எந்த ஒரு பெரும் பயணமும் ஒரு சிறு அடியிலிருந்தே தொடங்குகிறது!


IMG_0392 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்று இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவையொட்டி அக் கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம், கொடுமையான போரினால் சிதைந்து போன முல்லைத்தீவு தண்டுவான் கிராமத்து மகாதேவா படிப்பக மாணவர்களிற்கும் மண்சரிவினால் மாணவர்களை இழந்த பதுளை தெமோதரை சௌதம் தமிழ் மகாவித்தியாலத்திற்கும் பாடசாலை உபகரணங்களை வழங்கியது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வுகளிற்காக பங்குனி மாத இறுதி வாரத்தில் முல்லைத்தீவிற்கும், மலையகத்திற்கும் சென்றிருந்தார்கள்.

பதுளை சௌதம் மகாவித்தியாலத்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய அப்பாடசாலை அதிபர் யாழ்ப்பாணத்தில் இருந்து மலையகப் பாடசாலைகளிற்கு இத்தகைய உதவிகள் செய்யப்படுவது இதுவே முதல் தடவை என்றும், நம்பிக்கையையும், நல்லெண்ணெத்தையும் ஊட்டும் இந்த முயற்சிகள் வரும் நாட்களில் மேலும் தொடரப்பட வேண்டும் என்றும் இன, மத, பிரதேச வேறுபாடுகள் இல்லாத ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கான படிக்கட்டுகளாக இவை அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அந்த நிகழ்விற்கு வந்திருந்து உரையாற்றிய பதுளை பிரதேசத்து பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் ,சமுக சேவையாளர்கள் எனப் பலரின் கருத்தும் அதுவாகவே இருந்தது.

முல்லைத்தீவு தண்டுவான் கிராமத்தில் “மகாதேவா படிப்பகம்” என்ற கல்விசார் சமுகசேவை அமைப்பொன்றை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் நான்கு வருடங்களாக நடாத்தி வருகின்றார்கள். யாழ். இந்துக் கல்லூரியில் இரசாயனவியல் ஆசிரியராக இருந்து மறைந்த திரு.மகாதேவா அவர்களின் ஞாபகார்த்தமாக இந்த படிப்பகத்தை அவரின் மாணவர்கள் நடாத்தி வருகிறார்கள். திரு.மகாதேவா அவர்கள் தமது பாடசாலைப் பணி முடிந்தவுடன் மாலை நேரங்களில் மாணவர்களிற்கு இலவசமாக கற்பித்து வந்தவர்;  தமது மாணவர்கள் முன்மாதிரிகளாக, சமுக உணர்வு கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்பதை எப்பொழுதும் வலியுறுத்தி வந்தவர். இன்று அவரின் மாணவர்கள் அவரின் சொல்லை, அவரின் செயலை தொடருகின்றார்கள்.

இந்த முன்முயற்சிகள் தொடர வேண்டும். இன்னும் பல்கிப் பெருக வேண்டும். ஆனால் தாய்,தந்தையரை போரில் இழந்த நம் குழந்தைகளிற்கு, வறுமை தின்னும் வாழ்வில் பசியுடன் பாடசாலை செல்லும் நம் செல்வங்களிற்கு இத்தகைய சிறு உதவிகளுடன் நமது கடமைகள் முடிந்து விடுகின்றனவா? காற்று கலைத்த கடற்கரை மணல் போல் கலைந்து போய்க் கிடக்கும் நம் குழந்தைகளின் வாழ்வை நாம் ஏன் நினைத்துப் பார்ப்பதில்லை.

யாழ்ப்பாணத்து பாடசாலைகளின் வெளிநாட்டு பழைய மாணவர் சங்கங்கள் தத்தமது பாடசாலைகளிற்கு புதிது, புதிதாக கட்டிடங்கள் கட்டும் போது வன்னியிலும், மலையகத்திலும், கிழக்கு மாகாணத்திலும் மரத்தடிகளிலும், மாட்டுக் கொட்டகை போன்ற கட்டிடங்களிலும் நமது குழந்தைகள் பசித்த வயிறுடன் பாடம் படிக்கிறார்கள் என்பதை ஏன் எண்ணிப் பார்ப்பதில்லை.

SAM_7123யாழ்ப்பாணத்து பாடசாலைகள் ஓரளவிற்கு தன்னிறைவு கொண்டவையாக உள்ளன. அப்பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் உதவி செய்தால் தான் அவை இயங்க முடியும் என்ற நிலை இல்லை. ஆனால் வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும், மலையத்திலும் உள்ள பாடசாலைகளிற்கு போதிய ஆசிரியர்கள் இல்லை. மழைக்கு ஒதுங்க ஒழுங்கான ஒரு கட்டிடம் இல்லை. கல்வி என்னும் அமுது உண்ண காலை எழுந்து வரும் குழந்தைகளிற்கு குடிக்க ஒரு வாய் கஞ்சி கூட இல்லை.

இலங்கையில், தமிழ்ப் பகுதிகளில் கோயில்கள், கோபுரங்கள் புதிது ,புதிதாக எழுகின்றன. கிறீஸ்தவ தேவாலயங்கள் கட்டப்படுகின்றன. ஆனால்,  எத்தனை பாடசாலைகள் புதிதாக கட்டப்பட்டன?. மழை போல் பெய்த குண்டுகளினால் மண் மூடிப்போன எத்தனை பாடசாலைகள் மறுபடி கட்டப்பட்டன?  மலை பிளந்து மண் சரிந்து மரணப் பலி எடுத்த மலையகத்து மண்ணை ஏன் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

வாடின பயிரைக் கண்டபோது எல்லாம் வாடினேன், பசியினால் இளைத்தோரைக் கண்டு வாடினேன் என்று சொன்ன ராமலிங்கனாரின் கனிமொழிகள் ஏன் இவர்களின் காதுகளில் விழவில்லை. கல்லிலே கடவுளைத் தேடும் இவர்களிற்கு கண் முன்னே நம் குழந்தைகள் கண்ணீர் விடுவது ஏன் தெரியவில்லை?. பச்சைக்குழந்தைகள் பசித்திருக்க “உன்னைப் போல் உன் அயலானை நேசி” என்று கல்லிலே பொறித்து கண்ட பலன் என்ன?.

சிறு நண்டு கடலோரம் கீறும் படத்தை பெருங்கடல் கொண்டு போவது போல் போரும், வறுமையும் கொண்டு போன நம் குழந்தைகளின் வாழ்வை மறுபடி மலர வைக்க மனச்சாட்சி உள்ள மனிதர்கள் முன் வர வேண்டும். எந்த ஒரு பெரும் பயணமும் ஒரு சிறு அடியிலிருந்தே தொடங்குகிறது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு