நாளையே தமிழ் ஈழம் மலருமானால் ஆட்சியை துறக்கத் தயார் – கருணாநிதி

karunanithi.jpgஇந்த ஆட்சி விலகினால், நாளையே தமிழ் ஈழம் மலரும் என்ற நிலை இருந்தால், இந்த ஆட்சியைத் துறக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கையில் அந்நாட்டுப் படையினரின் தாக்குதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரபாகரன் தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகின. முல்லைத்தீவை விரைவில் ராணுவம் பிடித்து விடும் என அந்நாட்டு அரசு கூறி வருகிறது.

ஆனால் இந்த சண்டையில் 4 லட்சம் அப்பாவித் தமிழர்கள் சிக்கி சிதறுண்டு வருவதை அனைவருமே கவனிக்கத் தவறி வருகின்றனர் அல்லது மறந்து விட்டனர். வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழர்கள் படும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சாப்பாடு, மருந்து, உடை என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் விலங்குகளை விட மோசமான நிலையில் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான தமிழர்கள் இதுவரை இலங்கைப் படையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இலங்கை அரசு உடனடியாக போரை நிறுத்த வேண்டும். இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையை மத்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக தலைவர்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதுவரை போரை நிறுத்துமாறோ அல்லது இனப்படுகொலையை நிறுத்துமாறோ இலங்கையிடம் கண்டிப்பான வார்த்தைகளில் கேட்டுக் கொள்ளவில்லை.

பிரணாப் முகர்ஜியை அனுப்புங்கள் என்றால் மேனனை அனுப்பினார்கள். அவரோ, ராஜபக்சேவிடம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு, இந்திய, இலங்கை உறவு நன்றாக உள்ளது என்று பேட்டி அளித்தார். போரை நிறுத்துமாறு கோரி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தமிழர்கள் பலியாவது குறித்தும் அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இந்த நிலையில் இலங்கைப் பிரச்சினையில் தமிழக தலைவர்கள் மீண்டும் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

சட்டசபையில் இன்று மீண்டும் தீர்மானம்

இந்தப் பின்னணியில், தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்திலும் இலங்கை தமிழர்கள் விவகாரம் பெரிதாக உருவெடுக்க உள்ளது. அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த விவகாரத்தில் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய முன்வந்துள்ளனர். இலங்கை பிரச்சினையில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக சபை கூடியதும் கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டு இந்த முக்கிய கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார்.

இதையடுத்து தீர்மானத்தை முதல்வர் கருணாநிதி முன்மொழிந்தார். பின்னர் விவாதத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அதிமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர். பின்னர் முதல்வர் கருணாநிதி பதிலளித்துப் பேசியதாவது…

இலங்கையில் நடை பெறுகின்ற இன வெறிப்போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து இந்த அவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நண்பர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நண்பர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்ட் கட்சியின் சார்பில் நண்பர் கோவிந்தசாமி, ம.தி.மு.க. சார்பில் நண்பர் ராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நண்பர் ஜி.கே. மணி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நண்பர் பீட்டர் அல்போன்ஸ், அ.இ.அ.தி.மு.க. பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் நண்பர் செங்கோட்டையன் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

கடைசியாக ஒருமுறை …

இந்தத் தீர்மானம் அவசர அவசியமாக இன்றைக்கு இந்த மாமன்றத்திலே விவாதிக்கப்பட்டு, நிறை வேற்றப்பட வேண்டும் என்று நான் விரும்பியதற்குக் காரணமே – கடந்த காலத்தில் பல முறை சட்டப் பேரவை யிலும், அனைத்துக் கட்சித்தலைவர்களின் கூட்டத்திலும் ஒவ்வொரு கட்சி யினுடைய பொதுக் கூட்டங்களிலும், நிர்வாகக் குழு கூட்டங்களிலும் – எடுத்துரைத்த மிக முக்கியமான தீர்மானமாக இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்கின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை கடைசியாக ஒரு முறை இன்றைக்கு மத்திய அரசுக்கு வலியுறுத்திச் சொல்லவேண்டும் என் பதற்காகத்தான்.

இதை ஏன் கடைசியாக ஒரு முறை என்று நான் குறிப்பிட்டேன் என்றால் – பல முறை இந்த அவையில் இது போன்ற தீர்மானங்கள் கட்சி மாச்சரியங்களுக்கு இடம் இல்லாமல் இந்தத் தீர்மானத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு இது தான் நேரம் என்று ஒருவரையொருவர் மறை முகமாகவோ, ஜாடையாகவோ, நேரடியாகவோ தாக்குவதற்கான வாய்ப்பு இருந்தாலும் அதைப்பயன்படுத்திக் கொள்ளாமல், வாய்மையோடு வாதத்திலே ஈடுபட்டு, நம்முடைய கோரிக்கையை மத்திய அரசுக்கு எடுத்து வைத்திருக்கிறோம்.

போர் நிறுத்தப்பட வேண்டும் …

இலங்கையில் நடைபெறுகின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் நம்முடைய கோரிக்கையினுடைய முக்கியமான குறிக்கோள். அதை விட்டு எள் முனை அளவும் பிறழாமல், பேச வேண்டுமென்று நான் காலையிலே நம்முடைய நண்பர்களையெல்லாம் கூட வேண்டிக் கொண்டேன்.

சற்று அங்கு இங்கு அந்தத் தடம் மாறினாலுங்கூட – தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும், தமிழர்களை இலங்கைத் தீவிலே பாதுகாக்க வேண்டும், அவர்களைக் காத்திட வேண்டும் என்ற அந்த உணர்வு ஒரு மைய இழையாக ஓடிக் கொண்டிருந்த காரணத்தால் – நான் எதிர்பார்த்தவாறு அல்லது வேறு சிலர் எதிர் பார்த்தவாறு எந்த விதமான சங்கடங்களும் இல்லாமல் நாம் நம்முடைய கருத்தை இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்துகின்ற கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1939ஆம் ஆண்டு – ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். “இண்டியன் இன் சவுத் ஏசியா” என்ற நூலில் – அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலே இந்தியாவுக்கு வெளியே வாழுகின்ற இந்தியர்களைப் பற்றி – அப்போது நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு நேரு அனுப்பிய செய்தி அது.

நேரு கூறியபடி ..

“இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆனால் இந்தியா அவர்களையும் அவர்களுக்கு ஏற்படும் துயரத்தையும் இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும் – அன்றைக்கு இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும் – அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்” என்று நேரு அவர்கள் 1939ஆம் ஆண்டு சொன்னதைத் தான் இப்போது நான் வலியுறுத்துகிறேன்.

நீதி கிடைப்பதற்கு ஜவகர்லால் நேரு அவர்கள் எந்த இந்தியாவிலே முதல் பிரதமராக பொறுப்பேற்றாரோ – அந்த இந்தியத் திருநாடு இப்போது முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காகத் தான் நேருவின் அந்த வாசகத்தை நினைவுபடுத்தி – நான் என்னுடைய தீர்மானத்தை முன்மொழிய விரும்புகிறேன்.

“இலங்கையில் தமிழ் இனமே அழிந்து கொண்டி ருக்கிறது. ஐ.நா. மன்றம் கண்டனம் தெரி விக்கிற அளவுக்கு; அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக – சுடுகாடாக – ஆகிக் கொண்டிருக்கிறது.

குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாக குய்யோ முறையோ என்ற கூச்சலும் – ஒப்பாரியும் புலம்பலும் – பின்னணி யாக, பிணங்கள் குவிக்கப் படுகின்றன. அத்தனையும் தமிழ் மக்களின் பிணங்கள்.

தமிழ் இனத்தை எப்படி மீட்கப் போகிறோம்…?

அய்யோ! அந்தச் சிங்கள இராணுவ குண்டு வீச்சுக்கிடையே – சிதறியோடும் – சிறுவர் சிறுமியர் – சிலராவது செத்துப் பிழைத்தார்கள் என்ற செய்தியும் கூட அறவே அற்றுப் போய் – இன்று கூண்டோடு சாகின்றனரே – பூண்டோடு அழிகின்றனரே – மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும் – பழித்தும் – இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம் – அந்த இனத்தை இறுதியாக இலங்கையில் விடப்பட்டுள்ள இந்த அறை கூவலில் இருந்து எப்படி மீட்கப் போகிறோம்?

இந்தியாவில் உள்ள தமிழ் நாடு என்ற மாநிலத்தில் நாம் வாழுகிறோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் – ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையோடு எதிர்பார்க்கிறோம்.

நமக்கு பாதுகாப்பு தருவதாயினும் – பாதிப்பைக் களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயல்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும் – இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக்களின் நலத்திற்கும் நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய பொறுப்பு; – உலகில் எங்கு இனப்படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும் உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும்போது; நாம் அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டு தானே; இலங்கையில் சீரழியும் – செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்.

புத்தர் பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட …

கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால் – இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட – ஆவன செய்திடுக என்று!

இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக் கப்படாமல் – இன்றே போர் நிறுத்தம் இலங்கையில் – அடுத்து அரசியல் தீர்வு – தொடர்ந்து அமைதி. எனவே அந்த நல்ல விளைவை எதிர்பார்த்து; இந்த மாமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மானமாக இதனை நான் முன்மொழிகிறேன்.

திமுக முக்கிய முடிவை எடுக்க நேரிடும் …

இந்தத் தீர்மானத்திற்கும் பயன் ஏதும் ஏற்படா விட்டால் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு அல்லது செயற்குழு கூட் டத்திலே விவாதித்து அடுத்து என்ன என்று முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த மன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே பேசிய நண்பர்கள் சில பேர் ஆட்சி எதற்காக என்றார்கள். ஆட்சி என்று ஒன்று இருக்கின்ற காரணத்தால் தான் நாம் இந்த அளவிற்காவது கேட்க முடிகிறது – இங்கே ஒரு தீர்மானத்தையாவது போட முடிகிறது என்பதையும் சில பேர் நமக்குச் சொல்கின்ற காரணத்தால் – அதையும் நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

தேவையில்லை, நாளைக்கே ஆட்சியை இழந்து விட்டால், இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்ற உறுதி கிடைக்குமேயானால், அதற்கும் நாம் தயாராக இருப்போம் என்பதையும் எடுத்துக் கூறி – மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் – “அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது – இந்தியப் பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்” என்பதை டெல்லியிலே உள்ளவர்களுடைய செவிகளிலே விழ ஓங்கி ஒலித்து இந்த தீர்மானத்தை இந்த மாபெரும் அவையிலே முன்மொழிந்து இந்த அளவில் நன்றி கூறி விடை பெறுகிறேன் என்றார் கருணாநிதி.

இதையடுத்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

அதிமுக – மதிமுக – சிபிஐ வெளிநடப்பு

முன்னதாக தீர்மானம் சரியாக இல்லை என்று கூறி அதிமுக, மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசிவிட்டு வெளி நடப்பு செய்தார். அவரை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினார்கள்.

அப்போது முதல்வர் கருணாநிதி கூறுகையில், உணர்ச்சிமிக்க தமிழர்களுடைய உள்ளங்களை யெல்லாம் ஈர்த்துள்ள ஒன்று பட்ட ஒரு தீர்மானத்திற்கு எப்படியும் களங்கம் விளைவித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு – அதிலே வெற்றி பெற்று வெளி நடப்பு செய்துள்ள அ.தி.மு.க. தோழர்களுடைய சாமர்த்தியத்தை பாராட்டத்தான் வேண்டும் என்றார்.

முன்னதாக தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அய்யகோ; இலங்கையில் தமிழ் இனம் அழிகிறது – இந்திய பேரரசுக்கு இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பிட்டு, சபாநாயகர் மற்றும் சட்டசபையின் ஒப்புதலை பெற்று, 23-ம் தேதி சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி தீர்மானத்தை முன்மொழிகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி எச்சரிக்கை?

இந்தத் தீர்மானத்தை மத்திய அரசுக்கு விடும் இறுதி எச்சரிக்கையாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. இதற்கு மேலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் முதல்வர் கருணாநிதி தானே களத்தில் இறங்கி கடும் போராட்டங்களை அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முன்வந்தார். நாங்கள் தடுத்து விட்டோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சட்டசபைக்கு இன்றும் பாமக எம்.எல்.ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.

நன்றி: வன் இந்தியா

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • nagan
    nagan

    அது எப்படி ஐயா நாளை
    ராஜீவ் காந்தி இருந்திருந்தால் நாளை ….
    இப்போ எப்படி ஐயா………………?

    Reply
  • palli
    palli

    இந்தியா சரியான ஒரு தீர்வை ஈழதமிழருக்கு இந்த நேரத்தில் வழங்காவிடின் புலிகள் குட தமிழர் நலன்கருதாத போர் ஒன்றை அரசு மீது தொடுக்க தயங்கமாடார் என்பதுக்கு கல்மடு குள உடைப்பு ஒரு உதாரணம்.
    பல்லி.

    Reply
  • santhanam
    santhanam

    1987 ம் ஆண்டே இந்தியாவின் மிகமுக்கிய அதிகாரவர்க்கம் தாங்கள் சொல்வதை நீங்கள் செய்யுங்கள் எங்களைமீறி நீங்கள் முடிவெடுத்தால் நாங்கள் உங்களை அழிப்போம்.

    Reply
  • அருட்செல்வன்
    அருட்செல்வன்

    இலங்கைப் பிரச்சினை தொடர்பாக முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள எச்சரிக்கையால் தி.மு.க.வுடனான உறவு பாதிக்காது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஸ் திவாரி கூறினார்.

    இலங்கையில் உடனே போர் நிறுத்தம் செய்யாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்ய தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கருணாநிதியின் இந்த எச்சரிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது மனீஸ் திவாரி மேற்கண்டவாறு கூறினார். கருணாநிதி கூறிய வார்த்தைகள் மிரட்டல் விடுப்பதாக இல்லை என்று அவர் கூறினார்.

    ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வின் ஆதரவை முக்கியமானதாகவே காங்கிரஸ் கருதுகிறது. எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு கூட்டணிக் கட்சியும் முக்கியமானதே. அவர்களது ஆதரவை நாங்கள் மதிக்கிறோம். ஆட்சி நிலைக்க அவர்களது பங்களிப்பை பாராட்டுகிறோம்.

    அவர்களை நாங்கள் உதாசீனப்படுத்துகிறோம். அவர்களது தயவு இனி தேவையில்லை என்று காங்கிரஸ் கருதுவதாக கூறுவது தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.

    Reply
  • புரியாதவன்
    புரியாதவன்

    தமிழினம் என்றுமில்லாதவாறு “காயடிக்கப் பட்டிருக்கிறது” ,இலங்கைத் தமிழர்கள் அறிவாளிகள் என்ற “ரூமர்”, திராவிட இயக்க தலைமைகள்போல், சுயசிந்தனையில்லாமல், மைக் முன், மூன்று மணிநேரம் “தகவல்களை துப்பும் டாக்டர் பட்டம்தானா?”. /It was not long ago that apologists for the LTTE, in what was falsely labeled as a peace lobby, which included persons now revealed as earning millions from abroad for everything from “conflict resolution” to “media freedom” – the handmaidens of Velupillai Prabhakaran .The LTTE proxies, especially in Tamil Nadu, led by a now somewhat frightened Chief Minister Karunanidhi,.. /தமிழினத்தின் ஒரு உடலுறுப்பான, சிங்களவனாலேயே, ”பாக்குவெட்டி” கொடுத்து காயடிக்க வைத்தது யாருடைய இராஜதந்திரம்?

    Reply
  • palli
    palli

    புரியாதவன் உமது பின்னோட்டம் எமக்கு புரியவில்லை.. கோபம் சரி ஆனால் புரிய வேண்டாமா??

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    எனி எங்களுக்கு உங்கள் உதவிகள் தேவையில்லை. ஏனெனில் எமது கற்பனக்குதிரைகளைத் தட்டி விட்டு புரளிகளைக் கிளப்பி புலிகள் மூலமாக எமது இழந்த பகுதிகளையும் மீட்டு பல்லாயிரம் சிங்கள இராவத்திற்கு சமாதியும் கட்டி விட்டோம்.வெகுவிரைவில் தமிழீழழம் மலரும். அப்போது கொடி ஏற்ற உங்களையும் அழைக்கின்றோம். அதுவரை பொறுத்திருங்கள். இன்று இரவு எப்படியும் மேலும் சில புரளிகளைக் கிளப்பி வீடுவோம்.

    Reply
  • SUDA
    SUDA

    ஏதோ ஈழத்தமிழர்களுக்கு ஈழம் பெற்றுக் கொடுப்பதற்காகத்தான் தான் முதலமைச்சரானேன் என்பது போலல்லவா இருக்கின்றது உமது பேச்சு. பூச்சுற்றுவதற்குத்தான் தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறைய காதுகள் இருக்கும்போது உங்களுக்கு வார்த்தைக்குப் பஞ்சமேது? நீங்கள்தான் கலைஞராயிற்றே!!

    Reply