“சர்வதேச அரங்கில் மற்றைய நாடுகளை எவ்வாறு ஈடுபாடு காட்ட வேண்டும் என நாம் கோருகின்றமோ? அதே மாதிரித்தான் சீனாவும் செயற்பட வேண்டும்” – அமெரிக்க வெளியுறவு செயலாளர் பொம்பியோ டுவீட் !

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று இரவு நாட்டை வந்தடைந்தனர். அமெரிக்காவுக்கு சொந்தமான Boeing 757 ரக விசேட விமானத்தின் மூலம் நேற்று இரவு 7.35 க்கு குறித்த தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோவுடன் 36 பேர் அடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இந்த சந்திப்புகளின் பின்னர், இன்று நண்பகல் 12.30க்கு குறித்த தூதுக்குழுவினர் மாலைதீவு நோக்கி பயணிக்கவுள்ளனர்.

இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நேற்று கொழும்புக்கு வரமுன்னர், அவருடைய வருகை குறித்து கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்ட பகிரங்க அறிக்கையில், இலங்கைக்குத் தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டு வரவேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்தது. அமெரிக்காவைக் கடுமையாகக் கண்டித்து சீண்டும் விதத்தில் அந்த அறிக்கை வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் அது தொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ டுவீட் செய்து தன்னுடைய கருத்தை வெளியிட்டிருந்தார். அதில், “சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் நிஜத்தில் பெரும் அச்சுறுத்தல். சர்வதேச அரங்கில் மற்றைய நாடுகளை எவ்வாறு ஈடுபாடு காட்ட வேண்டும் என நாம் கோருகின்றமோ? அதே மாதிரித்தான் சீனாவும் செயற்பட வேண்டும் எனக் கோருகின்றோம்” என  குறிப்பிட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க பொம்பியோவின் வருகையானது இலங்கை – சீன உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்தும் என பலரும் எச்சரித்துள்ளதுடன் அமெரிக்க – சீனப்பனிப்போரின் மையமாகவும் இலங்கை மாற வாய்ப்புள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *