அரசியல்வாதிகள் குறுகிய நோக்கத்திற்காக இனவாதம், மதவாதத்தை தூண்டிவிடக் கூடாது – எஸ்.பி.திஸாநாயக்க

இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட்டு குறுகிய அரசியல் இலாபத்தை பெறமுடியும். ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகளால் நாட்டில் அமைதியின்மை சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எந்தவொரு அரசியல் வாதிகளும் குறுகிய அரசியல் இலாபத்திற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட்டு நாட்டில் அமைதியின்மை சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது என்று முன்னாள் அமைச்சரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளருமான எஸ்.பீ.திஸாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை நானுஓயா காந்தி மண்டபத்தில் நடைபெற்ற ஐ.தே.கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார்.

வடக்கு மக்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகளை தாங்களாகவே தீர்த்துக்கொள்ள அதிகாரப் பகிர்வு கேட்டுவந்தனர். அதை வழங்க எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவும் டட்லி சேனநாயக்கவும் அதிகாரப் பகிர்வை வழங்க முன் வந்தனர். ஆனால் அன்றிருந்த ஒரு சில பிற்போக்கு மதகுருமார்கள் தடுத்தனர். 1957 ஆம் ஆண்டு அமரர் பண்டார நாயக்கவினால் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் கூட இன்று இருக்கின்ற பிரதேச சபைக்குள்ள அதிகாரங்கள் கூட அன்று இருக்கவில்லை.

1967 ஆம் ஆண்டில் அமரர் டட்லி சேனாநாயக்க கொண்டுவந்த அரசியல் சட்டத்திலும் இன்று நகரசபைகளுக்குள்ள அதிகாரங்கள் கூட அன்று இருக்கவில்லை. இந்நாட்டில் தொடர்ந்து அதிகார பகிர்வு இல்லாததால் தனிநாடு கேட்டு வடக்கில் தற்கொலைக் குண்டுதாரிகள் உருவாகினார்கள். இதனாலேயே இன்று இந்நாடு யுத்தத்தால் அழிந்து கொண்டிருக்கின்றது. இன்று இந்நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லீம், பறங்கியர்கள் வாழுகின்றனர். அவர்களுக்குள்ள உரிமைகளை அரசாங்கம் வழங்க வேண்டும். அப்போது தான் நாடு பிளவுபடாமல் ஒற்றுமையாக வாழமுடியும்.

இன்று மலையக பெருந்தோட்ட மக்கள் துன்பம், துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களை வழிநடத்தும் தலைவர்கள் அரசாங்கத்துக்கு அடிமைகளாக இருப்பதால் இம்மக்களின் பிரச்சினைகளை தட்டிக் கேட்டு தீர்வு காணமுடியாமல் இருக்கின்றது. எனவே எதிர்வரும் தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று கூறினார்.

Show More
Leave a Reply to thurai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • thurai
    thurai

    இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட்டு, பணம் தேடும் கூட்டம் இலங்கையில் அழிந்து கொண்டே போகின்றது, ஆனால் புலம்பெயர் நாடுகளில் இப்போதுதான் வளரத்தொடங்கியுள்ளது.

    துரை

    Reply