காஸா ஆக்கிரமிப்புக்கு எதிராக லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – சேனன்

1230990018227.jpgகடந்த ஆண்டுகளில் பல எதிர் போராட்டங்கள் கண்ட லண்டன் ட்ராபல்கர் ஸ்காயரில் இன்று (3rd Jan)மீண்டும் மக்களின் குரல் பலமாக ஒலித்தது. மேற்கத்தேய அதிகாரங்களின் ஆதரவுடன் கேட்டுக்கேள்வி இல்லாமல் பாலஸ்தீனிய மக்களை கொன்று தள்ளிக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய அதிகாரத்தின் அட்டகாசத்துக்கு எதிராக மீண்டும் ஆயிக்கணக்கில் மக்கள் திரண்டனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் எம்பாங்மென்றில் இருந்து பாராளுமன்றம் முதலான முக்கிய இடங்களை தாண்டி ட்ராபல்கர் ஸ்கார்வரை ஊர்வலமாக வந்து தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். 

1230991169810.jpgஇஸ்ரேலிய டாங்குகள் காஸா பிரதேசத்திற்குள் அத்துமீறி நுழைந்த இன்று லண்டன் தெருக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தமது தொண்டை வறள கத்தி எதிர்ப்பை தெரிவித்தனர். பாலஸ்தீனர்கள் யூதர்கள் மற்றும் பல்வேறு இன மக்கள் ஒட்டுமொத்தமாக ஒருமித்த குரலில் கத்தி 2009ம் ஆண்டின் எதிர்ப்பை தொடங்கி வைத்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய திறந்த சிறை என்றழைக்கப்படும் காஸா பிரதேசத்தில் அங்கு வாழும் 1.5 மில்லியன் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் அடக்குமுறைகள் சொல்லிமாளக் கூடியவையல்ல. கடந்த 16 மாதங்களாக இஸ்ரேல் ஏற்படுத்தியிருந்த கடும் முற்றுகை காரணமாக குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் பசி பட்டினியுடன் எந்த அடிப்படை வசதிகளுமின்றி ஆடு மாடு நாய்களை விட கேவலமான வாழ் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது நாமறிந்ததே. ஏராளமானவர்கள் பட்டினியால் செத்து கொண்டிருக்கும் தருணத்தில் எந்த தற்காப்பு வசதியுமற்ற அப்பாவி மக்கள் மேல் நவீனரக ஆயுதங்களை கொண்டு கடும் தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.

இரண்டு வருடங்களுக்கு முன் லெபனானில் செம்மை அடி வாங்கியிருந்த இஸ்ரேலிய இராணுவம் தமது பலத்தை காட்ட அப்பாவி மக்களை  தாக்குவது மிகவும் கேவலம். ஏதிர்வரும் பெப்பிரவரி தேர்தலில் வலது சாரிகளின் வாக்குகளை அள்ளி சுருட்டும் நோக்குடன் இயங்கும் இஸ்ரேலிய அரசுக்கு உலகின் புதிய விடிவெள்ளி ஒபாமா உட்பட அனைத்து அதிகாரங்களும் ஆதரவு! இஸ்லாமின் பெயரைசொல்லி மக்களை ஆட்டிப் படைக்க நிற்கும் சவுதிஅரேபியா முதற்கொண்ட அரேபிய தலைமைகளும் வெறும் சாக்குக்கு இஸ்ரேலை கண்டிப்பதோடு நின்றுவிட்டன.

இப்படிப்பட்ட உலகில் வாழ்வதை நினைக்க சோகம் கவ்வுகிறது. இந்த தான்தோன்றித் தனமாக இயங்கும் கொலை வெறி நாய்களின் வால்களை நறுக்க வழியற்ற நிலையின் வேதனை குமுறல் லண்டன் தெருக்களில் கணீரென்று ஒலித்தது. அவர்தம் ஆத்திர பொறி மேலும் மேலும் வெடித்து பரவும் என்பதை தீர்மானமாக பார்க்க முடிந்தது. நீண்டகால ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்த மக்கள் வேட்டையாடப்படுவதை சத்தம்போடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அதிகாரத்தோடு நாமில்லை என்பதை உலகெங்கும் உள்ள மக்கள் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளும் மேலும் மேலும் அதிகமான எதிர்ப்பு ஊர்வலங்கள் போராட்டங்களை பார்க்கப்போவது தவிர்க்க முடியாதது.

உலக பொருளாதாரம் தலைகீழாய் கவிழ்ந்து உருண்டு கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதிகாரங்கள் யுத்தம் -ஆக்கிரமிப்பு துவேசம் பக்கம் சார்ந்து மக்களை துவைத்து பிழியும் வரலாற்றை இதுவரை பார்த்துள்ளோம். அதிகாரத்துக்கு தெரிந்த தப்பும் வழி அது ஒன்றுதான் என்பது எமக்கு தெரியும். ஆனால் முதல் தடவையாக உலகமயப்பட்ட மக்கள் எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. எல்லாரும் கிறிஸ்மஸ் விடுமுறையில் இருக்கும் பொழுது நசுக்கிடாமல் போய் காஸாவில் அடித்தால் தப்பிவிடலாம் என்ற அதிகார கனவை உடைத்துள்ளனர் மக்கள். கண்டும் காணாமல் இருக்கும் இங்கிலாந்து அமெரிக்க அவுஸ்திரேலிய மற்றும் ஏனைய அதிகார வர்க்கங்கள் உடனடியாக குலுக்கப்படும் என்பதை மக்கள் சத்தம்போட்டு உணர்த்தியுள்ளனர். உலகவரலாற்றில் என்றுமில்லாதவாறு இந்த போக்கு அதிகரித்து வருவதை தற்போது நாம் அவதானிக்க முடியும்.

நீண்ட இடைவெளியில் நடக்கும் போது தேர்தலில் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பின்றி அரசமைக்கு சிறுபான்மை அதிகாரவர்க்க பிரதிநிதிகள் அடுத்த தேர்தல் வரையும் செய்யும் அநியாயங்கள் அட்டகாசங்களை இனியும் பொறுத்துகொண்டிருக்க முடியாது என்ற உணர்வு உலகெங்கும் உள்ள ஒடுக்கப்படும் வர்க்கத்தால் உணரப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ஒபாமாவின் தேர்தலில் நிகழ்ந்தது போன்று ஒடுக்கப்படுபவர்கள் தேர்தலில் பங்குபற்றுவதால் மட்டும் தங்கள் பிரதிநிதிகளை ஆட்சிக்கு கொண்டுவந்துவிட முடியாது என்பது மக்களுக்கு இன்று மிகவும் வெளிச்சமாகியுள்ளது. இந்நிலையில் புதிய உலகளாவிய போராட்ட வடிவத்தின் தேவை அத்தியாவசிய தேவையாகியுள்ளது. உலகெங்கும் அதிகாரங்கள் தமது அட்டூழியங்களை ஒட்டுமொத்த மக்களின் சார்பிலும் நிகழ்த்துவதாக பாவனை செய்வது வரலாற்றில் என்றுமில்லாதபடி கேள்விக்குள்ளாகியுள்ளது. ஒவ்வொரு அட்டூழியத்துக்கும் எதிராக மக்கள் கிளர்ந்து ‘எமது பெயரில் இல்லை’ என்று கடும் எதிர்ப்பை வைப்பது உலகளாவிய எதிர்ப்புகளின் ஒன்றிணைவுக்கான சாத்தியங்களை ஏற்படுத்தியுள்ளது. காஸா மக்களுக்கெதிரான கொடுமையை எதிர்த்து உலக மக்கள் ஒன்றிணைவது இதன் ஒரு முதற்கட்டமே.

ஆயுதம் தாங்கி தற்காப்பு போர் செய்ய பாலஸ்தீனிய மக்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் அந்தபோர் மக்கள் ஒன்றிணைந்த மக்கள் நடத்தும் போராக இருக்கும் வரையில்தான் அது வெற்றி நோக்கி செல்ல வாய்ப்புண்டு. இஸ்ரேலிய ஒடுக்கப்படும் மக்கள் உட்பட மத்திய கிழக்கு நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்த போர் தான் நிரந்தர தீர்வை நோக்கி நகரக்கூடிய ஒரே ஒரு போர். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலில் போராடிக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய தோழர்கள் பாலஸ்தீன-லெபனான் தோழர்களுடன் இனைந்து போராட்டத்தை நடத்த முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறது சூழ்நிலை. இருப்பினும் லெபனானிலும் இஸ்ரேலிலும் தோழர்கள் வெளியிட்ட துண்டு பிரசுரங்கள் ஓரே குரலில் ஓரே மாதிரியான வேண்டுகோளுடன் விநியோகிக்கப் படுவதை கேள்விப்படவே பலருக்கும் புல்லரிக்கிறது. அதே வேண்டுகோள்களுடன் இங்கிலாந்து மக்கள் பாராளுமன்றத்தின் முன் கூச்சல் இட்டது ‘உன்னத சங்கீதமாக’ இருந்தது.இஸ்ரேலிய –லெபனான் – அமெரிக்க இங்கிலாந்து தோழர்கள் ஒன்று சேர்ந்த குரலில் பாலஸ்தீன மக்களுடன் இணைந்து அவர்தம் கொடுமைகளுக்கு குரல் கொடுத்தது அனைவரது உரிமைகளையும் மதிக்கும் உலகை ‘கனவு’ காண்பவர்களுக்கு இதத்திலும் இதமான நம்பிக்கை தருகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • chandran.raja
    chandran.raja

    அதேநேரத்தில் நாம் இன்னும் பலமாகாமல் எதிரிக்கு ஆத்திரம்வூட்டி சொந்த மக்களை அழிவுக்குகொடுக்கிற ரக்கெற்அடிக்கிறது குண்டெறிவது கண்ணிவெடி போன்றவை நிறுத்தியாக வேண்டும். இது அவர்களின் உரிமைபோராட்டத்தை பயங்கரவாதமாக்கக் கூடும்.

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    தாய் ஊரில் பஞ்சத்தில் பிச்சையெடுக்க தனயன் வெளியூரில் தானம் தர்மம் கொடுத்து புகழ்சம்பாதித்தானாம். இதுதான் இடசாரிகளின் தாரளமனபான்மை என்ற கொள்கை விளக்கம் வரகூடும். இஸ்ரேல் செய்வது பயங்கரவாதம் சிறிலங்கா செய்வது பயங்கரவாத ஒழிப்பு.

    Reply
  • thampi
    thampi

    வழக்கமாக தோழர் சேனன் கட்டுரைகளில் ஒருவித போர்க்குனாம்சம் இருக்கும். ஆனால் இந்தக்கட்டுரையில் ஒருவித விரக்தி தொனிக்கிறது.ஏன் இந்த சலிப்பு?நம்பிக்கையும் உறுதியும்தானே புரட்சியாளனின் அணிகலன்கள். அதை இழந்தால் முழுஉலகப் புரட்சி எப்படி சாத்தியமாகும்? தளர்ந்து விடாதே தோழா! “இறுதி வெற்றி உறுதி எமக்கு” வரிகளை நினைவில் கொள்ளுங்கள்

    Reply
  • kasi
    kasi

    /சொந்த மக்களை அழிவுக்குகொடுக்கிற ரக்கெற்அடிக்கிறது குண்டெறிவது கண்ணிவெடி போன்றவை நிறுத்தியாக வேண்டும். இது அவர்களின் உரிமைபோராட்டத்தை பயங்கரவாதமாக்கக் கூடும்./
    சில வருடங்களுக்கு முன்னர் பாலஸ்தீன சிறுவர்கள் கற்களால் எறிந்து ஆர்ப்பாட்டம் செய்தபோது இஸ்ரவேல் துப்பாக்கி தோட்டாவினாலேயே பதில் கொடுத்தது. அப்போது எந்த ஏகாதிபத்தியமும் பாலஸ்தீன சிறுவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இஸ்ரவேலை கண்டிக்கமும் இல்லை. எனவே சந்திரன்.ராசா போன்றவர்கள் ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவான கருத்துக்களை எழுதுவதை நிறுத்தினால் நல்லது.

    Reply
  • palli
    palli

    உங்களை திருத்தவே முடியவில்லை…

    Reply
  • nantha
    nantha

    National demonstration against Gaza occupation, Saturday 10 January, 12 noon, Hyde Park, London

    Reply