“தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஆட்சிமாற்றமொன்று அவசியமாகும்’

ballot-box.jpgதமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஆட்சி மாற்றமொன்று அவசியமாகும் என்று தெரிவித்துள்ள ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் உதவிச் செயலாளரும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நுவரெலியா மாவட்ட ஐ.தே.க. வேட்பாளருமான, முரளி ரகுநாதன் எதிர்வரும் தேர்தலில் மலையக மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மலையகத்தில் இரட்டை வேடம்பூண்டு வாக்கு வேட்டைகளில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்களுக்கு மலையக மக்கள் வாக்களித்து ஏமாற்றமடையக்கூடாது. கட்சிக்கு விசுவாசமாக இருந்து மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களுக்கு மலையக மக்கள் வாக்களிக்க வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு ஐக்கிய தேசியக் கட்சியையும் மலையக மக்களையும் ஏமாற்றி வாக்குகளை பெற்று கட்சிமாறும் பச்சோந்திகளும் ஐ.தே.க.சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நம்பிக்கையாக இருந்து சேவை செய்யும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதா? அல்லது கட்சி தாவும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதா? என்று மலையக மக்கள் சிந்திக்க வேண்டும். இன்று மலையக பெருந்தோட்டங்களில் க.பொ.த. உயர்தர கல்வி கற்றுவிட்டு வெளிமாவட்டங்களில் சென்று தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர்.

அதேவேளை, இந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு கெடுபிடியால் தலைநகரில் தொழில்புரிந்த இளைஞர்களும் தொழிலைவிட்டுவிட்டு மலையக பெருந்தோட்டங்களுக்கே திரும்பிவருகின்றனர். எனவே, தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஆட்சி மாற்றம் தேவைப்படுகின்றது.

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற வேண்டும். தலைநகரில் தமிழ் மக்களுக்காக தனி மனிதனாக இருந்து தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பும் பாராளுமன்ற உறுப்பினரும், எமது தலைவருமான மனோ கணேசனின் தன்னலமற்ற சேவையை மலையக மக்களுக்கும் செய்வதற்காகவே நுவரெலியா மாவட்டத்தில் நானும் அவரது சகோதரருமான பிரகாஷ் கணேசனும் போட்டியிடுகின்றோம். தேர்தலில் வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும் நாங்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாகவே இருப்போம். நாங்கள் கட்சி மாறமாட்டோம். எனவே, மலையக மக்கள் எங்களுக்கு வாக்களித்து எங்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *