ஏழாலை மண் தந்த நூலகர் அமரர் சிற்றம்பலம் முருகவேள் – என்.செல்வராஜா, நூலகவியலாளர்,லண்டன்


Photo 84Bயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் அமரர் சிற்றம்பலம் முருகவேள் அவர்கள் கடந்த 02.12.2014 அன்று இறைபதமடைந்துவிட்டார். 09.02.1930 இல் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழாலைக் கிராமத்தில் சைவ மரபினைஅடியொற்றி வாழ்ந்த முருகேசு சிவக்கொழுந்து தம்பதியினரின் வழித்தோன்றலான சிற்றம்பலம் (துணைவியார் பராசக்தி) அவர்களின் மூத்த புதல்வராகப் பிறந்தவர் முருகவேள். உடன்பிறப்புக்கள் எழுவர்.

ஏழாலைக் கிராமத்தில் தனதுஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் பின்னர் யாழ்.பரமேஸ்வரா கல்லூரியில் சிலகாலமும்,கொழும்பு ரோயல் கல்லூரியில் சில காலமுமாகப் பயின்று பல்கலைக்கழகம் புகுந்தார். தமிழ் ஆங்கிலம் சம்ஸ்கிருதம் ஆகியமும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற முருகவேள்,ஒருதமிழ் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறி, பரமேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியப் பணியில் இணைந்துகொண்டார். இதே பாடசாலையில் ஆசிரியராகவும்,பின்னாளில் அதிபராகவும் இருந்த இவரது சிறிய தந்தையாரான ஞானப்பிரகாசம் ஆசிரியரின் வழியாக சைவவிசார, சிவஞானப் பசிக்கு இரை தேடிக்கொண்டார். நீறில்லா நெற்றி பாழ் என்பதற்கேற்ப, முருகவேள் அவர்களின் அகன்ற நெற்றி திருநீறு பூத்ததாகவே காணப்படுவதை அவருடன் பழகியவர்கள் அறிவர்.

ஆவணி 1959 இல் இவரது உறவினரான பேரம்பலம் பரிகாரியாரின் புதல்வியான புனிதவதியை திருமணபந்தத்தில் இணைத்துக்கொண்டார். இவர்களுக்கு கணேஷநந்தினி என்ற புதல்வியும் செல்வவிநாயகன், மகாசேனன் ஆகிய இரு புதல்வர்களும் பிறந்தனர். (கணேஷ நந்தினிகணவருடன் பிரித்தானியாவில் லிவர்பூல் பகுதியில் வைத்தியராகக் கடமையாற்றுகின்றார். செல்வவிநாயகன் கொழும்பில் சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனத்தில் வர்த்தக அபிவிருத்தி முகாமையாளராகப் பணியாற்றுகின்றார். மகாசேனன் ஊடகவியலாளராகப் பணியாற்றுகிறார்).

முருகவேள் அவர்கள் திருமணம் செய்த cகாலகட்டத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் பிரிவு நூலகராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டார். பின்னாளில் ஆர்.எஸ்.தம்பையாஅவர்கள் இளைப்பாற,யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் பிரதான நூலகராகப் பதவியேற்று தான் இளைப்பாறும் வரையில் அப்பணியில் தன் வாழ்வின் பெரும்பொழுதைச் செலவிட்டார்.முருகவேள் அவர்களின் காலகட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் வெள்ளி திசைக் காலம் எனலாம்.

முருகவேள் அவர்கள் பல்கலைக்கழக நூலகராகப் பணியாற்றிய வேளையில்தான் அவருடனான தொடர்பு எனக்கு முதன் முதலில் ஏற்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஈவ்லின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டியல் நிறுவனத்தின் நூலகராகப் பணியாற்றிய வேளையில் நூலகத்துறையை தமிழ் மாணவர்களிடையே பரிச்சயமாக்கும் பணியினை கலாநிதி அமரர் வே.இ.பாக்கியநாதனுடனும் தமிழ் நூலக அறிஞர் எஸ்.எம்.கமால்தீன் அவர்களுடனும் இணைந்து மேற்கொண்டு வந்தேன். அவ்வேளையில்தான் திரு முருகவேள் அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஆலோசகராக தொடர்பிலிருந்த திரு முருகவேள் பின்னாளில் எனதுஅன்றாட சமூக நூலகப் பணிகளில் ஆர்வமுற்று நெருங்கிய விமர்சகராகவும்,ஆலோசகராகவும் ஏன் இயக்கு சக்தியாகவும் மாறிவிட்டார். அவரது ஆதரவு பகிரங்கமானது. அன்றைய தொடர்பு இவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தது. நூல்தேட்டம் தொகுதியொன்றின் வெளியீட்டுவிழாவும் பராட்டு விழாவும் கொழும்புத் தமிழ்ச;சங்கத்தில் நடந்த வேளையில் அவர் நேரில் வந்து வாழ்த்திச் சென்ற நிகழ்வு என் நெஞ்சை விட்டகலாது.

ஈழத்தமிழ் நூலகத்துறையில் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் பயின்று கொண்டிருந்த மாணவர்களுக்கு தமிழில் போதியளவு நூல்கள் எண்பதுகளின் நடுப்பகுதியில்எம்மவரால் எழுதப்பட்டிருக்கவில்லை. 1970இல் எழுதப்பட்ட நூலகர் எஸ்.எம்.கமால்தீன் அவர்களின் பாடசாலை நூலகர் கைநூலும்,தமிழ் சாகித்திய விழா மலர் (1975), அறிவின் பாதையிலே- கொழும்பு பொதுநூலகக் கட்டடத் திறப்புவிழாமலர் (1980) போன்ற இன்னோரன்ன மலர்களிலும்,சில பத்திரிகைகளிலும் வெளியான சில மேலோட்டமான தமிழ்க் கட்டுரைகளுமே நுாலகவியல் துறை பற்றிப் பேசுவதாக அன்றைய காலகட்டத்தில் கைவசம் இருந்தன.

இந்நிலையில் அயோத்தி நூலகசேவைகள் என்ற பெயரில் ஒரு நூலக சேவைகள் சார்ந்த நிறுவன மொன்றை 1985 இல் ஆனைக்கோட்டையில் எமது இல்லத்தில் உருவாக்கியிருந்தேன். நூலகங்களுக்கும் நூலக சேவைக்கும் தமிழ்ப் பிரதேசங்களில் பங்களிப்புச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட முதலாவது நிறுவனமாகவே இது அமைகின்றது. பாடசாலை,பொது நூலகங்களும்,தனியார் நூலகங்களும்; ,பல்வேறு சேவைகளை இவ்வமைப்பின் வழியாகப் பெற்றுக் கொண்டன. பிராந்திய ரீதியில் கருத்தரங்குகள் பல நடத்தப்பட்டன.

இவ்வமைப்பின் மூலமாக அறிவியல் ரீதியாக நூலகத்துறையின் பல்வேறு பரிமாணங்களையும் பேசும் தமிழ் நூல்களையும் வெளியிடத் தொடங்கியிருந்தோம். இதன் ஒரு வளர்ச்சிக் கட்டமாக தமிழில் “நூலகவியல்”என்ற காலாண்டுச் சஞ்சிகையொன்றினை வெளிக்கொணரும் ஆவலுடன்  திரு.முருகவேளை சந்திக்க 1985இன் நடுப்பகுதியில் பல்கலைக்கழக நூலகத்திற்குச் சென்றிருந்தேன். எனது நோக்கம்- பல்கலைக்கழக நூலகவெளியீடாக அதனக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் பற்றிய கருத்தைக் கேட்டறிவதாகவே இருந்தது. அன்றையதினம் சுமார் மூன்று மணிநேரம் அவர் என்னுடன் ஆழமான உணர்வுபூர்வமாக உரையாடினார். பல்கலைக்கழக வெளியீடா கநூலகவியலை வெளியிடுவதில் உள்ள கட்டுப்பாடுகள் சுதந்திரம் பற்றியஅவரது கருத்துக்கள் அப்பணியை நானே மேற்கொள்வதற்கான மன உறுதியை எனக்களித்தது. செப்டெம்பர் 1985 முதல் தொடர்ந்து ஏழாண்டுகள் நூலகவியல் காலாண்டிதழ் வெளிவந்தது.

ஏழாண்டுகளும் நூலகவியலின் ஆலோசனைக் குழுவில் இருந்து நல்ல பல ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டி வந்தார் அவர். 1991இல் எனது லண்டன் நோக்கிய புலப்பெயர்வுடன் நூலகவியல் நின்று போயிற்று. அன்றைய அவரது அறிவுரையும் தீர்க்கதரிசனமும் எனது இன்றைய வளர்ச்சி நிலைக்கான உரமாக அமைந்ததை நான் மட்டுமே அறிவேன். ஆலோசனை,கலந்துரையாடல் என நூலகர் முருகவேளைசந்திக்கஅவரதுஅலவலகத்திற்குச் செல்லும் ஒவ்வொரு தடவையும் நீண்டஉரையாடல்களாகவே அத்தருணம் கழியும். தான் செய்ய விரும்பிய பணிகளை என் மூலமாக நிறைவேற்றும் கனவு அவரது கண்களில் தேங்கியிருந்ததை மானசீகமாக நான் அறிவேன்.

நூலகவியலின் முதலாவது இதழ் செப்டெம்பர் 1985இல் திருமுருகவேள் அவர்களின் சிறப்புரையைத் தாங்கிவந்தது. அதில் அவர் குறிப்பிட்ட இறுதிப் பந்தியை மீள்பதிவு செய்ய விரும்புகின்றேன்.

“எமதுநாட்டில் சிறியனவும்,அவ்வளவு சிறியனஅல்லாதனவுமாக நூலகங்கள் என்ற பெயரில் சில நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இவற்றில் ஏதோ தமக்குள்ளஆற்றலுக்கு ஏற்ற முறையில் பணிபுரியும் பலர் இருக்கின்றனர். இவர்களுக்கு நூலகவியலின் அடிப்படைக் கோட்பாடுகளையும்,தொழில் நுணுக்கங்களையும், இலட்சியார்த்த நோக்கங்களையும் அறியத் தருதல் இந்நாட்டில் நல்லதொரு நூலக சேவையினை உருவாக்கும் முயற்சியில் மிகுதியும் வேண்டப்படும் முதல் நிலைத் தொண்டாகும். இவற்றையெல்லாம் ஓரளவுஅறிந்த இச்சில நூலகர்கள்,நூலகச் செய்தியினை மக்களிடம் கொண்டு செல்பவர்களாகவும்,நூலக இயக்கத்தினை வெகுஜன இயக்கமாக்குகின்றவர்களாகவும் பரிணமிக்கின்ற வாய்ப்பு உண்டு. இச்சிறுவிதழ் அம்முதல் நிலைத் தொண்டினை ஒரு சிறிதாவது நிறைவேற்றி வைக்கும் எனஎதிர்பார்க்கலாம்.”

பின்னாளில் நூலகவியல் சஞ்சிகை தமிழ் பேசும் நூலகர்களிடையே ஏற்படுத்திச் சென்ற பாதிப்பானது, மீள்பிரசுரமாக, அந்த நூலகவியல் சஞ்சிகையின் முழுத் தொகுதியையும் உள்ளடக்கிய பெருந்தொகுப்பொன்றினை 2013இல் மீள்பிரசுரமாக கொழும்பு குமரன் புத்தக இல்லத்தினர் வெளியிடும் அளவுக்கு எமதுஅறிவியல் சமூகத்தினரிடையே வேரொடியிருந்துள்ளது.

இலங்கையின் கல்விஅமைச்சராக பதியுதீன் முகம்மது அவர்கள் சேவையாற்றிய காலகட்டத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகமாக 15.7.1974இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேளைமுதல்,பின்னர் சுதந்திரமானபல்கலைக்கழகமாக 1979இல் மாற்றம்பெறும் வரையில்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஏராளமான ஏட்டுச்சுவடிகள் (ஓலைச்சவடிகள்) பொதுமக்களால் நன்கொடையாகவும்,வேறு வழிகளிலும் கையளிக்கப்பட்டிருந்தன. பல்கலைக்கழக நூலகத்தின் ஆரம்பகால நூலகரான திரு.ஆர்.எஸ்.தம்பையாஅவர்கள் யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்துக்குள் உள்வாங்கப்பட்டவர். அவரது காலத்தில் இவ்வேட்டுச் சுவடிகள் நூலகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்தனவேயன்றி அவற்றை வாசித்துப்பட்டியலிடும் பணிகள் எதுவும் சாத்தியமாக இருக்கவில்லை. இந்நிலையில் திரு.முருகவேள் அவர்கள் புதிய நூலகராகப் பணியேற்றதன் பின்னர், இவ்வேட்டுச் சுவடிகளைப் பார்வையிட்டு விஞ்ஞான பூர்வமாகப் பட்டியலிடும் பணியை முடுக்கிவிட்டார். ஓவ்வொரு ஏட்டுச் சுவடிக்குமான தலைப்பு, பிரதிப்பாடத் தொடக்கம்,பிரதிப்பாட முடிவு,ஓலைகளின் எண்ணிக்கை,அளவும் பிற பௌதிக விபரங்களும் குறிப்பு என பல்வேறு தகவல்களுடன் இப்பட்டியலை இவர் தயாரித்தார்.

கிரந்தலிபியில் அமைந்த வடமொழிச் சுவடிகளை இனங்காண பிரம்மஸ்ரீ து.சுந்தரமூர்த்தி போன்ற அறிஞர்களின் உதவிகளையும் பெற்றிருந்தார். இவரது பணிக்கு அந்நாளில் பல்கலைக்கழகப் பணியாளர்களாக இருந்த க.நிரஞ்சனாதேவி,செ.சண்முகநாதன் ஆகியோர் பெருந்துணை புரிந்தனர். அரபு எண் ஒழுங்கில் அமைந்த பிரதான பட்டியல், தலைப்புச்சுட்டு,பொருட்சுட்டு ஆகிய மூன்று பிரிவுகளில் அப்பட்டியலை ஒழுங்கமைத்து, 1992இல் ஒருசிறு நூலுருவிலும் பல்கலைக்கழக நூலகத்தின் வெளியீடாக கல்லச்சுப் பிரதியாக நூலகர் முருகவேள் வெளியிட்டார்.

அமரர் முருகவேள் அவர்களின் நூல்கள் இரண்டு இதுவரை வெளிவந்திருக்கின்றன. அவரது ஆழ்ந்தகன்ற சைவசித்தாந்தஅறிவும் வடமொழிப் புலமையும் இந்நூல்களின் வழியாக புலப்படுத்தப்பட்டிருக்கின்றன. நூலகத்துறைசார்ந்து அவர் விரிவாக எழுதாமை இன்றும் ஒருகேள்விக் குறியாகவே அமைந்துவிட்டது. அவரது பெயரில் நூலகவியல் துறைசார்ந்து ஒரு நூல் எழுதப்பட்டு அயோத்தி நூலகசேவைகள் வெளியீடாகஅது வெளியிடப்படவேண்டும் எனஎனது சந்திப்புகளிலெல்லாம் அவரிடம் பலமுறை அழுத்தமாகக் குறிப்பிட்டு வந்திருக்கிறேன். இருப்பினும் எதுவும் ஈடேறவில்லை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவர் பணியாற்றிய காலகட்டம் மிகவும் சிறப்பானதொரு காலகட்டமாகும். அது பற்றி பல்கலைக்கழகத்தில் அவரது நிர்வாகத்தில் பணியாற்றிய வி.வேல்தாஸ் அவர்கள் அண்மையில் யாழ். உதயன் பத்திரிகையில் (உதயன் 3.1.2015) எழுதிய நீத்தார் நயப்புரையில் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் பல்கலைக்கழகத்தின் நூலக டிப்ளோமா பரீட்சைக்கென செப்டெம்பர் 1965 இல் நூலகர் முருகவேள் சமர்ப்பித்த விரிவான நூற்பட்டியல் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். 1960ம் ஆண்டு வரை ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்டிருந்த சைவசமயம் தொடர்பான நூல்கள் பற்றிய விரிவான நூற்பட்டியல் இதுவாகும். இப்பட்டியலுக்கான விரிவான பகுப்பாக்கம் ஒன்றினை இவரே உருவாக்கியிருந்தார். சைவசமயம் பற்றியஆய்வுகளை மேற்கொள்ளும் எவருக்கும் தமது தேடலை விரிவுபடுத்த இப்பட்டியல் நிச்சயம் உதவியாக இருக்கும்.

இதன் ஒருபிரதி தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில் பேணப்படுகின்றது. (ஆய்வேடுகளின் சேர்க்கை இலக்கம் 76336).  இவ்வாய்வு விரிவான பயன்பாடு கருதி நிச்சயம் நூலுருவாக்கப்படல் வேண்டும். இக் கைங்கரியத்தை அமரர் சி.முருகவேள் அவர்களின் நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகச் சமூகம் அல்லது இந்துசமய,கலாச்சார அலுவல்கள் அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வெண்டுகோளாகும். முதலாம் பாகமாகவாவது இவ்வேடு வெளிவருமிடத்து, பின்னாளில் 1961 முதலாக இந்நாள் வரை வெளிவந்த சைவசமயஆய்வுகள் பற்றிய பட்டியல்படுத்தும் பணியைவேறொருவர் மேற்கொள்ள வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரலாம். சைவமும் தமிழும் தன்வாழ்வு நெறியாக வாழ்ந்து மறைந்த ஏழாலையின் புதல்வன் முருகவேளுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக இது அமையும்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு