தமிழாராய்ச்சி மாநாடுகளும் தமிழின் பெருமைபேசும் மாநாடுகளும் – காலத்தின் தேவை என்ன?: என்.செல்வராஜா


இது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டுக் காலம். தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இது தொடர்பான மாண்புநயப்பு விழாக்கள் தமிழ் விழாக்களாக ஏராளமான பணச்செலவில் இடம்பெற்று வருகின்றன. அதன் பேராளர்களாக பெரும் பணச்செலவுடன் தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் நாடுகடந்து இங்கும் அங்குமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆரவாரமாக இவ்வாண்டில் தமிழ் ஆராயப்பட்டும் தமது இனம் மொழி கலாச்சாரம் பற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டும் அரங்குகளில் உரையாற்றிவிட்டு நாடு திரும்புகிறார்கள்- வீடு திரும்புகிறார்கள். ஆடம்பரமான இம்மாநாடுகள் உண்மையில் தமிழுக்கு நன்மையைச் செய்கின்றனவா அல்லது அவலை நினைத்து உரலை இடிக்கும் கதைதானா என்ற கேள்வி இன்று பலரது மனதிலும் எழுந்து நிற்கின்றது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழை ஆய்வுசெய்யும் பன்னாட்டறிஞர்களையும் இனம்கண்டு, ஒருங்கிணைத்து அவர்கள் தனித்துவமாக மேற்கொண்டுவரும் தமிழாராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளவும், மேலும் வளப்படுத்தவும் உதவும்நோக்கில் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியின் பெறுபேறாக 1964இன் ஜனவரி மாதத்தில் 7ம் திகதி புதுடில்லியில் நடந்த 26ஆவது அகில உலக கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போது உருவாக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்பது இன்று வரலாறாகிவிட்டது. இம்மன்றத்தினால் தமிழாராய்ச்சி மாநாடு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு ஆய்வின் முடிவுகள் தமிழறிஞர்களிடையே வெளிப்படுத்தப்பட்டு, அவை விவாதிக்கப்பட்டு மீளாய்வு செய்யப்பட்டு தமிழ் ஆய்வுகள் செப்பனிடப்பட்டும் புத்தாய்வுகளுக்கு வித்திடப்பட்டும் செழுமைமிக்கதொரு வளர்ச்சியை தமிழ் உலகம் கண்டுகளிக்கும் என்று அன்று தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார் கனவு கண்டிருந்தார். அவரது கனவு நனவானதா என்பதை காலம் இன்று சொல்கின்றது. தூய தமிழ் ஆராய்ச்சி படிப்படியாக ஒரு அரசியல் மேடையாக ஆக்கிரமிக்கப்பட்ட வரலாற்றை முதலில் பார்ப்போம்.

முதலாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு, பல்வேறு தமிழ் மாநாடுகளுக்கும் முன்னோடியாகி நின்று வரலாறு படைத்துவந்துள்ள மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் 1966இல் நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மாநாடு 1968இல் சென்னையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக 1967இல் தமிழகத்தில் பாரிய அரசியல் வெற்றியைப் பெற்றிருந்த அறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிவிழாவாகவும் இம்மாநாடு அமைந்து விட்டமை பின்னாளில் தூய தமிழ்ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தமிழாராய்ச்சி மாநாடுகள் அரசியல் கலப்பிற்கும், அரசியல்வாதிகளின் ஆதிக்கத்துக்கும் உட்பட்டுவிட்டமையை பின்னாளில் நாம் அனுபவபூர்வமாக கண்டறிந்து கொண்டோம். பின்னாளில் தனிநாயகம் அடிகளார் François Gros அவர்களின் துணையுடன் மூன்றாவது மாநாட்டினை அரசியல் வாடையின்றி பாரிசில் 1970இல் நடத்திவைத்து அதனைத் தூய்மைப்படுத்த முனைந்தார்.

ஆயினும் யாழ்ப்பாணத்தில் 1974இல் நடந்தேறிய மாநாடு அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் கொழும்பிலா- யாழ்ப்பாணத்திலா நடத்துவது என்ற இழுபறியுடன் தமிழர் இனப்பிரச்சினையை உலகறியச் செய்யும் மறைமுக அரசியல் நோக்குடன் இறுதியில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பெற்று பதினொரு தமிழர்களின் உயிர்ப்பலிக்கும் அதன்பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் எழுச்சிக்கும் வழிகோலியது.

ஐந்தாவது மாநாடு 1981இல் மீண்டும் தமிழகத்தில் – மதுரையில் நடைபெற்றது. அவ்வேளையில் மற்றொரு தேர்தலை எதிர்கொண்டிருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் தமது அரசியல் வெற்றிக்குத் துணையாக இம்மாநாட்டைத் தமிழர் மாநாடாக கோலாகலமாக நடத்தி முடித்தது. இம்மாநாட்டின் பிரதிநிதிகளாக ஆய்வாளர்களைவிட உள்ளுர் அரசியல்வாதிகளே அதிகளவில் பிரசன்னமாயிருந்தனர் என்பதை மாநாட்டு மலரின் புகைப்பட ஆல்பம் இன்று எமக்குக் காட்டுகின்றது.

1987இல் மீண்டும் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆறாவது மாநாடு தனிநாயகம் அடிகளாரின் புனித நோக்கினை முன்னெடுக்கும் கனவுடன் அரசியல் கலப்பற்று நடந்து முடிந்த முதலாவது தமிழாராய்ச்சி மாநாட்டிலிருந்து மிகவும் வித்தியாசமானதொரு பரிமாணத்தில் நடைபெற்றிருந்ததை 1966 இல் நடந்த முதலாவது மாநாட்டையும் மீண்டும் 1987இல் அதே மண்ணில் பெருந்தொகையான தமிழக –மலேசிய தமிழ் அரசியல்வாதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றிருந்த ஆறாவது மாநாட்டையும் ஒப்புநோக்கினால் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

ஏழாவது தமிழாராய்ச்சி மாநாடு 1989இல் மொரீஷியஸ் நாட்டின் மோகா (Moka) நகரில் இடம்பெற்றது. கல்வித்துறையில் செழுமைமிக்க மோகா மாவட்டத்தில் தான் மகாத்மாகாந்தி நிறுவனமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. புலம்பெயர்ந்தோரிடையே தமிழின் எதிர்கால அடையாளஅழிவுக்கு பீஜித் தீவுகளுக்கு அடுத்தபடியாக உதாரணமாக எம்மவரால் அடிக்கடி எடுத்தாளப்படும் நாடு மொரிஷியஸ். மொரிஷியஸ் தமிழ் இன மக்களின் தமிழ் மூலத்தை மீள்கட்டுமானம் செய்து தமிழுணர்வூட்ட இம்மாநாடு அங்கிருந்த தமிழர்களுக்கு உதவியிருக்கின்றது என்பதில் உண்மையில்லாமல் இல்லை. மொரிஷியஸ் நாட்டில் நடந்தேறிய தமிழாராய்ச்சி மாநாட்டிலே தலைவாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரே இன்று அந்நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றும் W k Dr. Noboru Karashima அவர்களாவார்.

இவரது தலைமையிலேயே எட்டாவது தமிழாராய்ச்சி மாநாடு தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1995இல் நடைபெற்றது. இரண்டு லட்சம் பேர் வரை பங்கேற்ற இம்மாநாட்டின் நிறைவுதினம் வரலாற்றில் பதிவுசெய்யப்படும் அதேவேளையில், இம்மாநாட்டில் பங்கேற்கவிடாது ஈழத்துத் தமிழறிஞர் பெராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் அரசியல் காரணங்களுக்காகத் திருப்பி அனுப்பப்பட்ட வரலாறும் துர்அதிர்ஷ்டவசமாகப் பதிவு செய்யப்பட்டு விட்டது. இந்நிகழ்வு, உலகத் தமிழராய்ச்சி மாநாடுகள் தமிழ் ஆராய்ச்சியைவிட அரசியல் அபிலாஷைகளுக்கான களமாக ஏற்கப்பட்டு விட்டதை வெளிப்படையாகப் பறைசாற்றியது. இந்தப் பின்புலத்தில் தான் ஒன்பதாவது தமிழாராய்ச்சி மாநாடு கோயம்புத்தூரில் அரங்கேற்றம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.

2009இல் கலைஞர் கருணாநிதி தனது ஆட்சியின் போது, முள்ளிவாய்க்காலில் சிந்தப்பட்ட குருதியின் ஈரம் காய்வதற்கு முன்னதாகவே ஒன்பதாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை கோலாகலமாக கோயம்புத்தூரில் 2010இல் நடத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளும் வகையில் அதற்கான அனுமதியைக்கோரி, மேற்படி தமிழாராய்ச்சி மாநாட்டு அமைப்பின் தலைவராக இன்றிருக்கும் Fk Dr. Noboru Karashima அவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். தூயநோக்குடன் சர்வதேச கல்வியாளர்களாலும் மொழியியலாளர்களாலும் மேற்கொள்ளபட்டிருக்க வேண்டிய தமிழாராய்ச்சியை அரசியல் நலனுக்காகவும், தனிப்பட்டவரின் சமூக இருப்பிற்கான குறுக்குவழியாகவும் பயன்படுத்தப்படுவதை கலாநிதி நொபொரு கராஷிமா முற்றாக மறுத்துவிட்டார். மேலும் கலைஞர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒரு சர்வதேச அறிஞர்கள் பங்கெற்கும் மாநாட்டை நடத்தமுடியாது எனவும் அவர் அறுதியிட்டுக் கூறிவிட்டார். அதன் விளைவாக தன் முயற்சியில் சற்றும் சளைக்காத அம்புலிமாமா வேதாளக் கதையின் நாயகன் போல, கலைஞர் அவர்கள் தமிழ் செம்மொழி மாநாடாகத் தனது தமிழ் விழாவை கோலாகலமாக நடத்தி முடித்தார். மாநாட்டின் எந்தவொரு அரங்கமும் தனிநாயகம் அடிகளாரின் நினைவையே ஏற்படுத்தாமல் அமைப்பாளர்கள் பார்த்துக்கொண்டார்கள். சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் மட்டுமல்லாது, பங்கேற்ற அறிவுஜீவிகளும் இலங்கையில் அந்நாளில் கொழுந்துவிட்டெறிந்த தமிழரின் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றி மூச்சுக்கூட விடாதபடி சீ பீ ஐ வெளிப்படையாகக் கண்காணித்து வந்தது. கலைஞர் கருணாநிதி ஒன்பதாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை கோயம்புத்தூரில் தனது அரசியல் இருப்புக்கான களியாட்ட நிகழ்வாக உருமாற்றி 2010இல்அரங்கேற்ற முனைந்த இச்செயற்பாடானது இன்று உலக அரங்கில் பிழையான செய்தியையும் உற்சாகத்தையும் பல தமிழ் விழா அமைப்பாளர்களுக்கு வழங்கிவிட்டது என்று கருதமுடிகின்றது.

அன்று தமிழாராய்ச்சி மாநாடு என்ற வித்தை ஊன்றிவைத்த தனிநாயகம் அடிகளாரின் நோக்கத்தை இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். அதனை எவ்வகையிலும் ஈடுசெய்யாத தமிழ் விழாக்களும் தமிழாராய்ச்சி விழாக்களும் அவரது பெயரில் சுயநல நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளாலும், சமூக சேவகர்களாகத் தம்மை வரிந்துகொண்டவர்களாலும் பல்வேறு காரணங்களுக்காக மேடையேற்றம்பெறுகின்றன என்பது கசப்பானதொரு உண்மையாகும்.

இந்நிலையில் லண்டனிலும் பாரிய முன்னெடுப்புடனும் பெரும் பணமுதலீட்டுடனும் சில தனிநபர்களால் தமிழ் மாநாடொன்று நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன. தமிழகத்திலிருந்து பல அறிஞர்கள் தருவிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் கசிகின்றன. இவ்விழாவுக்கான அமைப்புக்குழு யாரென்பதோ எவ்வாறு இவ்விழாவை ஒழுங்குசெய்யப் போகிறார்கள் என்பதோ, இதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தெளிவான தகவல்களோ ஊடகங்களில் பகிரங்கமாக வெளியாகாத நிலையில் இந்த அமைப்புக்குழு பற்றியோ அதன் நோக்கங்கள் பற்றியோ நான் எதுவும் எழுத விரும்பவில்லை.

ஆயினும் இன்று புலம்பெயர்ந்த வாழ்வியலில் பல்வேறு தமிழ் ஆய்வாளர்களின் ஆய்வுத் தேவைகளுக்காக அணுகப்பட்டவன் என்ற நிலையிலும், தமிழின் ஆய்வுக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்று எதிர்காலத்தில் இந்த மண்ணில் அவசியம் என்ற கனவினைக் கொண்டவன் என்ற வகையிலும் அதற்கான ஆவணச் சேகரிப்பிலும், பதிவிலும் என் வாழ்வையும் பொருளாதாரத்தையும் எவ்வித சுயநல நோக்கமும் இல்லாமல் எம்மினத்தின் எதிர்காலத்துக்காக வழங்கிவருபவன் என்பதாலும் சில கருத்துக்களை முன்வைக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

எனது கருத்துக்கள் உறுதியான பின்நோக்கத்துடன் திட்டமிட்டுச் செயற்படக்கூடிய லண்டன் தமிழ் விழா அமைப்பாளர்களை எவ்விதத்திலும் அசைக்காது என்பதையும் நான் அறிவேன். இருப்பினும் இந்த லண்டன் தமிழ் விழாவை ஒழுங்குசெய்யத் துணைபோதும் எனது மதிப்பிற்குரிய சில நேர்மையான தமிழ் உணர்வாளர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் எனது கருத்துக்கள் சற்றேனும் அசைத்து அவர்களைச் சிந்திக்கத் தூண்டலாம் என்ற நப்பாசையில் இக்கட்டுரையைத் தொடர்கின்றேன்.

தமிழ்விழாக் காண முனையும் லண்டன் மாநகரில் 40க்கும் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. முப்பதுக்கும் அதிகமான தமிழர்களுக்கான சைவ, கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன. நூற்றுக்கும் அதிகமான சமூக நல நிறுவனங்கள் உள்ளன. இவற்றினிடையே பெயரளவிலேனும் தமிழ் ஆய்வுக்கான ஒரு நிறுவனமோ, தமிழ் அறிவியல் நூலகமோ, நல்ல தமிழ் நூல்களைத் தேர்ந்து வாங்கி வாசிக்க ஒரு புத்தகக்கடையோ இல்லை என்பது முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியதொன்றாகும். திரு.தி.சிறிக்கந்தராஜா 1994முதல் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் தமிழ் ஓலைகள் வர்த்தக வழிகாட்டிகளில் இவை பற்றிய தெளிவான தகவல்களை வாசகர் பெற்றுக் கொள்ளலாம்.

இத்தகைய நிறுவனங்கள் லண்டன் வாழ் தமிழ்மக்களிடையே இயங்கிவருகின்ற போதிலும் இவ்வமைப்புகளால் தமிழ்மொழியின் பயன்பாட்டையோ, தமிழரின் பண்பாடுபற்றிய அடிப்படை அறிவையோ, தமிழரின் வரலாற்றுப் பாரம்பரியங்களைப் பற்றிய சிந்தனைகளையோ இரண்டாம் தலைமுறையினரிடையே எடுத்துச் செல்லவும் நிலைநிறுத்தவும் முடியவில்லை. இத்தனை பாடசாலைகள் இங்கு இயங்குகின்ற போதிலும் அதே பாடசாலைத் தமிழ் விழாக்களில் அல்லது திருமணம், பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப சந்திப்புகளில் அங்கும் இங்கும் ஓடித்திரியும் குழந்தைகள் பேசும் மொழியை உற்று நோக்கினால், தமிழ்ப்பள்ளிகளின் செயற்திறனின் குறைபாடு புரிந்துவிடும். எமது இரண்டாம் தலைமுறையினரிடையே அழிந்துவரும் தமிழ் மொழியின் பேச்சுமொழிப் பயன்பாட்டின் தீவிரம் குறைந்து தமிழ் மொழி பேச்சுமொழியாகவாவது நீண்டநாள் வாழ நடைமுறைச் சாத்தியமான என்ன நடவடிக்கைகளை இத்தமிழ்ப் பள்ளிகளின் வாயிலாக இதுவரை எடுத்திருக்கிறோம் என்றால் திருப்திகரமான பதில் கிடையாது.

சைவ சமயத்தை எடுத்துக் கொண்டால், லண்டன் கோயில்கள் மூன்றுவேளை பூசையுடன், மூன்றுவேளை உணவுப் பொதிகளையும் வழங்கி எம்மிடையே அட்சயபாத்திரங்களாக விளங்குகின்றன. இதற்கிடையே அகால வேளையில் உணவுகேட்டுச் சென்ற மனவலுக்குன்றிய ஒருவரை உதைத்துத்தள்ளிய செய்திகளும் காதுக்கெட்டாமல் இல்லை. இந்நிலையில் இக்கோயில் நிர்வாகங்களினால் தமது கண்களுக்கு முன்னே நடக்கும் மதமாற்றங்களைக் கட்டுப்படுத்த முடிந்ததா? குறைந்தபட்சம் கோயில்களுக்கு வரும் பக்தர்களின் குழந்தைகளிடையேயாவது தமிழ்க் கலாச்சாரத்தையும் பணிவையும் போதித்து அவர்களை அமைதியான வழிபாட்டுமுறைக்கு உட்படுத்த முடிகின்றதா? தாயும் தந்தையும் வழிபாடு செய்ய அவர்களைச்சுற்றி ஓடியாடி ஜிம்னாஸ்டிக் செய்யும் குழந்தைகள் கோயில் வளாகத்திலேயே பக்தர்களை வெறுப்பேற்றும் காட்சிகள் இன்றளவில் தடுக்கப்பட்டதா? இந்நிலையில் கோயில்கள் தமது சமய கலாச்சார நோக்கங்களில் வெற்றி பெறவில்லை என்றே பொதுவாகக் கருதவேண்டியுள்ளது.

எம்மையும்மீறி எமது இல்லங்களுள் நுழைந்துவிட்ட பல்லினக் கலாச்சாரம் பற்றி நாம் கவலை கொள்வதில்லை. பெரிய பிரித்தானியாவே பல்லினக் கலாச்சாரத்தை வரவேற்கும் போது அங்கு வாழத் தீர்மானித்துவிட்ட தமிழர்களால் அதை தவிர்த்துவாழ முடியாது என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், தமிழ் மொழியைப் பற்றிய அறிவையும், தமிழர் பண்பாடு அதன் கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வினை என்றாவது ஒருநாள் அறிந்துகொள்ள விரும்பும் எமது அடுத்த தலைமுறையினர் எங்கே போவார்கள். எதிர்காலத்தில் கோயில்களும், தமிழ்ப்பள்ளிகளும் நிலைத்து நின்று தமிழ் வளர்க்கப் போவதில்லை. அவை இன்றைய முதலாம் தலைமுறையினரின் ஆத்மதிருப்திக்காக அமைந்தவை. ஆழமான சமூக உணர்வோ சமூகச் சிந்தனையோ அற்ற வெறும் பதவிமோகங்களுக்கும், உள்ளகச் சண்டைகளுக்கும் ஆட்பட்டுப் பொருளீட்டும் அமைப்புக்களாகவே இவ்வமைப்புகளின் செயற்பாடுகளைக் கருதவேண்டியுள்ளது.
அதனால் தான் இவை எவற்றுக்கும் வாய்ப்புத் தராத, பயன்படாத, வர்த்தக நோக்கத்துக்கு இடம்கொடுக்க முடியாத நூலகங்களும், வாசிகசாலைகளும், லாபமீட்டமுடியாத புத்தகச் சந்தைகளும், தமிழாய்வு நிறுவனங்களும் இன்றளவில் எமது சமூகத்தில் ஒரு பொருட்டாகக் கருதப்படவில்லை. ஆங்காங்கே ஒன்றிரண்டு தனிமனிதர்கள் இதனைப்புரிந்து தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கவுள்ள எதிர்கால ஆபத்தை உணர்ந்து செயற்பட்டாலும்- அவர்களுக்கு எவ்வித பொருளாதார ஆதரவினையும் இந்தப் புலம்பெயர் சமூகம் வழங்காது அவர்களை தனியாளாக நின்று சமூகச் சுமையைத் தாங்கவிட்டு வேடிக்கைபார்க்கின்றோம்.

இத்தகைய சமூகப் பின்புலத்தில் நின்றுதான் இந்த லண்டன் தமிழ் விழாவையும் காணவேண்டியுள்ளது. தமிழ்பற்றிய மேலோட்டமான கட்டுரைகளை எழுதுவதைத்தவிர எமது புத்திஜீவிகளுக்கு தமிழ்மொழியிலும் தமிழர் கலை கலாச்சாரங்களிலும் ஆய்வுசெய்யவும் எழுதவும் என்ன வளம் இங்கே காணக்கிடைக்கின்றது. அரைத்தமாவையே அரைத்து எழுதப்படும் ஆய்வுகளால் பயன் என்ன? தமிழர் பண்பாட்டைக்காட்டும் ஊர்திகளால் பயனென்ன? ஒரு களியாட்டவிழாவை அல்லது கோயில் தேர்த்திருவிழாவில் இடம்பெறும் தேரோட்டத்தை இங்கு லண்டன் தெருக்களில் நின்று கண்டுகளிக்கும் பன்னாட்டு பார்வையாளர்களைப்போன்ற நிலைமைதானா இத்தகைய பெரும்பணச்செலவில் மேடையேற்றவிருக்கும் தமிழ் மாநாடுகளின் முடிவிலும் ஏற்படப்போகின்றது? ஒருவேளை- சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்கும் சில “பெரியமனிதர்கள்” இத்தகைய விழாக்களால் மேடையின் மத்திக்குத் தற்காலிகமாகத் தருவிக்கப்படலாம். இது எமது புகலிடத் தமிழரின் வளர்ச்சியிலும் வாழ்விலும் என்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகின்றன?

இன்று பிரித்தானியத் தமிழர்களுக்கும், தமிழ் பற்றிய- தமிழ் கலாச்சாரம் பண்பாடு பற்றிய தேடலை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பொகும் பின்னைய தமிழ் தெரியாத தமிழ்த் தலைமுறையினருக்கும் இம்மாநாடுகள் என்ன முதுசொத்தை விட்டுச்செல்லப் போகின்றன என்பது பற்றி நாம் தீர்க்கமாகச் சிந்திக்கவேண்டிய தருணமிது. பெரும் எடுப்பில், அதிக பணச்செலவிலும், உடல் உழைப்பிலும் நடாத்தப்படப்போகும் இம்மகாநாடுகள் எமது தலைமுறையினருக்காவது பயன்தருமா என்பதுதான் எம்முன் எழவேண்டிய முக்கிய கேள்வியாகும். நாம் வாழும் பல்லினச்சமூகத்தில் தமிழர் அல்லாதவர்களிடையே தமிழர் யார்? அவர்களது பண்பட்ட கலாச்சாரம் -பண்பாடு என்ன என்பதை அழுத்தமாக இம்மாநாடுகள் கொண்டுசெல்லுமா என்பதைப்பற்றியும் நாம் சிந்திக்கவேண்டும். இதற்கு விடை ஆம் என்றால் எவ்வகையில் அத்தகைய பயன் விளையப் போகின்றது? மாநாட்டுக் கட்டுரைகளைக் கொண்ட சிறப்பு மலர்கள் மாத்திரம் தமிழை புகலிடத்தில் வாழவைக்கப் போவதில்லை. தமிழ் பற்றித் தமிழரே தமிழர் மத்தியில் பேச இத்தகைய பெரும் எடுப்பில் பெரும்பணச்செலவுடன் முயற்சிசெய்ய வேண்டியதில்லை.

இன்று எமக்குத் தேவையானது தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தை- பண்பாட்டையும் பன்னாட்டாரும், எம்மிடையே உருவாகி வளரும் தமிழ் தெரியாத தமிழ்த் தலைமுறையினரும்அறிந்துகொள்ள ஏதுவானதொரு ஆவணக் களஞ்சியமாகும். எதிர்காலத்தைப்பற்றிச் சிந்தித்து, அதன் போக்கினை அலசி, தீர்க்கதரிசனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டியதொரு பணி. அதுவும் அரசியல்வாதிகளாலும், வர்த்தகச் சமூகத்தினராலும், சமூக அந்தஸ்தை நாடி நகரும் பிரகிருதிகளாலும் அன்றி, புத்திஜீவிகளால் மாத்திரம் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கியமான செயற்திட்டம் இது.

ஆய்வாளர்களுக்கு உரிய அவணங்களை வழங்கும் உசாத்துணை நூலகத்துடன் கூடிய இவ்வாவணச்சாலை தனியானதொரு கட்டிடத்தில் லண்டன் நகரின் அமைதியான புறநகரொன்றில் கட்டப்பட்டு இன்றைய ஆய்வாளர்களுக்கும் எதிர்காலத்தில் தவிர்க்கமுடியாது உருவாகப்போகும் தமிழ் தெரியாத தமிழர் தலைமுறைக்கும் எமது புலப்பெயர்வு பற்றி மாத்திரமல்லாது அதற்கான காரணங்கள் வரலாறுகள் கலாச்சாரங்கள் என்பவற்றினை அறிந்துகொள்ள வசதியான சுவடிகள், ஆவணங்கள் தமிழ் ஆங்கில மொழிகளில் பேணப்படவேண்டும்.

இத்தகைய தமிழ் மொழி ஆவணக்காப்பகத்தில் தமிழர்கள் மாத்திரமல்ல –தமிழியல் கற்கும் அனைத்துலக ஆய்வாளர்களுக்கும் ஈழத்தமிழர் யார், அவர்களது கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கங்கள் என்ன என்பது பற்றி அறிந்துகொள்ளவும், அறிவியல்பூர்வமாக அவற்றை ஆய்வுசெய்யவும் பல்கலைக்கழகத் தொடர்புகளினூடாக நவீன வசதிகள் செய்யப்படவேண்டும்.

இதுவரை ஈழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் முப்பதாண்டுகள் எமது மக்களின் பொருளாதாரம் ஆயுதக் கொள்வனவுக்கும் தோல்விகண்டதொரு யுத்தத்திற்கும் செலவிடப்பட்டு விட்டன. இன்று எஞ்சியுள்ள அச்சொத்துக்களும் தமிழர்களின் கைக்கெட்டாமல் ஆக்கிரமிப்பாளர்களால் ஆங்காங்கே வேலிபோட்டுத் தோண்டி எடுக்கப்பட்டு ஆயுதங்களாக மாத்திரமல்லாது தங்கப்பாளங்களாகவும் அவர்களது உடைமையாக்கப்பட்டு ரூபவாகினியிலும் பிற ஊடகங்களிலும் காட்சிப்படுத்தப்படும்போது இரத்தக்கண்ணீர் சிந்துகிறார்கள் தாயகத்தில் எமது உறவுகள்.

இன்று போர் முடிந்த நிலையில் எமது பொருளாதாரம் மீண்டும் விழாக்களிலும் களியாட்டங்களில் பெருமளவில் கொட்டப்படுவதைத் தவிர்க்க எமது புத்திஜீவிகள் முயலவேண்டாமா? அதற்குப்பதிலாக அறிவுசார் பயன்பாட்டுக்கென ஒரு நிதியத்தினை உருவாக்கி அதன்வழியாக ஒரு ஈழத் தமிழ் ஆய்வகத்துக்கான பொருளாதார வளத்தை ஏன் வழங்கமுடியாது? அன்று தனிநாயகம் அடிகளார் கண்ட கனவை நனவாக்கும் வகையில் ஒரு சிறு பங்களிப்பும் செய்யப்படாமல் வெறுமனே களியாட்ட நிகழ்வாகவும் தனிநபர் உயர்வுக்கான போலித்தனமான கௌரவத்துக்காகவும் இத்தகைய மாநாடுகள் கூட்டப்படுவது எமது இனத்தின் விடிவுக்கும் வாழ்விற்கும் கௌரவமான இருப்பிற்கும் எவ்வகையில் உதவக்கூடும்?

இத்தகைய சிந்தனைப்போக்கினை தமிழ் உணர்வாளர்களிடம் எழுப்ப – விரும்பியோ விரும்பாமலோ லண்டன் மண்ணில் நடக்கவிருக்கும் மாநாடு வழி சமைக்குமாக இருந்தால் அது இம்மாநாட்டின் வெற்றியாகக் கருதலாம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்று ஒரு முதுமொழி எம்மிடையே உண்டு.

... இது நாள் வரையில் பாதமிதியாத் தளங்களின் மீதும்
கன்னிச் சுவடுகள் பதிப்போம் – இனி
எதிர் வரு நாளில் பதிந்து பதிந்தவை பாதைகளாகப்
புதுயுகத் தடங்கள் விதிப்போம்.

என் செல்வராஜா
நூலகவியலாளர்
லண்டன்

உங்கள் கருத்து
 1. Manoharan on May 12, 2013 4:57 pm

  Very good article. I agree with many of your points.
  I wonder whether you have seen the article

  பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5

  written by தமிழ்ச்செல்வன்.

  The web link is
  -http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=21008151&format=html

  Is this fair criticism in your opinion? Would like to see your comments.

  Regards,
  Manoharan


 2. N.Selvarajah on May 13, 2013 9:12 pm

  Manoharan
  I tried that link. Unfortunately I could not find it. Can i have a specific link-so that I would be able to read straight away. Thanks for your comments.

  Regards

  Selvarajah


 3. PROF. KOPAN MAHADEVA on May 14, 2013 3:03 pm

  ஆராய்ச்சி என்றால் என்னவென்று அறிந்துணர்ந்து
  நேர்சீராய் ஆய்ந்து தமிழ்நூல்கள் வெளிக்கொணர்ந்தால்
  ஆர் – எப்போ குற்றிய அரிசியும் சரி எனக்கு!
  பாரினில் எம் இழவுப் பிணக்குகள் போதும் தம்பி!!

  –பேராசிரியர் ஆராய்ச்சி முனைவர் கோபன் மகாதேவா


 4. Rohan on May 14, 2013 8:48 pm

  //ஆராய்ச்சி என்றால் என்னவென்று அறிந்துணர்ந்து
  நேர்சீராய் ஆய்ந்து தமிழ்நூல்கள் வெளிக்கொணர்ந்தால்
  ஆர் – எப்போ குற்றிய அரிசியும் சரி எனக்கு!
  பாரினில் எம் இழவுப் பிணக்குகள் போதும் தம்பி!!//

  வெண்பா வரையறைக்குள் வராவிட்டாலும் பொயின்ற் பொதிந்த வரிகள் இவை. ஒரு பையனாக பேராசிரியர் கோபாலபிள்ளை மகாதேவாவை யாழ் தமிழாராய்ச்சி மாநாட்டில் சந்தித்த நினைவுகள் உண்டு.


 5. K. Wijeyaratnam on May 14, 2013 9:47 pm

  தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளின் சிறந்த நோக்கங்களை மீறி அரசியல் சாயம் பூசப்படுவதை எவ்வண்ணம் எடுத்துரைப்பேன்?

  நுணாவிலூர் கா. விசயரத்தினம்.


 6. Manoharan on May 15, 2013 3:11 am

  Please try this, you can cut and paste the web link

  -http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=21008151&format=html


 7. Manoharan on May 15, 2013 11:25 pm

  Here it is

  Sunday August 15, 2010
  பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5
  தமிழ்ச்செல்வன்

  மேலே குறிப்பிடப்பட்டுள்ள -www.cathnewsindia.com கிறுத்துவ இணையதளம் மேலும் ஒரு தகவல் தருகிறது. பாதிரியார் சேவியர் தனிநாயகம் என்பவர் ”தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம்” (IATR – International Association of Tamil Research) என்ற அமைப்பை நிறுவி, 1965-ஆம் ஆண்டு, முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். பின்னர் அது தொடர்ந்து நடத்தப்பட்டு வந்து, தற்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது. எனவே தமிழ் மொழியை சர்வதேச அளவிற்குக் கொண்டு சென்றவர் பாதிரியார் தனிநாயகம் தான்” என்று கூறுகிறது அந்த இணைய தளம். தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேச்ச் சங்கத்தை நிறுவியவர் பாதிரியார் தனிநாயகம் என்பது உண்மை தான் என்றாலும், அவருடைய அந்த முயற்ச்சி தான் தற்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்று உரிமை கொண்டாடுவது ஒத்துக்கொள்ள முடியாததாகும். சொல்லப்போனால், ”ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு” நடத்த வேண்டும் என்ற தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளை மறுத்தது தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம் என்கிற உண்மையைச் சொல்லும் தைரியம்கூட அந்தக் கிறுத்துவ இணைய தளத்திற்கு இல்லை. அதை விட்டு, தமிழ்ச்செம்மொழி மாநாட்டிற்கு உரிமை கொண்டாடுவதென்பது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது. தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கத்தின் மறுப்பை புறந்தள்ளிய கலைஞர் அவ்வமைப்பைத் தண்டிக்கும் விதமாக “முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு” என்று அறிவித்து நடத்தியதோடு மட்டுமல்லாமல் “உலகத் தொல்காப்பியர் செம்மொழித் தமிழ்ச் சங்கம்” என்ற புதிய அமைப்பையும் துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  கடந்த 45 ஆண்டுகளில் எட்டு மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு மாநாடுகள் (1983 & 1992) அ.தி.மு.க மாநாடுகளாகவும், ஒரு மாநாடு (1968) தி.மு.க மாநாடாகவும் மற்ற ஐந்தும் மிகச் சாதாரண மாநாடுகளாகவும் நடந்தேறியுள்ளன. இவற்றினால் தமிழ் மொழிக்கோ, தமிழ் இலக்கியத்திற்கோ, தமிழ் கலாசாரத்திற்கோ, என்ன பயன் ஏற்பட்டுள்ளது? – ஒன்றுமில்லை!

  இப்போது கோவையில் நடந்த மாநாடும் தி.மு.க மாநாடே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தொலைக்காட்சிகள் தங்களின் நேரலை ஒளிபரப்புகள் மூலமே கோவையில் நடந்தது கட்சி மாநாடுதான் என்பதைத் தெளிவாக்க் காட்டிவிட்டன. இம்மாநாட்டில் கிறுத்துவ ஆதிக்கம் இருந்ததும் கண்கூடாகத் தெரிந்தது. அதாவது திராவிட-கிறுத்துவ உறவு மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

  -www.transcurrents.com என்கிற மற்றொரு கிறுத்துவ இணைய தளத்தில் பாதிரியர் தமிழ் நேசன் என்பவர் தான் எழுதிய கட்டுரையில், “பாதிரியார் தனிநாயகம் பல ஐரோப்பிய மொழிகளையும் அம்மொழிகளின் இலக்கியங்களையும் கற்றறிந்தமையால் அவற்றுடன் தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டுத் தமிழ் மொழியை சர்வதேச அளவில் வளர்ச்சியடையச் செய்தார். அவர் தமிழ் கலாசாரத்தின் தூதுவராக சர்வதேச அரங்கில் விளங்கினார். தமிழ் கலாசாரத்தை உலகெங்கும் கொண்டுசென்ற கத்தோலிக்கப் பாதிரியாராக விளங்கினார். தமிழ் மொழி மற்றும் இலக்கியங்களின் தொன்மையையும், செழுமையையும், அழகையும் சர்வதேச அளவில் கொண்டு செல்லுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும், எப்போதும் கர்தரிடம் பக்தியுடைய பாதிரியாராகவே விளங்கினார். இவருடைய கடுமையான அயராத உழைப்பினால் தான் உலகம் தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்தை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.” என்று கூறுகிறார். (-http://transcurrents.com/tc/2010/06/contribution_of_sri_lankan_tam.html)

  இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. தமிழ் கலாசாரம் என்பது என்ன? கிறுத்துவர்கள் எதைத் தமிழ் கலாசாரம் என்று சொல்கிறார்கள்? அப்படியென்றால் ஹிந்தி கலாசரம், தெலுங்கு கலாசாரம், மராத்தி கலாசாரம், குஜராத்தி கலாசாரம், வங்காள கலாசாரம் என்றெல்லாம் இருக்கின்றனவா என்ன? இமயத்திலிருந்து குமரிமுனை வரை பாரத மொழிகளைப் பேசும் அனைத்து சமூகங்களையும் ஒன்றாக இணைப்பது ஒரே நாகரிகப் பாரம்பரியம் தான். அதுதான் ஹிந்து கலாசாரம். இந்த ஹிந்து பூமியின் கலாசாரம். சில சடங்குகளிலும் சில சம்பிரதாயங்களிலும் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அடிப்படையில் கலாசாரம் ஒன்று தான். பேசும் மொழிகள் வேறாக இருந்தாலும், வணங்கும் கடவுள்களும், கொண்டாடும் பண்டிகைகளும், வாழும் முறையும் அனைவருக்கும் ஒன்றாகத்தான் பற்பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன. இதைத் தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோம்.

  மேலும், பாதிரியார் தமிழ் நேசன் அவர்கள், “பல நாடுகளிலும் தமிழ் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவற்றுக்குக் காரணம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாதிரியார் தனிநாயகம் என்ற தனிநபரின் கடுமையான உழைப்புதான்” என்று சொல்கிறார். ஆனால் அவர் “தமிழ்” பண்டிகைகள் யாவை என்று கூறவில்லை. இங்கே தமிழ் வருடப் பிறப்பை மாற்றியமைத்த திராவிட இனவாதிகளிடம் கேட்டால், பொங்கல் தான் தமிழர் திருநாள் என்று கூறுவார்கள். பொங்கல் திருநாள் என்பதே ஹிந்துக்களின் “மகர ஸங்கராந்தி” என்கிற பண்டிகை தான் என்பது வேறு விஷயம். அப்படியென்றால் மற்ற பண்டிகைகள் எல்லாம் தமிழ் பண்டிகைகள் கிடையாதா? அவையெல்லாம் ஹிந்துப் பண்டிகைகள் என்றுதானே அர்த்தமாகிறது? அப்புறம் ஏன் பாதிரியார் தமிழ் நேசன் அவற்றைத் தமிழ் பண்டிகைகள் என்று கூறுகிறார்?

  பதில் அவருடைய கட்டுரையிலேயே இருக்கிறது. பாதிரியார் தமிழ் நேசன், “பாதிரியார் தனிநாயகம் தமிழ் கலாசாரத்தின் கத்தோலிக்கத் தூதுவராக சர்வதேச அரங்கில் திறம்படப் பணிபுரிந்தார்” என்று சொல்கிறார். உண்மையிலேயே தமிழர்களின் பலவிதமானப் பண்டிகைகளும் ஆங்காங்கே கொண்டாடப்பட்டு தமிழர்கள் தங்கள் பண்பாடு மிளிர வாழ்ந்து வரும் பட்சத்தில், அவற்றிற்குப் பெரிதும் பாடுபட்டவர் என்ற முறையில், தமிழ்ஹிந்து கலாசாரத்தின் கத்தோலிக்கத் தூதுவராக பாதிரியார் தனிநாயகம் திகழ்ந்தார் என்று கூறுவது தானே? அவ்வாறு சொல்வது மிகவும் பெருமை தரக்கூடியது அல்லவா? அன்றி தமிழ் கலாசாரம் என்று சொல்வது எதனால்? ஹிந்து என்கிற அடையாளத்திலிருந்து தமிழர்களைப் பிரித்துத் தனிமைப்படுத்தத்தானே? ஹிந்து கலாசாரம் என்று சொல்வதற்கு விருப்பமில்லையென்றால் இந்திய கலாசாரம் என்று சொல்வது தானே? அப்படிக் கூறினால் தமிழ் என்ற அடையாளம் இருக்காது, தமிழ் அடையாளம் கொடுத்து ஹிந்து அடையாளத்தை அழிக்க முடியாது, தமிழ் மொழியைக் கிறுத்துவத்துடன் இணைக்க முடியாது, தமிழ் கிருத்துவ தேசம் அமைக்கும் அடிப்படை நோக்கமே அடிபட்டுப்போகும், என்பது தானே உண்மை? அதற்காகத்தான் அனைத்து கிறுத்துவ மிஷினரிகளும் தமிழ் மொழிப்பற்றளர்களாகவும், தமிழ் இலக்கியக் காவலர்களாக்வும், தமிழ் பண்பாட்டின் பாதுகாப்பாளர்களாக்வும் முன்நிறுத்தப்பட்டார்கள் என்பது நிதர்சனம்.

  கட்டுரையில் பாதிரியார் தமிழ் நேசன் அவர்கள் ஒரு ஒப்புதல் அறிக்கையே வாசிக்கிறார்:

  “…பாதிரியார் தனிநாயகம் தமிழ் மொழி மீது பற்றும் ஆர்வமும் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இறை தூதன் (Zealous Apostle)…இறைவன் தனக்குக் கொடுத்துள்ள மொழி மற்றும் இலக்கியத் திறமைகளைப் பற்றிய தன்னுணர்வோடு இருந்ததோடு மட்டுமல்லாமல் இறைச் சேவைக்காக (அறுவடைக்காக) அவற்றைப் பயன்படுத்தவும் (பயிரிடவும்) செய்தார். ஒரு பாதிரியார் என்கிற முறையில், தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களைச் சென்றடையும் விதத்தில் தன் அதிகாரச் சபைக்காகத் (better for his ministry) தனக்குத் தேவையான உபகரணமாகத் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் ஆழமாகக் கற்றார்…தமிழ்க்கல்வியை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்ததில் பாதிரியார் தனிநாயகம் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். அவர் தமிழ்கலாசாரத்தைப் பரப்பிய கத்தோலிக்கப் பாதிரியார். கத்தோலிக்கக் கிறுத்துவம் சர்வதேச மதம் என்பதால் அது அவருடைய வாழ்நாள் நோக்கமான தமிழ்க் கல்வியை சர்வதேச அளவில் பரப்புவதற்கு உதவியாக இருந்தது….தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் செழுமையையும் அழகையும் உலகெங்கும் ஒப்புக்கொள்வதற்கான தன்னுடைய அனைத்து நடவடிக்கைகளுக்கு இடையேயும், அவர் எப்போதும் இறைவனிடம் விசுவாசம் மிக்க பாதிரியாராகவே திகழ்ந்தார்.”

  லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சி.ஆர்.பாக்ஸர் என்பவர், “சரியான கருத்துப்படி, பாதிரியார் தனிநாயகம் நான்கு கண்டங்களிலும் ஏழு கடல்களிலும் விரிவான பயணங்கள் மேற்கொண்டவர் என்பதாலும், புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய கருத்துக்கள் ஆகியவற்றிற்கு அவர் எப்போதும் வரவேற்பு அளித்தவர் என்பதாலும், அவரை “உலக்க் குடிமகன்” என்று சொல்ல்லாம்” என்று கூறியதையும் தமிழ் நேசன் மேற்கோளாகக் காண்பிக்கிறார்.

  தமிழ் அறிஞர்களில் ஒரு பிரிவினர் பாதிரியார் தனிநாயகம் தமிழுக்கு ஆற்றிய “பங்கு” பற்றி நம்பிக்கை ஏற்படாமல் உள்ளனர். அவர்கள், “மதிப்பும் தரமும் மிக்க சஞ்சிகைகளில் பிரசுரிக்கத் தக்கவாறோ, சக அறிஞர்களும் தர்கரீதியான கல்வியாளர்களும் கூர்ந்து ஆராய்ந்து விமரிசனம் செய்யத்தக்க அளவிலோ அவர் ஏன் தமிழ் பங்காற்றவில்லை?” என்று கேட்கின்றனர். மேலும், ”தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம் நிறுவியதிலும், அதைத் திறம்பட நிர்வகித்ததிலும் அவருடைய பங்கு மிகவும் பாராட்டத் தக்கது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அச்சங்கத்தின் வளர்ச்சியிலும், வெற்றியிலும் மற்ற அறிஞர்களின் பெரும்பங்கும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்தப் புகழ் ஒருவரை மட்டும் சார்ந்த்தல்ல” என்று கூறுகின்றனர்

  இதையே, பின்வரும் காலத்திற்கும் வருங்காலத் தலைமுறையினருக்கும் பேருதவியாக சங்க இலக்கியங்களைத் தேடிக் கண்டு பிடித்து ஒருங்கிணைத்து அவற்றை அச்சிட்டு வெளிக்கொணர்ந்த உ.வெ.சாமிநாத ஐயர் அவர்களின் சேவையுடனோ, அல்லது நவீன அச்சகங்களை முதன் முதலில் பயன்படுத்தி சங்க இலக்கியங்களை அச்சிட்ட ஆறுமுக நவலரின் சேவையுடனோ ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியம்.

  சிறந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவரான வையாபுரிப் பிள்ளையைப் பொறுத்தவரை, இலக்கணம், சொற்கள் மற்றும் பிற இலக்கியக் குறிப்புகள் முதலியவற்றை கூர்ந்து மதிப்பிட்டு தமிழ் இலக்கியங்களின் காலத்தைக் கணித்த ஒரே அறிஞராகத் திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது. தமிழ் இலக்கியங்களின் காலங்களைப் பற்றிய அவருடைய கணிப்புகள், கிறுத்துவ மிஷனரிகளால் ஒத்துழைப்பும் ஆதரவும் தரப்பட்ட திராவிட இனவாதிகளின் மிகைப் படுத்தல்களைத் தகர்த்துள்ளன என்பதில் ஐயமில்லை.

  முடிவுரை

  ராபர்ட்-டி-நொபிலி முதல் ராபர்ட் கால்டுவெல் வரையிலான கிறுத்துவ மிஷனரிகளும், தனிநாயகம் போன்ற பாதிரிமார்களும், தெய்வநாயகம் போன்ற எவாங்கலிக்கர்களும், தமிழ் மொழியைக் கடத்தி, அதன் ஹிந்து அடையாளத்தை அழித்து, தமிழ் மண்ணின் கலாசரத்தை ஒழித்து, தமிழ் மக்களை கிறுத்துவர்களாக மதம் மாற்றி, இறுதியாகத் தமிழகம் மற்றும் வட-கிழக்கு இலங்கை சேர்ந்த ஒரு தமிழ் கிறுத்துவ தேசத்தை ஸ்தாபிப்பது ஒன்றையே குறிக்கோளாக்க் கொண்டு இயங்கினர், இயங்கி வருகின்றனர்.

  பண்பாட்டுப் பெருமையும், மொழியுணர்வும், தேசப்பற்றும் இல்லாத திராவிட இனவாத இயக்கங்கள் கிறுத்துவ நிறுவனங்களுடன் சேர்ந்து கொண்டு தமிழ்ப் பகுதிகளைத் தேசிய நீரோட்டத்திலிருந்து விரோதப்படுத்தி வருகின்றன. தீய சக்திகளின் இந்தச் செயல்பாடுகள் தோற்கடிக்கப்படவேண்டியது அவசியமாகும். தமிழகம் மற்றும் இலங்கையில் தற்போது உள்ள அரசியல் நிலவரம் ஊக்கமளிப்பதாக இல்லை. அரசியல் கட்சிகளும் நம்பகத்தன்மைச் சிறிதும் இல்லாதவையாக இருக்கின்றன. இந்நிலையில், தமிழகம் மற்றும் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் வசம் தான் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. அவர்கள் தங்களின் ஹிந்து அடையாளத்தை மீண்டும் நிறுவவேண்டும். பண்பாட்டுப் பெருமை, மொழியுணர்வு, தேசப் பற்று ஆகிய குணங்களுடன் தீவிர விடா முயற்சியுடன் தங்களுடைய ஹிந்துத்தன்மையை நிலைநிறுத்த வேண்டும். தங்களின் மொழி, இசை, கலை மற்றும் சிற்ப சாஸ்திரங்கள் அனைத்தும், சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் வளர்ந்த வேத நாகரிகத்தின் வழியில் பாரம்பரியமாக வந்த ஹிந்து கலாசாரத்தைச் சேர்ந்தவை தான் என்பதையும் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

  தமிழ் அடையாளம் என்பது ஹிந்து என்கிற விசாலமான அடையாளத்துடன் தொடர்பு கொண்டது. இந்தத் தொடர்பை நாம் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், கோவில்கள், சிற்பக்கலை, பண்டைய இலக்கியங்கள், அரசியல், கடல்கடந்த வாணிபம் ஆகியவற்றில் காணலாம். சங்க இலக்கியங்கள் தெளிவாக, விளக்கமாக ஹிந்து விஷயங்களைப் பேசாமல் இருக்கலாம். ஆனால் அவை மதப் பழக்க வழக்கங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம், மாயோன் அல்லது விஷ்ணு, சேயோன் அல்லது முருகன், கொற்றவை அல்லது துர்கை, வேந்தன் அல்லது இந்திரன், வருணன் ஆகிய தெய்வங்களின் வழிபாடுகள் போன்ற ஹிந்து மதத் தொடர்புகளைக் கண்டுணரலம்.

  சங்க காலத்தைத் தொடர்ந்து இயற்றப்பட்ட இலக்கியங்களான திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை மேலும் விரிவான ஹிந்துத் தத்துவங்களுடன் மிளிர்கின்றன. அவற்றைத் தொடர்ந்து வந்த பக்தி கலாசாரக் காலங்களில் தேவாரம், திவ்யப்பிரபந்தம் போன்ற இலக்கியங்கள் தமிழ் சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சியையும், தமிழகத்தின் அரசியலையும் பலப்படுத்தி அதன் மூலம் கடல் கடந்த வாணிபத்தையும், தமிழகத்தின் மொத்த அபிவிருத்தியையும் உறுதி செய்தன. அந்தக் காலக் கட்டத்தில் வேளாண்மையும், நீர்பாசனமும் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தன. தமிழ் மொழியின் தோற்றமும், வளர்ச்சியும் வரலாற்று நெடுகிலும் விசாலமான ஹிந்து உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது.

  இந்த உண்மை தான், தாய்லாந்து மன்னனின் முடிசூட்டு விழாவின் போது ஏன் திருவாசகம் பாடப்படுகிறது… பாரம்பரியமாக சித்திரை (ஏப்ரல்) மாதம் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டுப் பண்டிகை காம்போஜத்திலும், பர்மாவிலும் கூட அதே சமயத்தில் ஏன் கொண்டாடப்படுகிறது… இந்தோனேசியாவின் இந்துமத சிற்ப இயலில் ஏன் தமிழின் பாதிப்பு இருக்கிறது… போன்ற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளிக்கிறது. இந்த ஹிந்து அடையாளம் நியூஜிலாந்தைக்கூட இணைத்துள்ளது! நியூஜிலாந்தின் பழங்குடி மக்களான மாவோரிக்கள் வில்லியம் கொலென்ஸோ என்கிற பிராடெஸ்டண்டு மிஷனரிக்கு (1836) அன்பளிப்பாக்க் கொடுத்த ஆலய மணியில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. (Ref: –http://www.tepapa.govt.nz/ResearchAtTePapa/FAQs/Pages/History.aspx#tamilbell )

  தமிழ் என்பது ஹிந்து; தமிழ் கலாசாரம் ஹிந்து கலாசரம்; தமிழ் பண்பாடு ஹிந்து பண்பாடு; தமிழ் பாரம்பரியம் சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் தோன்றி வளர்ந்த வேத நாகரிகத்தின் தொடர்ச்சியே!

  (முற்றும்).


 8. M.Raviendranathan on May 24, 2013 2:17 pm

  தமிழ்ச்செல்வனுக்கு எனது அனுதாபங்கள். சைவமும் தமிழும்தான் தமிழர்கழுடைய பாரம்பரியம் அந்த ஒதும் மொழியாக சங்க காலத்தில் இருந்த தமிழ் வார்த்தைகளை எடுத்துத்தான் இன்றைய பூசாரிகள் ஆலயங்களில் ஓதி வருகின்றார்கள். இந்து என்பது 16ம் நூற்றாண்டில் உணவுதேடி அலைந்து தமிழகக்கரையோரம் ஒதுங்கி பின்னர் தமிழர்களை ஆட்சி செய்த அய்ரோப்பியர்கள் சூட்டிய பெயர்தான் இந்து என்பது கூடத்தெரியாமல் வரலாறு பேசாதீர்கள் தமிழர்கள் எதனால் சமயங்கள் மாறினார்கள் இந்து வெறிபிடித்தவர்கள் பள்ளா பறயா சக்கிலியா செருப்புப்பொட்டு நடக்காதே கிணத்தில் தண்ணி அள்ளாதே குடை பிடித்து நடக்காதே நாங்கள் இருக்கும் இடத்தில் இருக்காதே என்றும் பெண்கள் மேலாடை போடாதே நாங்கள் உன் மார்பகங்களைப்பார்க்க வேண்டும் என்றும் தாசி குலத்தை உருவாக்கியவர்கள் இந்துவெறி பிடித்தவர்கள்தானே கத்தோலிக்க மத்தத்தைப் பரப்பவென்று வந்தவர்கள்தான் தமிழ்ப்பெண்கள் மார்பகக்கச்சை அணிவிக்கப்போராடினார்கள் உரிமை பெற்றுக்கொடுத்தார்கள்.ஜி யூ போப் எங்கின்ற பாதிரியார்தான் திருக்குறளை உலகமறியச்செய்தவர். திருச்சியில் இருக்கும் தாயுமானவர் யார்? உ.வே.சாமிநாதய்யரை நாங்கள் தலை வணங்குகின்றோம். ஏன் தெரியுமா?தமிழ் ஏடுகளை தாங்கள் குளிர்காய நெருப்பில் போட்டு எரித்தபோது அவர்கழுக்கு சாமரை வீசிய ஆரியர் எங்கின்ற பெயரிலே வெள்ளைக்காரனுக்கு குனிந்தவர்கள் செய்த இழிவான செயலைக்கண்டித்தவர் மட்டுமல்ல அயோக்கியர்களை எதிர்த்து தமிழ் மொழியை பதிப்பிக்க உதவியவர் எங்கின்ற வகையிலே

  உலகத்தமிழ்த்தந்தை சேவியர் தனிநாயகம் தன் தனிமுயற்சியிலே தான் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை அதுவும் யுனெஸ்கோவின் ஆதரவில் நிறுவினார் அதன் பின் ஒரு கத்தோலிக்கன் தமிழுக்கு தொண்டாற்றுகின்றான் நாமெல்லம் அடிபட்டுப்போய்விடுவோம் எங்கின்ற ஆதங்கத்தில்தான் பின்னர் மற்ரவர்கள் இனைந்து கொண்டார்கள். தென்னிந்தியாவில் உள்ளவர்கள் தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் உண்டு இல்லைஎன்று மறுக்கவில்லை ஆனால் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியவர்கள். ஆறுமுக நாவலவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்தான் ஆனால் அவரை வடலூர் வள்ளலாருக்கு எதிராகப் பயன்படுத்தியது யார்? நீங்கள் சொல்லும் இந்து வெறியர்கள் இறுதியில் வள்ளலாரிடம் நாவலர் தோற்றுப்போனாரே. என்ன ஆனது அவரது திறமை. நாயன்மார்களுள் ஒருவராக வேண்டியவர் நாறிப்போனார் சாதியை உரைத்து. வள்ளுவர். இளங்கோ. போன்றோரை அன்றும் இன்றும் தமிழர்கள் என்று கூறுகின்றது தமிழுலகம் ஆனால் அன்று இவர்கலை சம்ணர்கல் என்று ஒதுக்கியது யார் இந்து வெறி பிடித்தவர்கள்.

  நான் ஒரு ஆதிசைவப் பரம்பரையாச் சேர்ந்த்வன். சைவக்காரன் இந்து என்று சொல்வதை அடியோடு வெறுப்பவன். இலங்கையிலே பேராதைப் பல்கலைக்கழகத்தில் கடையாற்றிய போது புத்தகோயில் அமைய இருந்த இடத்திலே முருகன் ஆலயம் அமையப்போராடி முருகன் ஆலயம் அமைத்துத்தந்தவர் தனிநாயகம் அடிகளார். இன்றும் சாட்சிகள் உண்டு முழுக்க முழுக்க சைவப் பரம்பரையைச் சேர்தவர் தனிநாயகம் அடிகளார். தமிழை தன் உயிராக மதித்தவர் அவர் உலகமொழிகள் ஆராய்ச்சி நடத்துவதை அறிந்து பெருமை மிக்க என் தாய் மொழியில் புதைந்து கிடக்கும் உயிருள்ள கருத்துக்களை உலகறியச்செய்ய வேண்டும் என்று தனக்குக்கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை தாய் மொழிக்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்துப் பெரும்பாடு பட்டவர் தனி நாயகம் அடிகளார் அவர் பற்றிப்பேசுவதற்கு இன்று எவருக்கும் அருகதை கிடையாது. உண்மைநிலை தெரியாமல் கத்தோலிக்க நாடு அமைக்கப் பாடுபடுவதாகக்கூறும் இவரை தமிழ்ச்செல்வன் என்று கூறவே என் நாக்கூசுது

  தமிழகத்தை திராவிடக்கட்சிகளிடம் இருந்து உங்களால் காப்பாற்ற முடியாதது யார் குற்றம் கிறிஸ்தவர்களை உயிரோடு எரிக்கும் மனிதாபம்ற்ற செயலை செய்யும் இந்தியர்கள் குற்றமா? தமிழர்கள் குற்றமா? கன்னடத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டால் ங்குரல் கொடுக்கும் நாகற்கம் திர்யாதவர்கல் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது குரல் கொடுக்க வக்கற்றவர்கள் இப்போது கத்தோலிக்க நாடு அமைக்க எண்ணுவதாகச் சொலவது வெட்கமாக இல்லையா இவர் சொல்வது போன்று கத்தோலிக்க நாடு அமைக்கவேண்டும் என்று வத்திக்கானிடம் இன்தக்கத்தோலிக்கர்கல் கேட்டிருந்தால் எப்பொதே அமைந்திருக்குமே உள்ளூர் விவகாரமும் தெரியாது இந்து என்றால் எப்படி உருவானதென்றும் தெரியாது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை என்ன என்பதும் தெரியாது.

  நியூசிலாந்தில் தமிழ் மொழி பதித்த மணி எப்படி வந்ததென்பதும் தெரியாது.அந்த தமிழ் மொழி பதித்த மணிபற்றி சங்கானையைச்சேர்ந்த ஆசிரியர் தாமோதரம்பிள்ளை அவர்கள் ஆய்வு செய்து ஓரு புத்தகமே எழுதியிருக்கின்றார். நியூசிலாந்துப் பத்திரிகைகளிலும் செய்தி வந்திருக்கு அந்த மணியை தமிழ் இஸ்லாமியர்கள் படகில் போனபோது விட்டு வந்ததாக ஒரு தகவல் உண்டு ஆனால் அந்த மணி அங்கு ஆட்சி செய்த தமிழர்கள் பாவித்ததாகவும் ஒரு செய்தி உண்டு உண்மை இவ்வாறிருக்க வரலாறு தெரியாமல் கிறுக்காதீர்கள்.

  தமிழும் சைவமும் தழைத்தோங்க வேண்டும் அப்போது தான் தமிழன் தலை நிமிர முடியும். கத்தோலிக்க பாதிரிமார்கள் தமிழை உலகறியச் செய்ததுபோல் எந்த இந்துப் பூசாரியாவது செய்துள்ளார்களா? இருந்தால் வாருங்கள். விவாதிப்போம் உலகின் எந்த மூலைக்குக் கூப்பிட்டாலும் நான் வரத்தயார். தமிழனாக சைவனாக வாழ விரும்பும் வாழ்ந்து கொண்டிருக்கும். ம.இரவீந்திரநாதன்.


 9. M.Raviendranathan on May 24, 2013 3:54 pm

  மேலே கேட்கப்பட்டத்துக்குத்தான் கருத்துச்சொல்ல வேண்டுமே தவிர தமிழ்செல்வன் போன்றோரின் கருத்துக்கள். ஏற்புடையதல்ல. உலகத் தமிழ்த்தந்தை சேவியர் எஸ்.தனிநாயகம் அடிகளாருடய நூற்றாண்டு விழாவை 29/09/2012ல் பிரான்சில் நடத்தியவர்கள். எங்கின்ற வகையில் உங்கள் நியாயமான கேள்விக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளோம். விழாகுழுத்தலைவர் என்கின்ற வகையில் நாங்கள் இந்த விழாவை லாப நோக்கமோ அல்லது பெயர்பெற வேண்டும் என்கின்ற எண்ணமோ கிடையாது. சத்தமில்லாமல் கவியரசர் கண்ணதாசன் பெயரில் கடந்த 25ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட சங்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிரான்சில் பிரெஞ்சுப்பள்ளிகளீல் கல்வி கற்கும் தமிழ்ப்பிள்ளைகளை நல்ல மதிப்பெண் பெற்றவர்களை அழைத்து பாராட்டி சான்றிதழ்கள் வழங்குவதோடு தமிழ் மொழியை பேசுவதற்கும் ஊக்கம் கொடுக்கும் பணியைச்செய்து வருகின்றோம்.

  எனது சிறு வயதில் எனது தகப்பனார் தனிநாயகம் அடிகளார் பற்றியும் அவர் தமிழ் மொழிக்குச்செய்த தோண்டு பற்றி சொல்லியிருந்ததும் நானாகவே அவர் சம்பந்தமாக தேடிய விபரங்கழும் எனக்கு அவருடைய சேவை மிகவும் அப்பழுக்கற்ற சேவை என்பதை உணர்த்தியதும் எனக்கு அவர் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்தியது. எமது சங்கத்தினருடன் கலந்து ஆலோசனை நடாத்தினோம். எமது அடுத்த சந்ததியினரிடம் இவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு பற்றி கொண்டு செல்ல வேண்டும். என்கின்ற எண்ணத்தை ஏற்றுக்கொண்டு அனைவரும் ஏகமனதாக ஒப்புக்கொண்டபின்புதான் நூற்றாண்டு விழா செய்யமுன் வந்தோம். புலம்பெயர் தேசத்தில் பலருடன் கலந்து ஒத்துழைப்புக் கேட்டோம். இங்குள்ள அமைப்புக்களிடம் நாடினோம் யாருமே ஒத்துழைக்க முன் வரவில்லை ஒருசில உணர்வாளர்களைத்தவிர அப்படியிருந்தும் உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து நடாத்துவதாகவே விளம்பரப்படுத்தினோம். முயன்றோம். முயற்சி வெற்றியளித்தது அப்படியிருந்தும் மக்கள் எதிபார்த்த அளவு வருகை தரவில்லை. ஆனாலும் நாங்கள் ஆரம்பித்து வைத்தோம் இன்று உலகரங்கில் பல நாடுகளில் நூற்றாண்டு விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

  20ம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச்செய்தவர் தனிநாயகம் அடிகளார் ஆங்கிலத்தில் தமிழின் சிறப்பை கொண்டு சென்றால்தான் மற்றவர்கள் அறிந்துகொள்ளச் செய்ய முடியும் என்பதை உணர்ந்து செயல்ப்பட்டார் வெற்றியும் கண்டார். இன்று உலகரங்கில் tamil study என்று ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கின்றது என்றால் அதுக்கு வித்திட்டவர் எங்கள் தனிநாயகம் அடிகளார் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். உலகெங்கும் உள்ள சர்வகலாசாலைகளில் தமிழ்ப்படிப்பு நடந்து கொண்டிருக்கின்றது பல மொழி ஆய்வாளர்களின் மொழி ஆய்வுகழுடன் சம அந்தஸ்துப்பெற்று நிலைத்து நிற்கின்றது தமிழ் மொழி. அது எமது தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால்தான். அய்ரோப்பிய மொழிகள் உட்பட 26 மொழிகளில் பயிற்சியும் 18 மொழிகளில் பாண்டித்தியமும் பெற்றவர் தனிநாயகம் அடிகளார் என்று அவருடன் பணியாற்றியவர்கள் மட்டுமல்ல அவரிடம் பயின்றவர்கழும் குறிப்பிடுகின்றார்கள். உதாரணமாக மலேசியப் பலகலைக்கழகத்தில் அன்று தனிநாயகம் அடிகளார் ஆற்றய இந்தியவியல் துறையில் இன்று பணியாற்றிக் கொண்டிருக்ககும் பேராசிரியர். மதிப்புக்குரிய சிங்காரவேலு. சச்சிதானந்தம். jsm.ma.phd.llb.clp. அவர்களை நேரில் சந்தித்தபோது தகவல் தந்தார்.

  அவர் மட்டுமல்ல அன்று தனிநாயகம் அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்ட TAMIL CULTUR AND CIVILIZATION என்கின்ற இதழை இணையத்தில் கலிபோர்நியாவில் இருந்து நடாத்தி வரும் புலவர் முத்து என்று அழைக்கப்படும் FRANCIS S MUTHTHU.Phd அவர்கழும் பகிர்ந்து கொண்டார்கள். பிரான்சில் வாழ்ந்து 2009ல் காலமாகிவிட்ட செக்கஸ்லவாகிய நாட்டைச் சேர்ந்தவரும் தனிநாயகம் அடிகளாருடன் இணைந்து நான்கு தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும் உதவியவருமாகிய தமிழ்ப்பண்டிதர் KAMIL.V.ZVELABIL. இவர் பல தமிழருடைய வாழ்வியலை ஆய்வு செய்தது மட்டுமல்ல முருகனுடைய பிறப்பையும் ஆய்வு செய்தவர். பல அய்ரோப்பிய மொழிகளிகளில் தமிழருடைய சிறப்பை நூல்களாக வெளீயிட்டுமுள்ளார். இவரும் தனிநாயகம் அடிகளார் பற்றி பெருமையாகக் குறிப்பிடுகின்றார்

  இப்படிப்பலர் இதைவிட என்ன சாட்சி வேண்டும். விழா நாடாத்தினோம் வெற்றியும் கண்டோம். ஆனால் தமிழகத்தில் உள்ள சிலருக்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்திருக்கின்றது. நாங்கள் அமுக்கி வைத்திருந்த தனிநாயகத்தின் செயல்ப்பாட்டை உலகத்த்மிழர் அறியும்படி செய்து விட்டார்களே ஈழத்தமிழன்தான் தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச்செய்தவன் என்ற உண்மை வெளி வந்து விட்டதே என்று இதை நான் சொல்ல வில்லை தமிழகத்தைச்சேர்ந்த ஒரு பேராசிரியரே குறிப்பிட்டார். தயங்காமல் சொல்கின்றேன் சொம்மொழியாவதற்கு வித்திட்டவரே எங்கள் தனிநாயகம் அடிகளார்தான். காரணம் சொம்மொழி மாநாட்டில் தனிநாயகம் அடிகளாருக்கு அரங்கம் வைக்க வில்லை ஏன் வைக்கவில்லை அவர்தான் இதற்கு வித்திட்டவர் என்பதை கண்டிப்பாகப்பேசியே ஆகவேண்டுமே பேசினால் மு.கருணாநிதியின் பித்தலாட்டங்கள் வெளிப்பட்டு விடுமே! அதனால்தான் சொல்கின்றோம் நாங்கள் நடாத்தியது ஈழத்தமிழனின் சிறப்பான செயல்ப்பாட்டை அடுத்த எமது சந்ததிக்குச் சொல்லியே ஆகவேண்டும்.

  அன்று சிறப்பாகச்செயல்ப்பட்ட ஈழத்தமிழினம் ஏன், இன்று செயல்ப்பட முடியாமல் நிற்கின்றது. இந்த நோக்கத்தில்தான் தனி நாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை ஆரம்பித்து வைத்தோம். நாங்கள் பற்ற வைத்த தீ இன்று உலகளவில் எல்லோரையும் தனிநாயகம் அடிகளார் பற்றிப்பேச வைத்திருக்கின்றது. இன்று தமிழகத்தில் பல பதிப்பகத்தினர் போட்டி போட்டுக்கொண்டு தனி நாயகம் அடிகளாரின் நூல்களை வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தனிநாயகம் அடிகளாரின் விழாக்கள் தொடரும் அவர் ஆற்றியது போன்று மீண்டும் ஒருவன் தமிழுக்குத் தொண்டாற்ற வரும்வரை தேடுவோம் நிச்சயமாக தமிழ் மொழியின் சிறப்பை அடுத்த சந்ததியினரிடம் கொண்டு செல்ல எமமால் ஆன முயற்சிகளைச் செய்வோம். தமிழ்த்தாய்க்கு முடிசூட்ட ஆன செயல்ப்படுகள் அனைத்தும் தொடரும் எந்தலாப நோக்கமும் அரசியலும் கிடையாது.

  நன்றியுடன்.
  ம.இரவீந்திரநாதன்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு