48 மணி நேர காலக்கெடுவின் போது பாரிய தாக்குதல்கள் நடத்தப்படாது – லக்ஷ்மன் யாப்பா

laksman-yaappa.jpgவடக்கில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு செல்வதற்காக வழங்கப்பட்டுள்ள 48 மணி நேர காலக் கெடுவின் போது பாரிய தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படாது எனவும் சிறு சிறு குழுக்களாக காட்டிற்குள் சென்றே படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாபா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:- இராணுவ நடவடிக்கையினால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காகவே 48 மணி நேர காலக்கெடு அறிவிக்கப்பட்டது. இதற்காக பாதுகாப்பு வலய எல்லையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வரை 3848 பேர் பாதுகாப்பு வலயத்துக்கு வந்துள்ளனர். 48 மணி நேர காலக்கெடுவின் போது பெருமளவு மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இந்தக் காலக்கெடுவின் போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும். 5-10 பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாக பிரிந்து படையினர் புலிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவ்வாறான தாக்குதலின் போதே புலிகளின் அரசியல் ஆலோசகர் மகாதேவன் படுகாயமடைந்தார். பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. இதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு அமெரிக்க அரசு கூட புலிகளை கோரியுள்ளது.

இராணுவ நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறி வந்த கருத்துக்கள் யாவும் பொய்யாகியுள்ளன. மக்கள் அரசுடனே உள்ளனர். பயங்கரவாதத்தை ஒழிக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாக மக்கள் கட்சி பேதங்களை மறந்து அரசுக்கு ஆதரவு வழங்கத் தொடங்கியுள்ளனர் என்றார்.

இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகை தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்திய வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தை தொடர்பான சகல இரகசியங்களை வெளியிடுமாறு ஜே. வி. பி. கூறியுள்ளது. ஆனால், பிரணாப் முகர்ஜியின் வருகை தொடர்பில் எதுவித ரகசியமும் இல்லை. இது தொடர்பாக நான் ஜனாதிபதியுடன் உரையாடினேன். முகர்ஜியுடனான சந்திப்பில் பேசப்பட்ட சகல விடயங்களையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது என்றார்.

இராணுவ வெற்றிகள் தொடர்பாக ஐ. தே. க. தலைவர் பாராட்டுத் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பாராட்டுவதோடு நின்றுவிடாது இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நடவடிக்கைக்கு ஐ. தே. க. ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வடக்கு முழுமையாக மீட்கப்பட்ட பின்னர் உடனடியாக அங்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படும். 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு உட்பட்டே அரசினால் அதிகாரங்கள் வழங்க முடியும். அதனை விட கூடுதல் அதிகாரம் வழங்குவதா னால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை இதற்கு சகல கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *