“எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.”  – எம்.ஏ.சுமந்திரன்

“எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கமானது மக்கள் மீது அடக்குமுறைகளை வன்முறைகளைப் பிரயோகித்து மக்களை அடக்கியாள நினைக்கின்றது.  அதாவது குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு பாடுபடுகிறது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அரசாங்கம் எதிர்காலத்திலாவது சரியான முறையில் செயற்படாவிட்டால் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயற்பாட்டில் நாங்கள் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அதற்குரிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.

எனவே இந்த அரசாங்கமானது கடும் போக்கை கைவிட்டு அடக்குமுறையை விட்டு குடும்ப ஆட்சி முறையினையும் கைவிட்டு செயற்பட வேண்டும். குடும்ப ஆட்சி தொடரக்கூடாது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினுடைய பங்களிப்போடு அது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி நடாத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் .

தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசாங்கத்தினால் எந்தவிதமான தகுந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. பயணத்தடை என்கின்றார்கள், ஊரடங்கு என்கிறார்கள் – ஆனால் ஒழுங்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை. வீதிகளில் மக்கள் பயணிக்கிறார்கள், அத்தியாவசிய தேவை எனக் கூறி அனைவரும் வீதிகளில் நடமாடுகிறார்கள். எனவே இந்த அரசானது இந்தக் கொடிய நோயை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை.

அதற்குரிய பொறுப்பினை சம்பந்தப்பட்ட தரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது சுகாதார அமைச்சு மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட இணைந்த அமைச்சுகளும் இந்த விடயம் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும். சுகாதார அமைச்சுக்குள்ள அதிகாரத்தினை வேறு யாராவது பாவிக்கிறார்களா?

அல்லது வேறு என்ன நடைபெறுகின்றது என்பது எமக்கு புரியவில்லை. ஆனால் இந்த விடயங்கள் தொடர்பில் யாராவது ஒருவர் பொறுப்புக்கூற முன்வரவேண்டும். இல்லையென்றால், அவர்கள் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்களின் பதவிகளை ராஜினாமா செய்யலாம் எனத் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *