“இறந்த முஸ்லீம்களின் ஜனாசாக்கள் பலவந்தமாக வீடுகளில் இருந்து வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் தகனம் செய்யப்பட்டுள்ளன”  – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

“இறந்த முஸ்லீம்களின் ஜனாசாக்கள் பலவந்தமாக வீடுகளில் இருந்து வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் தகனம் செய்யப்பட்டுள்ளன”  என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள ஆவணத்தில் மனித உரிமை ஆணையகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அல்லது கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டியது கட்டாயம் என உத்தரவிடுவது அவசியமற்றது, பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பிற்கு அத்தியாவசியமற்றது என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மதம் அல்லது நம்பிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக அனுமதிக்கப்படக்கூடிய விடயமுமல்ல எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மரணத்திற்கான காரணங்கள் குறித்த இறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லாத  நிலையில் பலவந்தமாக அவசர அவசரமாக உடல்களை தகனம் செய்ய முற்படுவதும்,பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியவாறு குடும்பத்தவர்கள் இறுதிக்கிரியைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி மறுப்பதும் மதம் அல்லது நம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை மீறும் செயல். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவதை கட்டாயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நவம்பர் ஐந்தாம் திகதி கொரோனா வைரசினால் உயிரிழந்த 35 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன அவற்றில் 17 முஸ்லிம்களுடையது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் ஜனாசாக்கள் பலவந்தமாக வீடுகளில் இருந்து வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் தகனம் செய்யப்பட்டுள்ளன என அறிய முடிந்துள்ளது என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு மாறாக சில வேளைகளில் உடல்கள் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை எனவும் தேசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஒருவர் உயிரிழந்து 48 முதல் 72 மணித்தியாலங்களின் பின்னரே பி.சி.ஆர் முடிவுகள் வெளியிடப்படுகின்றன என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தகனம் செய்யப்பட்ட இருவரின் விபரங்கள் கொரோனா வைரசினால் இறந்தவர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ள தேசிய மனித உரிமை ஆணைக்குழு, உடல் தகனம் செய்யப்பட்ட ஒருவர் கொரோனாவினால் இறக்கவில்லை என்பது பின்னர் தெரியவந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *