சுனாமி வீடுகள்: அரச சார்பற்ற நிறுவனங்கள் முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை – சபையில் அமைச்சர் தினேஷ்

parliament2301.jpgவடக்கு, கிழக்கு உட்பட சுனாமியினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் அரசாங்கம் நிரந்தர வீடுகளை வழங்குவது உறுதி. அதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாதிக்கப்பட்டோருக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கிய போதும், அது முறையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. தற்போது அரசாங்கம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் வாய் மூல வினாக்கான வேளையில் ஜே. வி. பி. எம்.பி. லக்ஷ்மன் நிபுணஆராச்சி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் வீடுகளை அமைக்க விடுதலைப் புலிகள் இடமளிக்கவில்லை. தற்போது புலிகளை வெற்றிகொண்டு அரசாங்கம் அப்பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. எதிர்காலத்தில் சகலருக்கும் நிரந்தர வீடுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மட்டுமன்றி நாட்டின் பல பகுதிகளிலும் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வீடுகளை அமைத்துக் கொடுத்து வருகிறது. பெருமளவிலனோருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 4764 குடும்பங்களுக்கு மொத்தமாக வீடுகள் வழங்கப்பட வேண்டியுள்ளன. அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது பணிகளை முறையாகச் செய்யவில்லை. அவர்கள் நிதிகளைப் பெற்றுக் கொண்டார்களே ஒழிய வீடுகளை அமைத்துக் கொடுக்கவில்லை. இது தொடர்பில் தெரிவுக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 454 குடும்பங்களுக்கு இன்னும் வீடுகள் வழங்க வேண்டியுள்ளனவென அமைச்சர் தெரிவித்தார்.

இதன் போது குறுக்கிட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. நுரைச்சோலை, அக்கரைப்பற்று பகுதிகளில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் அது புனிதப்பிரதேசம் என தெரிவிக்கப்பட்டு வீடுகள் கையளிக்கப்படாத நிலையிலேயேயுள்ளன. அரசாங்கம் இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, இது தொடர்பான விவகாரம் நீதிமன்ற விசாரணையிலுள்ளது என்பதால் இது பற்றி நாம் எதனையும் விபரிக்க முடியாது. நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் அதற்கேற்ப உரிய கவனமெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *