மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு உரிய தீர்வில்லையெனில் நாடு தழுவிய போராட்டம் -அரசுக்கு ஜே.வி.பி. எச்சரிக்கை

jvp-net.jpgகடல்கோள் அனர்த்தத்தினாலும் கடந்தகால யுத்தத்தினாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிவரும் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் அரசின் நடவடிக்கைகளினால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றார்கள். இவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால் நாடுதழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி.)யின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே தெரிவித்தார்.

கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள நிப்போன் ஹோட்டலில் அகில இலங்கை மீனவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் கூறியதாவது;

கிழக்கு மாகாண மீனவர்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மீன்பிடித்தொழிலை நாளாந்தம் சிக்கலின்றி மேற்கொள்ள முடியாதுள்ளனர். இதனால் தமது வாழ்க்கையை நடத்திச் செல்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றபோதும், இவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாதுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்ட கரையோர பிரதேசமான வாழைச்சேனை, புன்னைக்குடா, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு, கல்லாறு, காத்தான்குடி, பாலமுனை உட்பட பல மீனவர் கிராமங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் கடற்றொழிலையே தமது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் கடந்த ஒரு சகாப்தங்களுக்கு மேலாக பயங்கரவாதத்தால் பிரச்சினையை எதிர்கொண்டதுடன், கடல்கோளினாலும் பாரிய பாதிப்பினை எதிர்கொண்டனர். கடந்த காலங்களில் பயங்கரவாதிகள் இம் மீனவர்களின் படகுகளை கடத்திச்சென்றதுடன், வலைகளையும் எரிபொருட்களையும் அபகரித்துச் சென்றுள்ளனர். அதேபோல கடல்கோள் தாக்கியதனால் கிழக்கு மாகாண மீனவர்களின் படகுகள், வீடுகள், வலைகள் மற்றும் வாடிவீடுகள் என்பனவும் அழிவடைந்தன.

இந்நிலையில், இந்த மீனவர்களுக்கு அரசாங்கம் உரிய நஷ்டஈட்டையும் நிவாரணங்களையும் வழங்கவில்லை. இது குறித்து பல முறை எடுத்துக் கூறியபோதிலும் தட்டிக்கழிக்கப்பட்டுள்ளது. இதனைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையில் மாத்திரமே இறங்குதுறையுள்ளது. இதனால் ஏனைய மாவட்ட மீனவர்கள் தமது படகுகளை வாழைச்சேனைக்கே கொண்டுவரவேண்டிய சிக்கலான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களது மேலதிக உற்பத்திகளை சேமிப்பதற்கான எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குறைந்தது இரு ஐஸ் தொழிற்சாலை மற்றும் களஞ்சிய சாலை அமைப்பதன் மூலம் இம் மீனவர்களுக்கு மட்டுமல்ல பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கமுடியும். அரசாங்கம் கிழக்கின் உதயமென கூறுகின்றதே தவிர உண்மையில் அங்கு அபிவிருத்தி செய்யப்படவில்லை.

இப்போராட்டம் தொடர்பில் இதுவரை நாம் தீர்மானம் மேற்கொள்ளவில்லை. ஏனெனில், இவர்களின் பிரச்சினை குறித்து மீன்பிடித்துறை அமைச்சருடன் பேச்சு நடத்தவுள்ளோம். இதன் பின்னர் அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வராவிட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *