அண்ணை ரைட் புகழ் கே.எஸ்.பாலச்சந்திரன் காலமானார்.


ksஅண்ணை ரைட் ஓரங்க நாடகத்தின் மூலம் புகழ்பெற்ற பிரபல கலைஞரும்,  எழுத்தாளருமான கே.எஸ்.பாலச்சந்திரன் நேற்று புதன்கிழமை (26) கனடாவில் காலமானார்

யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டியில் ஜுலை 10 1944 இல் பிறந்த பாலச்சந்திரன் நாடக, திரைப்படக் கலைஞரும் எழுத்தாளரும் உள்நாட்டு இறைவரித்திணைகளத்தில் வரி உத்தியோகத்தராக பணி புரிந்தவருமான இவர் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார்.

இலங்கை வானொலி நடிகர்களில் ஒருவரான இவர் ஏறக்குறைய 20 ஆண்டுளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, தணியாத தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தார். இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.

1965ல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய ‘புரோக்கர் பொன்னம்பலம்’ என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990ல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். வரலாறு, சமுக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர்.

இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம்,  Blendings  (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்)ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள் மென்மையான வைரங்கள், சகா என் கண் முன்னாலே, 1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.

தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகைகளில் ‘மலர் மணாளன்’ என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியதோடு, சிரித்திரன் இதழில் பல ‘சிரிகதை’களை எழுதியுள்ளார். தினகரன், ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளில் திரைப்படம், விளையாட்டுத் துறை தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதினார். ஐரோப்பாவில் வெளிவரும் ‘ஒரு பேப்பர்’ என்ற பத்திரிகையில் ‘கடந்தது..நடந்தது’ எனும் நகைச்சுவை கட்டுரைத் தொடரையும், கனடாவில் ‘தாய் வீடு’ பத்திரிகையில் வாழ்வியல் சம்பந்தமான கட்டுரைத் தொடரையும், ‘தமிழ் ரைம்’ சஞ்சிகையில் ‘என் கலைவாழ்வில்’ என்ற அனுபவத்தொடரையும் எழுதியவர். தாய்வீடு பத்திரிகையில் , ‘வாத்தியார் வீட்டிலிருந்து வான்கூவர் வரை’ என்ற தொடரையும், ‘தூறல்’ என்ற காலாண்டு சஞ்சிகையில் ‘என் மனவானில்’ என்ற தொடரையும் எழுதி வந்தார்.

இறுதிக் காலத்தில் கனடாவில் வாழ்ந்து வந்த போது ஒரு நாவலையும் எழுதியிருந்தார். கலைத்தாயின் பெரும் பிள்ளைகளில் ஒன்றை இழந்து நிற்கிறோம். அன்னாரது குடும்பத்தின் துயரத்தில் பங்கு கொள்கிறோம்!

உங்கள் கருத்து
  1. சாந்தன் on February 27, 2014 7:07 am

    இவரின் அண்ணை ரைற் நாடகம் ரேப் ரெக்கோடர் (ஸ்பூல் வகை – Open Reel) வந்தபோது யாழில் பிரசித்தம். இவரின் இந்த நாடகத்தை யாழ்ப்பாணத்தில் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் திறந்த வெளி அரங்கில் கேட்டதாக மங்கலான நினைவு. சரியாகத் தெரியவில்லை. தமிழாராய்ச்சி மாநாட்டின் நினைவுகள் இறுதி நாள் கொடூரத்தினால் நினைவுகளில் பின் தள்ளப்பட்டு விட்டன.
    எப்போதெல்லாம் ஸ்பூல் ரேப் ரெக்கோடர் பற்றி பேச்சு வருகிறதோ அப்போதெல்லாம் இவரின் அண்ணை ரைற் ஞாபகம் வரும்.
    ஆனாலும் அவரை அமெரிக்காவில் காணும் சந்தர்ப்பத்தில் அண்ணை ரைற் பற்றிய ஆர்வமும் அகன்று விட்டதால் அதைப்பற்றி அவரிடம் கேட்கத்தோன்றவில்லை.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு