இலக்கியப் படைப்பாளிகள் மட்டும் தான் எழுத்தாளர்களா? : என்.செல்வராஜா


 

Selvarajah_N_01
ஓய்வுபெற்ற இலங்கை வங்கி அதிகாரியான திரு. சி.குமாரலிங்கம் அவர்களை நேரில்
எனக்குத் தெரியாது. ஆனால் டிசம்பர் 2011,ல் அவர் வெளியிட்ட நூலொன்றை
வாசிக்கும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிட்டியது.

‘உலகமயமாதல்: வாஸ்கொடகாமா
முதல் ஒபாமா வரை’ என்ற தலைப்பில் அவர் எழுதிய 41 ஆக்கங்களை 57 பக்கம்
கொண்ட அவரது சிறு நூல் உள்ளடக்கியிருந்தது.

உலகமயமாதல், முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், உலக வங்கி,
ஐரோப்பிய ஒன்றியம், அபிவிருத்தி, கர்லோ குய்லானி, உலகமயமாதல்-நன்மைகள்
பெருத்தன-தீமைகள் மலிந்தன, சோளம், செவ்விந்தியர், பட்டினி உலகம்,
குளிர்பானங்கள், ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி கண்ணே, சொர்க்கத்திலிருந்து நரகம்
வரை, மார்க்கோ போலோ, வாஸ்கொடகாமா,  Online Computer, மூளை உருவானது, சாதி
உருவானது, உயர்ந்தவர்கள், அழகின் விதிகள், அழகின் பெருமை,  BRIC, பெண் விடுதலை,
அமர்த்திய சென், பொன்னான வாழ்வு மண்ணாகிப் போனால், நான்காவது உலகம்,Jack  of all trades Master of None,உலக வங்கியின் இரண்டு முகங்கள், பயிற்சிப் பட்டறை, சாலை நெடியது, சோறு, பாலஸ்தீன கவிதை, திருமதி டில்மா றவுசெல்ப், வேகநடை, கார்ள் மார்க்ஸ், ஜோர்ஜ் வாஷிங்டன், சேர். வின்ஸ்ரன் சேர்ச்சில், மார்க்கிரட் தச்சர், ஜெனரல் சார்ள்ஸ் டி கோல், சைக்கிள் செயின் ஆகிய 41 தலைப்புகளில் அறிவியல் தகவல்களை கவிதைவடிவில் நம்முடன் அந்த நூல்வழியாக பகிர்ந்துகொண்டிருந்தார்.

இதுவொரு வித்தியாசமான முயற்சி. அறிவியல் தகவல்களை கட்டுரை வடிவில்
வாசித்திருக்கிறோம். கவிதை வடிவில்…? ஒரு சில இளையோர் நூல்களில் சிறுவர்
அறிவியல் தகவல்களை கவிதைவடிவில் முன்னர் சில படைப்பாளிகள் தந்திருக்கிறார்கள்.
ச.அருளானந்தம்என்னும் கேணிப்பித்தன் (அறிவைத்தரும் பாடல்கள்,
அறிவொளிப்பாடல்கள்), செ.யோகராசா (ஈழத்து சிறுவர் அறிவியல் பாடல்கள்),
ஆ.சி.நடராஜா (சிறுவர் சிந்தனைக் கவிதைகள்) என்று நீண்ட ஒரு பட்டியலைப்
போடலாம்.

ஆனால் இவை எவையும் வளர்ந்தோருக்கான ‘சீரியசான’ விடயங்களைத்
தொட்டுச்செல்லவில்லை. சிறுவர்களின் கல்விச் செயற்பாட்டுடன் நேரடியாகப்
பரிச்சயமான விடயங்களுக்கு அப்பால் இந்தச்சிறுவர் அறிவியல் விஷயங்கள்
எட்டிப்பார்க்கவில்லை.

இந்நிலையில், திரு. சி.குமாரலிங்கம் எழுதிய நூல் எனக்கு முக்கியமானதொரு செய்தியைச்
சொல்லியது. உலகமயமாதல் என்ற தனது நூலின் ‘என்னுரை’ யையும் ஒரு
கவிதையாகவே அவர் தந்திருக்கிறார்.
பலர் எழுதும்
கவிதைக்கு பரிசுண்டு
கதைக்குப் பரிசுண்டு
நாவல் (புதினம்) பரிசு பெறுகிறது கட்டுரைக்குப் பரிசில்லையா?
கட்டுரைகளை
கவிதைகளாகத் தருகிறேன்
வாசித்தால் போதும்…
மேலும் தகவல் தேவையா???
என்று அமைகின்றது திரு சி.குமாரலிங்கத்தின் ‘என்னுரை’. இதில் மிக முக்கியமான
ஆதங்கத்தை அவர் பதிவுசெய்திருக்கிறார். உண்மைதான். கட்டுரைகளுக்கு யார்
பரிசு கொடுக்கிறார்கள்?
இலங்கையில் ‘எழுத்தாளர்’ என்றாலே அவர் கவிதை, கதை, நாவல் என்று ஆக்க
இலக்கியம் படைப்பவராகத்தான் இருக்கவேண்டும் என்ற நியதி மேலோங்கியுள்ள எமது
தமிழ்ச் சமூகத்தில் கட்டுரைகளை ஆய்ந்தறிந்து எழுதுபவர்களையோ, என்னைப்போன்ற
நூற்பட்டியல்களைத் தொகுக்கும் நூலியலாளர்களையோ எழுத்தாளர்கள் என்ற
வரையறைக்குள் உள்ளடக்க எமது தமிழ்ச் சமூகம் தயாராகவில்லை. வேண்டுமானால்
‘பன்னூலாசிரியர்’ என்ற பதத்தைப் பிரயோகிப்பதுடன் சரி.

கட்டுரைகளையும் அறிவியல் நூல்களையும் எழுதிக்குவிக்கும் ‘எழுத்தாளர்களையும்’
மதிப்பளித்து ஊக்குவிக்கும் எவ்விதமான முயற்சிகளையும் நாம் இதுவரை எடுக்கத்
தவறிவிட்டோம் என்ற உண்மை சற்று நெருடலாகவே உள்ளது. இன்று நல்ல ஆக்க
இலக்கியங்களுக்கு சஞ்சிகைகளும், ‘வட்டங்களும்’ ‘மையங்களும்’ வருடாந்தம்
பரிசுகொடுத்து வருவதைப்போல எந்தவொரு ‘அமைப்பும்’ அறிவியல்துறையைப்
பலவாறாகப் பிரித்து அப்பிரிவுகளுக்குள் அடங்கத்தக்க சிறந்த படைப்பைத் தேர்ந்து
பரிசுவழங்கும் திட்டமொன்றையும் இன்றளவில் கொண்டிருக்கவில்லை என்றே
நம்புகின்றேன்.

1934 முதல்1964 வரை அறுபதுக்கும் அதிகமான அறிவியல் நூல்களை எழுதிக்குவித்தவர்
கந்தரோடையைச் சேர்ந்த நம்மவர் ந.சி.கந்தையாபிள்ளை அவர்கள். அவரை ஒரு
எழுத்தாளராக ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகள் சமூகம் உள்வாங்கவில்லை. ஈழத்துத்
தமிழ் படைப்புலகம் பற்றிய பட்டியல்களைத் தந்த அன்றைய கனக செந்திநாதனோ,
சில்லையூர் செல்வராசனோ, எப்.எக்ஸ்.சி.நடராசாவோ, ஏன் இன்றைய
நா.சுப்பிரமணியன், செங்கை ஆழியான் போன்றவர்களோ அமரர்
ந.சி.கந்தையாபிள்ளையின் பெயரை தங்கள் நூற் பட்டியலில் சேர்த்துக்கொள்ள
முன்வராமைக்கு அவர் கவிதைகளையோ, கதைகளையோ படைத்திராமை ஒரு
காரணமாகலாம்.

ஆக்க ,லக்கிய-ஜனரஞ்சக படைப்பிலக்கியத்துறை, அறிவியல் சார்ந்த
எழுத்தாளர்களையும் விரிந்ததொரு பரப்பில் உள்வாங்கி, தனியானதொரு பிரிவாக
‘அறிவியல்சார் படைப்பாளிகள்’ என்ற ஒரு பிரிவை உருவாக்கி அவர்களை
இடைக்கிடை ஊக்குவிக்க முனைவதையும் அவதானிக்கமுடிகின்றது. அப்படி ஒரு
துறையாகப் பிரித்து வைப்பதற்கு அறிவியல் படைப்புத்துறை குறுகியதல்ல. எவராவது
முன்வந்து எனது நூல்தேட்டத்தின் பொருளடக்கப் பிரிவை உற்று நோக்கினால் அதன்
பரந்த விரிவை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டத்துறையில் 10000 நூல்களைப் பார்த்துப்
பட்டியலிட்டவன் என்ற வகையில் என்னால் ஒரு ஆதாரபூர்வமான புள்ளிவிபரத்தை
இங்கு வழங்கமுடிகின்றது.

இலங்கையின் இந்தப் பத்தாயிரம் நூல்களின் வெளியீட்டில் 65
வீதமான வெளியீடுகள் கவிதைத்தொகுதி, சிறுகதைத் தொகுதி, நாவல் மற்றும் கலை-
இலக்கிய ஆய்வு என்ற வரையறைக்குள்ளேயே அடங்கிவிடுகின்றன. எஞ்சிய 40 வீதத்தில்
18 சதவீதமான பங்கை சமயப்பிரசுரங்கள் பிடித்துவிடுகின்றன. சமூக விஞ்ஞான,
அறிவியல் துறைகளை 22 சதவீதத்திற்கும் குறைவான அறிவியல் படைப்புகளே
பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இவைகூட பெரும்பாலும், சாமான்ய மக்களின்
வாசிப்புக்கான, அன்றாட உலக நடவடிக்கைகளை அலசும் அல்லது அவை பற்றிய
விரிந்த பார்வையை வழங்கும் நூல்களைவிட ஏதாவதொரு பாடப்பரப்பை ஒட்டிய
கல்விசார் தேவைக்குப் பயன்படுத்தப்படும் நோக்கோடுதான் எழுதி
வெளியிடப்படுகின்றன.

இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமாயின், ‘யாவும் கற்பனை’யற்ற
அறிவியல்நூல்கள் அதிகமாக வெளியிடப்படவேண்டுமாயின் அறிவியல்
படைப்பாளிகளை நாம் உளமார ஊக்குவிக்கவேண்டும். தற்போது கலை
இலக்கியத்துறைக்கான பரிசுகளை வழங்கும் அமைப்புகள் அறிவியல், நூலியல்சார்
நூல்களுக்கு பத்தோடு ஒன்று பதினொன்றாக விருதுகளை வழங்காமல், தீவிரமான
அறிவியல் அறிஞர்குழுக்களின் அனுசரணையுடன் பல்வேறு அறிவியல் துறைகளிலும்
தடம்பதித்து எழுதும் எழுத்தாளர்களது சிறந்த நூல்களுக்கு பரிசுகளை வழங்க
முன்வரவேண்டும்.

இலங்கையில் பல்துறைசார் அறிஞர்கள் அடங்கிய ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு
அவ்வமைப்பின் தீர்வுக்கமைய ஆண்டுதோறும் சிறந்த தமிழ் அறிவியல் நூல்களுக்கான
விருதுகளை வழங்க முன்வரலாம். உளவியல், சமயம், சமூக விஞ்ஞானம், மொழியியல்,
தூய விஞ்ஞானம், பிரயோக விஞ்ஞானம், கலைகள், இலக்கியம், வரலாறு, என்று
பரந்தபட்ட துறைகளில் இலக்கியத்தை மாத்திரம் வளர்த்துவிட்டு மற்றைய துறைகளை
கண்டுகொள்ளாமல் விடுவது நியாயமாகப் படவில்லை.

இந்நிலையில் பூனைக்கு மணி  கட்டுவது யார் என்ற எலிகளின் கேள்வியும் ஒலிக்கத்தான் செய்யும். எங்காவது ஒரு
புள்ளியில் தொடங்கத்தானே வேண்டும்?.

உங்கள் கருத்து
 1. London Suthakini on March 14, 2015 12:42 am

  தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.


 2. அலப்பறை on September 17, 2018 8:42 pm

  எவன் எழுத்தாளன்?
  ஒருவனுமேயில்லை…

  காசுக்கும் பணத்துக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு
  எழுத்தை வியாபாரமாக்கும் வியாபாரிகளுக்கு

  ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் உணர்வுபூர்வமான மொழியோட்டம் விளங்குமா?


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு