ஆவணஞானி குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் : என் செல்வராஜா (நூலியலாளர்)


Kanagarathinam_Kurumbachiddy_02ஈழத் தமிழரின் ஆவணக்காப்பாளராகத் திகழ்ந்த குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்கள் இன்று (22.6.2016) மாலை கண்டியில் காலமாகிவிட்ட செய்தி எம்மை வந்தடைந்துள்ளது.

ஈழத் தமிழரின் நூற்றாண்டுக்கால வரலாற்றை, அதற்கான வரலாற்றுத் தரவுகளை ஆவணப்படுத்தும் ஒரு புனிதப் பணியினை, பிரம்மாண்டமானதொரு சேவையை, தனியொருவராக நின்று கடந்த 45 வருடங்களாக இவர் எம்மினத்துக்காகச் செய்துவந்துள்ளார்.

அமரர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினத்தின் தேடல் பணி 1956முதல் பலத்த சிரமத்தின் மத்தியில் தொடங்கியது. 1958, 1983 ஆகிய காலகட்டங்களில் இடம்பெற்ற இன வன்முறைகளின் காரணமாக அவரது சேகரிப்புகள் பாரிய அச்சுறுத்தல்களை கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் எதிர்கொண்டன. ஈற்றில் அவற்றை பலத்த சிரமத்தின் மத்தியில் வடபகுதிக்குக் கொண்டுவந்து, குரும்பசிட்டியில் இருந்த அவரது இல்லத்தில் வைத்துப் பாதுகாத்ததுடன், அங்கிருந்தபடியே தன் தேடல்களையும் ஆவணப்பதிவுகளை தேடித்தேடிச் சேகரித்தார்.

இந்திய இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்திருந்த வேளையிலும் அவருக்கு இவ்வாவணங்களால் சிக்கல்கள் ஏற்பட்டன. எந்தவொரு நிறுவன உதவியுமின்றி தனிமனித முயற்சியாக வேலை செய்யும்போது, பாரிய சந்தேகங்கள் பாதுகாப்புத் தரப்பில் ஏற்படுவதில் வியப்பேதும் இருக்கவில்லை. ஒரு தனிமனிதனாக வெற்றிகரமாக அவற்றைச் சமாளித்தவர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்கள்.

Kanagarathinam_Kurumbachiddy_with_Selvarajah_Nஇந்திய இராணுவம் வடபுலத்தில் முகாமிட்டிருந்த காலகட்டத்தில் 1989ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் “ஈழத்து நூல், சஞ்சிகை, ஓவிய, சிற்ப கண்காட்சி” ஒன்றினை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு சுந்தரம் திவகலாலா அவர்களின் தலைமையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஒழுங்கு செய்திருந்தார்கள். அக்கண்காட்சியில் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்களுக்கு தனியானதொரு பிரிவு ஒதுக்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. அக்கண்காட்சியின் தொண்டர்களுள் ஒருவராக இருந்த எனது தொடர்பு அக்காலகட்டத்திலேயே அவருக்கு நெருக்கமாயிற்று. அன்று முதல் தொகுப்புப்பணியில் அவ்வப்போது கைகொடுத்து வந்துள்ளேன். என்னுடனான அவரது கடிதத்தொடர்புகள் இறுதிவரை நீடித்துவந்தது.

1989இல் நடத்தப்பட்ட கண்காட்சியானது, குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்களின் பணியை வடபுலம் மாத்திரமல்லாது முழு இலங்கைக்கும் எடுத்துக்கூறியிருந்தது. குரும்பசிட்டியில் இயங்கிய அன்னாரது ஆவணக் காப்பகம், பின்னர் யுத்தத்தின் தீவிரத்தினால் ஏற்பட்ட உள்ளகப் புலப்பெயர்வுகளின் காரணமாக 1990களில் கண்டிக்கு மாற்றப்பட்டது. அங்கும் அவரால் நீண்டகாலம் இயங்கமுடியவில்லை. ஒருநாள் இரவு அவரது இல்லத்தில் விடுதலைப் போராளிகளின் ஆவணக்காப்பகம் இயங்ககின்றதென்ற வதந்தியின் காரணமாக, அவரது சேர்க்கைகள் தீக்கிரையாகும் ஆபத்தை அவரது ஆவணக் காப்பகம் கண்டி, முல்கம்பொலையில் சந்தித்தது. அயலவர்களின் உதவியால் அன்றைய அசம்பாவிதம் அதிர்ஷ்டவசமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக, தனது சேர்க்கைகளுடன் வன்னியை நாடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அமரர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் உள்ளாகினார். அங்கும் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் ஆதரவுடன் வன்னியில் இவரது சேகரிப்பு பாதுகாக்கப்பட்டதும், 02.11.2007 அன்று அவரது அகால மரணத்தின் பின்னர், ஏற்பட்ட நெருக்கடி நிலையின் காரணமாக எஞ்சியிருந்த ஆவணங்களை வன்னியில் கைவிட்டு, ஆயதப்போராட்டம் மெளனிக்கப்படும் சில வாரங்களுக்கு முன்னதாகவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் துணைவியாருடன் தமிழகம் சென்று அகதி அந்தஸ்து கோரியதும் அமரர் குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்களின் வாழ்வின் இறுதிக்காலத்தில் நிகழ்ந்த சோக நிகழ்வுகளாகும்.

குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்கள் திருச்சியில் வாழ்ந்த அக்காலகட்டத்தில் 2011இல் நான் தமிழகம் சென்றிருந்த வேளையில், ஒரு தடவை அவரது இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து வந்தேன். அங்கும் தனது தள்ளாத வயதிலும், தமிழகத்தில் இருந்து பத்திரிகை நறுக்குகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியிலேயே அவர் ஈடுபட்டுவந்திருந்ததை கண்ணில் நீர்பனிக்கக் கண்டுவந்தேன்.

சில காலத்தின் பின்னர் அவரது துணைவியாரும்> அவரைத் தொடர்ந்து இவரும் இலங்கை திரும்ப, கண்டியிலேயே தனது இறுதிக்காலத்தைச் செலவிட்டதாக அறிகின்றேன்.

குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்கள், ஆவணங்களைச் சேகரிப்பதோடு மட்டும் நின்றுவிடாது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை மைக்ரோ பில்மிங் முறை மூலம் நுண்படச் சுருள்களாக மாற்றியும் வந்திருந்தார். இது வரை 60 வீதமான சேகரிப்புகளை இப்படியாக நுண்படச் சுருள்களாக்கி விட்ட இவர்> எஞ்சிய 40 வீதத்தை செய்து முடிக்க நிதி உதவியை நாடி புகலிடத் தமிழர்களின் ஆதரவை எதிர்பார்த்து உலகளாவிய பயணங்களையும் மேற்கொண்டுவந்திருந்தார். இவற்றில் ஒரு தொகுதியை யுனெஸ்கோ நிறுவனம் இவரிடம் கொள்வனவு செய்து சுவிட்சர்லாந்தில் உள்ள தனது ஆவணக் காப்பகத்தில் பேணிவரும் செய்தியையும் ஒரு தடவை அவர் என்னிடம் கூறியிருந்தார்.

ஒரு நூற்றாண்டு (1890-2011) இலங்கைத் தமிழர் வரலாறு: மைக்ரோ பிலிம்களில் (நுண்படச் சுருள்களில்). என்ற தலைப்பில் குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்கள்> திருச்சியிலிருந்து உலகத் தமிழர் ஆராய்ச்சி மையத்தினூடாக ஜுலை 2012. இல் ஒரு கையேட்டினத் தயாரித்து உலகத்தமிழர்களிடம் தபாலில் அனுப்பிவைத்திருந்தார். ஆவணஞானி அவர்கள் ஈழத்தமிழர் தொடர்பான பத்திரிகை நறுக்குகளையும், சிறு நூல்களையும் புகைப்படங்களையும் மற்றும் காகித ஆவணங்களையும் சேகரித்துப் பாதுகாத்து அவ்வப்போது காட்சிப்படுத்தி வந்த வரலாற்றை அதில் சுருக்கமாகப் பதிவுசெய்திருந்தார். 1956 முதல் தனது வாழ்நாள் தேடல் பணியைத் தொடங்கிய இவர் தன் வாழ்வின் இறுதிவரை அதனை நிறுத்தவில்லை. 1889இலிருந்து விரிந்துசெல்லும் இவரது இடையறாத இத்தனிமனித முயற்சியின்பாற்பட்ட ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு நிதிவசதியைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகத் தனது பணிகளை புகைப்பட மற்றும் எழுத்தாவண உதவியோடு இந்நூலில் விரிவாகப் பதிவுசெய்திருந்தார். அவரைப் புரிந்துகொண்டு, அவர் எதிர்பார்த்திருந்த நிதியுதவியை அவரின் வாழ்நாளின் இறுதிவரை அவருக்கு எம்மினம் வழங்கி உற்சாகப்படுத்தாது கள்ளமெளனம் காத்துவந்ததையும் இங்கே நாம் வேதனையுடன் பதிவுசெய்தாகவேண்டும்.

தமிழர்கள் வாழும் நாடெங்கிலும் தனது சேகரிப்பின் பிரதிகள் பேணிப்பாதுகாக்கப்படும் வகையில் சென்றடைய வேண்டும் என்று கருதிய அமரர் கனகரத்தினம் தனது பணிக்கு நிதி உதவி செய்ய முன்வரும் அமைப்புக்களையும்; தனிநபர்களையும் தன் வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டே இருந்திருக்கிறார். இலங்கையில் வெளிவந்த ஏறத்தாள 1000 சஞ்சிகைப் பிரதிகள் இவரிடம் பாதுகாப்பில்
இருந்தன. அதுபோல புகலிடத்திலிருந்து வெளிவந்த ஏராளமான சஞ்சிகைகளும் சேர்க்கப்பட்டிருந்தன. 7500க்கும் அதிகமான பல்துறைக் கட்டுரைகளும் 4000க்கு மேற்பட்ட கார்ட்டூன் சேகரிப்புக்களும்கூட இவரிடம் இருந்தன. இவற்றின் மூலங்கள் இப்போது எங்கே என்ற கேள்வி எம்மிடையே எழத்தான் செய்கின்றது.

Kanagarathinam_Kurumbachiddy_03தமிழருக்கு ஒரு தேசிய காப்பகம் உருவாக வேண்டும். அது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஒரு காப்பரணாக அமையவேண்டும் என்ற வேணவாவுடன் வாழ்ந்தவர் இந்த ஆவணஞானி. இலங்கைத் தமிழர்கள் மாத்திரம் என்றில்லாமல், உலகளாவிய தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் பேணும்வகையில், தமிழர்கள் என்ற அடையாளத்தைத் தொலைத்துவரும் பன்னாட்டுத் தமிழர்களின் பூர்வீகங்களையும்> வாழ்க்கைப் போராட்டங்களையும் நூல்களாகவும், நேர்காணல்களாகவும் சிறு நூல்களாக வெளியிட்டு உலக அரங்கில் அவர்களது இருப்பினை அறியச்செய்துவந்தவர் அமரர் குரும்பசிட்டி கனகரத்தினம்.

அலை கடல்களுக்கு அப்பால் தமிழர் என்ற இவரது நூல் கண்டி, முல்கம்பொலவிலுள்ள இவரது இ;லத்திலிருந்து ஜனவரி 1973இல் வெளிவந்திருந்ததை பலரும் அறிவர். கடல்கடந்து தமிழர் வாழும் டிரினிட்டாட், டொபேக்கோ, மாட்னிக், தென்னாபிரிக்கா, பீஜி ஆகிய நாடுகள் பற்றிய விவரணங்களை கட்டுரை வடிவில் ‘செய்தி’ வார இதழில் தொடராக வெளியிட்டிருந்தார். அத்தொடரில் இடம்பெற்ற கட்டுரைகளே இந் நூலுருவாகவும் வெளியாகியது.

குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்கள் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க இலங்கைக் கிளையின் நிறுவுநராகவும், பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர். இறியுனியன் தீவில் எங்கள் தமிழர் என்ற நூலை தெல்லிப்பழைப் பிரதேசத்திலுள்ள குரும்பசிட்டி மண்ணிலிருந்து பெப்ரவரி 1979இல் வெளியிட்டிருந்தார்.

சென்னையில் இடம்பெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாட்டின்போது தமிழகச் சட்ட மன்ற உறுப்பினர் விடுதியில் வைத்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணலின் எழுத்துவடிவம் இது. இறியூனியன் தீவைச் சேர்ந்த திரு.வீ.தேவகுமாரன் அவர்களை குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்கள் விரிவாக நேர்காணல் ஒன்றின் வழியாக உலகத்தமிழர்களுடன் இணைத்திருக்கிறார். இறியுனியன் தீவில் குடியேறிய தமிழர்கள், அவர்களது சமூக வரலாறு, தற்போதைய நிலை, அங்கு தமிழ் வளர்ச்சிக்கான பணிகள் என்பன போன்ற பல விடயங்களை இந்நேர்காணல் வாயிலாக பதிவுசெய்திருக்கிறார். இவ்வாறே மொறிஷியஸ் தீவில் எங்கள் தமிழர் என்ற நூலில் மொறிஷியஸ் தீவில் வாழும் தமிழர்கள் பற்றிய தகவல்களை அத்தீவைச் சேர்ந்த பெரியார் திரு. மா.தங்கணமுத்து அவர்களுடனான நேர்காணல் ஒன்றின் மூலம் 1980இல் ஆவணப்படுத்தியுள்ளார்.

பன்னாட்டுத் தமிழர் பற்றிய தேடல்களைத் தன் வாழ்நாட் பணியாக மேற்கொண்டிருந்த அமரர் கனகரத்தினம் அவர்கள், புலம்பெயர்ந்து திருச்சியில் வாழ்ந்த காலத்தில் ஒரு குடையின்கீழ் உலகத் தமிழினம் என்ற தலைப்பில் மற்றொரு நூலையும் வெளியிட்டிருந்தார். திருச்சி, உலகத் தமிழர் ஆராய்ச்சி மையத்தின் வெளியீடாக, ஆகஸ்ட் 2012இல் வெளிவந்திருந்த இந்நூல் உலகத் தமிழர் நிலை பற்றி விரிவான தகவல்களைத் தருகின்றது. தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் அப்பால் கரீபியன் தீவுகள் வரை விரிந்து பரந்து, மறைந்து கிடக்கும் தமிழ் உலகம் பற்றிப் பேசும் ஆவணஞானியார், உலகத் தமிழர்களை ஒரு அமைப்பின்கீழ் கொண்டுவரவேண்டும்; என்றும், மறந்துவரும் அவர்களின் தாய்மொழியான தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் அவர்களிடையே மீண்டும் பரவ வழிசெய்யவேண்டும் என்றும் இந்நூலில் வலியுறுத்தியிருந்தார். சிங்கப்பூர், மலேசியா, பர்மா, அந்தமான்-நிக்கோபார், ரினிடாட் மற்றும் டுபாக்கோ, மார்த்தினிக், குவாட்லோப், ஷிசெல்ஸ், பீஜித் தீவுகள், தென்னாபிரிக்கா, இலங்கை, மொரிஷியஸ், றியூனியன், இந்தோனேசியா, நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றியும், குறிப்பாக மலேசியா- அனந்தகிருஷ்ணன், அமெரிக்க கோடீஸ்வரர் இராஜரத்தினம், பாடகி மாதங்கி அருட்பிரகாசம் ஆகியோர் பற்றியும் இந்நூலில் தனது தனிப்பட்ட கருத்துக்களைப் பதிவுசெய்திருந்தார்.

குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்கள் தனது பாரிய சேகரிப்பில்> புகழ் பூத்த பெரியார்கள் வரிசையில் வண. தனிநாயகம் அடிகள், சுவாமி ஞானப்பிரகாசர், வித்துவசிரோமணி சி. கணேசையர். சி.வை. தாமோதரம்பிள்ளை, கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி, ஆறுமுக நாவலர், சுவாமி விபுலானந்தர், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் கைலாசபதி, இரசிகமணி கனகசெந்திநாதன், அறிஞர் எப்.எக்ஸ்.சி. நடராஜா, சில்லையூர் செல்வராஜன் என்று சுமார் 29 தலைப்புக்களின் கீழ் ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் வரலாற்றுக் கட்டுரைகளை பத்திரிகைகளில் இருந்து வெட்டி எடுத்து தனியாக ஒட்டி, தனது தொகுப்பில் சேகரித்து வைத்திருந்தார். அத்துடன் புகழ்பெற்ற சமயத் திருத்தலங்களான திருக்கோணேஸ்வரம், முன்னேஸ்வரம், கதிர்காமம், மற்றும் இலங்கையின் இதர ஆலயங்கள் பற்றிய கட்டுரைகளும், தமிழகக் கோயில்களின் வரலாற்றுப் பின்னணிகள் தொடர்பான கட்டுரைகளும், இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்கள்> இலங்கை, தமிழகத் தொல்லியல் ஆய்வுகள், இலங்கை, தமிழக இலக்கிய வளர்ச்சி, சிங்கள மக்கள், மொழி பண்பாடு, சரித்திர வளம், சிங்கள தமிழர் தொடர்புகள், தமிழர்களின் கலைகள், தமிழர் பண்பாடு, உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் பற்றிய நாடளாவிய ரீதியிலான தகவல்கள் கொண்ட கட்டுரைகள் உள்ளிட்ட 168 தலைப்புகளில் சேகரிக்கப்பட்ட கட்டுரைகள் இவரிடம் ஆவணமாக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளன.

தேசாபிமானி, இந்துசாதனம், சன்சோனி கொமிஷன் அறிக்கை, ஈழகேசரி, தனிநாடு, காங்கிரஸ், கேசரி, தினமுருசு, சரிநிகர், விடுதலை, Tribune, சுதந்திரன், Tamil Culture ஆகிய பத்திரிகைகளின் பிரதிகள் நுண்படச்சுருள்களாக இவரிடம் இருந்தன.

Kanagarathinam_Kurumbachiddy_01குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்கள் இளவயதில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆரம்பகாலத் தொண்டனாக வாழ்ந்தவர். அக்கட்சியின் ஆரம்பகால ஆவணக் காப்பகம் இவரிடமே கையளிக்கப்பட்டிருந்தது. அதனை வளர்த்தெடுக்கும் பணியையும் இவர் தானாக ஏற்றுக்கொண்டிருந்தார். தன் வாழ்வின் இறுதிவரை அப்பணியை மேற்கொண்டுவந்திருக்கிறார்.

தந்தை செல்வாவின் மேல் கொண்ட தீவிர பற்றின் வெளிப்பாடாகத் தனது ஆவணச் சேர்க்கைகளிலிருந்து மூன்று தனி நூல்களைத் தொகுத்திருந்தார். முதலாவதாக, 25,00,000 மக்கள் தலைவர் என்ற தலைப்பில் டிசம்பர் 1959இல் கண்டியிலிருந்து இதனைத் தொகுத்திருந்தார். கொழும்பு சுதந்திரன் அச்சகம் இதனை அச்சிட்டிருந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்களின் அரசியல் வாழ்க்கை பற்றிய நூலாக, சமஷ்டிக் கட்சி அமைத்து, வடக்கு கிழக்கு மலையக மக்களை ஒன்றிணைத்து, அவர் பெருந்தலைவரான வரலாற்றையும் அவரது அரசியல் நோக்குகளையும்> கருத்துகளையும் இத்தொகுப்பு பதிவுசெய்திருந்தது. இவற்றை பல்வேறு உரைகளிலிருந்தும் தேர்ந்தெடுத்து இந்நூலில் தொகுத்து வழங்கியிருந்தார்.

தமிழரசுத் தந்தை என்ற தலைப்பில் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்கள் மற்றுமொரு நூலைத் தொகுத்து ஜுன் 1960இல் வெளியிட்டிருந்தார். தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வா அவர்களின் வாழ்வியல் பணிகள் பற்றிய செய்திகளையும், அவ்வப்போது அவர் உதிர்த்த முக்கிய கருத்துக்களையும் திரட்டி முன்னைய நூலின் தொடர்ச்சியாக சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்கள் பற்றிய மேலும் சில குறிப்புகளுடன் இந்நூலை வெளியிட்டிருக்கிறார்.

செல்வாவின் சிந்தனைகள் என்ற தலைப்பில் 1977இல் தந்தை செல்வா பற்றியதாக கண்டியிலிருந்து மற்றொரு நூலையும் இவர் எழுதித் தொகுத்திருந்தார்.

பல்வேறு உரைகளின் வழியாக தந்தை செல்வா அவர்கள் உதிர்த்த கருத்துக்களின் தொகுப்பாகவே இந்நூல் அமைந்திருந்தது. தீண்டாமை, மலையகத் தமிழர் பிரச்சினை, ஒப்பந்தங்கள் தரும் பாடம், அரசியல் நிர்ணய சபையில், காங்கேசன்துறை காட்டும் பாதை, தமிழ் ஈழம், தமிழ் ஈழத்தின் பொருளாதாரம், பேச்சு வார்த்தைகள், திரு அமிர்தலிங்கம் காலத்துள் தமிழ் ஈழம், இளைஞர் கரங்களில் பொறுப்பை ஒப்படைக்கிறேன் என்ற தலைப்புக்களின் கீழ் தந்தை செல்வாவின் சிந்தனைச் சிதறல்கள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன.

இவ்வாறு தன் வாழ்நாட்பணியொன்றினை மேற்கொள்ள, எம்மினத்தின் வரலாறு காக்கவெனப் புறப்பட்ட ஒரு தமிழ் மகனை எதிர்காலம் மறந்துவிடாமல் நினைவுகூர வைப்பதுடன், அவரது சேகரிப்புகளைத் தேடிப்பெற்று ஈழத்தின் முக்கிய தமிழியல் நூலக்களில் பாதுகாக்க இனியாவது முயற்சி செய்வோமாக. இதுவே அன்னாருக்கு நாம் செய்யும் கைங்கர்யமாகவிருக்கும்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு