மாகாண சபை கையிலிருந்த போது எதையும் செய்யாது இன்று புலம்பிக்கொண்டிருக்கிறார் க.வி.விக்னேஸ்வரன் !

மாகாண பாடசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதுள்ள அரசானது மாகாணங்களுக்கு உரித்தான கல்வி ,சுகாதாரம் போன்ற விடயங்களை மாகாணங்களுக்கான அதிகாரங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு சிலர் துணை போகிறார்கள். சில மாயைகளை நம்பி சிலர் மாகாண அதிகாரத்தை மத்திக்கு தாரை வார்க்கும் முகமாக செயற்படுகிறார்கள்.

ஆனால் தற்போதுள்ள அரசானது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு உட்பட்ட கல்வி ,சுகாதாரம் போன்ற விடயங்களை தனது ஆளுகைக்கு உட்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் நாம் நேற்று கல்வியலாளர்களுடன் ஒரு சந்திப்பினை மேற்கொண்டு ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம். அதாவது இந்த மாகாணத்திற்குட்பட்ட பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய உள்ளதாக தீர்மானித்துள்ளோம் என்றார்.

……………………………………………………………………………………………………………………………………………………

வடமாகாணசபை இறுதியாக இயங்கிய காலத்தின் போது முதலமைச்சராக விளங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. அதிகாரம் இவர்களுடைய கைகளில் இருந்த போது மாகாணசபைக்குள் நிதி மோசடியும் – கட்சிப்பேதங்களுமே அதிகரித்து காணப்பட்டிருந்தது. இன்று இவர்கள் அழுது கொண்டிருக்கும் பாடசாலைகள் தொடர்பாகவும் அதிகமாக அக்கறைப்பட்டிருக்கவில்லை.  மாகாணசபை இயங்குநிலையிலிருந்த போது பாடசாலைகளின் விடயங்களில் பெரிய தலையீடு செய்யவில்லை. வேறு மாகாணங்களின் பாடசாலைகளில் நவீன வகுப்பறைகள் என்ற தொனியிலான பல வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதன் எண்ணிக்கை வடக்கில் மிகச்சொற்பமே. இது தவிர பல பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. ஆங்கிலம் முறையாக கற்பிக்கப்படுவதில்லை. ஆய்வுகூட வசதிக் குறைவு . இப்படியான நிறைய குறைபாடுகள் உள்ளன. இவற்றை நீக்க எந்த மாதிரியான நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பது யாருக்குமே தெரியாது. பாடசாலைகள் தேசியமயமாவது தொடர்பாக அலட்டிக்கொள்ளும் நீங்கள் மாகாணபாடசாலையாக காணப்பட்ட போது என்ன செய்தீர்கள் என்பது ஆராயப்படவேண்டியது.

உண்மையிலேயே மாகாணசபைகளின் பால் அதீத அக்கறையுடையவர்களாயின் இவர்கள் பொறுப்பிலிருந்த போதே அதனை பலப்படுத்தியிருக்க வேண்டும். பிரச்சினைகளை சுமூகமாக முடித்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாது விட்டுவிட்டு இன்று மாகாணசபை அடக்கப்படுகின்றது – ஒடுக்கப்படுகின்றது என்றெல்லாம் கூறுவது என்ன வகையான மனோநிலை என்பது தான் தெரியவில்லை.

இது தவிர அரசினால் ஒதுக்கப்பட்டிருந்த நிதியை வடமாகாணசபையினர் மீள அரசுக்கு அனுப்பிவைத்ததாக கடந்த காலங்களில் அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறித்த விடயம் தொடர்பாக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ ஆகியோரும் பதிவு செய்திருந்தனர். இவ்வளவு தான் இவர்களுடைய கால  தூரநோக்கான செயலாக அமைந்திருந்தது. இது தவிர புலம்பெயர் தேசங்களில் வாழும் முதலீட்டாளர்களை வடக்குக்கு அழைத்து வருவதற்கான எந்த நடவடிக்கைகயும் வடமாகாண சபை மேற்கொண்டிருக்கவில்லை.

 

சரி வேறு என்ன தான் சாதித்தார்கள் என்று கேட்டால் , மாகாணசபையால் கிடைத்த பெயரை வைத்துக்கொண்டு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எழுக தமிழ்- தமிழ்தேசியம் என்றெல்லாம் கூறி அவர் தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியை உடைத்து புதிதான ஒரு கட்சியை உருவாக்கியதை தவிர வேறெதுவுமே நடந்தாகவில்லை என்பதே உண்மை. இனிவரும் காலங்களில் பதவிக்கு வரும் மாகாணசபைகளாவது இவர்கள் போல நடந்து கொள்ளாமல் இருந்தாலே போதுமானது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டனர் என்பதே உண்மை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *