“இந்தியா, இலங்கையின் உண்மை நண்பன் என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுங்கள்” – இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் வேண்டுகோள் !

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் இன்று(07.01.2021) கொழும்பில் சந்தித்துள்ளனர்.

இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களால் பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. “ஒட்டுமொத்த தமிழ் மக்கள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் எந்தவொரு அபிவிருத்தியும் வாக்குறுதி, அறிவிப்பு என்ற அளவுகளில் மட்டுமே நிற்கிறது. ஆகவே இந்திய தோட்டத்துறை வீட்டு மற்றும் நலத்திட்டங்கள் உடன் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும். இராமேஸ்வரம் – மன்னார், தூத்துக்குடி-கொழும்பு கப்பல் சேவையை ஆரம்பிக்க உங்கள் பக்கத்தில் ஆவன செய்யுங்கள். நோர்வூட் கிளங்கன், நுவரெலியா மருத்துவமனைகளுக்கு பி.சி.ஆர் இயந்திரங்கள் இரண்டு கொடுங்கள். இந்தியா, இலங்கையின் உண்மை நண்பன் என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுங்கள்”  போன்ற பல கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 13ஆம் திருத்தம், மாகாண சபைகள் தொடர்பான இந்திய நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. புதிய அரசியலமைப்பு வரைபு குழுவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி யோசனைகளை முன் வைத்துள்ளது. எதிரணியில் இருந்தாலும் நாமே, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பெரிய அரசியல் இயக்கம்.

இன்றைய இலங்கை அரசு செல்வாக்கு இழந்து வருகிறது. வெகுவிரைவில் இனவாதம் இல்லாத இலங்கையை எமது தேசிய கூட்டணி உருவாக்கும். என தமிழ் முற்போக்கு கூட்டணி, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக்கூறியது.

மேலும், இன்றைய நரேந்திர மோடி அரசே, இலங்கையில் வாழும் எமது மக்கள் மீது அதிக அக்கறை காட்டுகிறது. அதன் பிரதிபலிப்பாகவே, இந்தியாவுக்கு வெளியே மிகப்பெரும் மக்கள் கூட்டத்தை நாம் பிரதமர் மோடிக்காக நோர்வூட்டில் கூட்டினோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் கூறி, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இச்சந்திப்பின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே மற்றும் தூதரக அதிகாரிகள், கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *