இலங்கைத் தமிழர் பிரச்சினை; இரண்டாவது நாளாக இந்திய பாராளுமன்றில் எதிரொலிப்பு

india-parliament.jpgஇலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையில் (லோகசபை) நேற்று இரண்டாவது நாளாகவும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி சபையை 45 நிமிடங்கள் இடைநிறுத்தி வைத்தார்.

மக்களவை அமர்வு பகல் 11 மணியளவில் ஆரம்பமானது. அச்சமயம் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க. உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் மறுப்புத் தெரிவிக்கவே அமளிஏற்பட்டது. இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த பா.ம.க., ம.தி.மு.க. எம்.பி.க்களும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பாரதியஜனதா, பகுஜன்சமாஜக் கட்சி உறுப்பினர்களும் ஆசனங்களை விட்டு எழுந்து சபா மண்டபத்தில் குழுமிநின்று கோஷம் எழுப்பினர். முதலில் உறுப்பினர்களை அமைதிப்படுத்த முயற்சிசெய்தார் சபாநாயகர். முடியாமல் போகவே கடுமையாக எச்சரித்துவிட்டு சபையை 12 மணிவரை இடைநிறுத்தி வைத்தார்.

பின்னர், சபை மீண்டும் கூடியபோது, இலங்கைப் பிரச்சினை குறித்து பிரணாப் தாக்கல் செய்த அறிக்கையை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி பா.ம.க. வினர் குரல் எழுப்பினர் பிரணாப் அறிக்கை இலங்கை பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி பிரதீபா பேசியதற்கு அப்படியே எதிர்மறையாக இருப்பதாகவும் கூறினார்கள். மேலும் பிரணாப்பின் அறிக்கை ஒரு தலைப்பட்சமாக இருப்பதாகவும், பெறுப்பற்ற முறையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளி காரணமாக அவை மதியம் 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. பா.ம.க மற்றும் ம.தி.மு.க.வினர் லோக்சபாவுக்கு கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *