அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி அணுசக்திக்கு தேவையான யுரேனிய அளவை அதிகரித்த ஈரான் !

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக்கொண்டது.

அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன. அந்த ஒப்பந்தத்தில், அணுசக்திக்கு தேவையான யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்டக்கூடாது என்று ஈரானுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தார். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதரத் தடைகளை மீண்டும் அமுல்படுத்தினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை கொஞ்சம் கொஞ்சமாக மீறியது. அந்த வகையில் யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதமாக உயர்த்தப்போவதாக ஈரான் அண்மையில் அறிவித்தது. இதுதொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் பணியை தொடங்கிவிட்டதாக ஈரான் அரசு நேற்று அறிவித்தது. ஜனாதிபதி ஹசன் ரூஹானி உத்தரவின்பேரில் போர்ட்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் பணிகள் தொடங்கியதாக ஈரான் அரசின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவிருக்கும் சூழலில், அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய அவருக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் ஈரான் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளமை உலக அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *