பாடசாலை நூலகங்களும் எமது சமூகத்தின் வாசிப்புத் திறனும் – என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.


 

otototஒரு சமூகத்தின் அறிவு வெறும் பாடப்புத்தகங்களுடன் நின்றுவிடுவதில்லை. “கண்டதும் கற்கப் பண்டிதனாவான்” என்ற பழமொழி தமிழிலே தானுண்டு. பாடநூல்களும், பாடவிதானத்துடன் (பாடத்திட்டத்துடன்) தொடர்பான உப பாட நூல்களும் ஒரு மாணவனின் பாடத்திட்டம் தழுவிய செயற்பாட்டுக்கு உதவும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. ஆனால் பாடத்திட்டம் தாண்டிய புற உலகின் வளர்ச்சியையும், நவீன மாற்றங்களையும், அன்றாட உலகளாவிய நிகழ்வுகளையும் அறிந்துகொள்வதன்மூலமே ஒருவனின் அறிவும், ஆற்றலும் விரிவுபெறும். “வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்” என்ற வாசகம் கூறுவதும் அதையே.

வெறும் பாடநூல்களைப் படிப்பதன்மூலமும், இரண்டுவரியில் ஆதாரபூர்வமற்ற அரைகுறைத் தகவல் தரும் பொது அறிவு நூல்களை மனப்பாடம் செய்வதனால் மாத்திரம் பூரணமனிதனாகிவிட முடியாது. ஒருவேளை தோற்றும் பரீட்சையில் சித்தியெய்தி விடலாம். அது மட்டும்தானா வாழ்க்கை?

ஒரு மாணவனின் விரிந்த அறிவுத்தேடலுக்கான வித்து பாடசாலை நூலகங்களிலேயே விதைக்கப்படுகின்றன. அண்மையில் ஒரு இலங்கைச் சமூகவியல் களஆய்வில் “பாடநூல்களை வீட்டில் வாசிக்கப் பண்ணுவதை பெற்றோர் தண்டனையாகவே குழந்தைகளுக்கு முதலில் அறிமுகப்படுத்துகிறார்கள்” என்ற செய்தி எம்மளவில் புதுமையானதல்ல. இன்றும் சராசரி வீட்டில் துறுதுறுவென்று குளப்படி செய்துகொண்டிருக்கும் தன் பிள்ளையைக் கட்டுப்படுத்த, அப்பிள்ளையை ஓரிடத்தில் இருத்தி “நகராமல் இருந்து பாடப் புத்தகத்தை வாசி” என்று கூறி அடக்கும் பெற்றோரை எமது தமிழ்க் குடும்பங்களில் அன்றாடம் காண்கிறோம். இதன் சமூகப் பாதிப்பு என்னவென்றால், வாசிப்பை ஒரு தண்டனையாக அக்குழந்தை சிறுவயதிலேயே மனதளவில் ஏற்படுத்திக் கொள்வதேயாகும். அதுமாத்திரமல்லாது, தூக்கம்வராதவர்கள் நூல்வாசித்துத் தம் தூக்கத்தை வரவழைத்துக்கொள்ளும் கெட்ட பழக்கமும் உள்ளது. இவை மிகத் தவறான அணுகுமுறைகளாகும்.

ஒருவரது வாசிப்பு சுதந்திரமானதாக இருக்கவேண்டும். தனக்குத் தெரிந்தவைகளிலிருந்தே ஒரு குழந்தை தெரியாததைக் கற்றுக்கொள்ளும். தனக்கு விரும்பியவைகளை வாசிக்கத் தொடங்குவதன்மூலமே ஒருவன் தான் விரும்பாதவற்றையும் விரும்பி வாசிக்கக் கற்றுக்கொள்வான். எதை வாசிக்கவேண்டும் எதை வாசிக்கக்கூடாது என்ற அறிவையும், எதை வாசித்தால் நல்ல விடயங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவையும் காலக்கிரமத்தில் அவர்கள் வாசிக்கும் நூல்களே அவர்களுக்குப் போதித்துவிடுகின்றன. இதனை ஒவ்வொரு நூலகரும்- குறிப்பாக பாடசாலை நூலகரும் தம் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.

இன்று நூலகர்களாக, நூலகங்களில் வீற்றிருக்கும் பலர் தம்மை ‘புனிதமான- ஆற்றல்மிக்க நூலகர்களாக’ எண்ணுவதில்லை என்பது எனது கசப்பான அனுபவமாகும். ஏதோ வருவாய்க்காக, சமூக கௌரவத்துக்காக அக்கதிரையில் இருக்கமுயல்வதும், அதற்குத் தூண்டப்படுவதும் ஆபத்தானது. அனுமானின் வாலில் மறைந்துள்ள சக்தி அவரை கடல்தாண்டிப் பறக்கவைக்கும் வலிமை மிக்கது என்ற செய்தியை இராமர் சொல்லும்வரை அனுமானே அறிந்திருக்கவில்லை என்கிறது இராமாயணம். அதுபோல ஒரு பாடசாலை நூலகரின் சக்தி, சமூகப் பொறுப்பு என்பவை என்ன என்பதை விரிவாகச் சொல்லித்தரும் பொறுப்பை அவர்களை நூலகர்களாகப் பயிற்றுவித்த ஆசான்களான ‘இராமர்கள்’ நிச்சயம் சொல்லிவைத்திருக்கவேண்டும்.

இன்று வேறுதுறைகளில் கால்பதிக்கமுயன்று தோற்றவர்கள், இலகுவாக நூலகவியல் துறையைக் கண்டறிந்து அதற்கான படிப்பிலீடுபட்டு, ஆரம்ப இடைநிலைப் பரீட்சைகளைச் சித்தியெய்தும் ஒரே நோக்குடன் முயன்று, ஒரு நூலகக் கதிரையை நிரப்பி நூலகராகத் “தொழில்” செய்வதையே இன்று பெரும்பாலான நூலகங்களில் காணமுடிகின்றது. அதற்கான எளிதான ‘நோகாத’ வழிமுறைகளைத் தேடிக்காட்டுபவராகவே அவர்களது விரிவுரையாளர்கள் காணப்படுகின்றார்கள்.

எண்பதுகளில் நான் யாழ்ப்பாணம், திருநெல்வேலி இவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நூலகத்தில் பணியாற்றிவந்தேன். அங்கிருந்துதான் ஈழத்தின் முதல் தமிழ் நூலகவியல்துறைசார்ந்த சஞ்சிகையான “நூலகவியல் காலாண்டிதழ்” உயிர்பெற்று ஏழாண்டுகள் தொடர்ந்தது. நூலகவியல் கருத்தரங்குகள் விடுமுறை தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்டன. அன்றுவரை இல்லாதிருந்த தமிழ்மொழிமூலமான நூலகவியல் துறைசார் நூல்கள் பல அயோத்தி நூலக சேவைகள் என்ற எனது வெளியீட்டகத்தின் மூலம் வெளியிடப்பட்டன.

இந்நூலகத்திற்கு அருகில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில்தான் வார இறுதிகளில் நூலகவியல் கல்வி போதிக்கப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவர்கள் உசாத்துணை நூல்கள் பற்றிய விரிவான தேடல் அறிவு மிக்கவர்களாக இருக்கவேண்டும். அவர்களது தேடல் நிஜமானதாக இருக்கவேண்டும். வெறும் பாடப்புத்தக ‘நோட்ஸ்’களை நம்பியதாக அவர்களது தேடல்கள் இருக்கக் கூடாது என்பதால், நூலகவியல்துறை மாணவர்களை எனது நூலகத்திற்கு வரவழைத்து அவர்களிடம் 40 கேள்விகளைக் கொடுத்து, அதற்கான பதில்களை எனது நூலகத்தில் உள்ள அனைத்து உசாத்துணை நூல்களிலும் இருந்து தேடிப்பதிவுசெய்து வழங்கும் பயிற்சியை வழங்கிவந்தேன். இது ஒரு இலவச சேவையாக, நூலகவியல் மாணவர்களின் கல்வியை சுவாரஸ்யம் மிக்கதாக ஆக்குவதற்கு தூண்டுகோலாக அமையும் என்ற காரணத்தால் எனது மிகக்கடினமான வேலைப்பழுவுக்குள்ளும் இதனைப் பலகாலம் தொடர்ந்து செய்துவந்தேன். இப்பயிற்சியை பெற்றபலர் இன்றும் உங்களிடையே நூலகர்களாகப் பணியாற்றக்கூடும். அவர்களிடம் நீங்கள் அந்த அனுபவத்தைக் கேட்டறிந்துகொள்ளலாம்.

இந்த இனிய அனுபவத்துக்குத் திடீரென்று நூலகவியல்துறை பயிற்சியாளர் ஒருவரால் தடைவிதிக்கப்பட்டது. அம்மாணவர்கள் நூலகவியலில் ‘டியுஷன்’ பெறுவதற்காக என்னை அணுகுகின்றார்கள் என்றும், அது தொடர்ந்தால் அங்கு செல்லும் மாணவர்கள் நூலகக் கல்வியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் ஒரு கொடுரமான எச்சரிக்கை அவர்களுக்கு விடப்பட்டிருந்தது. இதிலிருந்து சுதந்திரமான அறிவுத் தேடலுக்கு ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் மூலைமுடுக்குகளிலிருந்தெல்லாம் எதிர்ப்பாளர்கள் கல்லிடைத்தேரைகளாக இருந்துவருகிறார்கள் என்பதை அனுமானிக்க முடிகின்றது.

ஒருவர் தம்மை சமூகப் பொறுப்புள்ள ஒரு நூலகராக இனம்காணவேண்டுமானால் துணிச்சலுடன் செயற்படப் பயிற்சி பெறவேண்டும். சுயநல நோக்கின்றி, வெளிப்படையான பணிகளின்மூலம் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும். கீழ்க்கண்ட செயற்பாடுகளுக்கு தனது மனச்சாட்சியின் பதிலாக ‘ஆம்;’ என்ற பதிலைத் தருபவராக நீங்கள் இருந்தால், உங்களை ஒரு நல்ல நூலகராகச் சமூகத்தில் இனம்காட்டிக்கொள்ளலாம்.

1.உங்கள் விருப்புக்குரிய வாசிப்பாக குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருநூலையாவது முழுமையாக வாசிப்பராக இருக்கவேண்டும். இங்கு வாசிப்பு என்பது ‘பார்வையிடல்’ என்ற பதத்தைக் குறிப்பிடுவதில்லை. மாதமொரு நூலையாவது வாசித்துக் கிரகித்திருக்க வேணடும். அந்த நூலின் உள்ளடக்கம் பற்றிய உங்கள் நேர்மையான கருத்தை குறைந்தபட்சம் இருவருடனாவது பகிர்ந்துகொண்டிருக்க வேண்டும். சுயமான வாசிப்புக்குத் தானே விரும்பாத ஒருவர் நூலகராக ‘வாழும்’ அடிப்படைத் தகுதியற்றவராவார். அவர்களால் நூல்களைக் கட்டிக்காக்கவே முடியும். அதைச் செய்வதற்கு நூலகவியல் கல்விபெற்ற நூலகர் தேவையில்லை. நூலகரல்லாத ஒரு பண்டகசாலைக் காப்பாளராகவே (Store Keeper)  இருந்துவிட்டுப் போகலாம். தான் வாசிக்கமுயலாத எவரும் மற்றவர்களை வாசிக்கத்தூண்டுவது கேலிக்குரியதாகிவிடும்.

2. நூலகராகக் கடமையேற்ற முழுமையான காலகட்டத்தில் உங்கள் அங்கத்தவர் பட்டியலில் குறைந்தபட்சம் 10 ‘புதிய’ வாசகர்களை உருவாக்கியவராக-அவர்களை சட்டென்று மற்றவர்கள் ‘நல்லதொரு வாசகன்/வாசகி இவர்’ என்று இனம்காணக்கூடியவராக மாற்றியமைத்த பெருமைக்குரியவர் நீங்கள் என்று கருதுபவராக ஒரு நூலகர் இருப்பாரானால், அவர் தன்னை ஒரு நல்ல நூலகர் என்று குறிப்பிட்டுக்கொள்ள உரித்துடையவராவார். ஒரு நூலகரின் பணி, நூலகத்தை நாடிவரும் வாசகர்களுக்குப் பணிவிடைசெய்வது மாத்திரமல்ல. புதிய வாசகர்களை சமூகத்தில் உருவாக்கிவிடுவதில் இன்பம் காண்பதாகவும் அமையவேண்டும். உங்களால் வாசகராக உருவாக்கப்படுபவர்,

நூலகத்தின் அங்கத்தவராக இருக்கவேண்டுமென்பது கூட முக்கியமல்ல. சொந்தத் தாயாராக, தந்தையாக, தம்பி-தங்கைகளாகக் கூட அவர்கள் இருக்கலாம். உங்கள் குடும்ப அங்கத்தவர்களை முதலில் வாசிக்கத்தூண்டி அவர்களை நல்ல வாசகராக மாற்ற முயலவேண்டும். அதைச் செய்ய முயலாதவர்களால், முடியாதவர்களால், சமூகத்தில் வாசிப்பை நேசிக்கும் புதியவர்களையும், வாசிப்புப் பண்பாட்டையும் உருவாக்கும் சக்தியைப் பெற முடியாது போகலாம். “ஒரு சமூகத்தின் வாசிப்பு ஒவ்வொரு வீட்டின் மூலையிலுமிருந்துதான் உருவாகின்றது”. நீங்கள் புதிய வாசகர்களை சமூகத்துக்கு வழங்குவதில் இதுவரை ஒருபோதாவது வெற்றிகண்டுள்ளீர்களா?

3. நூலகர் தனது நூலகத்தின் சேர்க்கைகளில் அதிக அக்கறை கொண்டவராக இருக்கவேண்டும். அதற்கான வழிமுறைகளை, நிர்வாகத் தொடர்புகளை சமரசமாகப் பேணும் திறன்மிக்கவராக இருக்கவேண்டும். ஒரு நூலகச் சேர்க்கை காத்திரமானதாகவும், கவர்ச்சிமிக்கதாகவும் இல்லாது போனால் நூலகமும் சோபையிழந்து போகும், அதன் நூலகரும் பொலிவிழந்துபோவார். பாடசாலை நூலகக் கொள்வனவில் ஈடுபடுவதில் அதிகமாக அப்பாடசாலையின் அதிபர்களையும், செல்வாக்கு மிக்க ஆசிரியர்களையுமே இலங்கையின் புத்தக நிலையங்களிலும், புத்தகச் சந்தைகளிலும் காணமுடிகின்றது.

இது ஆரோக்கியமான செயற்பாடல்ல. ஆசிரியர்களுக்குத் தமது துறைசார்ந்த நூல்களைத் தெரிவுசெய்வதிலேயே அக்கறை மிகுந்திருக்கும். நூலகருக்கோ அவரது நூலகச் சேர்க்கை சார்ந்த அக்கறை விரிந்துபட்டிருக்கும். பாடசாலை நூலகங்களில் பாடங்கள் சார்ந்த நூல்கள் மாத்திரம்தான் வைத்திருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு எழுபதுகளின் இறுதிப் பகுதிகளிலேயே ஐரோப்பிய நாடுகளில் முடிவுக்கு வந்துவிட்டன. பாடம்சார்ந்த நூல்களுடன் பல்வேறு அறிவியல் நூல்களும் அங்கு இன்று உள்ளன. ஹரிபொட்டர் மாயாஜாலக் கதை நூல்கள் இல்லாத பாடசாலை நூலகங்கள் லண்டனில் இன்று இல்லை. தற்போது ஐரோப்பிய ஊடகங்களில் முக்கிய செய்தியாக அடிபடுவது இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றிய தகவல்களாகும்.

இன்று எந்தவொரு நூலகத்துக்கு- அது பாடசாலை நூலகமாகவோ, பொது நூலகமாகவோ இருக்கலாம்- சென்றாலும் முன்னறையில் உங்களை வரவேற்பது அத்துறைசார்ந்த நூல்களும் பத்திரிகை வெட்டுத்துண்டுகளுமே. பாருங்கள், தான் சார்ந்த சமூகத்தின் அறிவை விருத்திசெய்யவேண்டும் என்ற அக்கறை எவ்வளவுதூரம் இந்த நூலகர்களிடம் சுதந்திரமாக நிரம்பி வழிகின்றதென்று. சிறுசிறு முடிவுகளுக்கெல்லாம் நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றாகவேண்டும் என்ற அடிமைநிலை நிர்வாகரீதியாக மாற்றப்படவேண்டும். நூலகர்கள் ஒரு வரையறைக்குள் சமூகப் பொறுப்புடனும், சுயசிந்தனையுடனும் செயற்பட வழியமைத்துத்தரப்படவேண்டும். இன்றைய காலகட்டத்தில் நூலகத்தின் நூற்சேர்க்கைகளைத் தேர்ந்தெடுக்கும் நிர்வாக அதிகாரம் ஒரு நூலகரிடம் இல்லாதவிடத்து அவர் ஒரு நல்ல நூலகராகச் செயற்படமுடியாது.

4. ஒரு நூலகரை மற்றவர்கள் மதிக்கவேண்டுமானால் அது அவரது செயற்பாடுகளினால் மாத்திரமே சாத்தியமாக்க முடியும். சுயநலநோக்கம் கொண்டு நிர்வாகத்தை அணுகாது, பொது நல நோக்கோடு நிர்வாகத்தைத் தட்டிக்கேட்க முற்பட்டால் அதற்கு பொதுமக்களின் ஆதரவும், ஊடகங்களின் ஆதரவும் எளிதில் கிடைத்துவிடும்.
நான் எனது ஆரம்பகால நூலகப் பணியை சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியில்தான் ஆரம்பித்தேன். கவனிப்பாரற்றிருந்த அந்த நூலகத்தினை புனரமைக்கும் பணியை என்னிடம் அந்நாளில் வடமாகாண கல்வித் திணைக்கள அதிபரான திரு மாணிக்கவாசகர் அவர்கள் தனிப்பட்டமுறையில் ஒப்படைத்திருந்தார். எனக்கு வழங்கப்பட்ட தற்காலிக வேதனம் ரூபா 125., அந்நாளில் அக்கல்லூரியில் பியூனாகப் பணிபுரிந்தவருக்கு ரூபா 400 மாத வேதனமாக வழங்கப்பட்டதிலிருந்து ஒரு பாடசாலை நூலகரின் வேதன மதிப்பீடு நிர்வாகத்தின் பார்வையில் எப்படி இருந்திருக்கிறது என்பதை அவதானிக்கலாம். அங்கு பணியாற்றிய காலகட்டத்தில் இடம்பெற்ற நிர்வாகப்பிரச்சினை பற்றிய செய்தி இக்கட்டுரைக்கு முக்கியமானது.

அக்காலகட்டத்தில் கல்விப்பொதுத் தாராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கு மாணவிகள் ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். இராமநாதன் கல்லூரியின் உயர்தர விஞ்ஞான மாணவியர் சிலர் என்னை அணுகி, என்னிடம் விலங்கு உயிரியல் என்ற நூலை இரவலாகப் பெற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டார்கள். தட்டுகளில் தேடிப்பார்த்தேன் ஒன்றுகூட அகப்படவில்லை. நூற்சேர்க்கைப் பதிவேட்டைப் புரட்டிப்பார்த்ததில் ஏழு பிரதிகள் நூலகத்தில் இருந்தாகவேண்டும். இரவல் வழங்கும் பதிவேடு முறையாகப் பேணப்பட்டிருக்கவில்லை.

அம்மாணவியரிடம் விரைவில் நூல்களைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்தபின்னர், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டேன். முதற்பணியாக, அந்நூலை கையகப்படுத்தி வைத்திருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் விலங்கு உயிரியல் நூல் பிரதிகளை நூலகத்தில் மீள ஒப்படைக்குமாறு ஒரு கடிதத்தை எழுதி அதிபரின் கவனத்திற்குக் கொண்டுவந்தேன். அத்தகைய விண்ணப்பங்களை நான் கோரமுடியாது என்றும் தானே அதனை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இருவாரங்களாக எவ்வித பயனும் இல்லை. மீண்டும் அதிபரிடம் சற்று அழுத்தமாக எனது வேண்டுகோளைத் தெரிவித்தேன். மாணவிகளுக்கு ஒரு பிரதிகூட கையிருப்பில் இல்லாத நிலையில் ஆசிரியர்கள் தமது பிள்ளைகளுக்காக அவற்றை எடுத்துச்செல்வது நியாயமல்ல என்ற போக்கில் எனது வாதம் அமைந்தது. முடிவில் விலங்கு உயிரியலின் ஏழு திரதிகளும் நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. மாணவியரிடம் அவை வழங்கப்பட்டன.

அதன்மூலம் நிர்வாக ரீதியில் கசப்பான அனுபவங்களை நான் எதிர்கொண்டபோதிலும், நூலகத்தின் துரித வளர்ச்சி எவரது சீண்டுதலுக்கும் கவசமாக அமைந்து என்னைப் பாதுகாத்தது. பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரியர் உளவியல்ரீதியாக என்னைப் பாதிக்கும் வகையில் “125 ரூபா குயஉடைவைநைள குநநள சம்பளத்தில் இயங்கும் உமக்கு ஏன் இவ்வளவு அக்கறை?” என்றும் கேட்டிருந்தார். எமது நகர்வுகள் பொது நோக்கத்தையே முன்னிலைப்படுத்தி அமைந்ததால் நிர்வாகத்தினால் பாதிப்புகளை எதிர்கொள்வதற்குத் தடையாக அன்றைய மாணவியர்களின் படையணியே எனக்குக் கவசமாக அமைந்தது. அக்காலகட்டத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்குத் தேர்வுசெய்யப்பட்ட மாணவியர் எண்ணிக்கை அதிகரித்திருந்ததாக பின்னாளில் ஒரு இராமநாதன் கல்லூரி ஆசிரியரே என்னிடம் குறிப்பிட்டிருந்தார்.

அன்று எனது நூலகசேவைகளைப் பெற்றிருந்த உயர்தர கல்வி மாணவியருள் ஒருவரே இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதம நூலகராகவும் பணியாற்றுகின்றார் என்பதும் மனம்கொள்ளத்தக்கது.
முன்னர் குறிப்பிட்டிருந்ததுபோல சுயநலநோக்கம் கொண்டு நிர்வாகத்தை அணுகாது, பொது நல நோக்கோடு நிர்வாகத்தைத் தட்டிக்கேட்க முற்பட்டால் அதற்கு பொதுமக்களின் ஆதரவும், ஊடகங்களின் ஆதரவும் எளிதில் கிடைத்துவிடுவதுடன், நிர்வாகத்தின் செவிப்பறைகளில் அது எளிதில் சென்று தாக்கும் வல்லமை கொண்டதாகும். இத்தகைய சூழலை தன்னளவில் ஏற்படுத்திக்கொள்ளாத நூலகர்கள், நூலகத் தொழிலாளர்களாகவே எஞ்சிய காலத்தைக் கழிக்கநேரிடும். ஒரு நூலகத்தில் கழிவறை இல்லாமல் இருப்பது சமூகக் கொடுமை. இதனை இன்று எத்தனை நூலகர்கள் வெளி உலகிற்குக் கொண்டு வருகிறார்கள்.

கழிவறை வசதியில்லாத, வாசகர், இருந்து வாசிக்க பொருத்தமான அடிப்படை வசதியில்லாத நூலகங்களை, போதிய தட்டுக்களின்றி நூலக சேவைகளை விரிவுபடுத்தமுடியாத நூலக வசதியீனங்கள் என்று பலவற்றை நாங்கள் அன்றாடம் கண்டு வருகின்றோம். அத்தகைய வசதியற்ற நூலகங்களில் பணியாற்றும் நூலகர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், அத்தகைய சேவைகளை உங்கள் வாசகர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதில் வெற்றிகண்டு இருக்கிறீர்களா? ஆம் என்று உங்கள் மனச்சாட்சி சொல்லுமாக இருந்தால், நீங்கள் ஒரு சமூக நூலகராக உங்களைக் கருதுவதில் தப்பேயில்லை. குறிப்பிட்ட நிர்வாகிகள் இதற்குத்தடையாக இருக்கிறார்கள் என்று கருதி உங்கள் செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ள வழிமுறைகளைத் தேடும் கோழைகளாக நீங்கள் இருந்தால், உங்கள் பதவிக்கு நீங்கள் பொருத்தமானவர்களே இல்லை.
மேற்கண்ட அடிப்படை நான்கு அம்சங்களும் ஒரு நூலக ஊழியரை சிறந்த சமூகப்பொறுப்புள்ள நூலகராக உருமாற்றத் துணை நிற்பவையாகும்.

பாடசாலை நூலகசேவைக்கும் ஈழத்து நூல் பதிப்புத்துறைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இன்று பதிப்புத்துறையின் நலிவுக்கு, பாடசாலை நூலகங்கள் புதிய வாசகர்களை உருவாக்காமல் புலமைப்பரிசில் பரீட்சைகளைக் கருத்திற்கொண்டு மாணவர்களை இயந்திரங்களாக மாற்றும் சோம்பேறித்தனமான வழிகாட்டலுக்குத் தள்ளப்படுவதை காரணமாகக் குறிப்பிடுகிறார்கள். இன்று புத்தகச் சந்தை கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் ஒழுங்குசெய்யப்படும் நாட்களை மையம்கொண்டு பொது உளச்சார்பு நூல்களும், உப பாடநூல்களும் 70 சதவீதமான அச்சகங்களால் வெளியிடப்பட்டுச் சந்தைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இவை இந்த ஆசிரியர் உலகிற்குத் தீவனமாகவே அமைகின்றன. அவர்களும் தமக்கென ஒதுக்கப்படும் பணத்தொகையில் இத்தகைய நூல்களைப்பெறுவதில் அதீத அக்கறை காட்டுபவராக இருக்கிறார்கள் என்றும், பொது அறிவியல், இலக்கிய நூல்களின்பால் அவர்களின் கவனம் திரும்புவதே இல்லை என்பதும், பிற நூல்பதிப்பாளர்களினதும் ஈழத்து எழுத்தாளர்களினதும் முக்கியமான ஆதங்கமாகச் சொல்லப்படுகின்றன.

இதன் காரணமாக ஈழத்துப் புத்தகச் சந்தையில் சமூக, கலை, இலக்கிய நூல்கள் பெரும்பாலும் ஒரு தலைப்பில் 300 பிரதிகள் அச்சிடப்படுவதே அவர்களுக்கு விநியோகச் சிக்கல்களையும் சந்தைசார் பணமுடைகளையும் தோற்றுவிப்பதாய் அமைந்துள்ளன. இது மிகவும் ஆரோக்கியமற்ற பாரதூரமான நிலைப்பாடாகும். பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் புதிய புதிய தலைப்புகளில் நூல்வெளியீடுகள் வருகின்றன.

இதை வைத்துக்கொண்டு ஈழத்துப் பதிப்புலகமும், நூல்வெளியீட்டுத்துறையும் வெகு கோலாகலமாக முன்னேறி வருகின்றன என்று குறிப்பிடுவது ஓர் ஆழப்பார்வையாக இராது. அத்தகைய நூல்களில் எவ்வளவு நூல்கள் பலரது கைகளையும் சென்றடைகின்றன என்ற கேள்விக்கு ஆரோக்கியமான பதில் படைப்பாளியிடம் இராது. யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட சில நூல்கள் யாழ்ப்பாண மாவட்டத்தை விட்டே வெளியில் பரவலாகச் சென்றடைவதில்லை. மலையகத்தில் வெளியிடப்படும் பல நூல்கள் மலையகத்தவரின் கைகளிலும், இஸ்லாமியரின் தமிழ் நூல்கள் இஸ்லாமிய சமூகத்துக்கப்பால் பரவலாகச் சென்றடைய முடியாத நிலையும் காணப்படுவதை எனது அனுபவ வாயிலாகவே கண்டு ஆரம்பத்தில் அதிர்ந்தவன் நான். இன்று அதுவே இயல்புவாழ்வாகிப் போனதால், நூல்தேட்டத்தின் தகவல் தேவைக்காக இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் தொடர்வதை வழமையாகக் கொண்டுவிட்டேன்.

நூல்களின் பெருமளவிலான உருவாக்கத்திற்கு அந்நூல்களின் பரந்துபட்ட வாசிப்புத்தளம் முக்கியமானது. ஒருவரின் வாசிப்புத்தளத்திற்கு அவரது பாடசாலை வாழ்க்கையிலேயே அத்திவாரமிடப்படல் வேண்டும். அதற்கான வசதியை ஏற்படுத்தவேண்டியது பாடசாலை நூலகங்களின் கடமையாகும். இலங்கையின் முன்னணிப் பாடசாலைகளை அவதானித்தால், அதன் நூலகம் செழுமையாக இருப்பதை அவதானிக்கலாம். சில பாடசாலைகளில் நூலகம் பூட்டப்பட்ட அறைகளில் பூதம் காக்கும்புதையல்களாகக் காட்சியளிக்கின்றன. நூலகத்தின் செழுமையே ஒரு பாடசாலையின் மாணவர்களை அறிவாளிகளாக்குகின்றன என்றால் அது மிகையாகாது.

ஐரோப்பிய பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நூலகமே முதலில் துலக்கமாகத் தெரிகின்றன. இலங்கையில் இது எத்தனை வீதம் நடைபெறுகின்றது என்பதும் ஒரு கேள்வியாகும். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் நுழைவாயிலை நூலகம் அலங்கரிப்பதை நாம் இங்கு மனங்கொள்ளவேண்டும். ஒரு பாடசாலை நூலகத்தின் மதிப்பும் முக்கியத்துவமும் கூடக்கூட அப்பாடசாலையின் அறிவார்ந்த மாணவ சமூகத்தின் எண்ணிக்கை பெருகும் என்பது நியதியாகும். இதே சமன்பாட்டை இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களின் ஒவ்வொரு பாடசாலையும் மனதிற் கொள்ள வேண்டும். அர்த்தமற்ற குறுகிய நிர்வாகத் தடைகளைக் களைந்து நூலகரை முழுமையான சுதந்திரத்துடனும் மன ஆரோக்கியத்துடனும் பணியாற்ற வழிவகுக்கும் உள்ளகச் சட்டங்களை பாடசாலை அதிபர்களும், பாடசாலை இயக்குநர் சபையும் அறிமுகப்படுத்துவதால் மட்டுமே பாடசாலை நூலகங்கள் செழுமைபெறும்.

பரந்து விரிந்த அறிவுமிக்க ஒரு இளைஞர் சமூகம் உருவாகும். இத்தகைய ஆரோக்கிய வளர்ச்சிக்கு குந்தகமாக இருக்கும் எந்தவொரு நிர்வாகச் சட்டமும் அர்த்தமற்றதாகும். அதற்குத் துணைபோகும் நிர்வாகத் தலைவரும், நூலகரும் தாம் அறிந்தோ அறியாமலோ ஒரு சமூகக் கொடுமைக்கு துணைபோகின்றவராவார். வரலாறு இவர்களை மன்னிக்கப்போவதில்லை.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு