பஷீரின் ‘சோர்விலா சொற்கள்’ பாராளுமன்ற உரை- நுால் விமர்சனம் -ரவி சுந்தரலிங்கம்


 

SAMSUNG CSC

• சபையோர்களே,
• எவ்வினத்தவராயினும் தம்மை தமது மக்களுக்காக அர்ப்பணித்த, அர்ப்பணிக்க முன்வந்த தோழர்களே,
• பேச்சாளர்களே,
எனது வணக்கங்கள்.

1. புத்தகங்கள் எவையாக இருப்பினும் அவை மனித சரித்திரத்தினை வகைப்படுத்துவன.
• அவற்றுள் ஊறும் ஓட்டங்கள் என்ன?
• அற்றினாலாகும் வளங்கள் என்ன?

ஆகிய கேள்விகளை மட்டும் கொண்டு ஒரு புத்தகத்தை மீளாய்வது அதனைச் செய்பவனது அடிப்படைப் கடமையாகும்.

2. எந்தவொரு விடயத்தையும் தனது சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாலான நிலைப்பாட்டில் இருந்து கருத்துச் சொல்வது புத்திஜீவியாக அவனது இரண்டாவது கடமையாகும்.

3. அவற்றினை கணிப்புகளுடன் மக்கள் பேரில் எடைபோடுவது மூன்றாவது கடமையாகும்.
4. இவற்றினை தனக்கே உரிய பாண்புகள் வழக்குகளுடன் பண்புடன் ஒப்பேற்ற வேண்டியது அவனுக்கு மட்டுமின்றி அவனைச் சார்ந்த அனைவரையும் குறித்த அவனது பாரிய பொறுப்பாகும்.

முதலில், சுவர் இருந்தாலே சித்திரம் வரையலாம் என்பது விளக்கம். எனவே, எனது மீளாய்விற்கு சுவராக இருப்பவை என்ன என்பது கேள்வி.
அவை,
1. இலங்கை மக்கள்,
2. குறிப்பாக தமிழ்பேசும் சமூகங்கள்,
3. ஈரோஸ்

எனவே இவை மூன்றும்பற்றிய எமது விளக்கங்களை, கருத்துக்களை, விஞ்ஞான தர்க்கீக ரீதியில் துல்லியமாக தரவேண்டியது அவசியம்.

1. இலங்கை மக்களை உயிரியல் ரீதியில் பாகு படுத்த முடியாது.

அதற்காக, வெவ்வேறு காலங்களில் உயிரியல் கலப்புகள் ஏற்படவில்லை என்பதற்கில்லை. இது தீவான எமது நாட்டிற்கு இயங்கையான நியதி.

இங்கிலாந்தில், ஆங்கில மக்களைக் காப்பற்றப் போராடும் அமைப்பின் Hull கிளை அங்கத்தவர் பலர் அரபு, யுக்கிரேயியன் அடிகளானவர்கள் என்று விஞ்ஞானப் பரிசோதனை கூறியது அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.

2. எனவே, இவர்களை வகைப்படுத்துவது முதலாவதாக அவர்களது மொழி.
இங்கும், சிங்கள மொழியின் அதன் கலாச்சாரம் ஆகியவற்றின் ஆரம்ப காலங்களில் தமிழ் மொழியுடன் உள்ள உறவுகள் முக்கியமானவை.

அதற்காக அவை வரைவமைப்பில் ஒன்றானவை என்று கூறவில்லை.

ஆனால் அவையும், தென்னிந்திய இராசதானிகளுடன் நிலவிய உறவுகளும் இன்றைய விரிசல்களுக்கான உயிரியலையும் தந்தன என்பது எமது கருத்து.

3. இவற்றின் மேல், இம் மக்களை வகைப்படுத்துவது மதங்கள் ஆகும்.

மக்களையும் மனிதாபிமானத்தையும் மீறி மதத்தை முதல் நிலைப்படுத்துபவர்கள் மதம்பிடித்தவர்கள், மதத்தினை ஒழுகுபவர்கள் அல்லர்.

‘மதங்கள் இம்மக்களை வகைப்படுத்துகின்றன’, என்பது துணுக்குகளாக இப்புத்தகத்தின் ஓட்டங்களுக்கு துணையாக அமைவதுடன், முக்கிய நேக்கமாகவும் உள்ளது.

4. மக்களை இவ்வாறான இன மத கண்ணோட்டங்கள் இல்லாது பாகுபடுத்துவதும் இணைப்புக்கான முனைப்புகளைத் தருவதும் உழைப்பு.

உழைப்பு என்பது தொழில் அல்ல.

5. இலண்டனின் ஆரம்பித்த ஈரோஸ், ‘மத, இன வேறுபாடு’ என்பதை இரண்டாவது விடயமாகவும் ‘உழைக்கும் மக்கள்’ என்பதை முதலாவது விடயமாகவும் பிரேரித்தது.

இவற்றின் அடிப்படையிலேயே, அகச்சூழல்களை மேற்கோள்காட்டி அன்றும் இன்றும் என்றும் அவஸ்தைப்பட்டுக் கொண்டுள்ள மலையமக்களை தனது போராட்டத்தின் முன்னணி என்றது.

6. ஈரோஸின் போராட்டம், இன-மத ரீதிகளுக்கு அப்பாற்பட்டவை என்பதால், மக்களை முதன்மைப்படுத்தி ஈழவர் என்றும், அவர்களது தேசமே ஈழம் என்றும் பிரகடனம் செய்தது.

அதாவது, தமிழர், சிங்களவர், இஸ்லாமியர், மலைநாட்டுத் தமிழர் என்றெல்லாம் ஈழமென தான் கொண்ட பிரதேசத்தில் பாகுபாடுகள் இல்லாது, தென் ஆபிரிக்காவுக்கு ஒப்பான ‘வானவில்’ தேசியத்தை கட்டவேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருந்தது.

இவ்வாறான ஈரோஸின் ஆரம்ப நிலைப்பாடுகள் தமிழ் மக்களிடம் சென்றடையவில்லை, ஏன் பல ஈரோஸ் அங்கத்தவர்களிடம் நிலை கொள்ளவில்லை.

கொழும்பில் குண்டுகளை வைத்து சாதாரண மக்களையும் குறிப்பாக தொழிலாளிகளையும் படுகொலைகள் செய்து கொண்டு எம்மிடம் உன்னதமான நோக்குகள் உண்டு என சத்தமிடுவதால் யாரும் ஏமாந்து போய்விடுவதில்லை.
எனவே, சிங்கள அதிகாரிகள் என்ன, மக்களும்தான் அச்சத்துடன் ஈரோஸை பார்ப்பதில் தப்பில்லை.

இவ்வாறான மக்கள் அழிப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற இலண்டன் ஈரோஸின் அழுத்தத்திற்கு இலங்கைத் தலைமைப் பீடம் செவிசாய்த்ததோ என்னவோ, அவை தொடரவில்லை என்பது தரவு.
இலங்கையில் ஈரோஸ் தனது 5வது பிரகடனத்துடன் தன்னை வடகிழக்கினுள் ஒதுக்கிக் கொண்டது.
ஈரோஸின் இந்நிலையின் சங்கடத்தையே இப்புத்தகத்தின் பொதுவான ஓட்டம் எனக்கு உணர்த்துகிறது.
இவற்றுள்,

1. ஒருவன் தனது சரித்திரத்தைப் புரிந்துகொள்ளும் சங்கடத்தில் அகப்பட்டு தன்னை வருத்திக் கொள்ளும், வருத்தப்பட்டுக் கொள்ளும் ஓட்டத்தை காணலாம்.

2. அவன் தனது சமுதாயம் என்பதை அவற்றின் அடிப்படையில் முடிவுகள் கொள்வதையும், அவற்றின் நிமிர்த்தம் குரல் கொடுக்க வேண்டிய நிலையிலான சங்கடங்களைச் சந்திக்கும் ஓட்டத்தைக் காணலாம்.

3. அம் முடிவுகளை அடைவதற்கு உந்துதலாக தேர்ந்து கொள்ளும் திருப்பங்கள் திருப்பு முனைகள் என்ற இரண்டிக்கும் இடையேயான சர்ச்சைகளுள் அவன் படும் சங்கடங்களின் ஓட்டங்களைப் புரிந்து கொள்ளலாம்.

அதாவது, ஈரோஸ் எவ்வாறு புலிவாதங்களின் எல்லைகளுள் அகப்பட்டுக் கொண்டு அதேவேளை தனது மக்களை இழந்திடக் கூடாதெனத் தத்தளித்ததோ, முடிவில் அரசியல் நியாயமிழந்து புலிகளால் கலைக்கப்பட்ட பின் புலி அமைப்புக்குள் சேர்தாலும் அதனுள் இருந்தே தமது மக்களை இழந்திடாது காப்பாற்றிடலாம் என சேர்ந்தவர்கள் தத்தளித்தார்களோ, அது போன்ற சங்கடங்களின் ஓட்டத்தையே வெளியான் ஆன என்னால் முதலில் உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

எனவே, இப்புத்தகம் பற்றிய சில கணிப்புகள் கொள்வது கடிமான விடயமாகிறது. ஆகவே, கணிப்புகள் பற்றாத எடைபோடலிலேயே நான் தள்ளப்பட்டுள்ளதாக உணர்கிறேன்.

1. இப் புத்தகம் நண்பர் பசீர் தமிழ் பேசும் இஸ்லாமியருடைய சொல்லொண்ணாத் துயரங்களை உலகிற்கு அழுத்திக் காட்டுகிறது என்பதிலும் அவர் பால் கொண்ட அன்பிற்கு எல்லைகள் இல்லை என்பதற்கும் சான்றானது.
ஒரு பெரும் போர் என்பதுள் பல சமூகங்களது உடமைகள் எவ்வாறு கேட்பாரற்று அழிக்கப்படுகின்றன என்பதை திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டுவது தனது கடமை பசீர் உணர்ந்துள்ளார் என்பதை யாரும் இலகுவில் கண்டு கொள்ளலாம்.
புலிகள் இஸ்லாமியச் சமூகங்களை நாடு கடத்தியமை, படுகொலைகள் செய்தமை,   ethnic cleansing என்ற ரீதியில் ஒரு இன அழிப்பு (  genocide  ) என்று சொல்லாது சொல்கிறார்.

அதேவேளை, இஸ்லாமியரும் பதில் கொலைகள் செய்துள்ளார்கள் என்பதை கண்டிதது ஒத்துக் கொண்டுள்ளார்.
இவ்வகையில் புத்தகத்தில் பல சோர்விலா நீளாயுள் கொண்ட சொற்கள் அமைகின்றன.
அதேவேளை, சிறீலங்கா தேசியம் பற்றிய உறுதியான நிலப்பாடும் ஆங்காங்கே அதில் இளையோடி உள்ளது.
ஆனால், அதனுள் அவர்காணும் இஸ்லாமியத் தேசியம், தமிழர்களது தேசியம், பெரும்பான்மையோரது சிங்களத் தேசியம் யாவும் எவ்வாறு பொருந்திக் கொள்ளும் என்பற்கான பதில்கள் இல்லை. அவற்றினை நாம் பாராளுமன்ற பேச்சுகள் ஊடாக எதிர்பார்க்கவும் முடியாது.

ஆனால், இலங்கை இலங்கையரது என்பதிலும் அதனுள் உள்ள உடமைப் போராட்டங்கள் வெளியாருக்கு உடந்தவையாக இருக்கக் கூடாது என்பதிலும் ஆரம்பகால ஈரோஸ் போலத் தன்னை வரித்துக் கொள்கிறார்.

ஈரோஸின் ஈழப் போராட்டம் சரி, மற்ற அமைப்புகளது தமிழீழப் போராட்டகள் ஆகினும் சரி, சிறீலங்காவின் நாடு மீட்பு போராகினும் சரி, அவை எவ்வாறு பிராந்திய கேந்திர நிலைகளின் இயங்கில் சமநிலை காரணமாக பல வெளி சக்திகளது தலையீடுகளுக்கு உடந்தைகின என்பதை நண்பர் புரிந்து கொண்டுள்ளதும் புலனாகிறது.

துர்ரதிஸ்ட வசமாக பசீர் பாரளுமன்றத்தில் இல்லாதமையால் 2006 – 2011 இடைப்பட்ட காலக்கட்டத்தில் இடம்பெற்ற சரித்திரம் மாற்றும் சம்பவங்கள் இங்கு இல்லை.

இவ்வாறான கணிப்புகள் தவிர்க்கப்பட்டும், உள்ளவற்றை மட்டுமே கணிப்புகளாகக் கொண்டு இப்புத்தகத்தை எடைபோட்டபின் அவரது ஓட்டங்களின் பற்றி சில வார்த்தைகள் கூறி எனது மீளாய்வுப் பேச்சினை முடிவு செய்வது கடமையாகிறது.

எனவே,
‘எல்லைகள் பாதுகாப்பு தருவன அல்ல’ என்ற எமது கூற்றுடன் ஆரம்பிப்பது எனக்குப் பொருத்தமானது.
இதுவோ இலங்கை மக்கள் அனைவரும் பல இழப்புகள ஊடாக கற்ற விடயம்.
ஆனால், அது இன்றும் சக இனங்களதும் அரசியல் வர்க்கங்கள் கற்றுக் கொண்டவையாக ஆகிடவில்லை என்பது எமது கவலை.

இதற்கு அடிப்படைக் காரணம் மற்றவரது உடமைகளை, சக இனங்கள் முற்றாக அங்கீகரிக்க முடியாதுள்ள நிலமையாகும்.
மாற்றாக எதிரியை அப்புறப்படுத்திவிட்டால் அல்லது ஒழித்துவிட்டால் எல்லாம் எமது உடமைகள் ஆகிவிடும் என்ற நடைமுறை நிலைப்பாடே உள்ளது.

இங்கே உடமைகள் என்பதை ‘உழைப்பால் பூர்வீகப்படுத்தப்பட்ட சகல உற்பத்திச் சாதனங்கள்’ என நாம் அடிப்படையில் கருதுகின்றோம்.

எனவேதான், அதிகாரம் கொண்டமையால் மக்களை அப்புறப் படுத்துவதும் குடியேற்றுவதும் தவறு என்கிறோம்.
மாற்றின மக்களது உடமைகளை ஒரு இன மக்களது பொதுச் சொத்துக்களாக்கி விடுவதால் அவை அம்மக்களது நிலைதரமான சொத்துகள் ஆகி விடுவதில்லை.

இன்று இந்தியா, சீனா, மேற்கத்திய நாடுகள் என்ன பங்காளதேஸ் போன்ற நாடுகளின் ஸ்தாபனங்கள் கூட ஆபிரிக்காவில் மட்டுமின்றி மற்ற பிரதேசங்களிலும் நிலக் கொள்வனவை செவ்வதிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.
ஆனால், எல்லைகள் இல்லாத் தேசங்களின் கூட்டுகளுள் யாரும் தமது உடமைகளை காப்பற்றிக் கொள்ளலாம்.
இதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் சான்று. இதுபற்றி இங்கே வியாபிக்க நேரம் கிடையாது.

இவ்வாறான மக்கள் ஒற்றுமைக்கோ அடையாள மையவாதம் ( identity politics ) பொதுத்தமற்றது.
அடையாள மையவாதங்கள் சமூகங்களின் அடிப்படை வாதங்களுக்கான (fundamentalism   ) வளமாக அமைந்திடுவது தவிர்க்க முடியாதது.

இவற்றிக்கு அடிக்கோளாக இருப்பது அவை அடக்கு முறைகளாலும் ஒடுக்கு முறைகளாலும் ஒதுக்குப்படுவதாலும் பெறும் இரவல் அடையாளம் ஆகும்.

சிங்கள ஒடுக்குமுறை என்ற ரீதியில் இலங்கைத் தமிழர் அரசியல் அடையாளமும், புலிகளது படுகொலைகள் நாடுகடத்தல் என்றவாறு இஸ்லாமிய அடையாளமும், தென்னிந்திய படையெடுப்புகளால் நசிந்து பிறந்த சிங்கள-பௌத்த அடையாளமும் தீவின் சரித்திரத்தை முன்நோக்கி நகர உதவா.

இவ்விடத்தில், அவ்வாறமைந்த தமிழீழத் தேசியவாதத்திற்கும் இஸ்லாமியத் தேசிய வாதத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாம் அவதானிக்க வேண்டும். இலங்கைத் தமிழ் தேசிய வாதத்தினை தானாக வலுக்கட்டாயமாகப் பொறுப்பேற்ற புலிவாதம் இலங்கைத் தீவிற்கே உரித்தான அதற்குள் அடங்கிய அடிப்படைவாதம். இந்தியாவை உக்கிரகமாக எதிர்த்ததிலிருந்தே அதனை யாவரும் புரிந்து கொள்வர்.

ஆனால், இஸ்லாமியவாதம் வெளிநோக்கி உள்வாங்கும் வாதங்களுக்கு இசைவானது. ஆதலால், அதுபற்றி தவறாகவேனும் இலங்கைபற்றிய தேசியவாதங்களைக் கொண்டவர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாது.

இஸ்லாமிய மக்களின் பாதுகாப்புக் கருதி பிரிந்துபோன பாக்கிஸ்தானில் இஸ்லாம் என்றால் எது என்ற போரில் சலாபிஇசம் வகாபி இசம் போன்றவற்றுள் அகப்பட்டு அல்வைற், ஷியா, சூபி, போன்ற மற்றைய அலகுகளை அழித்தொழிப்பதிலேயே கருத்தாக உள்ளனர்.

இன்று புதிதாக உருவாக்கப்படுள்ள isisஅமைப்பின் முல்லா பாக்டாடியின் கலீப்பேற் பாலஸ்தீனர்கள் நிலைபற்றி எதுவும் கூறியதாக இல்லை. மாறாக ஷியா மக்களது ஈரானும், ஹெஸ்புல்லாவும் தான் முன்னணி எதிர்ப்பு தெரிவிக்கின்றன. முகமட் மோஸியின் அரசைக் கவுக்க சவூதி அரேபியா அமரிக்கர்களது எதிரப்பையும் தாண்டி முன்நின்றுள்ளது.
இவை எல்லாம் எந்தவொரு இசத்தாலேயோ, அடக்கு முறைகளாலேயோ மக்களை ஒன்று படுத்தி விட முடியாது என்பதை மட்டுமல்ல, மூடிமறைத்து ஒரு முலாம் போட்டுவிட முடியாது என்தையே காட்டுகிறது.
எம்மைப் பொறுத்தவரை இவை அனைத்தையும் தாண்டுவது மனிதாபிமானம் என்ற மனிதனின் ஒரே குணாம்திசயம்தான்.

ஆனால், அதனையே கேந்திர அரசியல் கருவியாக்கிடும் போக்கு மேற்கத்திய நாடுகளிடம் உள்ளது. அதனது பலாபலன்களை ஈராக், ஆப்கனிஸ்தான், சிரியா என்பவை மட்டுமின்றி உலகின் பல கோணங்களலும் காணலாம்.
அதற்குக் காரணம் நாம் முன்னர் கூறியதுபோல, நாமே கட்டி எழுப்பாத, இரவல் அல்லது பிரதிபலிப்பான தேசியங்களும் இனவாதங்களும்தான்.

இவ்வாறமையும் வெளித் தலையீடு, பொருளாதார கலாச்சார ஆக்கிரமிப்புகளிலும் பலமானது.
எனவே, இவற்றிக்கும் எமது உடமைகள் உரிமைகள் குறித்த குறைபாடுகளுக்கும் ஒரே நேரத்தில் முகம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

அதற்கு ஏதுவாக எம்மிடம் தென்ஆசியாவுக்கென, தனிமனிதரதும் சமூகளதும் உடமைகளையும் உரிமைகளையும் உள்ளடக்கிய மனித-உரிமைச் சாசனம் ஒன்று இருக்க வேண்டும் என்பது எமது ஆழமான கருத்து.
வளர்ந்த நாடுகளது மனித உரிமைச் சாசனங்களுக்கும், காலனித்துவத்தால் பின்போடப்பட்டு பின்னொருகால் தேசியங்களாக உருப்பெறும் மக்கள் சமூகங்களை; கொண்ட வளரும் நாடுகளின் மக்கள் தேடும் உத்தரவாதங்களுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன என்பதை நாம் புரிந்தாக வேண்டும்.

இவ்வாறு அமையும் பிராந்திய, பிரதேச, சமூக உத்தவாதங்கள் தரும் தென்ஆசிய மனித உரிமை சாசனம் ஒன்று சமூகங்களிடையே, நாடுகளிடையே, உள்ள ஐயங்களும், குரோதங்களும், போக்கிடக் கூடிய சோர்விலா சொற்களைமட்டுமின்றி வளத்தையும் தந்துதவும் என்று கூறி விடை பெற்றுக் கொள்கிறேன்.

இவ்வளவு நேரமும் பொறுமையுடன் எனது பேச்சை அனுபவித்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.
அதற்கு மோலாக, என்னை சிறப்புப்பேச்சாளனாக அழைத்தது மட்டுமின்றி என்னை என்போலவே வழிநடத்திக்கொள்ள வசதியும் தந்த நண்பர் பசீருக்கும்
எனது மனமார்ந்த நன்றி.

வணக்கம்.

(கொழும்பில் இடம்பெற்ற பஷீர் சேகுதாவூத்தின் நுால் வெளியீட்டில் ரவி சுந்தரலிங்கம் ஆற்றிய உரை)

 

 

 

இது தொடர்பான வேறு பதிவுகள்

உங்கள் கருத்து
 1. Abdul Waji on September 30, 2014 9:18 pm

  “சோர்விலாச் சொல்” மீதான ஒரு சாமானியனின் சொல்
  ==========================================================
  (இதனை ஒரு பிரதான பத்தியாக பிரசுரம் செய்தால் மிக்க நன்றியுடையவனாவேன்.)
  அமைச்சர் பசீர் சேகுதாவூதின் எழுத்துக்கள் மீதும்,அவரது சொற்பிரயோகங்கள் மீதும், பேச்சு,மொழிநடை மீதும் எனக்கு எப்போதும் ஒரு ஈடுபாடு உண்டு. எனது பாடசாலை நாட்களில் நான் முஸ்லிம் காங்கிரஸின் ஒரு தீவிர தொண்டனாக இருந்த காலத்திலும் பஷீர் சேகுதாவூத் அவர்கள் ஈரோஸ் இயக்கத்தில் இருந்து கொண்டு எழுதிய கவிதைப் புத்தகங்களை வாசித்திருக்கின்றேன்.

  அக்காலப் பகுதியில் ஏறாவூரில் அவர் தலைமை தாங்கிய ஈரோஸ் இயக்கம் முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் மீது வன்முறைகளைப் பிரயோகித்து வந்ததாலும், பசீர் சேகு தாவூத் அவர்கள் மேடைகளில் பகிரங்கமாக மு.கா தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களையும்,அவரது கட்சியையும் கிண்டல் செய்து,விமர்சித்து பேசி வந்தமையாலும் அனைத்து முஸ்லிம் காங்கிரஸ் போரளிகளினாலும் தொண்டர்களினாலும் பரம விரோதியாக பார்க்கப்பட்டு வந்தார். ஆனாலும் நான் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் தொண்டனாக இருந்து கொண்டு அவரது எழுத்துக்களை வாசிப்பதில் எனக்குள் எந்த பிரச்சினைகளும் இருந்ததில்லை.

  மிக நீண்ட கால இடைவெளியின் பின் அவரது புத்தகம் ஒன்று வெளி வந்துள்ளது. சமகால அரசியல் சமூக வெளியில் தன்னை நியாயப்படுத்துதல்,மற்றும் தன்னை எதுவாகவோ நிறுவுதல் வேண்டிய தேவைகளுடன் அவரது பாராளுமன்ற உரைத் தொகுப்புகள் ஒரு நூலாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும் அவரது உரைகளில் சொல்லப்பட்டிருக்கும் சில சம்பவங்கள் அச்சு வடிவில் ஆவனப்படுதப்படாமல் இருந்து வந்த குறைகளில் ஒரு சிறு பகுதியையேனும் செய்திருக்கிறது.

  மிக்க லாவகரமான மொழிநடையிலும்,சொற்செறிவோடும் வெளி வந்திருக்கும் இந்நூல், தமிழ் மொழித் துறை சார் கற்கை நெறிகளில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கும் மற்றும் எழுத்து சார் துறைகளில் ஈடுபாடு காட்டி வரும் இளைய தலை முறையினருக்கு நன்கு பயனுள்ள ஒரு கையேடாக அமையும்.

  மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டிருக்கும் இப்புத்தகத்தில் தெரிவு செய்யப்பட்ட 36 தலைப்புகளில் இவரது உரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கால ஆட்டவனை ரீதியாக ஜூன் 1991 இலிருந்து மார்ச் 2011 வரையான காலப்பகுதிக்குள்ளாக இவரது உரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

  பசீர் சேகுதாவூத் அவர்கள் 1989 ம் ஆண்டு ஈரோஸ் மூலம் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தனது பாராளுமன்ற பயணத்தை ஆரம்பித்து 2008ம் ஆண்டு வரை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து மீண்டும் கடந்த 2010 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக இப்பதிவு எழுதப்படும் நேரம் வரை பதவி வகித்து வருகின்றார். ஆனாலும் 1991-2011 வரையான உரைகளே தொகுக்கப்பட்டிருக்கின்றன. 2011 முதல் இன்று வரையான சுமார் இரண்டரை வருட காலப்பகுதியில் தனக்கே உரித்தான இராச தந்திரத்தின் பிரகாரம் “மௌன அரசியல்” செய்து வந்தமையால் அவரது எந்த உரையும் பாராளுமன்றில் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனாலும் 1989-1991 க்கிடைப்பட்ட சுமார் இரண்டரை வருடங்களில் இவரது உரை இடம்பெறாமல் இருந்ததற்கான காரணத்தை அறிய முடியவில்லை.

  பசீர் சேகுதாவூத் அவர்களின் பாராளுமன்ற உரைகளை 36 தலைப்புகளில் காத்திரமாக தொகுத்திருக்கும் இந்நூல் பசீர் சேகுதாவூத்:காலவரிசைக் குறிப்புக்கள் எனும் தகவல்களோடு நிறைவு பெறுகிறது. இக்காலக் குறிப்பில் மயக்கமானதும்,பிழையானதுமான தகவல்கள் வழங்கப்பட்டிருக்கன்றன.

  இலங்கையின் அரசியல் வரலாறுகளோடும் முஸ்லிம் காங்கிரஸின் வரலாறுகளோடும் தொடர்புபட்ட விடயங்களை இந்நூல் உள்ளடக்கியிருப்பதால் அது மிகச் சரியான தகவல்களை வாசகர்களுக்கு வழங்க வேண்டிய தார்மீக பொறுப்பினைக் கொண்டிருக்கிறது. ஆனால் துரதிஷ்ட வசமாக வழமை போல் பசீர் சேகு தாவூதின் அரசியல் சரிதை விடயத்தில் இந்த நூலும் வாசகர்களுக்கு தெளிவில்லாததும், பிழையானதுமான தகவல்களை சொல்லியிருக்கிறது.

  கால வரிசைக் குறிப்பு சொல்லும் பிழையான குறிப்புக்களும்,திருத்தமும்:

  சோ .சொ: 1989 ஆம் ஆண்டு முதன் முதலாக ஈரோஸ் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

  *இங்கு “தெரிவானார்” என்ற பதம் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுத் தெரிவானார் என்ற ஒரு விளக்கத்தினை வாசகர்களுக்கு வழங்குகிறது.(புத்தகத்தை திறந்ததும் வருகின்ற முதல் பக்கத்திலும் “பசீர் சேகுதாவூத் ஈரோஸ் என்ற ஈழ விடுதலை இயக்கத்தின் மேனாள் உயர்நிலை உறுப்பினர்.1989ஆம் ஆண்டு முதன் முதலாகப் பாராளுமன்றத்துக்கு ஈரோஸ் அமைப்பின் சார்பாக சுயேச்சை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.”என்ற அறிமுகம் இடம்பெற்றிருக்கிறது.)இது தவறாகும். பசீர் சேகுதாவூத் 1989ம் ஆண்டு ஈரோஸ் சார்பாக போட்டியிட்டபோது அவருக்கு கிடைத்த விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 6வது இடத்தையே அவரால் பெற முடிந்தது. வட கிழக்கில் ஈரோஸ் சார்பில் போட்டியிட்ட முஸ்லிம்களுள் யாருமே தெரிவு செய்யப்படாமையால் ஈரோஸ் தனக்கு கிடைத்த 2 தேசியப்பட்டியல் உறுப்பினர்களுக்கான நியமனத்தினை முஸ்லிம்கள் இருவருக்கு வழங்க முடிவு செய்தது. அதனடிப்படையில் கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் நியமனமே பசீர் சேகு தாவூத் அவர்களின் முதலாவது பாராளுமன்றப் பிரவேசமாகும்.மற்றவர் திருகோணமலையைச் சேர்ந்த இன்னொரு பசீர் மாஸ்டர் ஆகும்.

  சோ .சொ:1990ஆம் ஆண்டு ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியபோது இவரும் விலகினார். என்ற சரியான தகவலைச் சொல்லி விட்டு பின்னர் இவ்வாறு சொல்லப்படுகிறது.

  “தமிழீழ விடுதலைப்புலிகள் காத்தான்குடி,ஏறாவூர் கிராமங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்தபோது,ஒடுக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் குரலாய் ஒலிப்பதற்காக தனது இராஜினாமாவை பரிசீலனை செய்து மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.”

  இது இரண்டு பிழையான அல்லது மயக்கமான தகவல்களை வாசகர்களுக்கு சொல்கிறது.
  1.இராஜினாமாவை பரிசீலனை செய்து,அதனை வாபஸ் பெற்று தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்புரிமையில் நீடித்திருந்தமை.
  2.அதற்கு காரணம் அன்று காத்தான்குடியிலும்,ஏறாவூரிலும் புலிகள் முஸ்லிம்களைப் படுகொலை செய்தமையால் அவர்கள் சார்பாக பேசுவதற்காக வேண்டியாகும்.

  ஈரோஸ் உறுப்பினர்கள் இராஜினாமா செய்தது புலிகள் இரண்டாம் கட்ட ஈழப்போரை துவக்குவதற்கு முன்னரான காலப்பகுதியாகும்.ஏறக்குறைய 1990 ஏப்ரல் /மே மாதமாகும். புலிகள் காத்தான்குடியிலும்,ஏறாவூரிலும் படுகொலை செய்தது 1990 ஆகஸ்ட் மாதமாகும். பசீர் சேகு தாவூத் இராஜினாமா செய்ததன் பின்னர் மீண்டும் பாராளுமன்றத்துக்குள் வந்தது 1991 நடுப்பகுதியிலாகும்.ஏறக்குறைய ஒரு வருடத்தின் பின்னர்.

  எனவே,குறித்த தகவல் சரியான தகவல் அல்ல. அதனோடு இலங்கையின் ஒரு பெரிய அரசியல் வரலாறே தொடர்புபட்டிருக்கிறது.

  1989 இல் வட கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட தமிழ் கட்சிகளுள் ஈரோஸ் சார்பாக போட்டியிட்ட சுயேற்சைக் குழுவே அமோக வெற்றி பெற்றது. இதற்கு காரணம் புலிகளோடு ஈரோஸ் இயக்கதுக்கு இருந்து வந்த நட்பும்,அவர்களின் ஆதரவுமாகும்.

  1990 இல் புலிகள் அன்றைய பிரேமதாச அரசாங்கத்துடன் செய்து கொண்டிருந்த சமாதான பேச்சுவார்த்தைகளில் அதிருப்தியுற்றிருந்த நிலையில் ஈரோஸ் அமைப்பினரை தமது பாராளுமன்றப் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு புலிகள் கட்டளையிட்டனர்.அதற்கமைவாக பசீர் சேகு தாவூத் உற்பட அனைவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர்.

  பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவர் இராஜினாமா செய்தாலோ அல்லது மரணம் எய்தினாலோ விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த ஸ்தானத்தில் இருப்பவரை சத்தியப் பிரமானம் செய்ய அழைப்பு விடுக்கப்படும். ஒரு குறித்த கால எல்லைக்குள் அவர் சத்தியப்பிரமாணம் செய்யாதவிடத்து அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவருக்கு அழைப்பு விடுக்கப்படும். ஒவ்வொருவராக அழைப்பு விடுக்கப்பட்டு,அவகாசம் வழங்கப்பட்டு 6வது இடத்தில் இருந்த பசீர் சேகு தாவூதுக்கான முறை வந்தபோது இலங்கை அரசியலில் பெரும் சிக்கல் நிலவிக் கொண்டிருந்தது.

  அது 1991ஆம் ஆண்டின் நடுப்பகுதியாகும். அன்றைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாச அவர்களுக்கெதிராக ஆளும் ஐ.தே.க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் பாராளுமன்றில் ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் ஆளும் ஐ.தே.க வின் முக்கிய புள்ளிகளான லலித் அதுலத் முதலி,காமினி திசாநாயக போன்றவர்கள் முக்கிய பங்காற்றினர். பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படுமிடத்து அது வெற்றி பெறும் நிலையில் பலமாக இருந்தது.

  பிரேமதாச தனக்கு ஆதரவானர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள வேண்டிய மிக இக்கட்டான நிலையில் இருந்தார். இச்சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஈரோஸ் பட்டியலில் அடுத்ததாக சத்தியப்பிரமானத்துக்கு அழைக்கப்படவிருப்பவர் பசீர் சேகு தாவூத் என்பதை தெரிந்து கொண்ட பிரேமதாச அவரை அழைத்து பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமானம் செய்து கொள்ளுமாறும், நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது தனக்கு ஆதரவாக செயற்படுமாறும் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினை ஏற்றுக் கொண்ட பசீர் சேகு தாவூத் அவர்களால் அதற்குப் பகரமாக பிரேமதாசவிடம் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவரது தனிப்பட்ட ஒரு விடயமும், தனது பதவிக்கு ஏதேனும் சட்ட சிக்கல்கள் வருமிடத்து அதிலிருந்து பாதுகாப்பு ஆகிய இரண்டு விடயங்களுமே அவையாகும்.

  இதுதான் பசீர் சேகு தாவூத் அவர்கள் இராஜினாமா செய்ததன் பின்னர் மீண்டும் பாராளுமன்றம் சென்றதன் பின்னனியாகும்.
  சோ .சொ: 2000-2001 ஆண்டுகளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

  *இது பிழையான தகவல்.அவர் தேசிய ஐக்கிய முன்னணியின் (நுஆ) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உருப்பினராகவிருந்தார்.என்பதே உண்மையான தகவலாகும்.

  சோ.சொ: 2010இல் மாகாண எதிர்க் கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்து விட்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

  *இது பசீர் சேகு தாவூத் முதன் முறையாக தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றதை மிகச் சரியாகப் பதிவு செய்திருக்கிறது.ஆனால் எந்தக் கட்சியில் போட்டியிட்டார் என்ற தகவல் தவறவிடப்பட்டிருக்கிறது. 2010 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்தேர்தலில் ஐ.தே.க மூலமே மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா வுக்கான ஆசனம் மயிரிழையில் காப்பாற்றப்பட்டது. கணிசமான தமிழ் மக்கள் யானைக்கு வாக்களித்ததால் இது சாத்தியமாயிற்று.

  மேற்சொன்ன சில வரலாற்று தவறுகளை விடுத்து புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற பசீர் சேகு தாவூத் அவர்களின் உரை ஹென்சாட்டிலிருந்து கச்சிதமாக தொகுக்கப்பட்டு,சொற்கள் மெருகூட்டப்பட்டு சிறப்பாக நூலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு