சீதனத்தை தடைசெய்துள்ள நேபாள அரசு தலித்களைக் காப்பாற்ற புதிய சட்டம்

நேபாளில் சீதனக் கொடுமையை இல்லாதொழிக்கப் போவதாக கூறியுள்ள பிரதமர் பிரசண்டா பாரபட்சமற்ற நேபாளைக் கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் பிரசண்டா அமைதியான முறையில் அரசியல் முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் நேபாளத்தைக் கட்டியெழுப்ப முன்வருமாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

நாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் சீதனக் கொடுமைகள் அதிகரித்துள்ளமைக்கு கவலை வெளியிட்ட பிரதமர் சீதனம் நேபாளத்தில் தடை செய்யப்படுவதுடன் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடுவோரும். சீதனம் வாங்குவோரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்தார்.

தேர்தலின் போது தன்னால் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் இவ் வேளையில் அரசுக்கெதிரான செயற்பாடுகளையும், பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளையும் தனது அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லையென்றும், பெண்கள் அடக்கியாளப்படுவது நேபாளத்துக்குப் பெரும் அவமானம் எனவும் பிரதமர் தனதுரையில் தெரிவித்தார். நேபாளத்திலுள்ள 27 மில்லியன் சனத்தொகையில் 14 வீதமானோர் தீண்டத்தகாத தலித் இனத்தவராவர்.

இவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். நேபாளின் பிரபல இந்து ஆலயங்களில் தலித்கள் வழிபடவும் பொது வைபவங்களில் பங்கேற்கவும் தடுக்கப்பட்டுள்ளனர். இது மாபெரும் பாராபட்சமும் சமூகக் குற்றமும் எனச் சுட்டிக்காட்டிய சமூகத் தலைவர்கள் இம் முறைகள் மாற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள நிலையில் பிரதமர் பிரசண்டா தொலைக் காட்சியில் உரையாற்றியுள்ளார். சரிந்து செல்லும் தனது அரசின் செல்வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு அடிமட்டத்திலும் கிராமப் புறங்களிலும் ஆதரவைத் தேடும் முயற்சியே இதுவென எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

நேபாள அரசில் பல வகைக் கொள்கையுடைய கட்சிகள் உள்ளதால் அரசைக் கொண்டு செல்வதற்கான அனுபவம் குறைவாக உள்ளதென்பதை ஏற்றுக் கொண்ட பிரதமர் பிரசண்டா கட்சிகளின் கருத்துக்கள், தெரிவுகள் என்பவற்றை வரையறுத்துள்ளதாகக் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *