“கொரோனா இறந்த உடல்களால் பரவுவதற்கான ஆதாரங்கள் இல்லை. இறந்த உடல்களை அடக்கம் செய்யலாம்.”  – இறந்த உடல்களை அடக்கம் செய்ய இலங்கை மருத்துவ சங்கம் சம்மதம் !

“தாம் மேற்கொண்ட அவதானிப்புகளின் அடிப்படையிலும் தற்போதுள்ள விஞ்ஞான ரீதியான தரவுகளை அடிப்படையாக வைத்தும் இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம்” என்ற முடிவிற்கு வந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை மருத்துவ சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையில் சமீபகாலங்களில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தினால் இனங்களிற்கு இடையிலான ஐக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது . இலங்கையின் கலாச்சார பன்முகதன்மையை கருத்தில் கொள்ளும்போது கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையான கொள்கையொன்று அவசியம்.

ஆரம்ப கட்டத்தில் அவ்வேளை காணப்பட்ட தரவுகளை அடிப்படையாக வைத்து சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் உடல்களை தகனம் செய்வதற்கான முடிவை எடுத்தார்.

இதன் பின்னர் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கு உடல்களை கட்டாயமாக தகனம் செய்வவதை பின்பற்றுவது என்ற அரசாங்கத்தின் முடிவு காரணமாக சில சமூகங்களின் மத்தியில் அமைதியின்மை உருவாகியுள்ளது. இதனால் சிவில் அமைதியின்மை உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.  இதன் காரணமாக மக்கள் உடல்களை தகனம செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுடன் ஒத்துழைக்க மறுப்பதும் தெரியவந்துள்ளது .

பலர் மருத்துவர்களை பார்ப்பதை தவிர்க்கின்றனர்,இதன் காரணமாக மருத்துவகிசிச்சைக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருப்பவர்கள் உயிரிழந்த பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த காரணங்களால் நாங்கள் நிலைமை குறித்து அவசரமாக ஆராய்ந்தோம், கொரோனா வைரஸ் தொடர்பாக கிடைக்கின்ற சில தரவுகளை பயன்படுத்தினோம்.

31ம் திகதி அனைத்துபிரிவு மருத்துவர்களுடனும் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டநிலையில் கொவிட் சுவாசம் மூலமாக மாத்திரம் பரவுகின்றது. ஏனைய வழிமுறைகள் மூலம் பரவியமை குறித்த தகவல்கள் இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளோம். உயிரிழந்த ஒருவரின் உடலில் வைரஸ் குறிப்பிட்ட காலத்திற்கு உயிர்வாழாது. பிரேதப்பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் மூலம் நோயாளி பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானமைக்காக உயிரிழந்தவரின் உடலில் தொற்றுள்ளது என்ற முடிவிற்கு வரமுடியாது எனவும் இலங்கை மருத்து சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் உடல்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதை விட கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் நிரம்பிக்காணப்படும் கழிவுநீரினால் நிலத்தடி நீர் மோசமாக பாதிக்கப்படும் எனவும் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *