தேசிய விருது பெற்ற ‘ஷிப் ஒஃப் தீசஸ்’


 இந்தியாவின் 61-வது தேசிய விருதுகளில், சிறந்த படத்துக்கான விருதைத் தட்டிச் சென்றுள்ள ‘ஷிப் ஆஃப் தீசஸ்’ படம் குறித்த பார்வை…

564xNxship2_1847279g.jpg.pagespeed.ic.kh8GUB1B_a

யாரோ ஒருவர் திரையில் ஆடுகிறார், காதல் செய்கிறார், சண்டை போடுகிறார், பன்ச் வசனம் பேசுகிறார், நாயகியை மணம் முடிக்கிறார். இதைப் பார்த்து நான் அடைந்த பலன் என்ன? எதற்காக என் நேரத்தை, பணத்தை விரயம் செய்கிறேன்?  இந்த படம் பார்த்து நான் கொண்டு செல்லப் போவது என்ன?

இந்தக் கேள்விகள் உங்களுள்ளே எப்போதாவது எழுவதுண்டா?

பொருளற்ற மசாலாக்கள் போரடித்துவிட்டதா? அர்த்தமுள்ள சினிமாவினை தேடி வருகிறீர்களா? கருத்திற்கு விதை போடும் ஒரு சினிமா – நல்ல சினிமா. அதுவே உன்னத சினிமா. இந்திய சினிமாவில் வர்த்தகத்திற்கு வளைந்து கொடுக்காத உன்னத சினிமாக்களை தேடி வருகிறீரா? முதலில் கையைக் கொடுங்க பாஸ், உங்களை போன்றோரைத் தான் தேடி வருகிறேன்.

கிரேக்க மன்னன் தீசஸ் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை வைத்து உருவாகிய ஒரு சிந்தனை தான் “ஷிப் ஆப் தீசஸ்”.

ஒரு கப்பலில் உள்ள பல பாகங்கள் உடைந்து போகிறது, புதிய பாகங்களால் உடைந்த கப்பல் சரி செய்யப்படுகிறது. இப்போது சீர் செய்யப்பட்டது அதே கப்பல் தானா? இல்லை புதிய கப்பலா? உடைந்த அக்கப்பலின் பாகங்களை வைத்து இன்னொரு கப்பல் அமைக்கப்படுகிறது. இப்போது அமைக்கப்பட்டது புதிய கப்பலா? இல்லை இது தான் உண்மையான கப்பலா?

இந்த சிந்தனையில் கப்பலிற்கு பதிலாக மனிதனை வைத்து உயிர், வாழ்க்கை, கொள்கை, சமயோசிதம் இப்படி பல தரப்பட்ட எண்ணங்கள் விதைக்கப்பட்ட ஒரு படைப்பு தான் ‘ஷிப் ஆப் தீசஸ்’.

இக்கதையில் மூன்று நாயகர்கள். மூன்று பேருக்கும் வாழ்க்கை பற்றிய வேறுபட்ட பார்வை, ஒவ்வொருவருக்கும் தனிக் கொள்கை. நாம் வாழ்க்கையில் கடந்த, கடக்கவிருக்கும் யாராக வேண்டுமானாலும் இம்மூவர் இருக்கலாம்.

ஒருவர் ஓர் இடத்தில் இருக்கும் சப்தத்தை வைத்து அவ்விடத்திலிருக்கும் சூழலை மனதில் பதிவு செய்து அதை காட்சிப்படுத்தும் பார்வையற்ற பெண் போட்டோக்ராஃபர். பார்வையல்லாதவர் தான் இவர் என்றாலும் இவர் பார்க்கின்ற உலகத்தை, இவரது பார்வையை இவர் எடுத்த புகைப்படங்கள் பிரதிபலிக்கும். தன் கணவனே பாராட்டினாலும் தான் எண்ணிய வெளியீடு புகைப்படத்தில் கிட்டாத பட்சத்தில் அதை கிழித்தெறியவும் தயங்காத குணம் இவருக்கு. பார்வையற்ற இவருக்கு ஒரு மனிதனின் தானத்தால் பார்வை வருகிறது.

மற்றொருவர் ஒரு பிட்சு. தன்னைப் போன்று பிற உயிர்க்கும் இவ்வுலகில் வாழ அருகதை உண்டு என நினைக்கும் சிந்தனை இவருக்கு. மாத்திரை, மருந்து உருவாக்குவதில் எண்ணற்ற விலங்குகள் இரையாக்கப்படுவதையும், வதைபடுவதையும் எதிர்த்துப் போராடுகிறார் இவர்.

லிவர் சிரோசிஸ் நோயினால் இந்த பிட்சுவின் உடல் நலம் தீவிரமாக பாதிக்கப் படுகிறது. மருந்துகள் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மருத்துவர் எச்சரித்தும் தன் கொள்கையிளிருந்து வழுவாது நிற்கிறார். வலி உயிரை வாட்டுகிறது. தேகம் கரைகிறது, இருந்தும் எண்ணத்தில் சிதைவில்லை.

தான் கொண்ட கருத்திற்காக உலகத்தை சிதைக்கும் தீவிரவாதிக்கும், தன்னையே சிதைத்துக் கொள்ளும் உனக்கும் என்ன வித்தியாசம் என்று நண்பர் கேட்கிறார். உயிர் வாழத்தான் கொள்கை. உயிரே போகையில் கொள்கை கொண்டும் என்ன பயன்? உன் கொள்கை உலகத்தில் என்ன வித்தியாசம் உருவாக்கும்? என்று அவர் கேள்வி கேட்கிறார்.

‘எதுவும் இல்லாததற்கு ஏதோ இருக்கிறது என்ற வித்தியாசம் உண்டாக்குமே அது போதும்’ என்று பிட்சு பதிலளிக்கிறார். நாட்கள் நகர நகர, உடல் நலம் மோசமடைய கடைசியில் கொள்கையும் சிதைகிறது மருந்து எடுக்க ஒப்புக் கொள்கிறார்.

564xNxship-of-theseus2_1847278g.jpg.pagespeed.ic.0Zh5UlhISP

மூன்றாவது நபர் முதல் இருவரிலிருந்து வேறுபட்டு நிற்பவர். இவருக்கென்று கொள்கையும் கிடையாது வாழ்க்கை பற்றிய பார்வையும் கிடையாது. ஸ்டாக் ப்ரோக்கராக இருக்கும் இவ்விளைஞன் தன் பாட்டியை பார்த்துக் கொள்ள அவளுடன் மருத்துவமனையில் தங்குகிறான். சமூக அக்கறை கொண்ட இவரது பாட்டி, உயிர்கள் பற்றிய பார்வையை, சமுதாயம் மீது செலுத்த வேண்டிய அக்கறையை புகட்டுகிறார்.

நாளிதழில் கிட்னியை அப்பாவிகளிடம் திருடி பிறருக்கு அளித்த மருத்துவர் கைது என்று செய்தி வெளிவருகிறது.

சமீபத்தில் அவருக்கு கிட்னி மாற்று சிகிச்சை செய்த மருத்துவர் கைது செய்யப்பட்ட செய்தி இவருள் கேள்வியை எழுப்புகின்றது. தன் உடம்பில் புகுத்தப்பட்ட கிட்னி வேறொரு அப்பாவியை ஏமாற்றி கிடைத்ததோ? என்ற ஐயம் இவருக்கு பிறக்கிறது. ஒரு தேடல் இவர் மனதினுள் தொடங்குகிறது. தனக்கு தானம் செய்த மனிதர் என நினைத்து ஒருவரை காணச் செல்கிறார்.

‘வேண்டாம், அங்கே போகாதே ஒரு வேளை அவன் உனக்கு புகுத்தப்பட்ட கிட்னியை திரும்பித்தர கூறினால் என்ன செய்வாய்?’ என்று நண்பர் கேட்க ‘கொடுத்திடுவேன்’ என்று பதிலளிக்கிறார். பிறகு நண்பர்களால் தனக்கு புகுத்தப்பட்டது இறந்த ஒரு மனிதரிடமிருந்து எடுக்கப்பட்டதென்று அறிந்து கொள்கிறார். இருந்தும் அந்த அப்பாவி மனிதனுக்கு உதவி செய்ய முன்வருகிறார்.

மருத்துவ பரிசோதனைக்கு சென்ற அம்மனிதர் மருத்துவரால் ஏமாற்றப்பட்டு இரு சிறுநீரகத்தையும் இழந்து நிற்கிறார். இவருக்காக உதவும் பயணத்தில் அவ்விளைஞன் மனதில் சமூக அக்கறை பிறக்கிறது.

கடைசியில் இம்மூவருக்கும் ஓர் இடத்திற்கு வரக்கூறி அழைப்பிதழ் வருகிறது, செல்லும் இடத்தில் ஒரு காணொளி திரையிடப்படுகிறது. அதில் ஒரு மனிதனின் ஆசைகள், கனவுகள் திரையிடப்பட்டிருப்பதைப் பார்க்கும் கதாப்பாத்திரங்களின் உணர்ச்சிகளை நம்மால் உணர முடிகிறது. திரையில் தோன்றிய அவ்விளைஞனின் உடல் பாகங்களே இம்மூவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காட்சிக்குப் பிறகு ‘ஒரு கப்பலில் உள்ள பல பாகங்கள் உடைந்து போகிறது, புதிய பாகங்களால் உடைந்த கப்பல் சரி செய்யப்படுகிறது இப்போது சீர் செய்யப்பட்டது அதே கப்பல் தானா? இல்லை புதிய கப்பலா? உடைந்த கப்பலின் பாகங்களை வைத்து இன்னொரு கப்பல் அமைக்கப்படுகிறது இப்போது அமைக்கப்பட்டது புதிய கப்பலா? இல்லை இது தான் உண்மையான கப்பலா?’ என்ற சிந்தனை வைக்கப்பட்டு படம் முடிகிறது.

அமைதியான சூழலில் பார்த்தால் இப்படத்தில் அமைந்துள்ள அற்புதமான ஒளிப்பதிவு, கதாபாத்திரங்களின் உயிரூட்டும் நடிப்பு, சிந்தனை மிக்க வசனங்கள், நுட்பமான ஒலியமைப்பு கண்டிப்பாக உங்களை நிஜ உலகத்திற்கு அழைத்துச் சென்று அதை பார்க்கின்ற ஆரோக்கிய பார்வையினையும் விதைக்கும்.

சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும் படங்களுக்கிடையே நல்ல சிந்தனைக்கு அசை போடும் ‘ஷிப் ஆஃப் தீசஸ்’ ஓர் ஆத்மார்த்த அனுபவம்.

-சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/CinemaPithan

உங்கள் கருத்து
 1. Murugaiah on February 1, 2015 9:15 pm

  Thank you Jeyabalan & Sothylingam
  Talk about Tamils helping associations and them activities and focus on them actions error.
  This is very important subject for Tamils who living abroad. But need to futher deep discussion
  In this time for Tamil society. Very important research about Hindu temples matter firstly.
  Thank you
  Murugaiah


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு