“விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை சிங்கள அரசியல்வாதிகளிடம் காணவில்லை’- பிரிட்டனின் காடியன்

kili-02.jpgசிங்கள வரை பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில் தன்னாட்சிக்காக போராடும் புலிகள் இயக்கத்திற்கு கிளிநொச்சியை இழந்திருப்பது பாரிய பின்னடைவாகும். ஆனால், நேற்று அந்த நகரத்தைக் கைப்பற்றுவதில் இராணுவம் அடைந்திருக்கும் வெற்றியானது விடுதலைப் புலிகளின் மறைவை வெளிப்படுத்துவதாக அமையப்போவதில்லை. புலிகளின் அரசியல் தலைமையகமான கிளிநொச்சி கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பிரதான பாதையில் அமைந்துள்ளது. இதன் மீது வான்வழித் தாக்குதல்களை எப்போதுமே கொழும்பு நடத்திக்கொண்டிருந்தது. ஒருவருடத்திற்கு முன்னர் சு.ப.தமிழ்ச்செல்வனின் அலுவலகத்திற்கு குண்டு வீசப்பட்டது. வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் அரசாங்கத்துடனும் அடிக்கடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவரான தமிழ்ச்செல்வனின் அலுவலகம் குண்டு வீச்சுக்கு இலக்காகி இருந்தது.

தரை மார்க்கமாக இராணுவத்தின் முன்னேற்றமானது அங்கிருந்த புலிகளை ஒட்டுமொத்தமாக வாபஸ்பெறவைத்தது. ஆனால் இயக்கத்தின் இராணுவ தலைமையகமும் அதன் தளங்களும் அந்தப்பகுதிக்குக் கிழக்கே முல்லைத்தீவில் மறைவான இடத்தில் உள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்பது ஒருபோதும் தெளிவாக அறியப்படாதது. கிளிநொச்சியை கைப்பற்றியதானது அச்சமூட்டக்கூடிய வகையில் மனித உயிர்களுக்கு விலை செலுத்திய விடயமாகும். காஸாவுடன் ஒப்பிடக்கூடியவை. தணிக்கைகள், அந்தப் பகுதிகளுக்குப் பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதிக்கப்படாமை என்பனவும் நடைமுறை விடயங்களாகும். பல நாட்களாக விமானத் தாக்குதல்கள், ஆட்லறித் தாக்குதல்கள் இடம்பெற்றன. பொதுமக்களும் புலிகளும் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காடுகளுக்குள் இடம்பெயர்ந்தனர். இரு தரப்பிலும் 100 க்கணக்கான படையினர் கொல்லப்பட்டனர். பலமாதங்கள் எடுத்த இந்நடவடிக்கை நேற்று தனது இலக்கை எட்டியுள்ளது.

காஸாவைப்போன்றே இதுவும் சமச்சீர் அற்ற போர் முறைமையாகும். கொழும்புக்கு துரிதமாக தற்கொலை குண்டுதாரியை அனுப்பியதன் மூலம் அரசாங்கத்தின் வெற்றிப் பிரகாசத்தை புலிகள் எடுத்துக் கொண்டுவிட்டனர். இச்சம்பவத்தில் விமானப்படை தலைமையகத்தைச் சேர்ந்த இரு படையினர் கொல்லப்பட்டனர். இது எப்போதுமே புலிகளால் மேற்கொள்ளப்படும் தந்திரோபாயமாகும். கிளிநொச்சியை இழந்த பின்னர் அதிகளவில் இதனை அவர்கள் மேற்கொள்ளும் தன்மை காணப்படுகின்றது. அதேவேளை, ஆனையிறவைக் கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் அரசாங்கம் உள்ளது. யாழ்ப்பாண வீதிக்கான புலிகளின் கடைசி அரணாக ஆனையிறவு உள்ளது. அது வீழ்ச்சி கண்டால் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமான யாழ்ப்பாணத்துக்கான விநியோகத்தை மீள சுலபமாக்கிவிடும். தற்போது கடல் மற்றும் வான் மார்க்கமாகவே யாழ்ப்பாணத்துக்கான விநியோகம் இடம்பெறுகிறது.

இதனைக் கைப்பற்றுவது விடுதலைப் புலிகளை மிகக் கடுமையாக பாதிக்கும் என்பது நிச்சயம். ஆனால், தமிழ் சொந்த சமூகங்களின் மத்தியில் அவர்களின் செல்வாக்கு இருக்கும் வரை கெரில்லா இயக்கங்கள் தலைமறைவாகி மீண்டும் வெளிக்கிளம்பும் ஆற்றலைக் கொண்டுள்ளன. விடுதலைப் புலிகளை அரசாங்கம் பயங்கரவாதிகள் என அழைக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் புலிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், பலருக்காக அவர்கள் குரல் கொடுக்கின்றனர் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ளது. பல்லின பல்கலாசார மக்கள் வாழ்கின்ற இலங்கையில் தமிழ் மக்கள் மிக மோசமான முறையில் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் உடனடியாக புலிகளுக்கு நிதி உதவி வழங்குவதை புலம் பெயர்ந்த தமிழர்கள் முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தியமில்லை.

நியாயமான அரசியல் தீர்வே இலங்கைக்கு தேவைப்படுகிறது. இராணுவத் தீர்வு இருக்க முடியாது. நேற்று இராணுவம் ஈட்டிய வெற்றியானது கொழும்பில் வெற்றிக்களிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு, நிதி, தேசத்தைக் கட்டியெழுப்புதல் ஆகிய அமைப்புப் பொறுப்புகளை ஏற்கனவே தன்வசம் வைத்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போது ஊடகத்துறை அமைச்சையும் தன்வசமாக்கியுள்ளார். நாட்டின் செய்தியாளர்கள் மீது இறுக்கமான கட்டுப்பாட்டை அவர் வைத்திருக்கும் சாத்தியம் தென்படுகிறது. இனிவரப் போகும் பல மாதங்களில் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளவதற்கான மனப்பான்மை சிங்கள அரசியல் வாதிகளிடம் இல்லை. பயங்கரமான புதுவருடத்தையே இலங்கை எதிர்கொள்கின்றது. இவ்வாறு பிரிட்டனின் காடியன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *