லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

ranjith-gunasekara.jpgஊடக வியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, எம்.ரி.வி, சிரச தொலைக்காட்சி நிறுவனத் தீ வைப்புச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றமடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர, பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக ஊடகங்களுக்கு எந்தத் தகவலையும் வெளியிட முடியாதிருப்பதாக குறிப்பிட்டார்.  தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; சிரச நிறுவனத்தின் மீதான தீ வைப்புச் சம்பவம் தொடர்பிலும் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாகவும் பொலிஸ் விசாரணைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. கண்ணால் கண்ட சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றோம். ஆனால், தடயங்களுடாக கிடைத்துவரும் சாட்சியங்கள் பல விடயங்களை உறுதிசெய்துகொள்ள முடிந்துள்ளது.

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதால் தகவல்கள் எதனையும் வெளியிட முடியவில்லை. விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்படக்கூடிய விதத்தில் ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம் என தெரிவித்தார். இதனிடையே ஊடகவியலாளர்கள் லசந்த சுடப்பட்டாரா, குத்திக்கொல்லப்பட்டாரா? என்று கேள்வி எழுப்பியபோது, பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அதுகுறித்து விசாரணைக் குழுக்கள் எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாத நிலை காணப்படுவதாகவும் விசாரணைகள் முடிவடையும்போதுதான் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை உறுதிசெய்ய முடியும் எனக் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *