வன்னி மக்களின் அவல நிலையை மூடிமறைக்க அரசு பெரு முயற்சி – ஐ.தே.க. குற்றச்சாட்டு

logo_unp.jpgயுத்தம் காரணமாக வன்னியில் நான்கு இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தி இருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இந்த உண்மையை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் பெரு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.  அகதிகளாக்கப்பட்டிருக்கும் மக்கள் உணவு, மருந்துவகை, குடிநீர் எதுவுமின்றி கஷ்டங்களை எதிர் நோக்கியிருக்கும் நிலையில் அரசாங்கம் நாட்டு மக்களைத் திசை திருப்பி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று முன்தினம்  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளித்த அவர் கூறியதாவது;

ஐக்கிய தேசியக் கட்சி இனவாதம், பிற்போக்கு வாதம் கொண்ட கட்சியோ, குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட கட்சியோ அல்ல, அதிகாரத்திலிருந்தாலும் எதிர்க்கட்சியிலிருந்தாலும் தேசியப் பிரச்சினைகளின் போது நாம் தூர நோக்குடனேயே செயற்பட்டு வருகின்றோம். யுத்தத்தையோ, யுத்த வெற்றிகளையோ ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதே இல்லை. எதிர்காலத்திலும் பயன்படுத்தப் போவதில்லை.

நாட்டின் இறைமை, சுயாதிபத்தியம் என்பவற்றை பாதுகாப்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பயங்கரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் முற்று முழுதாக நிராகரிக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நிலைப்பாடு அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும் என்பதும் நாட்டில் எவரும் எங்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமாதானமாகவும் வாழக் கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும் என்பதும் தான்.

எனினும், நாட்டின் ஒரு பகுதியான வன்னியில் இன்று எமது சகோதர இனத்தவர்கள் 4 இலட்சம் பேர் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இதுவரையில் செய்து கொடுக்கப்படவில்லை. இந்த உண்மை நிலையை அரசாங்கம் தெற்கில் மூடி மறைக்கின்றது. உள்ளூரில் மறைக்கப்பட்டாலும் சர்வசேத்துக்கு அவை கிட்டியுள்ளன. ஐ.நா. செயலாளர் நாயகம் வரை இந்த விவகாரம் சென்றடைந்துள்ளது. தமிழ் மக்கள் விடயத்தில் அரசு வஞ்சகப் போக்கிலேயே செயற்பட்டு வருகின்றது. தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல எனக் கூறும் அரசு, மறு

புறத்தில் தமிழர்களை முற்று முழுதாக புலிகளாகவே பார்க்கின்றது. இந்தப் போலி நாடகம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கப் போகின்றது எனக் கேட்கவிரும்புகின்றோம். முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மாவட்டச் செயலகங்கள் மூடப்பட்டுள்ளன. அந்த அரசாங்க அதிபர்கள் வவுனியாவிலிருந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் ஒன்று புலனாகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி அன்று ஏற்படுத்திய சிவில் நிருவாகம் இந்த இரண்டு மாவட்டங்களிலும் இன்று முற்று முழுதாக செயலிழந்து போயுள்ளது தான். வடக்கிலும், வன்னியிலும் இன்று என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை தெற்கு மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு மறைமுகமாக வாய்ப்பூட்டுப் போடப்பட்டுள்ளது.

ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் சக்தி எழுச்சி பெறாது போனால் நாடு முற்று முழுதான சர்வாதிகாரத்துக்குள் தள்ளப்பட்டு விடும் எனவும் அவர் எச்சரித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *