இந்தியாவின் நிலைப்பாடும் ஆதரவுமே படையினர் முல்லைத்தீவை கைப்பற்றுவதற்கு பிரதான காரணம்

முல்லைத்தீவினை கைப்பற்றி எமது படைவீரர்கள் பெற்றுள்ள வெற்றிக்கு இந்தியாவின் நிலைப்பாடும் ஆதரவுமே முக்கிய காரணம் என்று மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார். கண்டி ஹில்டொப் ஹோட்டலில் நடைபெற்ற இந்தியாவின் 60 ஆவது குடியரசுதின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கண்டி இந்திய உதவி தூதரகத்தினால் உதவித்தூதுவர் ஆர்.கே. மிஸ்ரா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வைபவத்தில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மகிபால ஹேரத், மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, கண்டி மாவட்ட செயலாளர் கோட்டாபே ஜயரத்ன,மத்திய மாகாண அமைச்சின் செயலாளர் சிராணி வீரகோன்,தொழிற்சங்க தலைவர்கள்,மத்தியமாகாண கண்டி மேயர் எல். பீ. அலுவிகார, மாநகரசபை உறுப்பினர்கள், பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஹரிச்சந்திர அபயகுணவர்தன உட்பட பலரும் கலந்து கொண்டனர்

அவர் அங்கு மேலும் கூறியதாவது; இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்டகால வரலாற்று அரசியல் ,பொருளாதார, கலாசார தொடர்புகள் உண்டு. இலங்கையும் இந்தியாவும் சிறந்த நட்புகொண்ட நாடுகளாகும். பயங்கரவாதத்தின் தாற்பரியத்தினை இரண்டு நாடுகளும் உணர்ந்துள்ளன. மும்பாய் தாக்குதல் இதற்கு எடுத்துக்காட்டாகும். மும்பாய் தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்காக நாமும் எமது அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கை சுதந்திரமடைந்து இன்று 61 வருடமாகிறது. இந்தியாவுக்கு 60 வருடமேயாகிறது. எமது மக்கள் சுதந்திரத்தின் முழுத் தன்மையையும் அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவே பயங்கரவாதத்திற்கெதிராக யுத்தத்தை முன்னெடுக்கின்றோம். இந்த யுத்தத்தில் நாம் பெற்றுவரும் வெற்றிக்கு இந்தியாவும் ஒரு காரணமாகும். இந்தியா கொண்டுள்ள நிலைப்பாடு போற்றுதற்குரியதாகும்.

இந்தியாவும் பயங்கரவாதத்தின் உண்மைத்தன்மை உணர்ந்துள்ளது. இன்று உலகமும் பயங்கரவாதத்தின் உண்மை நிலையை உணர்ந்துள்ளது. எனவே தான் பயங்கரவாதத்திற்கு எதிராக சகல நாடுகளும் போராட வேண்டியுள்ளது. இந்தியா பொருளாதார ரீதியிலும் இலங்கையின் நண்பனாகவேயுள்ளது. பல்வேறு முதலீடுகளை இலங்கையில் மேற்கொண்டுள்ளது. என்றார்.

இந்திய உதவித்தூதுவர் ஆர்.கே மிஸ்ரா உரையாற்றுகையில் கூறியதாவது;
இந்தியா சகல துறைகளிலும் வளர்ச்சிபெற்று வருகிறது. விவசாயத்தில் உணவுப் பற்றாக்குறையை போக்கி தன்னிறைவு பெற்று விளங்குகிறது. இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை நட்புரீதியானது. இலங்கையுடன் நீண்ட கால நட்பினைக் கொண்டுள்ளது. பல்வேறு துறைகளில் இணைந்து செயற்படுகிறது. இலங்கையில் நீண்டகாலமாக சகல இனமக்களுடனும் நட்பினை கொண்டுள்ளது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *