வவுனியாவின் அரச அதிபராக சமன்பந்துலசேன இருந்த போது எதிர்க்காத தமிழ்தேசியவாதிகள் வடக்குக்கு நியமிக்கப்பட்ட போது ஏன் எதிர்க்கிறார்கள்..?

வடக்கின் பிரமதம செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன்பந்துலசேன அவர்கள் ஜனாதிபதியால் நேற்று நியமிக்கப்பட்டார். அந்தவகையில், வவுனியா மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன அவர்களே வடக்கின் பிரமதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. வெற்றிடமான இப் பதவிக்கு வடக்கைச் சேர்ந்த பலரும் போட்டியிட்டனர். இந்நிலையிலேயே வவுனியாவின் அரச அதிபராக கடமையாற்றும் எஸ்.எம்.சமன்பந்துலசேன பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் தமிழ்தேசிய கட்சிகளினுடைய உறுப்பினர்கள் இது தொடர்பில் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமாகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.

“ஒரு சிங்களவரை பிரதம செயலாளராக நியமனம் செய்வதென்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு தமிழை எழுதவோ வாசிக்கவோ தெரியாத சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் அவருக்கு சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ கடிதம் எழுதவேண்டிய சூழ்நிலையும் இல்லாவிட்டால் அவர் உடனடியாக அதை வாசித்து அறிந்து கொள்ளமுடியுமா என்ற பல்வேறான பிரச்சினைகளை இந்த நியமனம் என்பது உருவாக்கியிருக்கின்றது.”  என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இவர்கள் அதிருப்தி வெளியிட்டிருக்கும் எஸ்.எம்.சமன்பந்துலசேன வவுனியாவின் அரச அதிபராக கடமையாற்றிய போது எந்த எதிர்ப்பையும் இந்த தமிழ்தேசியவாதிகள் வெளியிடவில்லை. ஆனால் யாழ்ப்பாணமும் உள்ளடங்கியதாக ஏதாவது பிரச்சினை என்றால் துள்ளிக்குதிக்கிறார்கள். ஏன் வவுனியாவும் இவர்கள் கூறிய தமிழ்தேசிய எல்லைக்குள் தானே வருகிறது. இவர்கள்  எஸ்.எம்.சமன்பந்துலசேன வடமாகாணத்துக்குரிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டதால் கோவப்படுகிறார்களா..? அல்லது யாழ்ப்பாணத்துக்குள்ளும் சிங்கள ஆதிக்கம் வந்துவிடுமோ என்பதால் கோபப்படுகிறார்களா என தெரியவில்லை.

 

இங்கு மாற்றப்படவேண்டியது இந்த மனோநிலைதான். யாழ்ப்பாணத்துக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் தான் இலங்கை வாழ் தமிழர்கள் எல்லோருக்கும் பிரச்சினை என போல காட்டி  கூக்குரலிடுவதை முதலில் நிறுத்துங்கள். உண்மையிலேயே பிரச்சினை என்றால் அந்த பிரச்சினை ஒரு பகுதிக்கு வரும்போதே எதிர்த்திருக்க வேண்டும். அதை விடுத்து உங்களுடைய தலைக்கு பிரச்சினை வந்தால் மட்டும் தான் எதிர்ப்போம் என்றால் என்ன மாதிரியான மனோநிலை என்று தான் விளங்கவில்லை.

உண்மையான மக்கள் தலைவர்கள் என்றால் முதலில் மக்களுக்கான அரசியலை இதய சுத்தியுடன் மேற்கொள்ள ஆரம்பியுங்கள். முதலில் ஒரு பகுதியை மையப்படுத்திய அரசியல் நீரோட்டத்தில் இருந்து விலகி மக்களுக்கான தேசிய நீரோட்டத்தில் இயங்க முன்வாருங்கள். அப்படி இயங்கியாவது ஏதேனும் மக்களுக்காக ஆக்கபூர்வமாக செய்யுங்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *