“அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக பிரதமரிடம் பேசியிருக்கின்றோம்.கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார்” – மட்டக்களப்பில் எம்.ஏ.சுமந்திரன் !

திருகோணமலை கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று (11.12.2020) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

IMG 8426

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரனின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம்,இரா.சாணக்கியன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம்,இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்,தவிசாளர்கள்,உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,

“திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று மூன்று வழக்குகள் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது அதில் ஒரு வழக்கில் நானும் ஏனைய இரு வழக்கில் சட்டத்தரணி சயந்தனும் ஆஜராகினோம்.

இதில் ஒன்று கன்னியாவெண்ணீருற்று பகுதில் பிள்ளையார் கோவில் ஒன்றினை அமைப்பது தொடர்பான வழக்கு.அங்கு பௌத்த தாதுகோபுரம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றது.அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து தடையுத்தரவு ஒன்றினைப்பெற்றிருந்தோம்.இன்று அரச தரப்பு அங்கு பிள்ளையார் கோவில் ஒன்றை கட்டுவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்கள்.தாதுகோபுரத்தினை கட்டமாட்டோம் என்ற உறுதிமொழியை வழங்குவதற்கு தயார் எனவும் தெரிவித்திருந்தார்கள்.

எங்கே அந்த பிள்ளையார் கோவிலை கட்டுவது தொடர்பான இடத்தினை காண்பித்தார்கள் ஆனால் அந்த இடம் எங்களுக்கு ஏற்புடையதாகயிருக்கவில்லை,ஆகையினால் நாங்கள் காண்பிக்கின்ற இடத்தினை அவர்கள் பார்வையிட்டு அங்கு தொல்பொருட்கள் இல்லையென்ற உறுதிமொழியை வழங்கிய பின்னர் அங்கே கட்டலாம் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இது பாரிய முன்னேற்றம்.இந்த வழக்கு பெப்ரவரி 03ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நில அளவையிலாளர்கள் நாங்கள் காண்பிக்கும் இடங்களுக்கு சென்று அது பொருத்தமான என்பதை பார்த்து அனுமதியை வழங்கிய பின்னர் அங்கு பிள்ளையார் ஆலயம் கட்டப்படும்.

மற்றைய இரண்டு வழக்குகளும் தென்னமரவாடியிலும் திரியாயிலேயும் விவசாயிகளின் காணிகளை அபகரிப்பதை தடுத்து நாங்கள் இடைக்கால தடையுத்தரவினைப்பெற்றிருந்தோம்.அந்த வழக்கில் சட்டத்தரணி சயந்தன் அவர்கள் ஆஜராகியிருந்தார்.அங்கும் அந்த இடைக்கால தடையுத்தரவினை நீடிக்ககூடாது என்று அரசதரப்பு வாதிட்டது.அந்த வயல்காணிகளுக்குள்ளும் தொல்பொருட்கள் இருப்பதாக கூறினார்கள்.நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.இடைக்கால தடையுத்தரவினை நீடித்திருத்திருக்கின்றது.விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்யமுடியும்.

அதேவேளையில் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் எங்காவது தொல்பொருட்கள் இருப்பதை அடையாளம் காட்டினால் அவர்கள் விவசாயிகளுக்கு முன்னறிவித்தல் வழங்கி அந்த அடையாளம் காட்டுதலை செய்யவேண்டும்.அவ்வாறு செய்தால் விவசாயிகளும் அந்த பொருட்களை சேதமின்றி பாதுகாப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.அந்த வழக்கும் பெப்ரவரி 03ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பு மாநகரசபை வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக சில தரப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் வேறு பலரும் சேர்ந்து இந்த பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கின்றோம்.

நாங்கள் இரண்டாம் வாசிப்பின்போதும் வாக்களிக்கவில்லை. மூன்றாம் வாசிப்பு என்பது ஒரு சம்பிராயபூர்வமான விடயமாகும். இரண்டாம் வாசிப்பே முக்கியமானதாகும். இந்த நாட்டிலே சென்ற வருடமும் வரவு செலவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. அதற்குள் கொவிட்-19 பிரச்சினை வந்திருக்கின்றது. அரச நிதியை உபயோகிப்பதில் பலவிதமான சிக்கல்கள் இருந்தது. ஆகவே இந்த நாட்டிற்கு வரவு செலவுத் திட்டமொன்று அத்தியாவசியமாகும்;.

சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திலே பல குறைபாடுகள் இருக்கின்றன. அது குறித்து வரவுசெலவுத் திட்ட விவாதத்திலே வெளிப்படையாகவே பேசியிருக்கின்றோம். எங்கள் எதிர்ப்பை காண்பித்திருக்கின்றோம். ஆனால் வரவுசெலவுத் திட்டம் ஒன்று தேவை. ஆகவே எதிர்த்து வாக்களிக்கவில்லை. அதேவேளை அதற்கு ஆதரவாகவும் வாக்களிக்க முடியாது. ஏனென்றால் அதிலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் விஷேடமாக வடக்கு கிழக்கு சம்பந்தமான ஒதுக்கீடுகளில் பாரபட்சம் இருந்தது. நாங்கள் அதனை சுட்டிக்காட்டியிருக்கின்றோம். ஆகவே இரண்டாம் வாசிப்பின்போது நாங்கள் ஒதுங்கியிருப்பதாக எடுத்த தீர்மானத்தையே மூன்றாம் வாசிப்பின்போதும் நாங்கள் நடைமுறைப்படுத்தினோம்.

இதற்கு முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களை கொவிட் காலத்திலே நாங்கள் சந்தித்தபோது அவருக்கு தமிழ் அரசியல் விடுதலை குறித்து பேசியிருந்தோம். பெயர்ப்பட்டியல் கேட்டிருந்தார். அதனை கொடுத்திருந்தோம். அது குறித்து கவனம் செலுத்துவதாக சொல்லியிருந்தார். இன்னும் அவர்கள் எதுவும் செய்யவில்லை.

தற்போது கொடுக்கப்பட்டிருக்கின்ற கடிதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திரு.கஜேந்திரன், நீதியரசர் விக்னேஸ்வரன், மனோகணேசன் மற்றும் அவருடைய கட்சியினர் ஆகியோரும் சேர்ந்து கைச்சாத்திட்டு கொடுக்கப்பட்ட ஒரு மகஜராகும். அதனை நாங்கள் பிரதமரிடம் கொடுத்தபோது ஜனாதிபதியுடன் கலந்து பேசி முடிவொன்றை சொல்வதாக கூறியிருந்தார்.

மயிலந்தனை,மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான ஆவணங்களெல்லாம் தயாராக இருக்கின்றது. அது ஒரு எழுத்தாணை வழக்கு. குறித்த எழுத்தாணை பெறுவதற்கு முன்னர் கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட வேண்டும். அநேகமாக நாளை கோரிக்கைக் கடிதம் அனுப்பப்படும். அதற்குப் பின்னர் ஒருவாரகால அவகாசம் கொடுத்து நாங்கள் வழக்கை தாக்கல் செய்யலாம்.

தொடர்ச்சியாக நாங்கள் சர்வதேச சமூகத்திற்கு இந்த விடயங்களை அறிவித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். நாங்கள் அறிவிப்பதற்கு முன்பதாகவே அவர்கள் அழைப்பினை மேற்கொண்டு இது குறித்து எங்களிடம் விசாரிப்பார்கள். ஆகையால் எல்லா விடயங்கள் சம்பந்தமாகவும் முழுமையான அறிவித்தல்கள் சர்வதேச சமூகத்திற்கு தொடர்ச்சியாக எங்களால் கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

மட்டக்களப்பிற்கு நாங்கள் வந்ததன் நோக்கம் மாநகரசபை பாதீட்டை சுமுகமாக ஒரு கட்சியாக சேர்ந்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகளுக்காகவே நாங்கள் இருவரும் இங்கு வந்துள்ளோம்.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *