கே.ஜீ.மகாதேவா: நிஜங்களின் தரிசனம் : என்.செல்வராஜா (நூலியலாளர், லண்டன்)


MahadevaK.G_and_Selvarajah_Nஈழத்தின் வடபுலத்தில் வேரொடி விழுதெறிந்திருந்த ‘ஈழநாடு’ என்ற ஒரு ஆலமரத்தின் விழுதுகளில் ஒன்றாக வாழ்ந்திருந்த பத்திரிகையாளர் அமரர் கே.ஜீ.மகாதேவா கடந்த சனிக்கிழமை 10-09-2016 தமிழகத்தில், சென்னையில் காலமான செய்தியை நண்பர் ஈ.கே.இராஜகோபால் மூலம் அறிந்து ஏக்கமுற்றேன். கடந்த சில காலமாகவே அவர் சுகவீனமுற்று சென்னைக்குச் சென்றிருந்த செய்தியை ஏற்கெனவே சில காலங்களுக்கு முன்னர் அறிந்திருந்தும்> நோயுற்றிருந்த அவருடன் வெளியார் தெடர்புகொள்வதை> தமிழகத்திலிருந்த அவரது துணைவியார் விரும்பாத காரணத்தினால் நேரடித் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியாது தவித்த நாட்கள் பல.

அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் பத்திரிகைத்துறையில் தடம்பதித்து, பத்திரிகைத் துறையையே தனது மூச்சாகக் கொண்டிருந்த கே.ஜி.மகாதேவா பின்னாளில் புலம்பெயர்ந்து இந்தியாவின் தமிழ்நாடு – திருச்சியில் வசித்துவந்தார். பத்திரிகைத்துறையைப் போலவே எழுத்துறையிலும் இவர் தடம் பதித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் ‘கே.ஜி.எம்’, ‘மகான்’, ‘ஊடுருவி’ ஆகிய புனைபெயர்களிலும் எழுதிவந்திருக்கிறார்.

கே.ஞானசெல்வம், என்.கனகம்மா தம்பதியினரின் புதல்வராக 06 ஜுலை 1940ஆம் ஆண்டு மட்டக்களப்பில் பிறந்த ‘மகாதேவா’ தனது ஆரம்பக் கல்வியை ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையிலும், பின்பு இடைநிலை, உயர்தரக் கல்வியை மட்டக்களப்பு மத்திய கல்லூரி, மட்டக்களப்பு அரசினர் கல்லூரி, யாழ்ப்பாணம் ஸ்டான்லி கல்லூரி ஆகியவற்றிலும்; பெற்றுள்ளார். இவரின் அன்புத் துணைவியார் பத்மமீனா மகாதேவா ஆவார். இத்தம்பதியினருக்கு சாந்தா, ஞானக்குமார், சந்திரிகா, ராஜேந்திரன், ராஜ்குமார், கோவதனி ஆகிய ஆறு பிள்ளைகள் உள்ளனர்.

இவரது மாணவப் பருவத்தில் அதாவது 11வது வயதிலேயே இவரின் பத்திரிகைச் செய்தியளிக்கைப் பணி ஆரம்பமாகிவிட்டது. 1951ஆம் ஆண்டில் ‘இரத்தத்தில் கையெழுத்திட்டு மாணவர் மகஜர்’ எனும் தலைப்பில் ஈழகேசரியில் இவரது கன்னிச்செய்தி பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான ஆக்கங்களையும், விமர்சனங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும், விமர்சனக் கட்டுரைகளையும் இவர் ஈழத்து இந்திய தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதியுள்ளார். 1951 முதல் 1954 வரை யாழ். ஈழகேசரியில் குட்டிக்கதைகளை எழுதிவந்த இவர், தனது மாணவர் பராயத்திலே ஈழகேசரியில் சின்னச்சின்ன செய்திகளையும் எழுதிவந்துள்ளார்.

1958ஆம் ஆண்டில் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த ‘தமிழகம்’ வார இதழில் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்லையா இராசதுரை மற்றும் காசி ஆனந்தன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். பத்திரிகைத்துறையில் இவரின் பங்களிப்பு ‘தமிழகம்’ வார இதழிலேயே ஆரம்பித்தது.

Mahadeva_K_Gஇதையடுத்து 1961ஆம் ஆண்டில் யாழப்பாணத்திலிருந்து வெளிவந்த பிரபல பத்திரிகையான ‘ஈழநாட்டில்’ செய்தியாசிரியராக இணைந்து கொண்டார். 1961ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை ‘ஈழநாட்டில்’ கடமையாற்றினார். தனது 21வது வயதில், “ஈழநாடு” பத்திரிகையில் இணைந்து, உதவி ஆசிரியராகி, பின்னர் படிப்படியாக வளர்ந்து செய்தி ஆசிரியராகி நீண்டகாலம் அப்பதவியில் பணியாற்றியவர்.

இக்காலகட்டத்தில் – இடையே 1967 முதல் 1972ஆம் ஆண்டுவரை கண்டியில் இருந்து வெளிவந்த ‘செய்தி’ வார இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1961 முதல் 1990 வரை முழுநேரப் பத்திரிகையாளராகத் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த இவர,> 1989ம்ஆண்டில் தான் பணியாற்றிய ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து மனதளவில் ஏற்பட்ட பாதிப்புக்களும், அக்காலத்தில் சில சுதந்திரப் பத்திரிகையாளர்களுக்கெதிரான விடுதலைப் போராட்ட இயக்கங்களின் கொலை அச்சுறுத்தல்கள் காரணமாகவும் புலம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்றார். அதன் பின்பும் கொழும்பு தினக்குரல், ஞானம் சஞ்சிகை, லண்டனிலிருந்து வெளிவரும் ‘புதினம்’ சஞ்சிகை ஆகியவற்றுக்கு செய்திகளும் கட்டுரைகளும் எழுதிவந்துள்ளார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நேரத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்க அளித்த நேர்காணல் ஒன்றை ஈழநாடு பத்திரிகை பிரசுரித்திருந்தது. அந்த நேர்காணல் தவறான கருத்துக்களுடன் மொழிபெயர்க்கப்பட்டு இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் தெரிவிக்கப்பட்ட புகாரையடுத்து விசாரணைக்காக மகாதேவா கொழும்புக்கு அழைக்கப்பட்டார். தனது மூல நேர்காணலுக்கும், ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணலுக்கும் இடையே காணப்பட்ட கருத்துப் பிழைகளை மகாதேவா சுட்டிக்காட்டிய பின்பே சிறிமாவோ பண்டாரநாயக்கா இவரது பத்திரிகையின் மேலான முறைப்பாட்டை மீளப்பெற்றுக்கொண்டார். தன்னுடைய ஊடகத்துறை அனுபவத்தில் ஒரு மறக்க முடியாத நினைவாக இச்சம்பவத்தை 2004ஆம் ஆண்டில் இவரால் வெளியிடப்பட்ட ‘நினைவலைகள்’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

கே.ஜி. மகாதேவா இதுவரை நான்கு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பத்திரிகைத்துறையில் தான் ஈடுபட்டவேளையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், மனதை விட்டகலாத சம்பவங்கள், சந்திப்புக்கள், சந்தோஷங்கள் என்று இவர் தனது மலரும் நினைவுகளை ‘நினைவலைகள்’ என்ற நூலில் பதிவுசெய்திருக்கின்றார். இன்று தாயகத்திலும், புகலிடத்திலும் நிலைகொண்டு வெற்றிகரமாக இயங்கிவரும் பல ஈழத்துப் பத்திரிகையாளர்களை உருவாக்கிவிட்ட பெருமையைத் தன்னகத்தே கொண்ட ஈழநாடு பத்திரிகையின் வளர்ச்சி, அதன் எரியூட்டல் காலம், மீளத் தழைக்க எடுத்த முயற்சிகள், இறுதிக்காலம் என்று ஒரு பத்திரிகையின் சிக்கல் மிக்க வாழ்க்கையும் இந்த “நினைவலைகள்” நூலின் வாயிலாக வாசகர்கள் ஓரளவு அறிந்து கொள்ள முடிகின்றது. 2004ம் ஆண்டில் வெளிவந்த இந்நூல் 212 பக்கங்களைக் கொண்டது. இதே நூல் 2005ம் ஆண்டில் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு ‘Reminiscences’ எனும் தலைப்பில் 139 பக்கங்களுடன் வெளிவந்தது.

2007ம் ஆண்டில் ‘கதையல்ல நிஜம்’ எனும் தலைப்பில் இவரது இரண்டாவது நூல் வெளிவந்தது. இந்நூலையும் சென்னை மித்ர வெளியீட்டகமே தனது 145ஆவது நூலாக வெளியிட்டிருந்தது. 232பக்கங்களைக் கொண்ட இந்நூலில் தான் முன்னர் பணியாற்றிய ஈழநாடு பத்திரிகையில் தன்னால் நாள்தோறும் எழுதப்பட்ட ‘இப்படியும் நடக்கிறது’ எனும் பத்தியிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட குறிப்புக்களை சேர்த்திருந்தார். ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த வேளையில் தனது பிற செய்தி ஆசிரிய எழுத்துப் பணிகளுக்கிடையே இப்படியும் நடக்கிறது என்ற தலைப்பில் ஒரு தகவல் பத்தியை பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தினம் ஒரு சம்பவமாகத் தொடர்ந்து எழுதிவந்தவர் பத்திரிகையாளர் கே.ஜி.மகாதேவா. ஒவ்வொரு தகவலும் உண்மையானது. அதன் பின்னணியில் கற்பனை ஏதுமின்றி நிஜம் மட்டும் ஒலித்தது. கிசு கிசுச் செய்திகளாகச் சில சிரிக்க வைக்கும். சில சிந்திக்கத் து}ண்டும். வேறு சில எம்மைத் திகைப்பில் ஆழ்த்தும். இப்படியும் நடக்குமா என்று கேள்வி எழுந்து. இப்படியும் நடக்கிறது என்று புருவத்தை உயர்த்தும் மன உணர்வினை சடுதியில் வாசகனுக்கு ஊட்டிச்செல்பவையாக இப்படியும் நடக்கிறது தகவல் பத்திகள் அமைந்திருந்தன. மண்ணின் பெருமைகளைப் பேசியதுடன் மண்ணின் மக்களின் ஒரு சிறு பிரிவினரின் கபடங்களையும் இப்பத்தி எழுத்தில் காட்டியது. இப்படியும் நடக்கிறது என்ற இந்த தகவல் பத்தியே நூலுருவில் கதையல்ல நிஜம் என்ற தலைப்பில் 232 பக்கத்தில் மித்ர வெளியீடாக நூலுருவில் வெளிவந்துள்ளது.

2009இல் மகாதேவாவின் ‘தர்மத்தின் குரல்கள்’ என்ற நூல் வெளிவந்தது. இதுவும் மித்ர வெளியீட்டகத்தின் வெளியீடாகவே வெளிவந்தது. கோவைஞானி, பா.செயப்பிரகாசம், எஸ்.பொன்னுத்துரை, பழ.நெடுமாறன், வைகோ, தொல்.திருமாவளவன், கவிதா முரளிதரன், புலமைப்பித்தன், சி.மகேந்திரன், பேராசிரியை சரஸ்வதி, இல.கணேசன், சிவாஜிலிங்கம், ஆறுமுகம் கலையரசன், அமரந்தா, முத்துவேலழகன் ஆகிய 15 பிரமுகர்களுடனான நேர்காணல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஈழத்தமிழர் போராட்டம் தொடர்பான தமிழக, இலங்கைப் பிரமுகர்களின் கருத்துக்கள் இங்கு பெரும்பாலான நேர்காணல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

2013இல் மித்ர ஆர்ட்ஸ் நிறுவனம் இவரது ‘நிஜங்களின் பதிவுகள்’ என்ற நூலை வெளியிட்டது. இந்நூலில் அமரர் மகாதேவா எழுதிய கட்டுரைகளும், அவர் கண்ட நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. மனித தெய்வம் சாயிபாபா, செம்மொழி மகாநாடு, பேராசிரியர் கா.சிவத்தம்பி, அயோத்தி விவகாரம், தஞ்சைப் பெரிய கோவில், இந்திய நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதி, அமெரிக்க அதிபர் ஒபாமா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம்>, மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது, ரா.மு.நாகலிங்கம், மொழி விழிப்புணர்வற்ற தமிழகம்>, இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை, ஈழத் தமிழருக்கான டில்லி அழுத்தங்கள், ஓவியர் இலங்கைநாதன், முன்னாள் பூ வியாபாரி அன்னா ஹசாரே, எஸ்.பொன்னுத்துரை, பாலம் கல்யாணசுந்தரம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வரலாற்றுப் பதிவுகள், மூவரின் (பேரறிவாளன், முருகன்>, சாந்தன்) து}க்குக்கு எதிராகத் திரண்ட தமிழகம், நூல்தேட்டம் செல்வராஜா ஆகிய பொருட்பரப்பில் இவர் எழுதிய கட்டுரைகளும், சம்பந்தப்பட்டவர்களுடன் மேற்கொண்ட நேர்காணல்களின் வழியாக உள்வாங்கப்பெற்ற கருத்துக்களின் கட்டுரை வடிவமும் இந்நூலில் 20 தலைப்புகளில் சுவையாகத் தரப்பட்டிருந்தன.

கடந்த 20013இல் நான் தமிழகப் பயணத்தை மேற்கொண்ட வேளையில் எனக்கு புதினம் இராஜகோபாலின் மூலம் நேரில் அறிமகமானவர் கே.ஜீ.மகாதேவா. முன்னதாக அவரது நூல்களை ஐ.பீ.சீ. காலைக்கலசம் வாயிலாக உலகத் தமிழர்களுக்கு நான் அறிமுகம் செய்துவைத்திருந்ததை நன்றியுடன் நினைவுகூர்ந்த அவர். அவ்வருடத் தமிழகப் பயணத்திட்டத்தையும் தானே முன்வந்து ஒழுங்குபடுத்தி பல தமிழக இலக்கியப் பிரமுகர்களையும் சந்திக்க வைத்தார். தமிழகத்தில் சென்னையில் நான் இருந்த வேளையில் இரவில் திருச்சியிலிருந்து தொலைபேசியில் அன்றாடம் உரையாடி, எங்கெங்கெல்லாம் சென்றேன், யாரையெல்லாம் சந்தித்தேன் என்று கேட்டுத் தெரிந்துகொள்வார். தமிழகத்தில் நான் தங்கியிருந்த 12 நாட்களிலும் ஒருநாளாவது என்னுடன் தொடர்புகொண்டு எனது நலன் விசாரிக்காமல் அவர் து}ங்கியதில்லை.

2014இல் குடும்பத்தினருடன் தமிழகச் சுற்றுலாவொன்றை நான் மேற்கொண்டிருந்தபோதும் அவரே இந்தியா முழுவதும் சுற்றித்திரிய ஒரு வாடகைக்காரை சாரதியுடன் மலிவு விலையில் ஏற்பாடு செய்து தந்ததுடன் கேரளாவில் அல்லப்பேயில் படகுவீட்டுச் சவாரியையும் உள்ளுர் பிரமுகர் ஒருவரின் உதவியுடன் ஏற்பாடு செய்துதந்திருந்தார்.
கே.ஜீ.மகாதேவாவின் ஞாபகசக்தி அபரிமிதமானது. ஒரு செய்தியை நினைவிலிருந்து மீட்டெடுத்துச் சொல்லும்போது துல்லியமாக நாள் திகதி ஆண்டு என அச்சொட்டாக ஒரு திறமைமிக்க கதைசொல்லியாக நின்று சுவையுடன் தெரிவிப்பார். அவரது தொலைபேசி உரையாடல்கள் பெரும்பாலும் ஒரு மணிநேரத்துக்கும் அதிகமானவையாகவே அமைந்துவிடும்.

அவரது ‘ஈழநாடு’ பத்திரிகைத்துறை வாழ்க்கை பற்றிய சுவையான நினைவுகளை முறையாக ஆவணப்படுத்தத் தீர்மானித்தேன். அவரது உதவியுடன் ‘ஈழநாடு: ஒரு ஆலமரத்தின் கதை’ என்ற தலைப்பில் 2015இல் ஈழநாடு பத்திரிகையின் வரலாற்றைக்கூறும் ஒரு நூலைத் தொகுக்கத் தொடங்கினேன். அவரின் பங்களிப்புடன் ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றியவர்களின் தெடர்புகளையும் பெற்றுக்கொண்டு தாயகத்திலும்> தமிழகத்திலும் பூமிப்பந்தின் பல்வேறு கோடிகளிலும் வாழும் அவர்களின் நினைவுகளைப் பிழிந்தெடுத்துக் கட்டுரைகளாகப் பெற்று அவற்றை அழகாகத் தொகுத்து ஒரு நூலுருவில் இரு மாதங்களுக்கு முன்னரே கொழும்பிலிருந்து குமரன் புத்தக இல்லத்தின் வாயிலாக வெளிக்கொணர்ந்திருந்தேன். அதில் 10 பிரதிகளை, கொழும்புக்குச் சென்றிருந்த (சென்னையில் வசிக்கும்) விருபா இணைத்தள நிறுவகர் து.குமரேசன் அவர்களிடம் கையளிக்கச்செய்து கே.ஜீ.மகாதேவா அவர்களிடம் அவற்றை நேரில் ஒப்படைக்க ஒழுங்குசெய்திருந்தேன். துர்அதிர்ஸ்டவசமாக அது காலம் கடந்த முயற்சியாகி விட்டது. அவர் திருச்சியிலிருந்த அவரது இல்லத்திலிருந்து மருத்துவ தேவைக்காகச் சில மாதங்களுக்கு முன்பே சென்னைக்குச் சென்றுவிட்டார் என்ற செய்தியே எனக்குக் கிடைத்தது. ஈழத்துத் தமிழ் வெளியீட்டுத்துறையின் ஒட்டுமொத்த சோம்பேறித்தனம் ஒவ்வொரு கட்டத்திலும் தவிர்க்கப்பட்டிருந்தால் இந்த நூலின் வெளியீட்டுக்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்காது என்ற தார்மீகக் கோபமும் மனச்சாட்சியின் உறுத்தலும், விரக்தியுடன் என்னுள் எழுகின்றன.

சென்னையில் அவர் இருக்குமிடத்தைத் தெரிவிக்க யாருமே தயாராக இருக்கவில்லை. ஈழத்துத் தமிழ்ச் சமூகத்துக்காக அன்றாடச் செய்திகளை தனது பன்னிரண்டாம் வயதிலிருந்து காவிச்சென்று சேர்த்தவர். ஒருவாழ்நாள் பத்திரிகையாளராகத் தன் எழுத்துப் பணியைதான் சார்ந்த தமிழ்ச் சமூகத்திற்காகவே புலம்பெயர்ந்தபின்பும் தன் வாழ்வின் இறுதிக்கூறு வரையில் மேற்கொண்டு வந்தவர், தன் இறுதிக்காலத்தில் அந்தச் சமூகத்திலிருந்து தானாக முற்றாக ஒதுங்கிக்கொள்ளவும், தனது செய்திகளை வெளி உலகிற்குப் பரவிச்செல்லவிடாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து தன் மரணம் வரையில் தனிமையில் மோனத்தவம் புரிய அவரைத் து}ண்டியது என்ன என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது.

எனது நூல் அவரது பார்வைக்காக, என்னுடனான அவரது இலக்கிய நட்பின் ஒரு சாட்சியமாக, ‘ஈழநாடு’ பற்றிய அவரது உள்ளனுபவத்தை தானாகவே பொதித்துவைத்துச் செல்ல வழிசெய்த ஒரு பெட்டகமாக என்றென்றும் காத்திருக்கும்- கூடவே எனது இயலாமையுடன்.
அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.
11.09.2016

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு