அவசர நோயாளிகளுக்கான அம்புலன்ஸ் சேவை குடாநாட்டில் இன்று முதல்

ambulance.jpgயாழ் .மாவட்டத்தில் அவசர நிலைகளின் போது நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கான அவசர அம்புலன்ஸ் சேவை இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுகின்றது.  24 மணிநேரமும் செயற்படவுள்ள இந்த அம்புலன்ஸ் சேவைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்று யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.

இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

இன்று ஆரம்பிக்கப்படுகின்ற இவ் அவசர அம்புலன்ஸ் சேவையை யாழ்.மாவட்டச் சுகாதார திணைக்களம் ஒருங்கிணைக்கும். அவசர நிலைகளில் இச் சேவையைப் பெற விரும்புபவர்கள் 110 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும். கையடக்கத் தொலைபேசி மூலம் 110 என்ற தொலைபேசியூடாக இச்சேவையைப் பெற்றுக்கொள்ள சில நாட்கள் தாமதமேற்படும் என்பதால் அவர்கள் 0212224444 என்ற இலக்கம் மூலம் தொடர்புகொள்ளலாம்.

அவசர அழைப்புகளை ஒருங்கிணைப்பதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள நிலையம் 24 மணிநேரமும் செயற்படும். இங்கிருந்து அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள அம்புலன்ஸ்களுக்கு தகவல்கள் வழங்கப்படும்.

இச்சேவையின் மூலம் யாழ்.மாநகராட்சிப் பகுதியிலும் அதனை அண்டிய வலிகாமம் பகுதிகளிலும் உள்ள நோயாளர்கள் நேரடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவர்.  ஏனைய பகுதிகளைச் சேர்ந்த நோயாளர்கள் அருகிலுள்ள பிரதேச வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுவர். தேவையேற்படின் அவசர சிகிச்சைகளுக்குப் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவர்.

இத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, சங்கானை மற்றும் ஊர்காவற்றுறை போன்ற வைத்தியசாலைகளின் அம்புலன்ஸ்களுக்கு அவசர முதலுதவிச் சிகிச்சைகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு, அம்புலன்ஸ் சாரதிகளுக்கும் பணிப்பாளர்களுக்கும் அவசர முதலுதவிப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ஏனைய வைத்தியசாலைகளின் அம்புலன்ஸ்களுக்கு மருத்துவ உபகரணங்களும் சாரதிகளுக்குப் பயிற்சிகளும் வழங்கப்படும்.  யாழ்.மாவட்டத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனமும் சர்வதேச மருத்துவக் குழுவும் உதவியளித்து வருகின்றன. ஆனால், சுகாதாரத் திணைக்களமே இதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *