சிமன்ஸ் அதிரடியால் ,கரீபியர் பிரிமீயர் லீக் 2020 சம்பியனானது போலார்ட்டின் டிரிபாகோ நைட்ரைடர்ஸ் ! –

ஐ.பி.எல், பிக் பாஷ் டி20 லீக்கை போன்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு கரீபியர் பிரிமீயர் லீக் என்ற பெயரில் ஆண்டுதோறும் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது.
இந்த வருடத்திற்கான டி20 லீக் தொடர் ஆகஸ்ட் 18-ந்தேதி தொடங்கியது. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றிருந்த நிலையில் நேற்று கரீபியன் பிரிமீயர் லீக்கின் இறுதிப்போட்டி ர்டினிடெட் நகரில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா சாக்ஸ் அணி டிரிபாகோ நைட்ரைடர்ஸ் எதிர்கொண்டது. நாணயச் சுழற்சியில்  வென்ற டிரிபாகோ நைட்ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, செயின்ட் லூசியா சாக்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கார்ன்வெல் மற்றும் மார்க் டியல் களமிறங்கினர். கார்ன்வெல் 8 ஓட்டங்களிலும் மார்க் டியல் 29 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
அடுத்துவந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். சற்று நிலைத்து நின்று ஆடிய ஆன்ரே பிளட்சர் அதிகபட்சமாக 39ஓட்டங்கள் எடுத்தார்.
ஆனால், டிரிபாகோ அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக செயின்ட் லூசியா சாக்ஸ் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
டிரிபாகோ அணியின் கேப்டனும் பந்துவீச்சாளருமான கேரன் போலாட்டு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரிபாகோ நைட்ரைடர்ஸ் அணியின் சிமன்ஸ் மற்றும் வெப்ஸ்டர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வெப்ஸ்டர் 5 ஓட்டங்கங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த டிம் செய்ஃப்ரிட் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய டெரன் பிராவோ, சிமன்ஸ் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரு வீரர்களும் எதிர் அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த சிறப்பான ஆட்டத்தால் 18.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 157ஓட்டங்களை எட்டியது.
இதனால் செயின்ட் லூசியா சாக்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டிராபாகோ நைட் ரைடர்ஸ் அணி கரீபியன் டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது.
டிராபாகோ அணியின் சிமன்ஸ் 49 பந்துகளில் 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 84 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார். அதேபோல் டேரன் பிராவோவும் 47 பந்துகளில் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 58 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த டிராபாகோ அணியின் சிமன்சுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் அந்த அணியின் கேப்டன் கேரன் போலாடுக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *