சர்ச்சைக்குள்ளாகியுள்ள ‘இனம்’


727471af-846f-4658-8239-5e676d2277611தற்போது தமிழ்நாட்டில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள ‘இனம்’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் திரையிடுவதை நிறுத்துவதாகவும், அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் அத்திரைப்படம் வாபஸ் பெறப்படுவதாகவும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (31-03-2014) வெளியிட்ட அறிக்கையில்,

‘இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன். உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைந்து கொள்வதையும் எப்போதும் கடமையாக வைத்திருக்கிறேன். தற்போது தமிழ் மண்ணின் மீதான எனது அன்பை கேள்விக்குள்ளாக்கும் மாதிரியான தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கசப்பான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

அடிப்படையில் சினிமாவின் தீவிர காதலனாக, இலாப நட்டங்களையும் தாண்டி நல்ல சினிமாக்களையும், படைப்புகளையும் முன்னெடுப்பதை பெருவிருப்பமாக செய்து வருகிறேன்.அப்படி ஒரு சினிமா நேசனாகவே ‘இனம்’ படத்தையும் வாங்கி வெளியிட்டேன். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது. அது சினிமாவாக முக்கியமான முயற்சியாக தோன்றியதாலேயே வாங்கி வெளியிட்டேன். அது சிலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன்.

அரசியல் ரீதியிலான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. இதன் பொருட்டு தனிமனித தாக்குதல்களையும், தனிப்பட்ட முறையில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்தேன். யாருக்காவும் எதற்காகவும் அச்சப்படுபவனல்ல நான்.
ஆனால், இந்த தேசத்தின் மீதும், தமிழ் மண் மீதும், மக்கள் மீதும் மிகப் பெரிய அக்கறை வைத்திருக்கிறேன். எனவே, தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க ‘இனம்’ படத்தை நான் நிறுத்துகிறேன்.  ’திருப்பதி பிரதர்ஸ்’ சார்பாக வெளியிடப்பட்ட ‘இனம்’ திரைப்படம் இன்று முதல் எல்லா திரையரங்குகளில் இருந்தும் மீளப் பெறப்படும்.
இதனால் ஏற்படும் நட்டத்தைத் தாண்டியும், மனித உணர்வுகளையும் இந்த மக்களையும் நேசிப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறேன்’ என்று லிங்குசாமி கூறியுள்ளார்.

enamதமிழர்களுக்கு எதிரான படமாக இனம் உருவாகவில்லை என தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் தெரிவித்தார். தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பின் ஒரு படத்துக்கு எதிராக வரும் புகார்கள் படைப்புச் சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்.

இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ; சிவன் இயக்கியுள்ள ‘இனம்’ திரைப்படத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை தவறாக சித்திரிக்கும் விதத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக சில தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, வி.சேகர், பாலாஜி சக்திவேல், சசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் இது குறித்து கூறுகையில்,

‘சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இனம்’ திரைப்படத்தை இயக்குநர் சங்கத்தைச் சேரந்த பல உறுப்பினர்கள் பார்த்துள்ளனர். இத்திரைப்படத்தில் தமிழ்; சமூகத்துக்கு எதிராகவோ, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவோ எந்தவொரு காட்சியும் இல்லை என்பதுதான் அவர்களுடைய ஒருமித்த கருத்தாக உள்ளது.

தமிழ் சமூகத்துக்கு எதிராக எதிர்மறை கருத்துகள் எழுந்த நேரங்களில் எல்லாம் திரைத்துறை முன் நின்றுள்ளது. அவ்வாறு இருக்கையில் தமிழ் சமூகத்துக்கு எதிரான எந்தவொரு கருத்துக்கும் நாங்கள் துணை நிற்க மாட்டோம். இனம் திரைப்படம் ஈழப் போரின்போது நடந்த சம்பவங்களின் முழுப் பதிவாக உருவாகியுள்ளது. இப்படைப்பு தமிழர்களைக் கடந்து உலக மக்களைச் சென்றடைய வேண்டும். தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பின்னர் ஒரு படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. இவ்வாறு எழும் புகார்கள் படைப்புலகத்துக்கு எதிரானது. படைப்புச் சுதந்திரத்துக்கு எதிரானது’ என்றார் விக்ரமன்.

முன்னதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ‘இனம்’ திரைப்படம் தமிழர்களின் இனப் போராட்டத்தை கொச்சைப்படும் விதத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் தடை விதிக்க கோரி புகார் மனு அளித்தனர்.
புதுச்சேரியில் இத்திரைப்படம் திரையிடப்பட இருந்த தியேட்டர் மீது கடந்த (28-03-2014) வெள்ளிக்கிழமை கல்வீசித் தாக்கி, விளம்பரப் பதாகைகளை எரித்து சிலர் குழப்பம் விளைவித்தனர்.

புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் திரைப்படம் திரையிட இருந்தது. நண்பகல் 12 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் நேரத்துக்கு முன்பாக அங்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் திரண்டனர். படத்தை திரையிடக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலர் தியேட்டரை நோக்கி கல்வீசினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் தியேட்டருக்குள் ஏறிக் குதித்து உள்ளே சென்று, படத்தின் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருந்த பதாகைகளை தீயிட்டனர். மேலும், போஸ்டர்கள் அனைத்தையும் தார் மூலம் அழித்தனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பில் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘இனம்’ திரைப்படத்தில் தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இலங்கை இறுதிகட்டப் போரில் சிறுவர், சிறுமியர் காதல் செய்துகொண்டிருப்பது போன்ற காட்சிகள் அமைத்திருப்பது தமிழர்கள் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது.

இலங்கை இராணுவத்தால் அப்பாவி மக்கள் 1.5 இலட்சம் பேருக்கும் மேல் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் ‘இனம்’ படத்தில் தீவிரவாதிகள் போல் சித்தரித்துள்ளனர். ஈழத்தமிழருக்கு ஆதரவாக எடுக்கப்பட்டது போல் விளம்பரப்படுத்திவிட்டு இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாக இப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது தக்க நடவடிக்கை எடுத்து படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். -இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.                                                                                                                                        233a91c1-6240-4065-b955-8764642d0f0e_S_secvpf

ஆனால், இத்திரைப்படத்தைப் பற்றி நக்கீரன் இதழில் வெளியான விமர்சனத்தில்-
‘ஈழத்தில் நடந்த கொடுமைகளை சொல்ல வார்த்தைகளே இல்லாத சூழ்நிலையில், போரின் போது கை கைட்டி வேடிக்கைப் பார்த்த உலக சமுதாயத்தின் முகத்தில் அறைவது போல ‘இனம்’ என்ற படைப்பு வெளியாகி இருக்கிறது.
இப்படத்தைப் பொறுத்தவரை, அதை ஒரு கதையாக வார்த்தைகளால் அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது. அது ஒரு வலி! அடையாளத்தை இழந்து, குடும்பத்தை இழந்து, உடமைகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்து இதயத்தில் ரணங்களையும், வலிகளையும் மட்டுமே சுமந்து கொண்டிருக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளின் சொல்ல முடியாத சோகத்தை பதிவு செய்த ‘இனம்;’ படத்தை வெளியிட முன் வந்த லிங்குசாமிக்கு ஒரு பெரிய சல்யூட்!’ -இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த திரைப்படத்தை வெளியிட்டு அதனைப் பலரும் பார்க்கின்ற போதே உண்மையான கருத்துக்கள், விமர்சனங்கள் வெளிவர முடியும். சரி பிழைகளை மக்களே தீர்மானிப்பார்கள். அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் போனது துரதிஸ்ட வசமானதே.

-விமலன்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு