ஆப்கானிஸ்தான் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு என்ன..? – ஆப்கான் முன்னாள் ஜனாதிபதியுடன் பேசிய பிரதமர் மகிந்த !

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில், இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் உரையாடியுள்ளார்.

இந்த தகவலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் தற்போது தலிபான்களுடன் ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியிடம் பேசிய பிரதமர், நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து விசாரித்ததுடன், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இலங்கை தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதே நேரம் , ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை இலங்கை ஏற்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளரும் ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சகத்தை முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களை இலங்கை பின்பற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.

SARRC பிராந்தியத்தில் உள்ள நாடு என்பதால் ஆப்கானிஸ்தானின் நிலைமையை இலங்கை கவனத்தில் எடுத்துள்ளது என்றும் டலஸ் அழகப்பெரும கூறினார்.

தலிபான்கள் தலைமையில் ஆப்கானிஸ்தானில் உருவாகும் அரசாங்கம் குறித்து இலங்கையின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சு விவாதித்து அறிவிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

இதேநேரம், ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற முயன்று வருவதால் இலங்கை வருத்தமடைவதாகவும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *