“இறந்தவர்கள் மீது இவ்வளவு பயம் எதற்கு? அவர்களில் பலரை சர்வதேச விதிகளை மீறிக் கொலை செய்தமையா?” – மாவீரர் தின தடை தொடர்பாக சுமந்தின் கேள்வி !

“இறந்தவர்கள் மீது இவ்வளவு பயம் எதற்கு? அவர்களில் பலரை சர்வதேச விதிகளை மீறிக் கொலை செய்தமையா?” என மாவீரர் தின நினைவேந்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் இறைமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (25.11.2020) இடம்பெற்ற இலங்கையின் 75ஆவது வரவு- செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“போரினால் இறந்தவர்களை நவம்பர் மாதத்தில் நினைவு கூருவது உலக வழமை. தமிழர்களும் இலங்கை அரசோடு போராடி உயிர் நீத்த தம் உறவுகளை கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக நவம்பர் மாதமே நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

அரசாங்கம் இந்த வருடம் இந்த நினைவு கூரலை முடக்கக் கடுமையான முயற்சியெடுக்கிறது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் சிறப்பு ஹெலிகொப்டர்களில் வட-கிழக்கெங்கும் பயணித்து நினைவு கூரல் தடை கோரி வழக்காடுகிறார்கள்.

சட்டமா அதிபர் திணைக்களம் உயர் கோவிட்-19 தொற்றுப் பிரதேசத்தில் இருக்கிறது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களச் சட்டத்தரணிகளோ எதுவித தனிமைப்படுத்தலுமின்றி வட-கிழக்கெங்கும் சிறப்பு விஜயம் செய்து கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன? இறந்தர்வகளின் உறவுகள் தம் தந்தை, தாய், சகோதர-சகோதரிகளை நினைவு கூருவதைத் தடை செய்ய வேண்டும். இதுதான் நோக்கம். இறந்தவர்கள் மீது இவ்வளவு பயம் எதற்கு? அவர்களில் பலரை சர்வதேச விதிகளை மீறிக் கொலை செய்தமையா?

இறைமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தானது. பெரும்பான்மை மக்கள் மாத்திரம் இறைமையை அனுபவிக்கும் போது, ஏனையோர் தமக்கான உரிமையைத் தாமே தேடிக் கொள்ளும் நிலையை அரசாங்கமே உருவாக்குகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *