வவுனியா ஆஸ்பத்திரி டாக்டர்கள், பணியாளர் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை ரத்து

surgery.jpgவவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் டாக்டர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களதும் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்திலிருந்து புதன்கிழமை காலை இதற்கான எழுத்து மூல உத்தரவு வவுனியா ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கமைய, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வவுனியா ஆஸ்பத்திரி பணியாளர்கள் அனைவரதும் விடுமுறைகள் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் கடும் சமர் நடைபெற்று வருகையில் அங்கு இடம்பெற்றுவரும் கடும் ஷெல் தாக்குதலாலும் விமானத்தாக்குதலாலும் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்தும் வருகின்றனர். எனினும், படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 80 க்கும் மேற்பட்டவர்கள் அவசர சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படவேண்டியிருந்தும் வவுனியாவுக்கான பாதை மூடப்பட்டுள்ளதால் அவர்களை கொண்டு வர முடியாதுள்ளது. இவர்களை வவுனியாவுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றபோதும் இதுவரை அது சாத்திப்படவில்லை. இந்த நிலையிலேயே வவுனியா ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், தாதியர்கள் உட்பட 450 க்கும் மேற்பட்ட ஊழியர்களதும் விடுமுறை மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *