“மாகாண சபை முறைமை முழு அதிகாரங்களைப் பெற்றதாக ஒரு சமஷ்டிக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்ததாக ஓர் ஆட்சியாக மலர வேண்டும்.”  – எம்.ஏ.சுமந்திரன்

“மாகாண சபை முறைமை முழு அதிகாரங்களைப் பெற்றதாக ஒரு சமஷ்டிக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்ததாக ஓர் ஆட்சியாக மலர வேண்டும்.”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். அல்வாய் கிழக்கு, இலகடியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமராட்சி கிளை அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ் – சிங்களப் புத்தாண்டு பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டிலே பலவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன. பொருளாதாரப் பிரச்சினை இப்போது முக்கியமாக மேலோங்கி நிற்கின்ற இந்தச் சூழ்நிலையிலேயே இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு வழியில்லாமல் இருப்பவர்களை நினைவு கூருகின்றோம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்தப் புத்தாண்டிலாவது ஒரு விடிவு ஏற்பட வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருக்கின்றார்கள். அந்த இலக்கை அடைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.

எங்களுடைய முயற்சி ஒருபோதும் கைவிடப்படமாட்டாது. ஆகையினாலே அனைத்து மக்களுக்கும் நாங்கள் வாழ்த்துச் சொல்லுகின்ற அதே வேளையில், விசேடமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலையை நாங்கள் வேண்டி அதற்காக உழைப்போம் என்று உறுதி கூறுகின்றோம்.

அரசுக்குள்ளே மாகாண சபைத் தேர்தல் நடத்துவது பற்றி பெரியதொரு இழுபறி நடந்து கொண்டிருக்கின்றது என்று எங்களுக்குத் தெரிகிறது. அரசு அனைத்து மாகாண சபைகளையும் கைப்பற்ற வேண்டும் என்று சிந்திக்கின்றார்கள். ஆனால், கடும்போக்குவாத பின்னணியைக் கொண்ட பலர் – குறிப்பாக இந்த அரசைக் கொண்டு வந்தவர்கள் – விசேடமாக ஜனாதிபதியின் வெற்றிக்காக உழைத்த இனவாத சிந்தனை உள்ள கடும்போக்குவாதிகள் மாகாண சபை முறை அகற்றப்பட வேண்டும் என்று தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்து வருகின்றார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில் மாகாண சபை முறையை ஒழிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாட்டோம். ஆனால், வெறுமனே இருக்கின்ற மாகாண சபை முறைமையே நாங்கள் எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். மாகாண சபை முறைமை இருக்க வேண்டும். ஆனால், அது முழு அதிகாரங்களைப் பெற்றதாக ஒரு சமஷ்டிக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்ததாக ஓர் ஆட்சியாக மலர வேண்டும். அதற்கான எங்களுடைய யோசனைகளை இந்த அரசு நியமித்துள்ள அரசமைப்பு வரைபு குழுவிடம் முன்வைத்துள்ளோம். ஆகையினாலே எங்களுடைய முயற்சி இது தொடர்பாக தொடர்ந்து நடைபெறும். மாகாண சபைத் தேர்தல் மிக விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *