறை தமிழ்ப்பிராமி என்று சொல்லப்படும். அதிலே தமிழுக்குச் சிறப்பான எழுத்துக்கள் அமைந்துள்ளதால் அது அவ்வாறு சொல்லப்படும்.

பிராகிருதத்தில் இல்லாதனவும் தமிழ் மொழிக்கே சிறப்பானவையுமான ழ,ள,ற,ன என்னும் எழுத்துக்கள் தமிழ்ப் பிராமியில் மட்டுமே காணப்படும். இவ்வெழுத்துக்குரிய ஒலிப் பெறுமானங்கள் பிராகிருத மொழியிற் காணப்படுவதில்லை. எனவே அவற்றுக்கு வரிவடிவம் கொடுக்கும் சிறப்பான இவ்வெழுத்துக்களைத் தமிழகத்தில் உருவாக்கியுள்ளனர்.

இப்பொழுது வழக்கிலுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், சிங்களம், ஹிந்தி, வங்களி, மராத்தி முதலிய தென்னாசிய மொழிகளில் எழுதப்படும் எழுத்து முறைகள் யாவும் பிராமி வரிவடிவங்களை அடிப்படையாகக் கொண்டவை. இதுபோன்ற ஒரு வளர்ச்சி ஐரோப்பாவிலும் ஏற்பட்டது. ஆங்கிலம், பிரெஞ்சு மொழி, இத்தாலிய மொழி, ஸ்பானிய மொழி, ஜேர்மனிய மொழி முதலானவற்றின் எழுத்து முறைகள் உரோமின் வரிவடிவங்களை ஆதாராமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றவை.

பிராமி வேறு, பிராகிருதம் வேறு என்ற புரிந்துணர்வு அவசியமானது, சில சமயங்களில் உயர்தர மாணவர் சிலரிடையே இவை தொடர்பாக ஒரு மனக்குழப்பம் ஏற்படுவதுண்டு. பிராமி என்பது முன்னே இங்கு குறிப்பிட்டவாறு ஒரு வரிவடிவ வகையானது, ஆனாற் பிராகிருதம் என்பது ஒரு மொழி: அது தென்னாசியத் துணைக்கண்டத்தில் ஒரு வரையறையான காலப்பகுதியிலே தொடர்பு மொழியாக விளங்கியது. அது வட இந்திய மாநிலங்கள் பலவற்றிலே பேச்சுவழக்கான மொழி. புத்தர்பிரான், மகாவீரர் ஆகியோரின் காலங்களிலும் அது வழங்கியது. எனவே, சமணம், பௌத்தம் ஆகியவற்றின் அடிப்படையான இலக்கியங்கள் அனைத்தும் அம்மொழியில் அமைந்துள்ளன.

பிராகிருத மொழியிலே பிராந்திய வழக்கின அடிப்படையின் பல பிரிவுகள் இருந்தன. அவற்றுள் அர்த்தமாகதி, சௌரசேனி, மகாராஷ்ட்ரி, பைசாஜி எனும் நான்கு வகைப் பிராகிருதங்களைப் பற்றிச் சில நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆதியான சமண, பௌத்த நூல்கள் அர்த்தமாகதி எனும் வகையினுள் அடங்கும்.

இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதியில், ஆந்திரம், கர்நாடகம், தமிழகம், ஈழம் முதலிய தேசங்களிலே பிராகிருதம் ஒரு தொடர்பு மொழியாகவே பயன்படுத்தப்பட்டது. வட இந்தியாவிலிருந்து சென்ற வணிகரும், சமண, பௌத்த சங்கத்தாரும் அங்கெல்லாம் பிராகிருத மொழியினை அறிமுகஞ் செய்தனர். அங்குள்ள மொழிகளிற் பிராகிருதம் பெருஞ் செல்வாக்கை ஏற்படுத்தியது.

ஆயினும் ஈழம் தவிர்ந்த தேசங்களிலே பிராகிருதத்தின் செல்வாக்கினால் அங்கு நிலவிய ஆதியான மொழிகள் அழிந்துவிடவில்லை. அவை அதனால் வலுவும் வளமும் பெற்றன என்று சொல்லலாம். கி.பி நான்காம் நூற்றாண்டளவிலே தொடர்பு மொழி என்ற நிலையினைப் பிராகிருதம் இழந்துவிட்டது. அதனிடத்தைச் சமஸ்கிருதம் பிடித்துக்கொண்டது.

பிராமிக்கும் பிராகிருதத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு. அது பிராகிருத மொழிச் சாசனங்கள் பிராமி வரிவடிவங்களில் எழுதப்பட்டமையாகும். தென்னாசியாவிலே, மொஹெஞ்சதாரோ, ஹரப்பா பண்பாட்டுக் காலத்துக்குப் பிற்பட்ட யுகத்துக்குரிய ஆதியான ஆவணங்கள் பிராகிருத மொழியில் உள்ளன. அவை பிராமி வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களும் கல்லில் வெட்டப்பட்டுள்ள ஆவணங்களாகும். பிராகிருதம் தொடர்புமொழி என்ற நிலையினை இழந்தும் பிராமியும் உருமாறி வட இந்தியாவிலே தேவநாகரம் என வளர்ச்சி பெற்றுவிட்டது.

02. இலங்கையிற் பிராமிக் கல்வெட்டுக்கள்

இலங்கையிற் பெருந்தொகையாள பிராமிச் சாசனங்கள் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் மலைகளிலும், பெருங்கற் பாறைகளிலும் அமைந்துள்ள குகைத்தளங்களிலும் வெட்டப்பட்டுள்ளன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலே தரையிலமைந்த பெருங்கற்பாறைகளிற் பிராமிச் சாசனங்கள் காணப்படுகின்றமை ஒரு சிறப்பம்சமாகும்.

மட்டக்களப்பிலே செங்கலடிக்கு மேற்குப்புறமாக சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்திலுள்ள காயன்குடா எனும் இடத்திலுள்ள மிக நீளமான சாசனமும், அம்பாறை மாவட்டத்தில், அம்பாறை வீதியின் ஓரமாக அமைந்துள்ள பழவெளி எனும் கிராமத்தின் எல்லைப்புறத்தே காட்டினுள் காணப்படும் சாசனங்களும் அத்தகையனவாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்றிலே, வயல்வெளிகளிலும் சில பாறைகளில் பிராமி எழுத்துக்கள் சில பொறிக்கப்பட்டுள்ளதாக சிலர் சொன்னார்கள். அத்தகைய கல்வெட்டுக்களில் ஆதியில் வயல்களை உருவாக்கி அவற்றை உடைமையாக்கிக் கொண்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருத்தல் கூடும்.

இலங்கையில் பிராமிச் சாசனங்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுட் பொரும்பாலானவை அளவிற் சிறியவை. அவற்றுட் மிகப் பெரும்பாலானவை பௌத்த சமயச் சார்புடையவை: குகைத் தளங்களில் அமைந்தவை. அவை தான சாசனங்கள்: பௌத்த சங்கத்தாருக்குக் குகைகளை நன்கொடையாக வழங்கியமை பற்றியவை.

ஆரம்பகாலத்திற் பௌத்த சமயம் இலங்கையிற் பரவியபொழுது, புத்தர்பிரான் அமைத்த விதிகளுக்கேற்பச் சங்கத்தார், குடியிருப்புக்களுக்குச் சற்றுத் தூரத்திலே வாழ விரும்பினர். அதனால் மலையடிவாரங்களில் இயல்பாக அமைந்த குகைகளில் வாழ்ந்தனர். துறவறம் மேற்கொண்ட சங்கத்தார் இல்வாழ்வோரான உபாசகர்களிலே தங்கியிருக்க நேர்ந்தது. உணவு, உடை, உறைவிடம், மருந்து ஆகியவற்றைச் சங்கத்தாருக்கு வழங்குவது உபாசகரின் தலையான தருமங்களென்று கருதப்பட்டது. எனவே இலங்கையிலுள்ள வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்ற பல்லின மக்களிடையே பௌத்தம் பரவியபொழுது, நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் சங்கத்தாருக்கு குகைகளை இருப்பிடங்களாக வழங்கினர். சங்கத்தாருக்குத் தானம் வழங்குவது ஒரு புண்ணிய கருமமாகக் கொள்ளப்பட்டது.

பொதுவாக இலங்கையில் வரலாற்று நூல்களும், குறிப்பாக அரச திணைக்களத்தினால் வெளியிடப்படும் பாடநூல்களும் இலங்கையிற் பௌத்தம் பரவியவாற்றை அறிவியல் பூர்வமாக விளக்குவதில்லை. இலக்கியங்களையும், குறிப்பாக மாகாவம்சத்தை மட்டும் ஆதாரமாகக்கொண்டு எழுதுவதே இதற்கான காரணமாகும்.

இராசதானியை மையமாகக்கொண்டு, குறிப்பாக அங்கிருந்த மன்னர்கள் கால வளர்ச்சிகளை வரிசைக் கிரமமாகக் கூறுவதே அந்நூலின் இயல்பாகும். மகிந்த தேரர் இலங்கைக்கு வந்தது, தேவநம்பியதீசன் காலத்திலே பௌத்த சாசனத்தை உருவாக்கியமை, பின்பு அனுராதபுரப் பொரும்பள்ளிகளில் ஏற்பட்ட சங்கபேதங்கள், அவற்றிலே அரசர்கள் தலையிட்டு நிலைமையை மேலும் மோசமாக்கியமை போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தும் விபரங்களே மகாவம்சம் முதலான பாளி நூல்களிற் காணப்படுகின்றன.

எவ்வாறு பௌத்த சமயம் இலங்கை வாசிகளிடையே பரவியது? அதை அவர்கள் எந்தளவிற்கு ஒப்புக்கொண்டார்கள்? பௌத்தம் பரவிய காலத்தில் எவ்வாறான சமூகங்கள் வாழ்ந்தன? அவர்கள் எவ்விதமான மொழிகளைப் பேசினார்கள்? என்ற முக்கியத்துவமான வினாக்களுக்கு மகாவம்சம் மூலம் விடைகாண்பது சாலாக்காரியம். கல்லூரிகளிலுள்ள வரலாற்றாசிரியர்களும் மாணவர்களுக்கான பாடநூலாசிரியர்களும் இத்தகைய வினாக்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை.

கல்வெட்டுக்கள் மூலமாகவே இங்கு குறிப்பிட்ட வினாக்களுக்கு விடை காணமுடியும். ஏறக்குறைய, ஆறு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்துக்குரிய 2000 பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையிற் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றி மேலோட்டமான ஆய்வுகளும், குறிப்புரைகளை எழுதும் முயற்சிகளும் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகால வரலாறுடையன. அவற்றைப் புதிதாகப் படியெடுத்து, வாசித்து அவற்றின் வாசகங்களை இரு தொகுதிகளாக சேனரத் பரணவிதான சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளியிட்டார்.

இரு முக்கியமான கோட்பாடுகளை வலியுறுத்தும் வகையில் பரணவிதான தனது பணியை நிறைவேற்றினார். அவற்றிலொன்று இக் கல்வெட்டுக்களெல்லாம் ஆதியான சிங்கள மொழியில் எழுதப்பட்டவை என்பது. ஆயினும் சாசனங்களில் வரும் சொற்களை விசித்திரமான முறையில் சமஸ்கிருத மொழி இலக்கண மரபுகளுக்கேற்ப விளக்குகின்றார். சிங்களம் சமஸ்கிருதத்திலிருந்து நேரடியாகத் தோன்றவில்லை அது பிராகிருதம் மூலமாகவே வளர்ச்சிபெற்றது என்பதை அவர் ஏதோ காரணத்தினால் வெளிப்படுத்தத் தவறிவிட்டார்.

சமஸ்கிருத மொழி வரலாற்றில் வரையறையான இரு வேறு காலகட்டங்கள் உண்டு. அவற்றிலே முற்பட்டது வேதங்களிற் காணப்படும் மொழி வழக்கு. அது ஐந்தாம் நூற்றாண்டளவிலே வழக்கற்றுவிட்டது. இரண்டாங் கால கட்டத்துக்குரிய சமஸ்கிருதம் அடிப்படையில் ஒரு இலக்கிய மொழியாகும். அது ஒரு ஆவண மொழியாகவும் போதனா மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் ஈழம் தவிர்ந்த தென்னாசிய நாடுகளில் வழங்கியது.

இலங்கையில் எவரும் சமஸ்கிருதத்தைப் பேசவில்லை. எனவே, பிராமிச் சாசனங்களிற் காணப்படும் சொற்கள் யாவற்றையும் சமஸ்கிருத மொழியினை அடிப்படையாகக் கொண்டு விளக்குவது பொருத்தமற்றது. பரணவிதான அவ்வாறு கொள்வதற்கான காரணம் சிங்களவரின் மூதாதையர் வட இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய ஆரியரின் வம்சாவழியினர் என்ற நம்பிக்கையாகும். வியஜன், பாண்டுவாசுதேவன் பற்றிய கதைகளே அந்த நம்பிக்கைக்கு ஆதாரமானவை, அவை ஜாதகக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு புனையப் பெற்றவை என்பதை G.C. மெண்டிஸ் ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன்பு தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கையிற் பௌத்தம் பரவிய காலத்திலே பூர்வீக குடிகளான யக்கரும், நாகரும் வாழ்ந்தனரென்று மகாவம்சம் குறிப்பிடுகின்றது. பிராமிச் சாசனங்கள் பல நாகரைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆயினும் பரணவிதானவின் சிந்தனையிற் பூர்வ குடிகள் என்று மகாவம்சம் குறிப்பிடும் நாகர் வட இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய ஆரியரின் வம்சாவழியினராகிவிடுகின்றனர். இது ஒரு வினோதம். இதை வரலாறென்று மாணவர்களுக்கு இந் நூற்றாண்டிலும் போதிக்கின்றமை அதிலும் வினோதமானது.

பிராமிச் சாசனங்களிற் காணப்படும் மொழிநடையும் சொல்வளமும் கர்நாடகம், தெலுங்கு தேசம் என்பவற்றிலுள்ள சமகாலத்துப் பிராமிச் சாசனங்களில் உள்ளவற்றைப் போன்றது. எனவே, இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களின் மொழி சிங்களம் என்று ஒப்புக்கொண்டால் தென்னிந்தியப் பிராமிச் சாசனங்களின் மொழி ஆதிச் சிங்களமாகிவிடும். பரணவிதானவின் விளக்கங்களின் அடிப்படையில் உருவாகிய இலங்கையின் வரலாறு மகாவம்ச மரபிற்கு ஒவ்வாத புனைகதைகளாகி விட்டன. மகாவம்சத்தில் எந்தவோர் இடத்திலும் இலங்கை வாசிகளில் எந்தப் பிரிவினரும் ஆரியர் என்று குறிப்பிடவில்லை என்பது கவனத்திற்குரியதாகும்.

இலங்கைப் பிராமிச் சாசனங்களிலே தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பல இடங்களிற் காணப்படுகின்றன என்பதை ஆரிய அபேசிங்க, சத்தாமங்கள கருணாரத்ன போன்ற சாசனவியல் ஆய்வாளர்கள் உதாரணங்களோடு விளக்கியுள்ளனர்.

ஆயினும் இலங்கையின் தொல்பொருட் திணைக்களத்தின் அதிபராகவும், பன்மொழிப் பண்டிதராகவும் சாசனவியலாளர் என்றவகையில் தமிழ்ப் பிராமி வரிவடிவங்களைப் பற்றி அறிந்திருக்கும் வாய்ப்புக்களைப் பெற்றிருக்கக்கூடியவருமான சேனரத் பரணவிதான தான் பதிவுசெய்து இரு தொகுதிகளாக வெளியிட்ட பிராமிச் சாசனங்கள் பலவற்றிலே தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்ற பொழுதிலும் அவற்றைப் பற்றிய விபரங்களை மறைத்துவிடுகின்றார்.

முதலாவது தொகுதியில் அடங்கிய சாசனங்களிற் காணப்படும் எழுத்துக்களைக் காலவரையறை அடிப்படையிற் பட்டியலிட்டு நிரற்படுத்தியுள்ளார். அவருடைய பட்டியலிலே ற,ன,ழ,ள ஆகிய தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளன. இது தற்செயலாக ஏற்பட்ட தவறென்று கொள்ளவியலாது. அவருடைய ஆய்வுநெறி முறையில் நிதானம் என்பது கைநழுவி விட்டமைக்கு இது நல்லதோர் சான்றாகும்.

இலங்கைப் பிராமிச் சாசனங்கள் தமிழ்ப் பிராமியின் செல்வாக்கினால் ஏற்பட்ட வேறொரு பிரதானமான அம்சமும் உண்டு. தமிழ்ப் பிராமியிலும் அசோகப் பிராமியிலும் அ,ஈ,ம என்னும் எழுத்துக்கள் வெவ்வேறு விதமாகவே எழுதப்பட்டுள்ளன. இந்த இரண்டு வகையான எழுத்துக்களும் இலங்கையிற் பிராமி வரிவடிவமுறை வழக்கற்றுப் போகும் வரை பயன்படுத்தப்பட்மை கவனிக்கவேண்டிய ஒரு பிரதான அம்சமாகும். இரு வேறு மொழிகளான தமிழ், பிராகிருதம் என்பவற்றுக்குரிய வரிவடிவங்கள் இலங்கைச் சாசனங்களில் ஆதியோடு அந்தம் வரை காணப்பட்டமை அவ்விரு மொழிகளும் இச் சாசனங்கள் எழுதப்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் வழங்கிவந்தமைக்குரிய அடையாளங்களாகும்.

இவ்விடத்திலே பேராசிரியர் கா. இந்திரபாலா குறிப்பிடுவனவற்றைக் கவனிப்பது பொருத்தமானது,

“பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் சொற்களாகிய மருமகன, பருமக, வேள, அய போன்ற சொற்கள் இந்து ஆரியச் சொற்கள் [அதாவது பிராகிருதச் சொற்கள்] எனக் கொள்ளமுடியாதவை எனலாம். அதேபோல், பரத போன்ற இனக் குழுப் பெயர்கள் சமஸ்கிருத (பிராகிருத) மயப்படுத்தப்பட்ட சொற்களாக அமையலாம். பல ஆட்பெயர்கள் பழைய மொழிகளைச் சேர்ந்த சொற்கள் போலக் காணப்படுகின்றன. இவற்றுள் சில நகுலி, கடலி, ஸபிலி மற்றும் நமர போன்ற பெயர்கள், இவற்றை நன்கு ஆய்வுசெய்தால் பிராமிக் கல்வெட்டுக்களிற் காணப்படும் சொற்கள் பிராகிருதம் பரவிய காலத்தில் பேசப்பட்ட மொழிகளை அடையாளங் காண உதவலாம்”

சுருங்கக் கூறின் பிராமிச் சாசனங்களிலே தமிழ் மொழிச் சொற்களும் இடம்பெற்றுள்ளன என்பது கா. இந்திரபாலாவின் கருத்தாகும்.

இதனை முன்னர் பலர் வலியுறுத்தியுள்ளனர். இத்தாலிய நாட்டு இளம் ஆய்வாளரான மலோனி என்பவரே இலங்கைத் தமிழ்ச் சாசனங்களிலே வரும் பரத என்ற சொல் பரதர் என்னும் தமிழ்ச் சொல்லின் பிராகிருத வடிவம் என்பதை முதன் முதலாகச் சொன்னார். வவுனியாவிலுள்ள அங்கிலிக்கன் திருச்சபையொன்றின் போதகராகவிருந்த கனகரத்தினம் அடிகளார் இலங்கைப் பிராமிச் சாசனங்களிலுள்ள பல சொற்களைத் தமிழ் சொற்களாக அடையாளங்கண்டு அவற்றைப்பற்றி ஒரு நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். அவரின் முடிபுகளுக்கு வலுவூட்டும் வகையிற் கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை வெளியிட்ட கட்டுரைகள் அமைந்துள்ளன. பிராமிச் சாசனங்களை ஆராய்ந்த ப. புஷ்பரத்தினம் அவற்றிலே காணப்படும் மிகக் கூடுதலான தமிழ்ச் சொற்களை இனங்கண்டு அவற்றை நிரல்படுத்தியுள்ளார்.

03. புராதன இலங்கையில் மொழிக் கலப்பும் மொழி மாற்றமும்

இலங்கைப் பிராமிச் சாசனங்களிற் பிராகிருத மொழிவழக்கு, தமிழ் [திராவிட] மொழிவழக்கு ஆகியவற்றை அடையாளங்கண்டு கா. இந்திரபாலா அவை இலங்கையில் மேலோங்கிவிட்டமைக்கு ஏதுவான காரணங்களை மேல்வருமாறு விளக்குகின்றார்.

“இலங்கைத் தீவை இரு பாதிகளாகப் பிரித்து நமக்குக் கிடைக்கும் ஆதி இரும்புக்காலத் தொல்லியல் சான்றுகளை ஆய்வுசெய்தால் வட பாதிக்கும் தென்பாதிக்கும் இடையில் சில வேறுபாடுகளைக் காணலாம். தமிழ் நாட்டிலிருந்து பரவிய பண்பாட்டின் முக்கிய கூறுகளாகிய தாழி அடக்கங்கள், கற்கிடை அடக்கங்கள், கரும்- செம் மட்பாண்டம், இரும்புக் கருவிகள், நெற் பயிர்ச் செய்கை மற்றும் நீர்ப்பாசன வசதி ஆகியவற்றின் தொல்லியல் சான்றுகள் வட பாதியில் கூடுதலாகக் காணப்படுகின்றன. தென்பாதியில் ஒரு சில இடங்களில் மட்டும்தான் இச் சாசனங்களைக் காணமுடிகின்றது.”

“இப் பண்பாட்டுக் கூறுகள் இலங்கையில் வாழ்ந்த இடைக்கற்கால மக்கள் மத்தியில் பரவியபோது புலம்பெயர்ந்து வந்தோருடன் இனக்கலப்பு ஏற்பட்டது எனலாம். காலப்போக்கில் புதிதாகப் பரவிய உயர்வான பண்பாடுகளும் மொழிகளும் நிலைபெற்றன.” பிராகிருத மொழியும், தமிழ் மொழியும் கூடுதலான செல்வாக்கை, சிறப்பாக இலங்கையின் தென்பாதியிலே பெற்றிருந்தது. வட பாதியில், வடமேற்கு, மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதியில், தமிழ் மொழியின் ஆதிக்கம் பெறத்தொடங்கியது. ஆதி வரலாற்றுக் காலந்தொட்டு இவ்விரு மொழிகளும் இலங்கையில் முழுமையான ஆதிக்கம் பெறப் போட்டியிடும் மொழிகள் போன்று வளர்ச்சியுறத் தொடங்கின. இலங்கையில் தோன்றிய இரு பெரும் இனக்குழுமங்களின் உருவாக்கம் இந்த மொழிகளின் வளர்ச்சியில் தங்கியிருந்தது.”

“ஆதி வரலாற்றுக் காலந் தொடங்கிய போது இலங்கையில் வாழ்ந்த மக்களுடைய மொழிகள் தொடர்பாகத் தாய்மொழி மாற்றம் என்று வர்ணிக்கக்கூடிய போக்கு வளர்ச்சி பெற்றுக்கொண்டிருந்தது எனலாம். இலங்கையின் பெரும்பாகத்தில் உயர்குழாத்தினர் மொழியாகவும், எழுத்து மொழியாகவும் பிராகிருதம் ஒரு முக்கிய இடத்தினைப் பெற்றிருந்தது. உயர் குழாத்தினர் பிராகிருதப் பெயர்களை ஏற்றுக் கொள்ளும் போக்கும் காணப்பட்டது. அதே போல தமிழ் மொழியும் பல குழுக்களின் தாய்மொழியாகும் போக்குக் காணப்பட்டது எனலாம்.”

இலங்கைப் பிராமிச் சாசனங்கள் பெரும்பாலும் பிராகிருத மொழிச் சாசனங்களாகும். அவற்றிலே காணப்படும் பிராகிருதம் வேற்றுமொழிச் சொற்களைக் கொண்ட ஒரு கலப்பு மொழியாகும். அதிலே தமிழ் சொற்களும் ஆதியான திராவிட மொழிச் சொற்களும் அடங்கியுள்ளன. இலங்கையில் பௌத்த சமயம் பரவிய காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களில் ஒரு பிரிவினர் தமிழ் மொழி பேசுவோர் என்பதையும் பிராமிச் சாசனங்கள் மூலம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. அவர்களிற் சிலரை தமேட, தமேழ, தமிட எனப் பலவாறு சாசனங்கள் குறிப்பிடுகின்றன. அவ்வாறான சாசனங்கள் வடகிழக்கு மாகாணங்களில் உள்ளன. திராவிடர் சமூகத்துக்குப் பொதுவானதும் சமஸ்கிருத மரபிலே, குறிப்பாகத் தர்மசாஸ்திரங்களிலே தடைவிதிக்கப்பட்டதுமான மருமக்கள் மணம்முடிக்கும் முறை நிலவியதற்கான சான்றுகள் பிராமிச் சாசனங்களிற் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.

சமூகப் பிரிவுகளைப் பொறுத்தவரையில் பரதர் என்னும் சமூகத்தவரையே சாசனங்களில் குறிப்பிட்டுள்ளனர் என்பதை முன்பு அவதானித்தோம். அண்மைக்கால ஆய்வாளர்களிற் பலர் இக் கருத்தினை ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்கு வலி சேர்க்கும் வண்ணமாக சில சாசனச் சான்றுகள் கிடைக்கின்றன. பொலன்னறுவையிற் கிடைத்துள்ள சாசனம் ஒன்றிலே பரத ஸாக3ரிக3ஸ்ஸ லேணே “பரதனாகிய கடலன் திஸனின் குகை” என்று எழுதப்பட்டுள்ளது. பரதன் என்பவன் மாலுமி என்பதால் அவனைக் கடலன் என்று சாசனங் குறிப்பிடுகின்றது. சாசனத்திற் பொறிக்கப்பட்டுள்ள கப்பலின் உருவம் இதனை உறுதி செய்கின்றது.

அகுறுகொடவிற் கிடைத்துள்ள நாணயங்களில் ஒன்றில், ஒரு புறத்தில், ப3ரத திஸஹ, பரத(ன்) திஸனுடையது என்று எழுதப்பட்டுள்ளது. நாணயத்தை வழங்கியவன் பரத குலத்தவனாகிய திஸன், நாணயத்தின் மறு புறத்திலே இரண்டு மீன்களின் உருவங்கள் காணப்படுகின்றன. எனவே, மீன் பரத குலத்தவரின் சின்னமாக, இலச்சினையாகப் பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவாகின்றது.

இதுவரை கவனித்தவற்றின் மூலம் இலங்கையில், இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு, கி.மு இரண்டாம், முதலாம் நூற்றாண்டுகளிலே தமிழர் வாழ்ந்தனர் என்பதும் தமிழ் மொழி நாட்டில் வாழ்ந்த ஒரு சாராரின் பேச்சு வழக்கு மொழியாக விளங்கியது என்பதும் தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது. இவ்வாறாயின் எந்தக் காலப் பகுதியிலே இலங்கையிலே தமிழ் மொழி பரவத் தொடங்கியது? என்ற வினா எழுகின்றது.

ஆதி இரும்புக்காலமாகிய பெருங்கற்பண்பாட்டுக் காலம் பற்றி வேறு சிலர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும் கா. இந்திரபாலா அண்மைக் காலத்தில் முன்வைத்த விளக்கங்களே அழுத்தமானவை, உறுதியானவை, ஆதாரபூர்வமானவை. அவர் மேல்வருமாறு சொல்வார்:

“இலங்கைக்கு எப்பொழுது தமிழ் மொழி [அல்லது அதன் மூதாதை மொழியாகிய தமிழ்- மலையாள மூல மொழி PROTO TAMIL-MALAYALAM] பரவியது? இலங்கையின் எப்பாகத்தில் இம் மொழி முதலில் பரவியது? இவ் வினாக்களுக்கு இலகுவில் விடைகாண முடியாது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து நெருங்கிய உறவுகள் தமிழ்நாட்டு நிலப்பகுதிக்கும் இலங்கை நிலப்பகுதிக்கும் இடையில் இருந்தமை முன்னர் கூறப்பட்டது. ஆனால் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இந் நிலப்பகுதிகளில் பேசப்பட்ட மொழிகள் பற்றி எதுவுமே அறியமுடியாத நிலையில், தமிழின் மூல மொழியோ அப்பொழுதும் பேசப்பட்டது பற்றி எதுவும் கூற முடியாது. ஆதி வரலாற்றுக் காலம் தொடங்கும் கட்டத்திலே தான் தமிழ் மொழி தென்னிந்தியாவில் எழுச்சி பெற்றிருந்தது என்று கூறக்கூடிய நிலை காணப்படுகின்றது. வரலாற்றுத் தொடக்க காலத்தில் தூர தென்னிந்தியாவில் [தமிழ்நாடு, கேரளம்] பேசப்பட்ட மொழிகளுள் தமிழ் மொழி மேலோங்கி வளரத் தொடங்கியது எனலாம். சங்கச் செய்யுள்களுள் காலத்தால் முற்பட்டவை பொ. ஆ. மு [கி.மு] இரண்டாம் நூற்றாண்டளவில் இயற்றப்பட்டவை என்று பொதுவாக ஆய்வாளர்கள் கருதுவர். இதன்படி இத்தகைய இலக்கியத் தரத்தை தமிழ் மொழி அடைவதற்கு முன் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலம். இது சிங்கள மொழி உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட காலமாகும்”.

04. மட்டக்களப்பு தேசத்துப் பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள்

மட்டக்களப்பு தேசம் என்பது கிழக்கிலங்கையில் வெருகலாற்றுக்குத் தென்பால் குமணை வரை பரந்திருக்கும் பெருநிலப்பகுதி. அதில் எழுவான்கரை, படுவான்கரை என்ற பிரிவுகள் உண்டு.அவற்றின் பெயர்கள் பூர்வீகமானவை. நிலவமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுத்தமான தமிழ்ப் பெயர்கள். அரசாங்கம் 1962இல் பழைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியைப் பிரித்து அம்பாறை என்ற ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்கிவிட்டது. எனவே, இலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளிலே மிகப் பெரிதும் சில தனியான பண்புகளைக் கொண்டதுமான மட்டக்களப்பு தேசம் இரு கூறுகளாகி விட்டது.

அங்கு வாழும் தமிழர்களின் பேச்சு வழக்கு மிகவும் புராதானமாது. தமிழ் நாட்டில் வழக்கற்றுப் போய்விட்ட சில சொற்கள் இன்னும் அவர்களிடையே வழங்கிவருகின்றமை அதற்கோர் தகுந்த உதாரணமாகும். அங்கு தமிழ் மொழி எப்போது பரவியது? எவ்வாறு பரவியது? என்பதைப் பல வழிகளின் மூலம் இப்பொழுது மூன்று நூற்றாண்டு கால வளர்ச்சி தேவைப்பட்டிருக்கும் என்று கொண்டால், தமிழின் எழுச்சி பொ.ஆ.மு ஐந்தாம் நூற்றாண்டளவில் தொடங்கியிருக்கும். அக்கால கட்டமளவில் இலங்கைக்கும் அம்மொழி பரவியிருக்கும் எனலாம்.”

“தமிழின் எழுச்சி ஏற்பட்ட இப் பின்னணியில் நோக்கும் போது, தென்னிந்தியாவிலிருந்து ஆதி இரும்புக்காலப் பண்பாடு இலங்கைக்குப் பரவிய கட்டத்தில் கூடவே தமிழ் மொழியின் செல்வாக்கும் பரவியிருக்க வேண்டும். என்பதை ஊகிக்கலாம். தமிழ் நாட்டின் தென்பகுதியிலிருந்து புதிய பண்பாட்டை இலங்கைக்குக் கொண்டு சென்றோர் தமிழ் மொழி பேசுவோராக இருந்திருப்பர் என்பதில் ஐயமில்லை. தென்னிந்தியாவின் வேறு பகுதிகளிலிருந்து வேறுமொழி பேசுவோரும் சென்றிருப்பர் என்பதில் மறுப்பதற்கில்லை.”

இலங்கையில் கி. மு ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ்மொழி பரவிவிட்டது என்பதும் அது பெருங்கற்காலமான ஆதி இரும்புக் காலப் பண்பாடு பரவியமையோடு தொடர்புடையது என்பதும் இதுவரை கவனித்த குறிப்புக்களின் சாராம்சமாகும். அது பிராகிருத மொழியும் வழங்கியதை அறிய முடிகின்றது. இலங்கையிற் பெருங்கற் பண்பாடு பரவிய காலத்திற் தமிழ் மொழியும் பரவியதென்பதை முன்பு அவதானித்தோம். இலங்கையின் கிழக்குப் பகுதியிலும் அவ்விதமான சூழ்நிலை காணப்பட்டது.

மட்டக்களப்புத் தேசத்துக்குரிய மிகவும் பழைமையான தொல்பொருட் சின்னங்கள் இருவகைப்படும். அவை பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள், பிராமிக் கல்வெட்டுக்கள் என்பனவாகும்.

அவற்றிடையே சில பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் காலத்தால் முற்பட்டவை சோழ மண்டலக் கரையிலுள்ள காவிரிப்பூம் பட்டினம் போன்ற துறைமுகப் பட்டினங்கள் வழியாக ஏற்பட்ட கடல்வழிப் பிரயாணங்கள் மூலமாக ஆதி இரும்புக் காலத்துக்கு உரியதான பெருங்கற் பண்பாடு தென்னிந்தியாவில் இருந்து மட்டக்களப்புப் தேசத்துக்கும் பரவியது. ஆனால் அங்கு இதுவரை முறையான தொல்லியல் மேலாய்வுகளோ, அகழ்வாய்வுகளோ குறிப்பிடத்தக்க அளவிலே இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான ஆதி இரும்புக்காலத் தொல்லியல் தளம் கதிரைவெளியில் காணப்படுகின்றது. மகாவலி ஆற்றின் கழிமுகப் பகுதியில் குரங்கு படையெடுத்த வேம்பு எனும் இடத்தில் பாறைக் கற்களால் அமைக்கப்பட்ட கற்கிடை அடக்கங்கள் காணப்படுகின்றன. 1920களில் இருந்து இத் தொல்லியல் தளத்தின் முக்கியத்துவம் அறியப்பட்டிருந்தாலும் இங்கு அதிகம் ஆய்வு இதுவரை நடத்தப்படவில்லை. ஆதி இரும்புக்காலத்தில் இப் பகுதியில் முக்கியமான ஒரு குடியிருப்பு இருந்திருக்க வேண்டும் என்பதற்குச் சுற்றாடலிற் காணப்படும் வேறு தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன. பிராமிக் கல்வெட்டுக்கள் இங்கிருந்து கிட்டிய தூரத்தில் சேருவில, இலங்கைத் துறை, ஈச்சிலம்பத்தை ஆகிய இடங்களில் உள்ளன. இலங்கைத் துறையில் கரும் செம் மட்பாண்ட ஒடுகள் பெறப்பட்டன.

“கதிரைவெளியின் கற்கிடை அடக்கங்கள் வெளிப்படுத்தும் ஆதி இரும்புக்காலப் பண்பாட்டின் செல்வாக்கு தென்னிந்தியாவின் தமிழ்ப் பண்பாட்டுப் பகுதியில் இருந்து மட்டுமன்றி ஆந்திரா மற்றும் கேரளம் ஆகிய இடங்களிலிருந்தும் வந்திருக்கமுடியும். கேரளத்தில் இப்படியான கற்கிடை அடக்கங்கள் இருந்தமை கொச்சிப் பகுதியில் காணப்படுகின்றன. எருகாமம் என்னும் இடத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெருங்கற்களுடன் கூடிய சில அடக்கங்கள் இருந்தமை அறிவிக்கப்பட்டது.”

வாகரையில் ஆதி இரும்புக் காலக் கல்லறைகளின் சிதைவுகள் பரவலாகப் பரவியிருப்பதை தங்கேஸ்வரி கதிர்காமன் அவதானித்துள்ளார். மண்டூரிலும் பெருங்கற் பண்பாட்டுக் காலத்துக்குரிய கல்லறை இருப்பதைச் சிலர் கண்டுள்ளனர். எனினும், இவற்றை அடையாளங்கண்டு பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் இல்லாதவிடத்து அவை யாவும் மிக விரைவில் அழிந்துவிடும். கோயில்களுக்குரிய தமிழ்ச் சாசனங்களுக்கு ஏற்பட்ட கதி இவற்றுக்கும் ஏற்பட்டுவிடும்.

பெருந் தெருக்களையும், புதிய கட்டிடங்களையும் அமைப்பதற்குத் தேவையான கருங்கற்களைக் குத்தகை முறையில் வழங்க முன்வரும் முதலாளிகள் இவற்றைக் கணப்பொழுதில் தொல்பொருட் சின்னங்களான கற்களையும் தொழிலாளர்களைக் கொண்டு எதுவித தயக்கமுமின்றி தகர்த்து விடுகின்றனர். இவ்விதமான கேடுகளைத் தடுத்து நிறுத்துவது அரசாங்க அதிகாரிகளின் கடமையாகும். இதனைப் பொறுத்தவரையிலே சமூதாய விழிப்புணர்ச்சி இல்லாதவிடத்து எதனையுஞ் செய்யவியலாது.

கிழக்குக் கரையோரத்தின் தென் பகுதியிலும் தென் மாகாணத்தின் கிழக்குப் பகுதியிலும் சில இடங்களிலே தென்னிந்தியாவில் இருந்தும் பரவிய பெருங்கற்பண்பாட்டிற்குரிய சின்னங்கள்; கிடைத்துள்ளன. ஆற்றுவழியாக இப் பண்பாடு பரவியமையினைக் குறிக்கும்வண்ணமாக ஆறுகளின் கழிமுகப் பகுதிகளிலேயே தொல்பொருட் சான்றுகன் கிடைக்கின்றன. அம்பாறை மாவட்டத்தின் தென் எல்லையாக அமையும் கும்புக்கள் ஓயாவிற்கு வடக்கிலுள்ள பல இடங்களில் பெருங்கற் பண்பாட்டிற்குரிய கரும்- செம் கலவோடுகள் கிடைத்துள்ளன. பாணமைப் பகுதியில் இவ்விதமான தொல்பொருட் சின்னங்கள் காணப்படுகின்றன. அதற்குத் தெற்கில் உகந்தையில் பெருங்கற் பண்பாட்டுக் கால ஈம கற்கிடைகள் இருப்பதை 1920களில் சிலர் அவதானித்துள்ளனர்.

பெருங்கற் பண்பாட்டுக் காலமாகிய ஆதி இரும்புக் காலத்து ஈமத் தலங்களுக்கு அண்மையிலே புராதனமான பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றமை ஒரு குறிப்பிடுவதற்குரிய அம்சமாகும். தமிழ் மொழியைப் பேசுவோரான தென்னிந்தியப் பண்பாட்டு மக்கள் ஏற்படுத்திய குடியிருப்பாளர்களிடையே பௌத்தம் பரவியது என்பதையும் அவற்றிலே பிராகிருத மொழி அறிமுகமாகியது என்பதையும் இதனால் உணரப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக கா.இந்திரபாலா மேல்வருமாறு கூறுகின்றார்.

“ஆதி இரும்புக் காலச் சவ அடக்கங்கள் காணப்படும் இடங்களுக்குக் கிட்டிய இடங்களில் மிகப் பழைய பிரமிக் கல்வெட்டுக்கள் காணப்படுவது கவனிக்கத்தக்கது. அம்பாறை மாவட்டத்தில் அப்படியான ஒரு கல்வெட்டு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டில் தமிழ்ப் பெண்ணொருத்தி குறிப்பிடப்பட்டுள்ளார். இக்கல்வெட்டு அக்கரைப்பற்றுப் பகுதியில் குடுவில் என்னும் இடத்தில் உள்ளது. பிராகிருதத்தில் தாமேட என்றழைக்கப்பட்ட தமிழ் மக்கள் அக்கரைப்பற்றுப் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்தமைக்கு இது சான்றுபகர்கின்றது”.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிற் பிராமிக் கல்வெட்டுக்கள்

பரணவிதான வெளியிட்ட இலங்கைச் சாசனங்கள் என்னும் நூலின் முதலாந் தொகுதியில் எல்லாமாக 1234 சாசனங்கள் அடங்கும் அவற்றிலே 180 கிழக்கு மாகாணத்தில் உள்ளவை. அவற்றிலும் 14 சாசனங்கள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ளவை. மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 166 சாசனங்கள். இவற்றைவிட வேறு இடங்களில் வெளிவந்தனவும் இதுவரைத் தொல்பொருட் திணைக்களத்தினரால் அடையாளங் காணப்படாதனவும் பலவாகும். ஆயினும் இங்கு கையாளப்படும் குறிப்புக்களும் விபரங்களும் பரணவிதான வெளியிட்டுள்ள முதலாவது தொகுதியில் அடங்கிய 166 கல்வெட்டுக்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டவை. அவற்றை மூலமாகக் கொண்ட ஆய்வு முயற்சியும் பூர்வாங்கமானது. இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் சில வேறு கல்வெட்டுக்களில் காணப்படும் விபரங்கள் மூலம் மேலும் வலுப்பெறும். வேறுசில மாற்றமடைய நேரிடும்.

இச் சாசனங்கள் பெரும்பாலும் தான சாசனங்களாகும் அவை பௌத்த சங்கத்தாருக்குக் குகைத் தளங்களை வசிப்பிடமாகக் கொடுத்தமை பற்றியவை. அவை இலங்கையிலுள்ள பிற பிராமிச் சாசனங்களைப் போல ஒரு செயற்கை முறையான பிராகிருத மொழி வசனங்களில் அமைந்தவை. பெரும்பாலான கல்வெட்டுக்கள் சுருக்கமானவை அவற்றிலே பிராந்திய வழக்கான மொழிச் சொற்கள் கலப்புற்றுள்ளன. தானகாரரைப் பற்றிய விபரங்கள் சிறப்புடையவை. அவற்றின்மூலம் ஒருவாறு சமகாலத்துச் சமூதாய நிலைகளை அறிந்துகொள்ளலாம். குகைத்தளங்களைத் தானமாக வளங்கியோரின் பெயர்களோடு, குலப் பெயர்கள், இனக் குழுப் பெயர்கள், பதவி நிலைப் பெயர்கள் போன்றன அவற்றிலே காணப்படுகின்றன.

குலஷ இனக் குழுப் பெயர்கள் என்று சொல்லப்படுபவை மூன்று மட்டுமே. 166 சாசனங்களிலும் காணப்படுகின்றன. பத, நாக, தமேட என்பவையே அவை. பத என்னும் பெயர்ச்சொல் 21 கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. இலங்கையிலுள்ள ஏனைய மாவட்டங்களில் அமைந்துள்ள சாசனங்களோடு ஒப்பிடுமிடத்து இங்கு பத என்னும் சொல் கூடுதலான அளவில் காணப்படுகின்றது. வடமேற்கு இலங்கையிலும் வவுனியா மாவட்டத்திலும் உள்ள கல்வெட்டுக்கள் பல பரதர் என்னும் சமூகப் பிரிவினரைக் குறிப்பிடுகின்றன. ஆனால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் அமைந்துள்ள கல்வெட்டுக்களில் பரத(ர்) பற்றிய குறிப்புக்கள் எதுவும் இல்லை இது சிந்தனைக்குரிய ஒரு விடயமாகும். பரத சமூகத்தவரை பத என்று சிலர் கூற முற்படலாம். அந்தக் கருத்தும் சமகால வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

கா.இந்திரபாலாவின் மேல்வரும் விளக்கம் அதற்கோர் உதாரணமாகும்.

“பரதர் என்ற குழுவினர் சங்கச் செய்யுள்களிலே குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் கரையோரப் பட்டினங்களில் இவர்கள் வணிகர்களாகவும், கடல்சார் தொழில்கள் புரிபவர்களாகவும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இலங்கையிலுள்ள ஆதி வரலாற்றுக் காலத்துப் பிராமிக் கல்வெட்டுக்கள் பலவற்றில் பரத மற்றும் பத என வரும் பெயர்களைப் பரதரைக் குறிக்கும் பெயர்களாக அடையாளங் கண்டு கல்வெட்டுக்களில் காணப்படும் குறியீடுகளைக் கடல் வணிகத்துடன் தொடர்புடைய குறியீடுகளைச் சுட்டிக்காட்டியதுடன் திராவிட உறவுமுறை எனக் கருதப்படும் உறவுமுறைகள் வெளிப்படுத்துவதையும் பயன்படுத்தி இலங்கையில் பிராமிக் கல்வெட்டுக்களில் பலமுறை குறிப்பிடப்படும் பரத பத குழுவினரும் தமிழ்நாட்டினர். பரதர் குழுவினரும் ஒரே சமூகக் குழுவினர் என்ற கருத்தைப் பேராசிரியர் ஸெனெவிரத்ன வலியுறுத்தியுள்ளார்”.

இங்கு பேராசிரியர் ஸெனெவிரத்னவின் கருத்து பேராசிரியர் கா. இந்திரபாலாவின் கருத்தாகி விடுகின்றது. எனினும் பரத, பத எனும் பெயர்கள் ஒரே கருத்தையே குறிப்பிடுகின்றன. என்பதை உறுதி செய்வது இலகுவான காரியமன்று. மொழியியல் அடிப்படையில் அதனை நிறுவுவதற்குச் சாத்தியமில்லை. எந்தவொரு பிராமிச் சாசனமும் பரத என்போரை பத என்று குறிப்பிடவில்லை. சாசனங்களில் நாக என்பதைப் போல பரத என்பது குலப்பெயராக வருகின்றது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள எந்தவொரு சாசனமும் பத என்னும் பெயரைக் குறிப்பிடும் இடத்து பருமக என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. வேறு மாவட்டங்களிலுள்ள கல்வெட்டுக்களிலும் இந்த நிலைதான் காணப்படுகின்றது. எனவே பருமக என்னும் சொல் ஆதியில் பத என்னும் குழுவினரிடையே வழங்கவில்லை என்றே கருதலாம். பத என்போர் தமிழ் மொழி வழங்கும் பிராகிருதமும் பரவுவதற்கு முன் இலங்கையில் வாழ்ந்த பூர்விகக் குடிகளின் ஒரு பகுதியினர் என்று கொள்வதே பொருத்தமானது.

தென்னிந்தியாவிலிருந்தும் வந்த பெருங்கற் பண்பாடு பரவியதும் விவசாய உற்பத்தி முறையைக் கொண்ட சமூதாயத்தில் இணைத்துவிட்டனர். சில சமயங்களில் நாகரோடு கலப்புற்றனர். சாசனங்களில் காணப்படும் கூட்டுப் பெயரான பதநாக என்பது இதற்குச் சான்றாகலாம். பத என்னும் இனக்குழுப் பெயர் இந்தியாவிலுள்ள பிராகிருத மொழிச் சாசனங்களிலோ தமிழ்ப் பிராமிச் சாசனங்களிலோ காணப்படுவதில்லை.

வெல்லாவெளிக் கல்வெட்டுக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்துப் போரதீவுப் பற்றிலுள்ள ஊர்களிலொன்று வெல்லாவெளி. முற்காலங்களில் அது நாதனை வன்னியனாரின் ஆட்சி வலயத்தில் அடங்கியிருந்தது. அங்கே ஆயிரம் விழுது ஆலமரம் என்பதன் எதிரே, அடவியின் ஓரமாக அமைந்துள்ள பெரும்பாறையொன்றிலும் புள்ளபுடிச்சான் மலை என்னும் குன்றத்திலும் எழுத்துக்கள் இருப்பதை அங்குள்ள ஊரார் அறிந்திருந்தனர்.

அவற்றைப் பற்றிச் சிலர் மூலமாக அறிந்த காலாசார உத்தியோகத்தரான திருமதி. ப. எழில்வாணி அவற்றை ஆராய்வதற்கென்று எம்மை அழைத்துச் சென்றார். அவரோடு சென்றபொழுது ஆலமரத்துக்கு முன்பாகவுள்ள கல்வெட்டுக்களைப் பார்க்கமுடிந்தது. அன்று புள்ளபுடிச்சான் மலையின் உச்சிவரை ஏறியபொழுது எம்மவர்களால் அங்குள்ள கல்வெட்டைப் செம்மையாக அவதானிக்கவோ, படம் பிடிக்கவோ முடியவில்லை. சடுதியாக வானம் இருண்டு, இடிமின்னலோடு பொழிந்த மழையே அதற்குக் காரணம். அந்த அனுபவம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆயினும் அச் சாசனத்தின் வாசகத்தைப் பெறவேண்டுமென்ற மனவுறுதி வலுப்பெற்றது. மலை ஏறியவர்கள் அங்கு சற்று நீளமான சாசனம் இருப்பதாகச் சொன்னார்கள். மீண்டும் ஒரு முறை வெல்லாவெளிக்குப் பிராயாணஞ் செய்ய முடிந்தது. அந்தப் பிரயாணம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெற்றது.

அம்முறை அத் திணைக்களம் நடாத்தும் வருடாந்த மாநாட்டிற் பங்குபற்றிய அறிஞர்களை அழைத்துச் சென்றோம். அவர்கள் மட்டக்களப்பினைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் கொண்டிருந்தனர். எனவே பேராசிரியர் ஜீ. சேதுராமன், பேராசிரியர் இராஜவேலன், முனைவர்களான ச. இராஜகோபால், வ. வேதாசலம், ச. சாந்தலிங்கம் ஆகியோர் எம்மோடு கூடிவந்தனர். அவர்களில் மூவர் தமிழ்நாட்டுத் தொல்லியல் திணைக்களத்திலே அரும்பணி புரிந்து ஓய்வுபெற்ற முதுநிலை ஆய்வாளர்கள். தமிழ்ச் சாசனங்களைப் படிப்பதிலும் விளக்குவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள். சேதுராமன் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நுண்துறைப் பேராசிரியர், தொல்லியலில் ஆர்வமும், பயிற்சி அனுபவமும் கொண்டவர். ராஜவேலன் தஞ்சாவூர் பல்கலைக் கழகத்திலே அண்மையில் ஆய்வாளராக நியமனம் பெற்றுப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றவர்.

இவர்களோடு வெல்லாவெளிக்குச் சென்றபொழுது அங்குள்ள அரச அதிகாரிகளும் அனுசனையாக இருந்தனர். ஆர்வலர்களான திருவேணிசங்கம், சிவகுரு.டிகநாதன் முதலானோரும் கூடிவந்தனர். டிகநாதன் வெல்லாவெளி ஊரினர் என்பதால் வேண்டிய ஆதரவுகளை எம்மாற் பெற்றுக்கொள்ள முடிந்தது. பேராதனைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்த்துறைத் தலைவரான பேராசிரியர் வ. மகேஸ்வரன் மிகுந்த உற்சாகத்தோடு எம்முடன் வந்தார். இம்முறை எமது பிரயாணம் வெற்றிகரமாக முடிந்தது. ஆயிரம் விழுது ஆலமரத்துக்கு முன்பதாகவுள்ள பாறையில் அமைந்த சாசனங்களைப் படியெடுக்க முடியவில்லை. அங்குள்ள சாசனங்களில் ஒன்றை மட்டும் இந்திய அறிஞர் குழுவின் ஒரு சாரார் படம்பிடித்தனர்.

அதனை அவர்கள் அனைவரும் ஒருமுகமாக மேல்வருமாறு வாசித்தனர். ‘பெருமகநே ஏகசமதய லேணே’ இதனைப் பெருமகன் ஒருவன் எல்லோரதும் ஒருமிதமானமான ஒப்புதலோடு வழங்கிய குகை என்று விளக்கினார்கள்.

முதலாவது சொல்லைப் பெறுத்தவரையிற் சில அம்சங்களில் எமது கருத்து வேறுபடுகின்றது. சொல்லின் இரண்டாவது எழுத்து று என்று கொள்ளக்கூடிய வகையிலே தெளிவாகத் தெரிகின்றது. தமிழ் மொழியில் ர,ற மயக்கம் ஆதிகாலம் முதலாக வந்துள்ளது என்பதற்கு இது நல்லதோர் உதாரணமாகும்.

இந்தச் சொல்லின் இறுதியான- என்னும் எழுத்தினை நே என்று அடையாளங் காண்பதிற் பிரச்சினை எழுகின்றது. பிராமியிலே நே என்னும் எழுத்து – என்ற வடிவத்தை பெற்றிருக்கும். ஆனால் கல்வெட்டிற் காணப்படுவது வேறுவிதமாகவே அமைந்துள்ளது. ந என்னும் எழுத்திலுள்ள நேர் தண்டினை இடதுபுறமாக வளைத்து எழுதி, ஏகாரக் குறியீடான அகலப்பாட்டிலுள்ள சிறிய கோட்டினை வலப்பக்கத்தின் தலைப்பாகத்தில் இணைத்துள்ளனர் எனக் கருதமுடிகின்றது. எனவே அச் சொல்லினைப் பெறுமகனே என்று அடையாளங் காண்பதே பொருத்தமானது. ர, ற மயக்கத்தின் காரணமாகப் பெருமகன் என்பது இங்கு பெறுமகன் என்ற வடிவத்தைப் பெற்றுள்ளது.

இலங்கைப் பிராமிச் சாசனங்களில் இங்குதான் பெருமகன் என்ற சொல் காணப்படுகின்றது. தென்னிந்திய பிராமிச் சாசனங்கள் காணப்படும் முப்பது தளங்களிலுமுள்ள 90 கல்வெட்டுக்களிலும் பெருமகன் என்ற சொல் காணப்படவில்லை. வெல்லாவெளிக் கல்வெட்டின் முதலாவது சொல்லில் று ,ம ,ன என்னும் மூன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பழந்தமிழ் நூல்களில் மிகுதியாகக் காணப்படும் பெருமகன் என்ற சொல்லின் மறுவடிவமே இலங்கைப் பிராமிச் சாசனங்களில் பருமக என வந்துள்ளது. பருமகள என்பது அதன் பெண்பால் வடிவமாகும். பிராகிருத மொழியிற் சொற்கள் மெய் எழுத்துக்களோடு முடிவதில்லை. அவை உயிரேறி உயிர்மெய்களாகிவிடும். எனவே பருமகள என்பது பருமகள் என்ற தமிழ்ச் சொல்லின் பிராகிருத மயமாக்கம் பெற்ற வடிவமாகும். எனவே பருமகள என்பதன் ஆண்பால் வடிவமாகிய பருமக என்னுஞ் சொல் பருமகன் என்ற திராவிட மொழிச் சொல்லின் பிராகிருத வடிவமாகும். இது எவ்வாறு அப்படியாகியது? என்ற வினா எழுவது இயல்பாகும்.

பருமகன் என்னும் ஆதித் தமிழ்ச் சொல்லின் ஈற்றெழுத்தாகிய ன் என்பதை நீக்கிவிடுவதால் அந்த வடிவம் பெறப்படும். இலங்கைப் பிராமிச் சாசனங்களில் சாலிவய, புதல என்னுஞ் சொற்கள் காணப்படுகின்றன. வரலாற்று மொழியியல் நோக்கில் அவற்றை இந்தோ- ஆரிய மொழி வழிப் பிறந்த சொற்களாகக் கருதமுடியாது. எனவே அவற்றைத் தமிழ் மொழியிலுள்ள சாலிவயல், புதல்வன் எனும் சொற்களின் இறுதி எழுத்தினை நீக்குவதன் மூலம் அவை பிராகிருத மயமாகி முறையே சாலிவய, புதல என்னும் வடிவங்களைப் பெற்றுள்ளன என்பதே பொருத்தமான விளக்கமாகும். பருமக என்பதும் அத்தகையது.

பெரு, பரு என்ற சொற்கள் ஒரே பொருளைக் குறிப்பவை. எனவே பருமக(ன்) என்பது பெருமகன் என்ற சொல்லின் மாற்றுவடிவமாகும். ஏனைய பிராமிச் சாசனங்களிலே பருமக என்று குறிப்பிட்ட செல்லினை வெல்லாவெளிக் கல்வெட்டிலே பிராகிருத மயப்படுத்தாது பெறு(ரு)மகன் என்று இயல்பான தமிழ்ச் சொல்லாக எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கவோர் அம்சமாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகியவற்றில் அடங்கிய நூல்களிற் பெருமகன் என்னுஞ் சொல் பல இடங்களில் வருகின்றது.

இலங்கைப் பிராமிச் சாசனங்களிற் பருமக என்ற சொல் பெருந்தொகையான சாசனங்களிற் காணப்படுகின்றது. இரு சொற்களும் இரு வேறு மொழிகளில் (தமிழ், பிராகிருதம்) ஒரே பொருள் குறிக்கும் வகையிற் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பிராமிச் சாசனங்களும் பண்டைத் தமிழ் நூல்களும் ஒரே காலத்துக்குரியவை என்பதுங் கவனிக்கத்தக்கது. பருமக என்னும் பிராகிருதச் சொல் பெருமகன் என்னும் தமிழ்ச் சொல்லின் மாற்று மொழிவடிவம் என்பதை இலங்கையிலுள்ள ஆய்வாளரிற் சிலர் ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களின் கருத்து வெல்லாவெளிச் சாசனத்தின் மூலம் உறுதி பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.

பொருமகன், பெருமக என்பது, வெவ்வேறு சமுதாயப் பிரிவுகளின் தலைமைப் பதவியைக் குறிக்குஞ் சொல்லாகும். ஒருவரின் இயற்பெயருக்கு முன்னால் அந்தச் சொல்லைக் குறிப்பிடுவதே வழக்கம். நன்கொடை வழங்கியவர்களின் இயற்பெயருக்கு முன்னால் பதவிப் பெயர்களைக் குறிப்பிடுவதும் சாசனவழக்காகும். அந்ந அடிப்படையில் நோக்குமிடத்து வெல்லாவெளிக் கல்வெட்டிற் பெருமகன் என்ற சொல்லைத் தொடர்ந்து வரும் ஏகசமதய என்பது நன்கொடையாளனின் பெயராதல் கூடும். இந்த விடயம் தொடர்பாக நன்று ஆராய்ந்த பின்பே இறுதியான முடிபிற்கு வரமுடியும்.

பெரும்பாண்

வெல்லாவெளிக் கற்பாறையில் வேறு கல்வெட்டொன்றுண்டு. இரண்டாவது முறை நாம் சென்ற பொழுதும் அதன் புகைப்படத்தை எடுக்கமுடியவில்லை.ஆயினும் நண்பர் சாந்தலிங்கம் அதனை நன்கு அவதானித்து அதன் வாசகத்தைப் பிரதியாக எழுதினார். நாம் தங்கியிருந்த விடுதியில் எம்மிடம் அதனைக் காட்டினார். அப் பிரதியின் வாசகம் மேல்வருமாறு அமைந்திருந்தது. – பின்பு சில நாட்கள் கழித்தபின்னர் இதனைப் பற்றி எம்மிடமிருந்து அறிந்துகொண்ட சிவகுரு டிகநாதன் மிகுந்த சிரமத்துடன் மலையேறி, அக் கல்வெட்டைப் படம் பிடித்தார்.

இங்கு வெளியிடப்படும் அப்படப் பிரதி சாந்தலிங்கம் கட்பார்வையினால் உருவாக்கிய பிரதியை முற்றுமுழுதாய் உறுதிசெய்வதாய் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மற்றைய சாசனமும் இதுவும் ஒரே காலத்து வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. அவை கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கு உரியவை என்று கருதலாம். அக் காலத்திலே எழுத்துக்களுக்குக் குறியீடுகளை இடும் வழக்கமில்லை. அதனால் ஒரே சொல்லாக அமைந்த இச் சாசனத்தைப் பெரும்பண, பெரும்பண், பெரும்பாண, பெரும்பாண் என நான்கு விதங்களிலே வாசிக்கலாம். இவற்றிலே முதலாவது நாகபடத்தைக் குறிக்கும். ஐந்து தலை நாக உருவங்கள் துறவிகள் வாழந்த குகைத்தளங்கள் பலவற்றிலே காணப்படுகின்ற பொழுதிலும் இச்சாசனம் காணப்படும் இடத்தில் அத்தகைய வடிவம் எதுவுமில்லை. எனவே இக்கல்வெட்டு நாகபடத்தையன்றி வேறொரு பொருளையே குறித்தல் வேண்டும்.

சாசன வடிவத்தின் அடிப்படையில் உருவாக்கக்கூடிய ஏனைய மூன்று சொற்களிடையிலும் ஒரு ஒற்றுமை காணப்படுகின்றது. முதலாம் பகுதியான பெரும் என்பது ஒரு பெயர்ச்சொல் எச்சமாகவே வருகின்றது. அதனோடு வரும் விகுதி மூன்று வேறு சொற்களாக கொள்ளக்;கூடியதெனினும் அச் சொற்கள் யாவும் பண் என்பதை அடிப்படையாகக் கொண்டவை: அவை பண், பாண, பாண் என்பனவாகும். பண் என்னுஞ் சொல் பாட்டு, இசை, வாய்மொழிப்பாடல் என்பவற்றைக் குறிக்குமென்று சென்னைத் தமிழ்ப் பேரகராதியில் விளக்கியுள்ளனர். (ஏழுடு ஏ,1982,ப.2596). பாண் என்பது பண் என்பதிலிருந்து தோண்றியது என்று அந்நூல் கூறும். பாண் என்பது பாணர் சாதியியாரையுங் குறிக்கும் என்றுஞ் சொல்லப்படுகின்றது. பெரும்பாண் என்ற சொல் பெரும்பாணர் என்பதற்கு நிகரானதென்றும் சென்னைத் தமிழ்ப் பேரகராதி விளக்குகின்றது. [அவர்கள் யாழ் வாசிக்கும் பாணர்சாதி வகையார்] Madras Tamil Lexicon vol,v p,2879. பெரும்பாணாற்றுப்படை, பொரும்பாணப்பாடி, பெரும்பாண் அரைசர் என்ற சொற்களின் பகுதியாகப் பெரும்பண் என்ற சொல் அமைந்திருக்கின்றது. பெரும்பாணாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களிலொன்று. பட்டினப்பாலை ஆசிரியரான கடியலூர் உருத்திரன் கண்ணார் அதனைப் பாடினார் என்பர். பெரும்பாணப்பாடி என்பது ஒரு நிலப் பிரிவின் பெயர். பெரும்பாண் அரைசர் பற்றிப் பிற்காலத்துச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன.

எனவே வெல்லாவெளிச் சாசனத்திற் காணப்படும் கூட்டுமொழிச் சொல்லினைப் பெரும்பாண் என்று கொள்வதே மிகவும் பொருத்தமானது. அது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேறொரு பிராமிச் சாசனத்தின் குறிப்பினாலும் உறுதியாகின்றது. பெரும்பாண் என்ற சொல் சமகாலத்துத் தமிழகத்துப் பிராமிச் சாசனங்களில் காணப்படுவதில்லை என்பதும் கவனித்திற்குரியது. சொற்களின் பொருள்கள் பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப வேறுபடுவதுண்டு. புராதான காலத்துப் பாணர் வெல்லாவெளியிலுள்ள மலைக்குகை ஒன்றில் வாழ்ந்தனர் என்று கொள்வது பொருத்தமாகாது. ஆனால், அந்தச் சொல்லுக்கு கி.மு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களுக்கு அறிமுகமானது என்பதில் ஐயமில்லை. இந்நிலையில் அதனை அவர்கள் எதற்குப் பயன்படுத்தினர்? என்ற வினா எழுகின்றது.

குகைகளிலே துறவிகளே அக்காலத்தில் வாழ்ந்தனர். சமண முனிவர்களும், பௌத்த சங்கத்தாரும் குகைகளில் வாழ்ந்துள்ளனர். வெல்லாவெளிக் கற்பாறையிலுள்ள முதலாவது கல்வெட்டுச் சங்கத்தாரைக் குறிப்பிடவில்லை. எனினும் சேனரத் பரணவிதான மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அடையாளங்கண்டு வெளியிட்ட 166 பிராமிச் சாசனங்களிற் பெரும்பாலானவை பௌத்தம் சார்ந்தவை என்பதால் வெல்லாவெளி மலைப் பாறையிலுள்ள குகையிலும் பௌத்த சங்கத்தாரே வாழ்ந்தனர் என்று கொள்ளலாம். அவ்வாறாகிற் சமகாலத் தமிழக வழக்கிலும், தமிழ் மொழி வழக்கிலும் சிறப்புற்றிருந்த பெரும்பாண் என்ற மொழித் தொடர் எவ்விதமாகப் பௌத்த சங்கத்தாருக்கு உரியதாகிவிட்டது என்பது ஆராய்வதற்குரியது.

பௌத்த இலக்கியத்தின் சில பகுதிகளை மனனம் பண்ணி இசையோடு படிக்கும் வழக்கம் உண்டு. ஆதியான பௌத்த இலக்கியமான திரிபிடகத்திலுள்ள சில பகுதிகளை மனனஞ் செய்து பாடலாகப் படிக்கும் பெறுப்பு தேரர்களிற் சிலருக்குப் பிரத்தியேகமான பொறுப்பாக வழங்கப்பட்டது. அன்னோரைப் ப3ணக என்று குறிப்பிடுவது வழக்கம் என்பதை இலங்கைப் பிராமிச் சாசனங்கள் சிலவற்றின் மூலம் அறிய முடிகின்றது. மஜ்ஜிம நிகாயத்தைப் பண்ணோடு பாடுபவரை மஜிம ப3ணக என்றும் அங்குத்தர நிகாயத்தைப் படிப்பவரை ஏகோத்தர ப3ணக என்றுங் குறிப்பிட்டனர். வெல்லாவெளியிலே ப3ணக என்ற பிராகிருத மயமான சொல்லுக்குப் பதிலாக பெரும்பாண் என்ற தூய தமிழ்ச் சொல்லை பயன்படுத்தியுள்ளனர். அவ்வாறு குறிப்பிடப்படும் தேரர் தமிழராதல் வேண்டும். எனவே அங்கிருந்த பள்ளி தமிழ்ப் பௌத்தப் பள்ளியாகும்.

குசலான்மலையிற் பண்பாணன்

பெரும்பாண் என்பது பிராகிருத மொழிச் சாசனங்களிற் காணப்படும் ப3ணக என்ற சொல்லுக்கு பதிலான தமிழ்ச் சொல்லாகும் என்ற விளக்கம் குசலான்மலைக் கல்வெட்டொன்றிலுள்ள குறிப்பால் உறுதியாகின்றது. குசலான் மலையிலுள்ள பல சாசனங்களைப் படியெடுத்த சேனரத் பரணவிதான அவற்றின் வாசகங்களை வெளியிட்டுள்ளார். அவை பௌத்த சமயம் தொடர்பானவை. ஏதோ காரணத்தினால் அங்குள்ள வேறொரு சாசனத்தைப் படித்து அதன் வாசகத்தை வெளியிடுவதை அவர் தவிர்த்துவிட்டார்.

அந்தச் சாசனம் சமூக, பண்பாட்டு ஆய்வுகளைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது. அதில் பண்பாணன் என்ற சொற்றொடர் தெளிவாகத் தெரிகின்றது. வெல்லாவெளிக் கல்வெட்டிற் பெரும்பாண் என்பது சாசனத்தின் முழு வடிவமாய் அமைந்துள்ளது. குசலான்மலையிற் பண்பாணன் ஒரு வசனத்தில் அமைந்த தொடராயுள்ளது.

அதிலே முன்னயதிலுள்ள பெரும் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக பண் என்ற தமிழ்ச் சொல் வருகின்றது: பாண் என்பதற்குப் பதிலாக பாணன் என்ற சொல் வருகின்றது. பண்ணோடு பாடுகின்ற பாணனே பண்பாணன். அது பிராகிருத வழக்கிலே ப3ணக என்று சொல்லப்படும். தேரரைக் குறிப்பதற்குப் பண் பாணன் என்ற தூய தமிழ்மொழித் தொடரைப் பயன்படுத்தியமைக்கான காரணம் யாது? தலத்திலுள்ள எல்லாச் சாசனங்களையும் பிராகிருத மொழியில் எழுதியவர்கள் பௌத்த தர்மம் பற்றிய பிரதான பகுதியொன்றிறை இசைப்பாங்கிற் படிப்பவரைத் தமிழ்ச் சொற்களால் குறிப்பிட்டுள்ளனர்.

பௌத்த சமயம் ஆதியில், இலங்கையிலே தமிழையும், வேறு மொழியினையும் பேசியவர்களிடையே பரவியதென்பதை முன்னே குறிப்பிட்டோம். குசலான் மலையில் இருந்த சங்கத்தார் பெரும்பள்ளி பல துறவிகள் வாழ்ந்த பள்ளி: நெடுங்காலம் நிலவிய பள்ளி. அது தமிழரான பௌத்த துறவிகள் வாழ்ந்த பள்ளி என்பதும் தமிழ்ச் சமூகங்களுக்குரிய பள்ளி என்பதும் இப்பொழுது தெரியவருகின்றது.

வெல்லாவெளியில் ஒரு சமணப் பள்ளி

புள்ளபுடிச்சான் மலையில் அமைந்துள்ள கல்வெட்டினைத் தலத்தில் ஆராய்வதற்கு மேற்கொண்ட எமது முதலாவது முயற்சி பயனற்றதாகிவிட்டது. என்று இக் கட்டுரைத் தொடரின் தொடக்கத்திலே குறிப்பிட்டுள்ளோம். இரண்டாவது முறை எம்மோடு கூடிவந்த தென்னிந்திய ஆய்வாளர்கள் ஐவரும், ஈழநாட்டவரான பலரும் மலையேறிச் சென்று அதன் உச்சியிலுள்ள கல்வெட்டைப் படியெடுத்தனர். எம்மவரிற் பேராசிரியர் மகேஸ்வரன், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.க.இரகுபரன், திருவாளர் திருவேணி சங்கமம், சிவகுரு டிகநாதன், கலாசார உத்தியோகத்தர் திருமதி எழில்வாணி பத்மகுமார், கிராம அதிகாரிகள் எனப் பலரும் இக் குழுவில் இணைந்து கொண்டனர். என்னைத் தவிர மற்றைய எல்லோரும் மலையேறிவிட்டனர். அண்மையிலுள்ள குடிசை வீடொன்றின் வளவில் நான் தங்கியிருந்தேன். இந்தத் தடைவை மேற்கொண்ட முயற்சிக்கு வேண்டிய எல்லா ஒழுங்குகளையும் சிவகுரு டிகநாதன் செம்மையாகவும், மிகுந்த ஆர்வத்தோடும் கவனித்தார். அலுவல்கள் முடிந்ததும் எமது குழுவில் இணைந்துகொண்ட அனைவருக்கும் விருந்துபசாரமும் அவரது குடும்பத்தினரால் இனிதே வழங்கப்பட்டது.

புள்ள புடிச்சான் மலை சுமார் அறுபதடி உயரமுடயது. அதன் உச்சியினை அடைவதற்கு ஆதிகாலத்திற் படிகள் வெட்டப்பட்டிருந்தன.

அதன் மேலுள்ள கல்வெட்டினை முழுமையாகப் படியெடுக்க முடிந்தது. கல்வெட்டினை இயற்கைக் கோலத்திலும் படம் எடுத்துள்ளனர். அங்குள்ள கல்வெட்டு இங்கு முன்பு குறிப்பிட்டவற்றிலிருந்து பெரிதும் வேறுபட்டது. அது காலத்தாற் பிற்பட்டது. சமண சமயம் தொடர்பானது. அது தமிழ்ப் பிராமிச் சாசனம். அதனை இலங்கையிற் கிடைத்த முதலாவது தமிழ்ப் பிராமிச் சாசனமென்று கொள்ளமுடிகின்றது. அது பிராகிருதம் கலந்த தமிழ்ச் சாசனம். சமணம் தொடர்பான சாசனம் என்பதால் அதனைத் தமிழ் மொழியில் எழுதியுள்ளனர்.

தமிழகத்துப் பிராமிச் சாசனங்கள் எல்லாம் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் சமணம் தொடர்பானவை. எழுத்துக்களின் தண்டுகள் கீழ்நோக்கி நீண்டும் பின் இடப்புறமாக வளைந்தும் காணப்படுகின்றன. எழுத்தின் மேலான இகரக் குறியின் அடையாளம் எழுத்தின் வலப்பக்கத்திலிருந்தும் இடப்புறமாக வளைந்து காணப்படுகின்றது. இவ்வம்சங்கள் வல்லிபுரச் செப்பேட்டிலும் காணப்படுகின்றன. இலங்கையிலே கிடைக்கின்ற, வேறு பல பிராமிச் சாசனங்களிலும் அவை உள்ளன. அச் சாசனத்தின் வரிவடிவங்களின் அமைப்பு ஆந்திர தேசத்து இகஷ்வாகு வம்சத்தினரின் ஆட்சிக் காலத்துக்குரிய சாசனங்களில் உள்ளதனைப் பெரிதும் ஒத்திருக்கின்றது. எனவே, இச்சாசனம் கி.பி மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளுக்குரியதாகும். சாசனத்தின் வாசகம் மேல்வருமாறு அமைந்துள்ளது: சிப்புக3ல க3மி குரத்தி மீ குரத்தி வேமி பெருவணிக சம காலத்தவர் படித்து விளங்கிக் கொள்ளும் முறையிலேயே சாசனங்கள் எழுதப்படும். ஆயினும் 17 நூற்றாண்டுகள் கழிந்த பின்பு அதனைப் படிக்கும் பொழுது பொருள்மயக்கம் இருப்பது போலத் தோன்றும். பிராமிச் சாசனங்கள் சொற் சுருக்கமானவை.

இங்கு சிபு க3ல க3மி குரத்தி மீ குரத்தி என்பது ஒரே வசனமா? இரண்டு வசனங்களா? என்னும் வினாக்கள் இயல்பாகவே எழுகின்றன. ஒரு வசனமாயின் அது ஒரே குரத்தியினையே குறிப்பிடுகின்றது என்று கொள்ளவேண்டும். அவ்வாறாயின் சிப்புக3ல என்னும் ஊரினளான குரத்தி தலைமை(மீ)க் குரத்தியாவாள் என்று சாசனத்; தொடரை விளக்கவேண்டும். குறிப்பிட்ட சாசனத்தொடரை இரு வசனங்களாகக் கொள்வதனால் இச் சாசனம் இரண்டு குரத்திகளைப் பற்றியதாகிவிடும். அவ்வாறு கொள்ளுதலே பொருத்தமுடையது போலத் தெரிகின்றது.

எவ்வாறாயினும் இச்சாசனம் சமணசமயத்துப் பெண்துறவியரைப் பற்றியது என்பதில் ஐயமில்லை. குரத்தி குரவர் என்ற சொல்லின் பெண்பால் வடிவமாகும். இதற்குக் காலத்தாற் பிற்பட்ட தமிழகத்துக் கல்வெட்டுக்களிற் பத்தினிக் குரத்தியார் முதலான பெண் துறவியர் பலரைப் பற்றிய குறிப்புக்கள் உண்டு. தமிழகத்துப் பிராமிச் சாசனங்களிற் காணப்படும் பம்மிதி போன்ற சொற்கள் சமணப் பெண் துறவியரைக் குறிப்பிடுவன என்பதும் இங்கு குறிப்பிடற்குரியதாகும்.

முதன்மை, தலைமை, மேன்மை என்பவற்றை மீ என்ற ஓரெழுத்துச் சொல்லால் குறிக்கும்.மீ என்பது தமிழ் வழக்கிலே, காலவேறுபாடின்றி, ஆதிமுதல் இன்றுவரை வழங்கும் சொல்லாகும். குரத்திகள் குழுவொன்றின் நாயகியினையே சாசனத்தில் மீ குரத்தி என்று குறிப்பிட்டுள்ளனர். இதனைப்பற்றி இருவேறு கருத்துக்கு இடமில்லை.

இச் சாசனம் காணப்படும் மலையின் மேற் குகையில்லை. அங்கு புராதனமான செங்கற் கட்டுமானத்தின் எச்சங்கள் சில காணப்படுகின்றன. செங்கற்கள் அளவிற் பெரியனவென்றும் தமிழகத்திலுள்ள கி.பி முதலாம் – மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு உரியனவற்றைப் போன்றன என்றும் தென்னிந்தியத் தொல்லியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மலையிலே காணப்படும் தொல்பொருட் சின்னங்கள் அங்கு சமணரான பெண் துறவியரின் பள்ளியொன்று இருந்தமைக்கான அடையாளங்களாகும். பெருவணிக என்று சாசனம் குறிப்பிடுபவர் குரத்திகளுக்கான பள்ளியை அமைத்துக் கொடுத்தவராதல் கூடும். சமணருக்கு உறைவிடங்களை அமைத்துக் கொடுத்தவர்களில் வணிகரும் முதன்மையானவர்கள் என்பதைத் தென்னிந்தியத் பிராமிச் சாசனங்கள் மூலமாகப் அறியமுடிகின்றது. தமிழ்ப் பிராமிச் சாசனங்கள் சமணப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கிய சில வணிகர் பற்றிக் குறிப்பிடுகின்றன. அவற்றுள் மேல்வருவன குறிப்பிடத்தக்கவை:

1) ம(த்)திரை உ(ப்)பு வண்ணன் வியகன் கணாதிகன் (அழகர் மலை:3)
2) பாணித வணிகன் நெடும(h)லன் (அழகர் மலை:6)
3) கொழு வணிகன் எளசாத்தன் (அழகர் மலை:7)
4) வெண்ப(ள்)ளி அறுவை வணிகன் எள்ளாடன் (அழகர் மலை:10)
5) எண்ணை வ(ண்)ணிகன் வே-நி ஆதன் அதிட்டானம் (புகளுர்:10)

தென்னிந்திய தமிழ்ப் பிராமிச் சாசனங்களில் அமைந்துள்ள வணிகன் என்னுஞ் சொல் இலங்கைப் பிராமிச் சாசனங்களில் வணிஜ அல்லது வணிஸ என்னும் பிராகிருத வடிவத்திலே வருகின்றது.

வெல்லாவெளிக் கல்வெட்டிலே காணப்படும் பெருவணிக என்பது ஒரு வணிகக் குழுவின் தலைவனைக் குறிக்கும் என்று கொள்ளலாம். வணிகர் செல்லும் பாதைக்கு அண்மையிலே சமணத் துறவியர் பள்ளி அமைந்திருந்ததென்றுங் கருதலாம். இலங்கையிலே சமணப் பள்ளி பற்றிய சாசனக் குறிப்பு வேறெங்கும் காணப்படுவதில்லை. எனினும் அனுராதபுரத்திலே புராதன காலத்திலிருந்த சமணப் பள்ளிகள் பற்றிய குறிப்புக்கள் மகாவம்சத்தில் உள்ளன. பண்டுகாபயன் அனுராதபுரத்திலே சமண முனிவர்களுக்குப் பள்ளிகளை அமைத்துக் கொடுத்தமை பற்றி மகாவம்சம் மேல்வருமாறு கூறும்@

“வனவேடர்களின் குடிசைகளுக்கும் காமனிவாவிக்கும் இடையிலான தலத்திலே துறவியர்களுக்கான பள்ளியொன்றை உருவாக்கினான். நிகண்டரான ஜோதி என்பவருக்குப் பள்ளியொன்றினை அமைத்தக் கொடுத்தான். அவ்விடத்தில் கிரி என்னும் நிகண்டரும் வேறு பல துறவிகளும் வாழ்ந்தனர்.” [மகாவம்சம் ஒ:95-100]
நிகண்ட என்பது நிர்வாணக் கோலமான சமணத்துறவியைக் குறிக்கும் என்று மகாவம்சத்தின் பதிப்பாசிரியரான வில்ஹெல்ம் கைகர் விளக்குகின்றார்.

வட்டகாமினி அரசனைப் பற்றிய மகாவம்சத்துக் குறிப்புக்களிலும் சமணத்துறவி ஒருவரைப் பற்றிய கதை காணப்படுகின்றது. வட்டகாமினி அபயன் படையெடுத்து வந்த தமிழரிடம் தோல்விகண்டதும் சித்தாராம என்னும் பள்ளியின் வாயிற்புறத்திற்கு அண்மையிலே வாகனமொன்றில் ஏறி அனுராதபுரத்தினின்றும் வெளியேறத் தொடங்கினான். அரசன் தப்பியோடுவதைக் கண்ட நிகண்டரான கிரி என்பவர் அரசனைக் கேலி செய்தார். அதனால் ஆத்திரமுற்ற அரசன் தான் மீண்டும் அதிகாரம் பெறும் வாய்ப்புக் கிடைக்குமிடத்து அவ்விடத்திலே விகாரமொன்றைக் கட்டவேண்டுமென்ற எண்ணத்தோடு சென்றான். மீண்டும் அனுராதபுரத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் நிகண்டர்களின் ஆராமத்தை இடித்துவிட்டு அங்கு அபையகிரி விகாரத்தைக் கட்டுவித்தான். பண்டுகாபயனால் அமைக்கப்பட்ட தித்தாராமம் 21 அரசரின் ஆட்சிக்காலம் முழுவதும் நிலைபெற்றிருந்தது. அதிலே பௌத்தரல்லாத துறவிகளே வாழ்ந்தனர் என்பதை அதன் பெயரே குறிக்கின்றது என்பது கைகரின் முடிபாகும். எனவே, நெடுங்காலமாக அனுராதபுரத்திலே சமணம் நிலைபெற்றமைக்கு மகாவம்சமே ஆதாரமாகின்றது.

வட்டகாமினியின் காலத்துக்குப் பின்பு, இலங்கையின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள வெல்லாவெளியிற் சமணப்பள்ளி ஒன்று இருந்ததற்கு வெல்லாவெளிக் கல்வெட்டு ஆதாரமாகின்றது. அங்கிருந்த சமணப்பள்ளி பெண் துறவியர் பள்ளி. அது தமிழரான சமணரின் பள்ளி. அது தமிழ் வணிகரின் ஆதரவைப் பெற்ற பள்ளி,

இதுவரை குறிப்பிட்டவற்றை மேல்வருமாறு தொகுத்துக் கூறலாம்:

இலங்கையிலே தமிழ் மொழியின் செல்வாக்கு கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்து ஏற்பட்டுள்ளது என்பதற்கு வெல்லாவெளிக் கற்சாசனங்கள் உறுதியான ஆதாரங்களாகும். தமிழ் மொழி பேச்சு மொழியாகப் புராதன காலம் முதலாக வழங்கியமைக்கான சான்றுகள் கலவோடுகளில் காணப்படும் சொற்கள், தமிழ் எழுத்துக்கள், மசாசாத்தன், உதிரன் முதலான பெயர்கள் பொறித்த பழங்காலக் காசுகள், ஆனைக்கோட்டை முத்திரையில் கிடைத்த கோவேத(ன்) போன்ற தமிழ்ப் பெயர் வடிவங்கள் முதலியவை சான்றாக உள்ளன. இவற்றைப் பற்றிய கட்டுரைகளும் நூல்களும் வெளிவந்துள்ளன. அவை பெரும்பாலும் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம், பூநகரி முதலிய இடங்களிலும் அகுறுகொட என்னும் தென்னிலங்கையிலுள்ள ஊரிலிருந்தும் கிடைத்தவை.

இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படுகின்ற பிராமிக் கல்வெட்டுக்களிற் பிராகிருத மொழி வாசகங்களோடு தமிழ்ச் சொற்களும் கலந்து வருகின்றன. ஆயினும், கற்பாறைகளில் எழுதிய தமிழ்ப் பிராமிச் சாசனங்கள் கிடைக்கின்றமை வெல்லாவெளிக்குரிய தனியான சிறப்பாகும். அவ்வாறான இரு கல்வெட்டுக்களில் ஒன்று சமணம் தொடர்பானது. மற்றையது தமிழ் பௌத்தம் சார்ந்தது. இலங்கையில் இதுவரை அடையாளங் காணப்பட்டவற்றுள் சமணம் சார்ந்த முதலாவதும் தனித்துவமான கல்வெட்டு இங்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதன் காலம் தமிழகத்திலே சமண சமயத்தின் செல்வாக்கு வளர்ச்சிபெற்ற காலமாகும். ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையான சமய, பண்பாட்டுத் தொடர்புகள் பற்றிய ஆய்வுகள் இவற்றால் ஒரு புதிய பரிமாணத்தைப் பெறுகின்றன.

வெல்லாவெளிக் கல்வெட்டுக்களிற் காணப்படும் பெரும்பாண், குரத்தி, மீ, பெருவணிக என்ற நான்கும் இலங்கையிலுள்ள வேறு பிராமிக் கல்வெட்டுக்களிற் காணப்படாதனவாகும். இவற்றில் முதல் மூன்றும் தமிழகத்துப் பிராமிச் சாசனங்களிற் காணப்படாதவை. அத்துடன் பண்டைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலே காணப்படும் பெரு(று)மகன் என்ற சொல் சாசனவழக்கில் மாற்றமடையாத தமிழ் வடிவத்தில் இங்குமட்டுமே காணப்படுகின்றமை மற்றுமோர் அம்சமாகும். அதன் மாற்றுவடிவமான சொல்லின் (பருமகன்) பிராகிருத மயமாகிய வடிவமே இலங்கைப் பிராமிச் சாசனங்கள் பலவற்றில் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்களிலுள்ள, இதுவரை அடையாளங் கண்டு பிரதி செய்யப்படாத பிராமிக் கல்வெட்டுக்களைப் படியெடுத்து ஆராயப்படுமிடத்து இங்கு குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான சில வினோதமான விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு. இவ்விடயம் தொடர்பாகத் தேடலும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்.

சி.பத்மநாதன்,
வரலாற்றுத்துறைப் பேராசிரியர்,
பேராதனைப் பல்கலைக்கழகம்,
வருகைதரு பேராசிரியர் – கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை.

இக்கட்டுரை தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதற்கு: paths386@sltnet.lk

http://www.puthinappalakai.com/view.php?20121230107514

உங்கள் கருத்து
 1. Rohan on January 3, 2013 9:04 pm

  “இலங்கையில், இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு, கி.மு இரண்டாம், முதலாம் நூற்றாண்டுகளிலே தமிழர் வாழ்ந்தனர் என்பதும் தமிழ் மொழி நாட்டில் வாழ்ந்த ஒரு சாராரின் பேச்சு வழக்கு மொழியாக விளங்கியது என்பதும் தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.”

  “இக்கட்டுரை தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதற்கு:….”

  கனம் பேராசிரியர் அவர்களே. தமிழ் ஒரு கேவலமான மொழி என்பதையும் தமிழர்கள் எல்லோரும் பம்மாத்துக்காரர் என்பதையும் தமிழுக்கு ஒரு பாரம்பரியமும் கிடையாது என்பதையும் இந்த உலகம் அறியும். நீங்கள் குறிப்பிட்ட விடயங்களுக்கு ஆதாரம் கிடையாது. தமிழில் யாருமே கல்வெட்டு எழுதவில்லை என்பதை சின்னப்பிள்ளைகளே அறிந்திருக்கையில் இப்படிப் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விடுகிறீர்கள். இது வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்று காட்ட முற்பட்ட புலிகளின் முயற்சியின் தொடராக புலத்துப் புலிகளின் ஆதரவில் நீங்கள் நடத்தும் ஷோ என்பதை நாம் அறிவோம். வர்க்கப்போராட்டம் ஒன்றின் மூலம் பாட்டாளி மக்களுக்கு வெற்றிகளைப் பெற்றுத் தரும் பாரிய முயற்சியில் பல படிகளை நாம் தாண்டியிருக்கையில் இப்படி ஒரு பின்னடைவை ஏற்படுத்துவது எகாதிபத்தியங்களின் சதி என்பதை தோழர்கள் அறிவார்கள். ஒன்றுபட்ட தொழிலாளர் சக்தியுடன் பூர்ஷுவாக்களை துகிலுரிவோம்.

  குறிப்பு: இவ்விதமான கட்டுரைகளை யாரும் வாசிக்கக் கூடாது. மீறி வாசித்து விஷக் குளத்தில் விழக் கூடிய அறிவு குறைந்தவர்கள், அரைகுறைத் தமிழில் எல்லோரும் சமம் என்று பேசும் மேன்மையான சமதர்ம ஜனாதிபதியின் நேரிய சிந்தனைக்கிணங்க, இராணுவ முகாம்களில் புணர்வாழ்வு (புனர்வாழ்வு என்பது வேறு சொல் என்பதைத் தோழர்கள் அறிவார்கள்) அளிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறோம்.

  இப்படிக்கு,
  எல்லாம் தெரிந்தோர் மன்றம்


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு