“மன்னாரில் உருவாக்கப்பட்டுள்ள காற்றாலைகள் அப்பகுதிக்கு அபிவிருத்தியையும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களையும் வழங்கும்” – அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா

“மன்னாரில் உருவாக்கப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் அப்பகுதி அபிவிருத்தி அடையவுள்ளதுடன் அப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படவுள்ளன” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று (08.12.2020) இடம்பெற்ற காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் நீர் மற்றும் எரிபொருள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது சுற்றாடல் பாதிப்புக்கள் அற்ற குறைந்த செலவிலான காற்றாலை மின் உற்பத்தியில் அரசாங்கம் ஆர்வம் செலத்தி வருகின்றது. இதன்படியே மன்னாரில் குறித்த காற்றாலை உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுவதன் ஊடாக பிரதேச அபிவிருத்தி விரைவுபடுத்தப்படுவதுடன் உட்கட்டமைப்பு வசதிகளும் விருத்தி செய்வதற்கான சூழுல் ஏற்படுகின்றது.

இதேபோன்று, மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்கின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு காணப்படும். அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் மற்றும் கு.திலீபன் ஆகியோரின் ஊடாக குறித்த வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

மன்னாரில் உருவாக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வீதிகள் புனரமைப்பு மற்றும் குழாய் கிணறுகளை அமைத்துக் கொள்ளுதல் போன்ற வாய்ப்புகளும் மன்னார் மக்களுக்கு கிடைத்திருக்கின்றது.

தற்போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக வருடாந்தம் சுமார் 400 மில்லியன் மின் அலகுகளை உற்பத்தி செய்ய முடியும். குறித்த உற்பத்தியின் மூலம் சுமார் 10 நாட்களுக்கு தங்குதடையின்றி நாடு முழுதும் மின்சாரம் வழங்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *