“முற்றுமுழுதாக ஜனாதிபதியினுடைய கைப்பொம்மையாக இயங்கக்கூடிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கவே 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக இவ்வளவு வேகம் காட்டுகிறது அரசு” – நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

“முற்றுமுழுதாக ஜனாதிபதியினுடைய கைப்பொம்மையாக இயங்கக்கூடிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கவே 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக இவ்வளவு வேகம் காட்டுகிறது அரசு” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (04.09.2020) நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றும் போது இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஏன் இவ்வளவு அவசரமாகக் கொண்டுவரப்படுகிறது என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. இதற்குக் காரணம், நவம்பர் மாத நடுப்பகுதியில் சுயாதீக ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடையவிருக்கிறது. அவ்வாறு, முடிவடையும்போது இப்போது இருக்கின்ற அரசியலமைப்புச் சபையினுடைய அனுமதியோடுதான் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். தான் நினைத்தவர்களை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது.

ஆனால், அதற்கு முன்னதாக இந்த 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அடுத்த தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் முற்றுமுழுதாக ஜனாதிபதியினுடைய கைப்பொம்மையாகவே இருப்பார்கள். இதுவொரு பாரிய திருப்பத்தினை நாட்டில் ஏற்படுத்தும்.

சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தல்கள் கடந்த வருடங்களில் இந்த நாட்டிலே நடத்தப்பட்டிருக்கின்றன. அதற்கொரு பாரிய சவால் ஏற்படும். அதுதான் இத்தனை அவசரம்.

ஆனபடியால்தான், அவர்களுடைய கட்சிக்குள்ளே இருந்துகூட, இந்த இருபதாவது அரசியலமைப்புத் திருத்த ஏற்பாடுகள் பலவற்றுக்கு எதிர்ப்பு இருந்தபோதும், அவர்கள் அவற்றை மாற்றியமைப்பதாக இணங்கிக் கொண்டாலும்கூட, ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தையே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள்.

இல்லையென்றால், திருத்தங்களை உள்ளடக்கி வர்த்தமானியில் திரும்பவும் அரசியலமைப்புத் திருத்தம் பிரசுரிக்கப்பட வேண்டும். அதற்கு இரண்டு வாரகால அவகாசம் தேவை. அதற்குப் பிறகு நாடாளுமன்றத்திலே சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு ஒருவார கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.

அப்படியெல்லாம் செய்துகொண்டிருக்க நவம்பர் மாதம் கடந்துவிடும். எனவேதான், 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற இவ்வளவு அவசரம் காட்டப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *